Saturday, March 28, 2009

கசகச பறபற !!



புத்தகம் : கசகச பறபற
வயது : 2-6
வழி : தமிழ்
எழுதியவர் : ஜீவா ரகுநாத்


பப்பு-விற்கு கதைசொல்லும் ஜீவா ஆண்ட்டியைப் பிடிக்கும். எனக்கும்தான்! ஒருநாள் பப்பு சொன்னாள், “நாந்தான் ஜீவா ஆண்ட்டி”! பப்பு, ஒருவேளை ஜீவா ஆண்ட்டியின் கதைசொல்லும் பாதையை தேர்ந்தெடுக்ககூடும்! ஒரு சிறு கற்பனை, கதையாக நெய்யப்பட்டு ஒரு குழந்தையின் மனதை, அதன் உலகத்தை எப்படி ஆள்கின்றது! இந்தப் புத்தகம், “கசகச பறபற” என்ற புத்தகமும் ஜீவா ஆண்ட்டியினுடையது தான், தூலிகா பதிப்பகத்தாரிடமிருந்து!

குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக படித்து மகிழ என்று அறிமுகமாகும் இந்தப் புத்தகம்,
தமிழ் எழுத்துகளை, வார்த்தைகளை சிறார்களுக்கு அறிமுகப் படுத்துகிறது, ஒரு புதிய நடையில்! நாம் கற்ற வழிகளில் அல்ல..ஒரு புதிய வழியில்,எழுத்துகளை இப்படிதான் கற்கவேண்டுமென்ற எந்த விதிகளுக்கும் உட்படாமல், வார்த்தைகளை இப்படிதான் படிக்க
வேண்டுமென்ற நியதியிலிருந்து மாறுபட்டு! எந்த வயதினருக்கும் இது ஏற்றதுதான்..மிக எளிமையான வார்த்தைகள்..எழுத்துகள் இதில் ஒரு மனிதனாக, மிருகமாக அல்லது செயலாக வெளிப்படுகின்றன!

"சந்தன சாலையிலே
சின்ன சீதா போனாளே!"

என்று துவங்கும் பாடல் ”ச” என்ற எழுத்தை முதன்மைத் தொனியாகக் கொண்டு ஒலிக்கிறது! அது ”சோ”டாவாகவும், ”சௌ”க்கியமாகவும் மாறி அதற்குள் ஒரு சிறு சம்பவத்தை உள்ளடக்கியிருக்கிறது! ஒவ்வொரு எழுத்தும் ஒரு சிறு சம்பவத்தை..அல்லது கற்பனைச் சித்திரத்தை முன் வைத்து எழுத்துகளை அறிமுகப்படுத்துகிறது! அது நமக்குவேண்டுமானால் சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம் சில வேளைகளில், ஆனால் சிறார்களுக்கு ஒரு கற்பனை உலகத்தை அமைக்கக்கூடும், நம்மையறியாமலேயே!

புத்தகத்தின் இரு பக்கங்களை இணைத்துள்ளேன், மாதிரிக்கு! ஒவ்வொரு எழுத்தும் இரண்டு பக்கங்களில், ஒரு பக்கத்தில் எழுத்துகளாக, மறுபக்கத்தில் அதன் கற்பனை வடிவமாக!



”சிங்கம்”, ”மங்கை” , ”சங்கு” என்று வார்த்தைகளும், அதனுடனே பின்னப்பட்ட காட்டுச்சிங்கத்தின் முழக்கமும் பாடலாக!



நெ..நௌ எனும் எழுத்துகளை நம்மால் எப்படி கற்பனை செய்யமுடியும்..இந்தப்ப்புத்தகத்தில், அது கழுத்து நீண்ட நெருப்புக்கோழியாகவும், ஒரு நாரையைப் போலவும் உருமாறி இருக்கிறது. ஒரு மேள சத்தத்தை ரசிக்கிறது!

படங்கள்தான் இந்தப் புத்தகத்தின் மிக பெரிய பலம். ஓவியர் அசோக் இராசகோபாலனின் ஓவியங்கள் இப்புத்தகத்தில் பிள்ளைகளின் ரசிப்புக்கும் சிரிப்புக்கும் ஏற்ற வகையில்!

4-6 வயதினருக்கு தமிழ் எழுத்துகளைக் கற்க, அதன் பயன்பாட்டினை அறிமுகப் படுத்த உதவலாம்!

2-4 வயதினருக்கு, எழுத்துகளையும் அதன் சப்தங்களையும் அறிமுகப்படுத்தலாம் பாடலைப் படித்துக்காட்டுவதன் மூலம்!

வளர்ந்து வரும் வயதில்- சமூகசூழல்,பெற்றோர், பள்ளி என்று பல்வேறு காரணிகள் குழந்தைகளை அவர்தம் ஆளுமையை தீர்மானிக்கிறது! நம்மையறியாமலேயே, நாம் நமது எண்ணங்களையும், கருத்துகளையும் திணித்துவிடுகிறோம்...நம்மைப் போன்ற ஒரு காப்பியையே உருவாக்க முனைகிறோம். இப்படி இரு, இப்படி படி என்று... ஏன்? ஏனெனில், நானும் இப்படித்தான் இருந்தேன், இப்படித்தான் படித்தேன் என்பதுதான் பதிலாக இருக்கலாம்! ஆனால், இப்படியும் இருக்கலாமென்றும், இப்படியும் எண்ணலாமென்றும், அப்படியிருப்பதால் சிந்திப்பதால் தவறொன்றும் இல்லை என்பதையும் கண்டுக் கொள்ளக் கூடும்! இந்தப்புத்தகம்
அதற்கு உதவக்கூடும்!

13 comments:

நட்புடன் ஜமால் said...

உபயோகப்படும்

வாங்கி வைப்போம்.

தமிழன்-கறுப்பி... said...

ok ஆச்சி சொன்னா சரிதான்..!

அபி அப்பா said...

சூப்பர்!

Arasi Raj said...

அய்ய்..முல்லை அத்தை நன்னி..அம்மா கிட்ட சொல்லி கண்டிப்பா வாங்கிப்பேன்...

- Nila-

Anonymous said...

thanks

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அறிமுகம். .. சொல்லிட்டீங்கள்ள இந்தா வரோம்ல ஊருக்கு ..கடையிலேர்ந்து அள்ளிப்போட்டுக்கிறோம் :)

ஆகாய நதி said...

நன்றி.... பொறுமையாக வாங்கலாம் பொழிலனுக்கு... இப்போது எல்லாவற்றையும் என் மனதில் வாங்கி வைத்துக் கொள்கிறேன்... அவனுக்கான வயது வரும் போது கடையில் வாங்கலாம் :)

குடுகுடுப்பை said...

நான் பாப்பாவிற்கு தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.சென்னையில் எங்கே கிடைக்கிறது என்று சொல்லவும்.

சந்தனமுல்லை said...

குடுகுடுப்பையார்...லேண்டமார்க்கில் வாங்கினேன்! Tulika-வின் சுட்டி இங்கே !

http://www.tulikabooks.com/picbooks9.htm#gasagasa

Deepa said...

நல்ல பயனுள்ள புத்தகம். அழகான விமர்சனம். லேண்ட்மார்க் போனால் நானும் வாங்கி வைக்கிறேன்.

அமுதா said...

நல்ல அறிமுகம்...

Tulika Publishers said...

கசகச பறபற பிஞ்சு மனசுல, ஜாலி ஜாலி குஷி குஷி ஜீவா ஆண்ட்டி மனசுல

Unknown said...

ஓவியனும் குழந்தைபோலத்தான் வரைந்து தள்ளினான் :)
நான் ரசித்து வரைந்த இந்த புத்தகத்தை புகழ்ந்து பேசியதற்கு நன்றி!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger