Monday, May 4, 2009

அன்புயிர் சன்னோ...

*நன்றி முனைவர்.ரத்தினபுகழேந்தி அவர்களுக்கு. அவரின் பதிவிலிருந்து காப்பி செய்துள்ளேன், இன்னும் ஷன்னோக்கள் உருவாக்கப்படக்கூடாதென்ற எண்ணத்தில்!அவரது பதிவிற்கான சுட்டி!


அன்புயிர் சன்னோ, அன்பும் இனிமையும் நிறைந்த சுட்டிப்பெண்ணே இன்று காலை செய்தித்தாளில் உனது மரணம் பற்றி படிதேன்.மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாய், இது போல் இன்னும் பலருக்கு நிகழலாம் உன்னால் என்ன செய்ய முடியும் இது வாடிக்கையாகிவிட்டது. நீ இறப்பதற்கு முன் அந்த கடைசி விநாடிகளில் தேவதைக் கதைகளில் வருகின்ற குழந்தைகளை நேசிக்கும் அந்த தேவதையை நீ சந்தித்திருப்பாய் என்று எண்ணுகிறேன். நீ மிக பணிவாக மண்டியிட்டு கிடந்தபோது உன் முகத்தில் அரும்பிய வியர்வையையும் கண்ணீரையும் துடைத்தவள், தாங்கிக்கொள்ளும் வலிமையை கொடுத்தவள், வலியை நிறுத்தும் அந்த இரண்டு சொட்டு மந்திர நீரைக்கொடுத்தவள் அந்தக்காவல் தேவதையே. அந்த தேவதை வந்தாளா? நீ மருத்துவ மனையில் இருந்தபோது இரவு முழுவதும் உன்னுடன் தங்கினாள் இல்லையா?

இன்று காலை உன்னைப் பற்றி படித்ததிலிருந்து எங்கு நோக்கினும் உன் கண்களைக் காண்கிறேன் என் இரண்டு மகன்களைப் பார்க்கும்போது கூட. ஒரு வேளை நான் உன் கண்களில் அச்சத்தை மட்டும் காண்கிறேனோ எனத் தோன்றுகிறது. ஆனால் சுட்டெரிக்கும் வெய்யிலில் இரண்டு மணி நேரம் நீ முட்டி போட்டு குனிந்திருந்த போது உன் முதுகின் மீது சுமத்தப்பட்ட அந்த ஏழு செஙற்களை நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் , மக்களோடு பேசும்போதும் செய்தித்தாள்களைப் படிக்கும் போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் அவற்றை நான் காண்கிறேன்.

தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்வதை விட கட்டுப்பாடாக இருக்கக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிற பெற்றோர்கள்தான் அந்த முதல் செங்கல். அநீதியை எதிர்த்துப் போராடத் தெரியாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உன் வகுப்புத் தோழர்கள்தான் அந்த இரண்டாவது செங்கல். குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பதை விட அதிகமாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதை உணராத உன் ஆசிரியர்கள்தான் மூன்றாவது செங்கல். நெடுங்கணக்கை மனப்பாடம் செய்ய இயலவில்லை என்பதற்காக தலை நகரப் பள்ளி ஒன்றில் ஒரு சிறு குழந்தை சித்திர வதைக்கு ஆளாகி இறந்து போனதைக் கண்டுகொள்ளாத ஆனால் கட்சியின் நலனுக்காக அற்ப விசையங்களுக்கெல்லாம் வேலை நிருத்தம் செய்கிற அரசியல்வாதிகள்தான் அந்த நான்காவது செங்கல்.

ஒரு ஆசிரியர் கொடுக்கின்ற உடல் ரீதியான தண்டனையைக் குற்றமாகக் கருதாத - ஏனென்றால் அவர்களே வன் முறையில் நம்பிக்கை உடயவர்கள்- காவலர்களே ஐந்தாவது செங்கல். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஏழைகளை நாட்டின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கும் (ஏழைக் குழந்தைகளின் பள்ளியை அல்ல) மேட்டுக் குடியினரே ஆறாவது செங்கல். அந்த கடைசி செங்கல் எதுவென்று உன்னிடம் சொல்வதற்கு எனக்கு வெறுப்பாக இருக்கிறது சன்னோ. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுத்து, அதிலிருந்து வெளி நடப்பு செய்யும் துணிவைத் தராத உன் காவல் தேவதைதான் அந்த ஏழாவது செங்கல்.


இப்படி ஒரு கேடு உனக்கு நேரும் என நீ அஞ்சியிருக்க வேண்டும். உன் பணிவே உன் உயிருக்கு உலை வைக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டாய். என்னருமை சன்னோ உன் இறப்பால் நான் வருந்துகிறேன். பெரியவர்களின் முட்டாள் தனத்தால் நீ சாக நேர்ந்ததை எண்ணி துக்கப்படுகிறேன். உன் மரணத்தை ஒன்றுமில்லை என்று ஆகிவிடாது. நம் இந்தியக் கல்வி முறையில் ஏதோ ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. அது உறுவாவதற்குத் துணை புரிந்த அந்த ஏழு செங்கற்களில் ஏதோ அடிப்படையில் ஒரு கேடு இருக்கிறது என்பதை உன் மரணம் எஙளுக்கு உணர்த்தும்.

ஒரு வேளை உன் நினைவாக மக்கள் அவ்வேழு செங்கற்களைத் தூள் தூளாக நொறுக்கத் தொடங்கலாம். ஏனெனில் அந்த ஏழு கற்கள் சென்ற வெள்ளிக்கிழமை உன் முதுகில் இரூந்தது மட்டுமல்ல கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் கொண்ட, அழுவதற்கு அச்சப்படும் உன்னைப் போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் முதுகின் மீது அதே கற்கள் மீண்டும் மீண்டும் ஏறுகின்றன. ஒரு வேளை நீ பட்ட துன்பத்தின் காரணமாக ஏதாவது புதிதாக உருவாகலாம்.அக்கரையுள்ள பெற்றோர்கள், அக்கரையுள்ள ஆசிரியர்கள், அகரையுள்ள அரசியல்வாதிகள், அக்கரையுள்ள காவலர்கள், ஏழைகளுக்காக கரிசனம் கொள்ளும் செல்வந்தர்கள் ஆகியோர்களால் ஒரு புதிய பள்ளி முறை உருவாகலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் தங்களால் சமாளிக்க முடியவில்லை என்பதற்காகத் தங்களையே குறைபட்டுக்கொள்ள மாட்டார்கள். மாறாகத் தஙளால் என்ன செய்ய முடிகிறதோ அதிலே பெருமை காண்பார்கள். தங்களுக்காக தங்களின் வகுப்புத் தோழர்களுக்காக அன்புடன் தங்கள் கைகளை உயரே தூக்கிப் பிடிப்பார்கள். என் அன்பு சன்னோ உனை நான் தவறவிட்டுவிட்டேன்.(கட்டுரையாளர் செபஸ்டியன் டேராடூனில் உள்ள லத்திகா ராய் நிறுவனத்தின் குழந்தை மருத்துவர்) நன்றி: இந்து நளிதழ் (26.04.09),மொழி பெயர்ப்பில் உதவிய அ.முதுகுன்றன், எழுதத்தூண்டிய அ.மங்கை. கற்றல் அது குழந்தைகளுக்கு இன்னும் தாங்கொணாத சுமையாகவே உள்ளது என்பதையே சன்னோ என்னும் சிருமியின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. மாற்று கல்வி குறித்து சிந்திப்போம்.

2 comments:

ஆகாய நதி said...

பயமா இருக்கு :( குழந்தைகள் பள்ளி செல்வதை நினைத்தாலே :(

ஷன்னோ! உன் பிஞ்சு ஆத்மா சாந்தியடையட்டும்! :(

வல்லிசிம்ஹன் said...

ஷன்னோவுக்காக என்ன செய்யப் போகிறார்கள். இன்னும் டில்லியிலோ
மற்ற இடங்களிலிருந்து ஆயிரம் செங்கல்கள் கொண்டுவந்து அந்தப் பள்ளி ஆசிரியையின் எண்ணத்தில் அடுக்கினால் உணருவாளோ அந்தக் குழந்தையின் துன்பத்தை.
ஒரு கண்ணகி போதாது நம் ஊருக்கு.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger