Monday, December 15, 2008

அண்ணாவை அடிக்காதே

என் பள்ளித்தோழி அவள். சமீபத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது.பொதுவாக பேசிக்கொண்டிருந்த பேச்சு, பின்னர் பிள்ளைகள் நலம் பற்றி சென்றது. அவள் சொன்ன விசயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. எங்களின் பேச்சை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் உங்களுடன்.

அவளுக்கு இரு பிள்ளைகள், முதல் பிள்ளை - 4 வயதிற்குள் இருக்கும், இரண்டாவது பெண் குழந்தை - 1 1/2 வயது.1 வயது வரை அந்தப்பெண் குழந்தைக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை, எல்லாப் பிள்ளைகளுடனும் விளையாடுவது, குறும்புகள் என்று எதிலும் குறைவைக்கவில்லை.
முதலாம் பிறந்தநாள் முடிந்தபின்னர் தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

சரியாய் சாப்பிடவில்லை, யாருடனும் பேசுவதோ, விளையாடுவதோ இல்லை. குறிப்பாய் அம்மா என்று கூப்பிடுவதோ, இல்லை அவள் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதே இல்லையாம்.அக் குழந்தையின் மொத்த நேரமும் டி.வியுடனே செலவழிந்திருக்கிறது. தூக்கம் குறைந்து போய், எப்போதும் ஒரு வித ஃப்ரெஷ்னெஸ் உடனே காணப்பட்டிருக்கிறாள்
தனியாகவே விளையாடுவது. இரவுத்தூக்கம் சொற்பகமாக போயிருந்த்து. அழுகையும் இல்லை. ஆனால் எப்போதும் தனித்திருத்தல். அவள் அதிகபட்சம் விளையாடும் அவள் அண்ணனிடம் கூட அவளின் குறும்புகள் குறைந்திருந்தன. காரணம் அறிய இவள் மிக சிரமப்பட்டிருக்கிறாள்.

வழக்கமாய் பார்க்கும் டாக்டரிடம் அழைத்துச்சென்று காண்பித்ததற்கு அவர் ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர் முழுவதும் விசாரித்துவிட்டு, 3, 4 முறை வரச்சொல்லியிருக்கார். சில மாத்திரைகள் (?), மாற்று முறைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் முன்னேற்றம் ஏதுமில்லை, கடைசியாய் அவர் ஒரு பள்ளியின் பெயர் சொல்லி, அங்கு கொண்டு போய் விடுங்கள், உடன் நீங்களும் சென்று உங்கள் குழந்தையை கண்காணியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அவளும் அப்பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். ஆனால் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவளுக்கு புரிந்துபோய் விட்டது, நம் குழந்தை இக் குழந்தைகளைப் போல் அல்ல, இவளின் ப்ரச்சினை வேறென்னவோ என்றுணர்ந்திருக்கிறாள்.

இம்முறை வேறொரு டாக்டர், அண்ணாநகரில், ஃபீஸ் கொஞ்சம் ஜாஸ்தி. அவள் குடும்பம் நடுத்தரவர்க்கத்திற்கும் சற்று கீழ்.இருப்பினும் அழைத்துச்சென்றிருக்கிறாள். முற்றிலும் அக்குழந்தையை பற்றி விசாரித்த டாக்டர், இறுதியாய் கேட்டது.
உங்கள் முதல் மகன் எப்படி? என்று கேட்டிருக்கிறார், என் தோழியும் அவன் ரொம்ப குறும்பு டாக்டர், எல்.கே.ஜி படிக்கிறான் என்று சொல்லியிருக்கிறாள். இதற்கு டாக்டர், நீங்கள் அவனை அடிப்பீர்களா என்றிருக்கிறார், மேலும் இப் பெண்குழந்தையின் முன் அடிப்பீர்களா.

இவள், ஆமாம் டாக்டர்.என்று கொஞ்சம் குடும்ப சூழலோடு விளக்கியிருக்கிறாள். தோழி, கணவர், இரு குழந்தைகள் என்று தனிக்குடும்பமே. காலை அவசரமும், வேலைப்பளுவும் மூத்த மகனைத் தாக்கியிருக்கின்றன.
அனேக தினங்கள் ஸ்கூல் கிளம்பும் பரபரப்பில் அடி வாங்க தவறுவதில்லை.விடுமுறை தினங்களும் விலக்கில்லை. அண்ணனுக்கு விழுந்த அடிகளும், வேலை ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் டி.வியைப் போட்டு விட்டு குழந்தையை அதன் முன்னர் அமர்த்தியது,
இவை இரண்டும் தான் அப் பெண் குழந்தையின் ஆழ் மன மாற்றத்திற்கு காரணங்கள்.

டாக்டர் சொன்ன வழிமுறை : உங்கள் வீட்டு டி.வியை இனிக் குழந்தையின் முன்னர் ஆன் செய்யாதிருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தையிடம் பேசுங்கள்.அவளின் அண்ணனை எக்காரணம் கொண்டும் இவள் முன்னர் அடிக்காதீர்கள். இருவரிடமும் ஒரே மாதிரி அன்பைக் காட்டுங்கள்.
இந்த அறிவுரைகளுடன் சில மருந்துகளும் கொடுத்திருக்கிறார்.

அவரின் வழிமுறைகள் ஆறே மாதத்தில் அக்குழந்தையிடம் மாற்றத்தை தந்திருக்கின்றன.இப்போது அக்குழந்தை மறுபடியும் அம்மா என கூப்பிட ஆரம்பித்திருக்கிறது. சராசரி குழந்தைகள் நிலைக்கு மெள்ள மெள்ள திரும்புகிறாளாம்.


இதை என் தோழி சொல்ல சொல்ல கேட்ட நான் அதிர்ச்சிக்குள்ளானேன். இதற்கெல்லாம் யார் காரணம் என்று யோசித்தால் கண்டிப்பாய் என் தோழியைத்தான் சொல்லவேண்டும்.முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் சரியான இடைவெளி இல்லாமை என்று சொல்லலாமா.
தெரியவில்லை, ஆனால் அப்படி பார்த்தால் நம்மூரில் அனேகரின் நிலை இப்படித்தானே இருக்கிறது.குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்.இதன்படி பார்த்தால், நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்.
உணவு ஊட்டி உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெற்றோர்களாகிய நாம்தான், அவர்களின் மனவளர்ச்சிக்கும் சரியான அணுகுமுறையைத் தரவேண்டும்.

9 comments:

pudugaithendral said...

இயலாமை ஆற்றாமைகளுக்கு பிள்ளைகள் பலிஆவதுதான் கொடுமை.

டீவி தவறு என்று தெரிந்தாலும் பலர் பிள்ளைகள் விரும்புகிறார்கள், அப்போதுதான் வேலை பார்க்க முடியும் என்று டீவி முன் உட்கார வைக்கிறார்கள்.

pudugaithendral said...

நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்.
உணவு ஊட்டி உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெற்றோர்களாகிய நாம்தான், அவர்களின் மனவளர்ச்சிக்கும் சரியான அணுகுமுறையைத் தரவேண்டும்.//

ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க.
பெற்றால் மட்டும் போதாது, பேணி வளர்க்க வேண்டும்.

கார்க்கிபவா said...

//அப்போதுதான் வேலை பார்க்க முடியும் என்று டீவி முன் உட்கார வைக்கிறார்கள்//

வருத்ததுற்குரிய உண்மை.. ஆனால் அதற்கு மாறிவிட்ட நம் வாழ்க்கை முறைதான் காரணம்.. பெண்கள் மட்டுமல்ல‌

நல்ல ப்திவு..

அமுதா said...

/*நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்.
உணவு ஊட்டி உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெற்றோர்களாகிய நாம்தான், அவர்களின் மனவளர்ச்சிக்கும் சரியான அணுகுமுறையைத் தரவேண்டும்.*/
நூற்றுக்கு நூறு உண்மை.

Anonymous said...

Not for publishing

எனது தளத்தில் இந்தக் கட்டுரை நண்பர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

http://www.suratha.com

தகவலுக்காக!!

-suratha.y/-

மோனிபுவன் அம்மா said...

தோழி, கணவர், இரு குழந்தைகள் என்று தனிக்குடும்பமே. காலை அவசரமும், வேலைப்பளுவும் மூத்த மகனைத் தாக்கியிருக்கின்றன.
அனேக தினங்கள் ஸ்கூல் கிளம்பும் பரபரப்பில் அடி வாங்க தவறுவதில்லை.விடுமுறை தினங்களும் விலக்கில்லை. அண்ணனுக்கு விழுந்த அடிகளும், வேலை ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் டி.வியைப் போட்டு விட்டு குழந்தையை அதன் முன்னர் அமர்த்தியது,
இவை இரண்டும் தான் அப் பெண் குழந்தையின் ஆழ் மன மாற்றத்திற்கு காரணங்கள்.



நம் நடைமுறை வாழ்வில்
திணமும் இப்படிதான் நடக்கிறது.

இந்த விஷயத்தை கேட்டவுடன் நாம் நிறைய நேரத்தை பிள்ளைகளுக்காக
செலவிடவேண்டும் என்ற உண்மை புரிகிறது.

ஆனால் நாம் பிள்ளைகளுக்காக நாம்
சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே.

Vidhya Chandrasekaran said...

வருத்தத்திற்க்குரிய சம்பவம்:(

ஆகாய நதி said...

தொல்லைக்காட்சி குழந்தைகளைக் கவர்ந்து வீழ்த்தும் எதிரி...
தாய்மார்கள் இதனை புரிந்து கொள்வது நல்லது...

பாபு said...

நல்ல ஒரு பதிவு,நன்றி

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger