Tuesday, March 31, 2009

குட் டச், பேட் டச் - கருத்தரங்கம்

தீபாவின் குட் டச், பேட் டச் என்ற பதிவே இதற்கு ஆரம்பம் என்றும் சொல்லலாம். இந்த குட் டச், பேட் டச் பற்றி பெற்றோர்களான நாம் மேலும் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வுக்காகவும் ஒரு கருத்தரங்கை மேற்கொண்டால் எத்தனை பெற்றோர்கள் வருவீர்கள் என்று பின்னூட்டம் இடுங்கள்.

கருத்தரங்கு சென்னையில்தான் இருக்கும். உங்களின் வருகையை பின்னூட்டத்தில் சொன்னீர்களேயானால், மேற்கொண்டு இது குறித்து விரிவாக பதிவிடப்படும்.

Saturday, March 28, 2009

கசகச பறபற !!



புத்தகம் : கசகச பறபற
வயது : 2-6
வழி : தமிழ்
எழுதியவர் : ஜீவா ரகுநாத்


பப்பு-விற்கு கதைசொல்லும் ஜீவா ஆண்ட்டியைப் பிடிக்கும். எனக்கும்தான்! ஒருநாள் பப்பு சொன்னாள், “நாந்தான் ஜீவா ஆண்ட்டி”! பப்பு, ஒருவேளை ஜீவா ஆண்ட்டியின் கதைசொல்லும் பாதையை தேர்ந்தெடுக்ககூடும்! ஒரு சிறு கற்பனை, கதையாக நெய்யப்பட்டு ஒரு குழந்தையின் மனதை, அதன் உலகத்தை எப்படி ஆள்கின்றது! இந்தப் புத்தகம், “கசகச பறபற” என்ற புத்தகமும் ஜீவா ஆண்ட்டியினுடையது தான், தூலிகா பதிப்பகத்தாரிடமிருந்து!

குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக படித்து மகிழ என்று அறிமுகமாகும் இந்தப் புத்தகம்,
தமிழ் எழுத்துகளை, வார்த்தைகளை சிறார்களுக்கு அறிமுகப் படுத்துகிறது, ஒரு புதிய நடையில்! நாம் கற்ற வழிகளில் அல்ல..ஒரு புதிய வழியில்,எழுத்துகளை இப்படிதான் கற்கவேண்டுமென்ற எந்த விதிகளுக்கும் உட்படாமல், வார்த்தைகளை இப்படிதான் படிக்க
வேண்டுமென்ற நியதியிலிருந்து மாறுபட்டு! எந்த வயதினருக்கும் இது ஏற்றதுதான்..மிக எளிமையான வார்த்தைகள்..எழுத்துகள் இதில் ஒரு மனிதனாக, மிருகமாக அல்லது செயலாக வெளிப்படுகின்றன!

"சந்தன சாலையிலே
சின்ன சீதா போனாளே!"

என்று துவங்கும் பாடல் ”ச” என்ற எழுத்தை முதன்மைத் தொனியாகக் கொண்டு ஒலிக்கிறது! அது ”சோ”டாவாகவும், ”சௌ”க்கியமாகவும் மாறி அதற்குள் ஒரு சிறு சம்பவத்தை உள்ளடக்கியிருக்கிறது! ஒவ்வொரு எழுத்தும் ஒரு சிறு சம்பவத்தை..அல்லது கற்பனைச் சித்திரத்தை முன் வைத்து எழுத்துகளை அறிமுகப்படுத்துகிறது! அது நமக்குவேண்டுமானால் சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம் சில வேளைகளில், ஆனால் சிறார்களுக்கு ஒரு கற்பனை உலகத்தை அமைக்கக்கூடும், நம்மையறியாமலேயே!

புத்தகத்தின் இரு பக்கங்களை இணைத்துள்ளேன், மாதிரிக்கு! ஒவ்வொரு எழுத்தும் இரண்டு பக்கங்களில், ஒரு பக்கத்தில் எழுத்துகளாக, மறுபக்கத்தில் அதன் கற்பனை வடிவமாக!



”சிங்கம்”, ”மங்கை” , ”சங்கு” என்று வார்த்தைகளும், அதனுடனே பின்னப்பட்ட காட்டுச்சிங்கத்தின் முழக்கமும் பாடலாக!



நெ..நௌ எனும் எழுத்துகளை நம்மால் எப்படி கற்பனை செய்யமுடியும்..இந்தப்ப்புத்தகத்தில், அது கழுத்து நீண்ட நெருப்புக்கோழியாகவும், ஒரு நாரையைப் போலவும் உருமாறி இருக்கிறது. ஒரு மேள சத்தத்தை ரசிக்கிறது!

படங்கள்தான் இந்தப் புத்தகத்தின் மிக பெரிய பலம். ஓவியர் அசோக் இராசகோபாலனின் ஓவியங்கள் இப்புத்தகத்தில் பிள்ளைகளின் ரசிப்புக்கும் சிரிப்புக்கும் ஏற்ற வகையில்!

4-6 வயதினருக்கு தமிழ் எழுத்துகளைக் கற்க, அதன் பயன்பாட்டினை அறிமுகப் படுத்த உதவலாம்!

2-4 வயதினருக்கு, எழுத்துகளையும் அதன் சப்தங்களையும் அறிமுகப்படுத்தலாம் பாடலைப் படித்துக்காட்டுவதன் மூலம்!

வளர்ந்து வரும் வயதில்- சமூகசூழல்,பெற்றோர், பள்ளி என்று பல்வேறு காரணிகள் குழந்தைகளை அவர்தம் ஆளுமையை தீர்மானிக்கிறது! நம்மையறியாமலேயே, நாம் நமது எண்ணங்களையும், கருத்துகளையும் திணித்துவிடுகிறோம்...நம்மைப் போன்ற ஒரு காப்பியையே உருவாக்க முனைகிறோம். இப்படி இரு, இப்படி படி என்று... ஏன்? ஏனெனில், நானும் இப்படித்தான் இருந்தேன், இப்படித்தான் படித்தேன் என்பதுதான் பதிலாக இருக்கலாம்! ஆனால், இப்படியும் இருக்கலாமென்றும், இப்படியும் எண்ணலாமென்றும், அப்படியிருப்பதால் சிந்திப்பதால் தவறொன்றும் இல்லை என்பதையும் கண்டுக் கொள்ளக் கூடும்! இந்தப்புத்தகம்
அதற்கு உதவக்கூடும்!

Friday, March 27, 2009

அம்மா, அப்பா கதை - குழந்தைகளுக்காக

சிறு குழந்தைகளுக்கும் புரியும் வகையில் கதை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது! ஆனால் பொழிலன் விஷயத்தில் இந்த முயற்சி பலனளிப்பதாக நான் உணர்ந்ததால் மற்ற குழந்தைகளுக்காகவும் இங்கே கதை சொல்ல வந்துவிட்டேன் :)


ஒரு ஊரில் ஒரு பெரிய மலை இருந்ததாம். அந்த மலை முழுவதும் ஒரே பனியா அழகா இருக்குமாம். அங்கே ஒரு அழகான அம்மாவும், அப்பாவும் இருந்தாங்க! அவங்களுக்கு இரண்டு தம்பி பாப்பா இருந்தாங்களா... பெரிய தம்பி பாப்பா பேரு பிள்ளையார் சாமி, குட்டி தம்பி பேரு முருகா சாமி! அவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா, அம்மா மாதிரியே அறிவாளிகளாவும், அழகானவங்களாவும் இருந்தாங்க!

அப்போ ஒரு நாள் அவங்க எல்லாரையும் பார்க்க நாரதர் மாமா வந்தாரு! அவர் எப்படி வருவாரு?..."நாராயணா...நாராயணா" அப்படினு சொல்லிட்டே வருவாரு. அன்னைக்கும் அப்படிதான் வந்தாரு. அவர் வந்ததும் அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வணக்கம் சொல்லிட்டு அவர் கையில வைத்திருந்த ஒரு அழகான மாம்பழத்தை அப்பா கையில குடுத்தாரு... உடனே பிள்ளையார் சாமியும், முருகா சாமியும் ஓடி வந்து நாரதர் மாமாக்கு வணக்கம் சொல்லிட்டு அப்பாக்கிட்ட அந்த பழத்தை அவங்க ரெண்டு பேருக்கும் தரனும்னு வேண்டிக்கிட்டாங்க...

அப்போ நாரதர் மாமா என்ன சொன்னாரு தெரியுமா? " இது ஒரு புதுமையான பழம்.. இதை யாரும் பங்கிட்டு சாப்பிட முடியாது, யாராவது ஒருவர் தான் சாப்பிட முடியும்" அப்படினு சொன்னாரு! உடனே அந்த அப்பா என்ன பண்றதுனு யோசிச்சப்போ அம்மா சொன்னாங்க " ரெண்டு பசங்களுக்கும் ஒரு போட்டி வைத்து அதுல யாரு வெற்றியடையுறாங்களோ அவங்களுக்கு இந்த அதிசய பழத்தை குடுக்கலாம்". அப்பாவும் உடனே இது ரொம்ப நல்ல ஏற்பாடுனு இதுக்கு ஒத்துக்கிட்டார்.

அப்பாவே ஒரு போட்டியும் வைத்தார். அது என்ன தெரியுமா? ரெண்டு பேரும் இந்த உலகத்தை சுத்தி வரனும்... யாரு முதலில் சுத்தி வந்து அப்பா, அம்மாகிட்ட வராங்களோ அவங்களுக்கு அந்த பழம் கிடைக்கும். உடனே முருகா சாமி தன்னோட நண்பன் மயில கூட்டிகிட்டு இந்த உலகத்தை சுத்தி வர கிளம்பிட்டாரு!

ஆனால் இந்த பிள்ளையார் சாமி என்ன பண்ணாரு தெரியுமா? அவரோட நண்பன் எலிய கூட்டிகிட்டு அவங்க அப்பா, அம்மாவையே சுத்தி வந்தாரு! உடனே அப்பா கேட்டாரு " ஏன்பா உலகத்தை சுத்தாம எங்களை சுத்தி வர" அப்படினு... அதுக்கு பிள்ளையார் சாமி என்ன சொன்னாரு தெரியுமா! " அவங்க அவங்க அம்மாவும், அப்பாவும் தான் எல்லா பிள்ளைகளுக்குமே உலகம்... அதுனால தான் நான் என் அம்மா, அப்பாவை சுத்தி வந்தேன்! இப்போ நான் இந்த உலகத்தை சுத்தியாச்சு... நான் தானே முதலில் வந்து ஜெயிச்சேன்... அதுனல இந்த பழத்தை எனக்கே தரனும் " அப்படினு சொன்னார்.

அவர் சொல்றது சரிதானு எல்லாருமே சொன்னாங்களா... அதுனால அவர் தான் போட்டில வெற்றியடைந்து மாம்பழத்தை பரிசா வாங்கினாரு! :)

அடுத்த பகுதி அடுத்த கதையில்...:)

பின் குறிப்பு:

கதையைக் கூறிய பின் குட்டீஸ் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உங்களை அடிக்கவோ... கடிக்கவோ வந்தால் "மொக்கைக் கதை கூறும் சங்கம்" பொறுப்பாகாது.... :)அந்த சங்க உறுப்பினரான நானும் பொறுப்பாளி அல்ல!

Friday, March 20, 2009

மூன்று குட்டி பன்றிகள்


இங்கே நானும் உங்களுடன் உங்களுக்காக கதை சொல்ல வந்திருக்கிறேன்.

ஒரு ஊரில் மூன்று குட்டி பன்றிகள் இருந்தது.ஓய்வு நேரங்களில்,நன்றாக சாப்பிட்டு தூங்குவது இவைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
இப்படியே நாட்கள் கடந்தது.இன்னும் சிறிது நாட்களில் குளிர் காலம் வந்துவிடும் என்பதால் மூன்றுமே தங்களுக்கென வீட்டைக் கட்டிக் கொள்ள விரும்பியது.
உடனே முதல் பன்றி,வைக்கோல் வைத்து வீட்டைக் கட்டி முடித்தது.
இரண்டாவது பன்றி,குச்சிகளை வைத்து கட்டி முடித்தது.மூன்றாவது பன்றியோ செங்கல் வைத்து வீட்டை கட்டி முடித்தது.மூன்று பண்ர்டிகளுக்கும் ஒரே சந்தோசம் தங்களுக்கென ஒரு வீடு இருப்பதை எண்ணி.
ஓரிரு நாட்கள் கழித்து அந்தப் பக்கமாக ஒரு நரி வந்ததாம்.அது முதல் பன்றியின் வீட்டுக் கதவைத் தட்டியதம்.உடனே பன்றி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டது தட்டுவது யாரென்று.அதனால் கதவைத் திறக்கமுடியாது என்றதாம்.அப்போது நரி சொன்னதாம்,
நீ கதைத் திறக்கவில்லை என்றால் நான் உன்வீட்டை ஊதியே இடித்துவிடுவேன்.பிறகு உன்னை சாப்பிட்டும் விடுவேன் என்றதாம்.உடனே பன்றியோ,சற்றும் பயப்படாமலம்,
உன்னால் முடிந்தால் செய்துபார் என்றதாம்.
நரி சொன்னதுபோல் வீட்டை ஊதியே இடித்துவிட்டதம்.ஆனால், பன்றியோ பயந்துகொண்டு வேகமாக இரண்டாம் பன்றியின் வீட்டுக்க ஓடியதாம்.அங்கே சென்றதும் இந்த நரி அங்கேயும் வந்து முன்னதாக சொன்னதுபோல் இங்கேயும் சொன்னதம்.இவர்களும்
உன்னால் முடியாது,முடிந்தால் செய்து பார் என்றார்களாம்.அதுவும் சொன்னதுபோல் வீட்டை இடுத்துவிட்டதாம்இடித்தும் இந்த இரண்டு பன்றிகள் பயந்து ஒடுவைதைக் கண்டு சிரித்துக் கொண்டே ஆணவத்துடன் பின்னாலேயே
நடந்து போனதாம்.அந்த இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டிற்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் தாளிட்டுக் கொண்டதுகளாம்.அப்போது ஒன்றும் தெரியாத அந்த மூன்றாவது பன்றியிடம் நடந்தவற்றிப் பற்றி இவ்விரண்டும் கூறியதாம்.அந்த நேரத்தில்,நரி இங்கும் வந்து அதேபோலவே சொல்லி மிரட்டியதாம்.உடனே மூன்றாவது பன்றியோ,
அவ்விரண்டு பன்றிகள் சொன்னதுபோலவே சொன்னதாம்.
உடனே நரி ஊ...ஊ....வென வேகமாக ஊதிப் பார்த்ததாம்.ஆனால் பாவம்இப்படி செய்து செய்து அதற்கு இருதயம் பலவீனமாகிப் போய் இறந்தே போனதாம்.மூன்று பன்றிகளும் உயிர் தப்பியதை எண்ணி பெருமூச்சு விட்டனவாம்.

moral of the story ஐ நீங்களே சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் குழந்தைக்கு சொல்லி விடுங்களேன் ப்ளீஸ்.

Friday, March 6, 2009

ஆல்ஃபா கிட்ஸ்

என் ஆஃபிஸின் கீழே ஆல்ஃபா கிட்ஸ் என்னும் குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. இன்று அங்கு இருக்கும் குழந்தைகளின் டேலண்ட் மீட் டே. குழந்தைகளின் குதூகலக் குரல் மைக் வழியே மூன்றாவது மாடியில் கேட்டது. ஆர்வத்தை அடக்க முடியாமல், ஆபிஸில் அனுமதி கேட்டுக்கொண்டு கீழே போய் பார்த்தேன்.

யப்பா, குழந்தைகள் குழந்தைகள். விதமான விதமான ட்ரஸ்ஸில். தேவதை மாதிரி ஒன்று, கரடி வேஷம் போட்டு, புலி வேஷம், புடவை கட்டிக்கொண்டு சில வால்கள் இன்னும் ஏகப்பட்ட அலங்காரங்கள். குழந்தைகள் அத்தனையும் மைதா மாவில் பிடித்து வைத்தாற் போல வெள்ளை வெளேரென்றும், செக்கச் செவெலென்றும்.
ஏற்கனவே தயார் படுத்தி வைத்திருந்தாலும், மைக் அருகே வந்து ரைம்ஸ் சொல்லும்போது திக்கியது, இரண்டு வரிக்கு மேல் சில குழந்தைகள் பாடவே யில்லை, ஒன்று கணீர் குரலோடு தெள்ளத் தெளிவாக பாடி அசத்தியது. இன்னொன்று வாஷிங்க் டே ரைம்ஸுக்கு, புடவை கட்டிக்கொண்டு, விக் கொண்டை வைத்துக்கொண்டு, ஒரு சின்ன கர்ச்சீப்பை துவைப்பது போல் ஆக்‌ஷன் செய்து கொண்டே பாடியது அபாரம்.ஒரு பையன் ரெயின் ரெயின் ரைம்ஸ் சொல்வதற்காக குடையோடு வந்து, பாவம் ஓவென்று ஒரே அழுகை.கரடி ட்ரஸ்ஸில் இருந்த பையன் அழுது கொண்டே இருந்ததில் கன்னமும், கண்களும் சிவந்து போயின. ப்ளாக் அண்ட் ரெட் காம்பினேஷனோடு இருந்தான் பார்ப்பதற்கு.
வழக்கமான குழந்தைகளின் வால்தனங்களை கேட்டு பார்த்து பழகியிருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு சற்றே புதிதாகத்தான் இருந்தது, அந்தக் குழந்தைகளைப் போலவே.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger