Wednesday, December 3, 2008

இரயில் பயணங்களில்............

நம் குழந்தைகளின் வளர்தலும், புரிதலும் நம் கண்முன்னர் தெரியும் அவர்களின் செய்கைகளின் முன்னேற்றம் இதெல்லாம் மிக ஆச்சர்யப்படத்தக்கதாய் இருக்கிறது.
வியக்கத்தக்கதாகவும் இருக்கிறது. இதைப் பற்றி பிறரிடம் சொல்லி சொல்லி எழுதி எழுதி சிலாகித்துக்கொள்கிறோம்.

ஆனால் சில குழந்தைகள் இருக்கின்றன பெற்றோரின் தவறுக்கு பலியாகும் குழந்தைகள், தான் என்னவாகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள், ஏன் நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள் இப்படி ஏராளமாய்.

இந்த ரெயில் பயணம் இருக்கிறதே, இது நல்ல ஸ்னேகிதங்களையும் தரும், சில பாதிப்புகளையும் தரும். அப்படி என்னை பாதித்த சிலவற்றில் ஒன்றுதான் இது.

என் மனதில் ஆழப்பதிந்த ஒரு குழந்தையின் பார்வை இன்னமும் என்னை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

அமித்து தான் என் வயிற்றிலிருக்கிறாள் என்பது தெரியாத 7 மாதம் எனக்கு.
ஒரு சனிக்கிழமை மதியம், ஆபிஸ் முடிந்து எக்மோரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ட்ரெயினில் வந்து கொண்டிருந்தேன்.
மிதமான கூட்டம்.

மாம்பலத்தில்தான் அவர்கள் ஏறினார்கள். கணவன், மனைவி, மனைவியின் இடுப்பில் 1 1/2 வயதுக்கு குறைவாக இருந்த ஒரு பெண்குழந்தை.
சிகப்பு நிற்ம், கலைந்த கேசம், துறு துறு கண்கள் அழகு முகம்.

குழந்தைகள் என்றாலே அழகுதானே, வறுமையிருந்தால் மட்டும் அழகில்லாமல் போய்விடுமா என்ன.
வறுமையில் வரும் குழி விழுந்த கண்களும், செம்பட்டை முடியும், உடுப்பில்லா உடம்பும் கூட ஒரு அழகைத்தருகின்றது அவர்களுக்கு.


கணவன், மனைவி இருவருக்கும் கண் பார்வையில்லை. முன்னே இடுப்பில் குழந்தையுடன் மனைவி பாடிக்கொண்டே செல்ல, பின்னர் கணவன் ஒரு தாளவாத்தியத்தை தட்டிக்கொண்டே அவளின் தோள்பிடித்து போகிறான். அந்தப் பெண்ணுக்கு குரலில் வஞ்சனை வைக்கவில்லை கடவுள், நல்ல வேளையாய். பிழைப்பு நடத்த ஏதுவாய்.

சற்று பாடிய பின்னர் சில்லறைகளுக்காக அந்தப் பெண் கை நீட்டினாள். கூடவே அவள் கையில் இருந்த கைக் குழந்தையும். அந்தக் குழந்தை சிரித்து கொண்டே கை நீட்டியது. கை நீட்டிய திசை என்னை நோக்கியிருந்தது.
என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களை மடக்கி விட்டேன். இப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா, இப்படி சொல்லும்போது என் குரல் கம்மியது.
சுற்றியிருந்தோர் என்னை ஒருமாதிரி பார்க்கத்துவங்கினர்.

பையில் துழாவி என் கையில் அகப்பட்ட சில்லறைகளை அப்பெண்ணின் கையில் போட்டேன்.

நிறுத்தம் வந்தது, ஒரு சிலையாய் இறங்கினேன்.

அவர்களும் என்னோடே இறங்கினார்கள்.
ப்ளாட்பாரத்தின் ஊடே நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை கையை ஆட்டிக்கொண்டும் ஏதேதோ செய்து கொண்டிருப்பது அந்த தாய்க்கு தெரிய வாய்ப்பேதுமில்லை.


என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வீடு செல்லும் வரை, வீடு சென்ற பின்னரும் அந்தக் குழந்தையின் தோற்றமும், சிரிப்பும், பார்வையும் என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது.

இன்னமும் ட்ரெயினில் அது போன்ற பார்வையற்றோரை ரயிலில் பார்க்க நேர்ந்தால் அக் குழந்தையைத் தேடுகிறேன்.

வளர்ந்திருப்பாள் எனினும் அந்தப் பார்வை அடையாளப்படுத்தித்தரும் அவளை எனக்கு.


//,இன்னமும் சொல்வேன்,//

11 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் :(

ராமலக்ஷ்மி said...

//குழந்தைகள் என்றாலே அழகுதானே, வறுமையிருந்தால் மட்டும் அழகில்லாமல் போய்விடுமா என்ன.//

உண்மைதான். மலர்களிலே அழகில்லாததென ஏதுமுண்டா? எல்லாக் குழந்தைகளும் அழகுதான் அமித்து அம்மா.

//ஆனால் சில குழந்தைகள் இருக்கின்றன பெற்றோரின் தவறுக்கு பலியாகும் குழந்தைகள், தான் என்னவாகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள், ஏன் நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள் இப்படி ஏராளமாய்.//

சுடும் உண்மை:(! நேரம் கிடைக்கையில் பாருங்க:
http://tamilamudam.blogspot.com/2008/08/blog-post_25.html

பழமைபேசி said...

மனிதம் மருணடது! கண்கள் பனித்தது!!
மனம் பதைத்தது! மெய் சிலிர்த்தது!!

ஏழ்மையே, நீ ஏன் நகைக்கிறாய்?
ஊனமே, நீ ஏன் கைகொட்டுகிறாய்??

புதுகை.அப்துல்லா said...

உண்மைகளை உணர்வோடு எழுதியதால் உங்களைப் போலவே எனக்கும் நீர் கோர்த்துவிட்டது.

நட்புடன் ஜமால் said...

\\என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வீடு செல்லும் வரை, வீடு சென்ற பின்னரும் அந்தக் குழந்தையின் தோற்றமும், சிரிப்பும், பார்வையும் என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது.\\

உண்மையில் என் கண்களின் ஓரம் கண்ணீர் துளி ...

விஜய் ஆனந்த் said...

டச்சிங்...

Poornima Saravana kumar said...

என்னையும் இந்த மாதிரி பல விசங்கள் பாதித்து இருக்கு.. சில சமயங்களில் என்னால் ஏதும் செய்ய இயலாமல் சூழ்நிலை கைதியாய் நின்றிருக்கிறேன்..
அப்பிஞ்சுக்களின் எதிர்காலத்தைப் பற்றி பலமுறை நினைத்து பார்த்திருக்கிறேன்..

பாபு said...

உண்மைய சொன்னா என்ன சொல்றதுன்னே தெரியலே,
யாரை குற்றம் சொல்வது?அந்த பெற்றோர்களையா?எதுவும் செய்யாமல் இருக்கும் சக மனிதர்களான நம்மையா?
உங்களின் உணர்வுகளுக்கு என் வணக்கங்கள்

தமிழ் அமுதன் said...

என்ன செய்றது?

ஆனா? கண்டிப்பா ஏதாவது செய்யனும்!

ஆகாய நதி said...

கண் பார்வையற்றவர்கள் பிச்சை எடுத்து தான் பிழைக்க வேண்டும் என்றில்லை... இது அவர்களில் சிலர் செய்யும் மாபெரும் குற்றம்... கண் பார்வையற்றவர்களின் பெரும் செயல்கள் பற்றி விரைவில் ஒரு அனுபவப் பதிவிடுகிறேன்....

மங்களூர் சிவா said...

உங்கள் வருத்தம் புரிகிறது. பிச்சை எடுக்க குழந்தைகளை வாடகைக்கு இதை போன்றோரிடம் விடுபவர்களும் இருக்கிறார்களாம் :((

வேதனை :((

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger