Tuesday, May 5, 2009

அன்னையர் தினத்துக்காக - "முத்துச்சரம்" ராமலஷ்மி!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”முத்துச்சரம்” ராமலஷ்மி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி ராமலஷ்மி! ”மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்! என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு இதோ :-

தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.

அன்பின் வடிவாய்... தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.

புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குடியும் இவ்வாறாகத் தாய்மைக்குக் கட்டுப்பட்டு நின்றபதாலேயே அவை உயர்வதோடு, கோலும் உயர்ந்து கோனும் உயர்கிறான்.

தத்தமது குடிகளை இப்படியாக உயர்த்துகிற தாய்மாருக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக் காட்டாக இருந்து, சாதி மத இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடவும் காரணமாயிருந்தார்கள். அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. ஆக,

அகிலத்தின் அமைதிக்கே அடிநாதமாய்
அன்பின் பிறப்பிடமாய் உறைவிடமாய்
தன்னலமற்றதாய் தன்னிகரற்றதாய்
திகழும் தாய்மையை வாழ்த்துவோம்
போற்றுவோம் மதிப்போம்
தலைவணங்கித் துதிப்போம்.

*** *** **

4 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்தலுக்கு நன்றி ராம் மேடம்

வல்லிசிம்ஹன் said...

கருணையின் அடி நாதத்தைத் தொட்டு விட்டீர்கள் ராமல்க்ஷ்மி.

அன்னை தெரிசாவின் அன்பு அளவில் அடங்காதது அல்லவா. அனைத்துலக அன்னையைச் சுட்டியதால்

அந்த நிழலில் நானும் இளைப்பாறினேன். நன்றிம்மா.

அமுதா said...

/*தன்னலமற்றதாய் தன்னிகரற்றதாய்
திகழும் தாய்மையை வாழ்த்துவோம்
போற்றுவோம் மதிப்போம்
தலைவணங்கித் துதிப்போம்*/
வழிமொழிகிறேன்

ராமலக்ஷ்மி said...

நன்றி அமித்து அம்மா, வல்லிம்மா, அமுதா.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger