Friday, May 15, 2009

மீ த பர்ஸ்ட்

இந்த “முதல்” என்ற வார்த்தை பெரியவர்களிடம் எப்படியொரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ அதை விட அதிகமாய் சிறார்களிடம் உண்டு செய்கிறது.

உதாரணத்துக்கு நீ தான் பர்ஸ்ட் அப்படின்னு சொல்லிப்பாருங்க, அடுத்து அவஙக் எவ்வளோ குதிச்சு குதிச்சு விளையாடுவாங்க
சில சமயம் சொன்னத கேட்பாங்க, ஒழுங்கா சாப்பிடக் கூட செய்வாங்க. சாக்லேட் என்ற மகுடிக்கு மயங்காத பாம்புகள் கூட இந்த நீ தான் பர்ஸ்ட் என்ற வார்த்தைக்கு மயங்கும்.

இந்த பர்ஸ்ட் என்பதின் எல்லை ஒரு வரையறை வரை இருத்தல் நலம். இல்லையெனில் நிறைய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நான்கு குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடும் போதோ இல்லை நம் வீட்டினில் அனைவரும் சாப்பிடும் போதோ, நம் குழந்தை சாப்பிட வேண்டும், சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதை
கருத்தில் கொண்டு பெரியவர்கள் குழந்தையின் பெயர் சொல்லி அவன் தான் பர்ஸ்ட் என்பார்கள். உதாரணத்திற்கு ராம் தான்ப்பா பர்ஸ்ட்டு, நாங்கள்லாம் செகண்டு தாம்ப்பா என்றாலே போதுமே அது அவசர அவசரமாக உணவை விழுங்கும்.

அதே போல படிப்பிலும், எங்க பையன் தான் எப்பவும் பர்ஸ்ட்டு வருவான் இல்லப்பா, நல்லா படிப்பானே, ஏ. பி. சி. டி யெல்லாம் நல்லா எழுதுவானே, ரைம்ஸ் எல்லாம் சமத்தா சொல்லுவானே என்று நீட்டி முழக்கி எல்லார் முன்னிலையிலும் அந்தக் குழந்தையையே முதலாக்குவார்கள். ஊக்கப்படுத்துகிறார்களாம்.

இது போன்ற சொற்களின் விளைவுகளை குழந்தைகளின் முன்னால் கொண்டு செல்லும் போது அந்தக் குழந்தைகள் என்னவாக இருக்கும் என்பதை கண்கூடாக கண்டேன்.

என் நாத்தனாருக்கு ஒரே மகன். பெயர் ஹரி, படிப்பில், விளையாட்டில் எல்லாம் சுட்டி. 6 வருடங்கள் கழித்து பிறந்தவன் ஆதலால் அப்பா, அம்மாவிற்கு செல்லம். அவன் அம்மா எல்லாவற்றையுமே நன்றாகத் தான் சொல்லித்தந்தார்கள். கதை சொல்வது, அப்புறம் சின்ன சின்ன ஆக்டிவிட்டிஸ் என, ஆனால் எங்கே கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை, இந்த பர்ஸ்ட் என்ற வார்த்தை அவனுக்கு மந்திரமாகிவிட்டது. ஆரம்பத்தில் அது நன்றாகப் போக இப்போது அவனுக்கு வயது 5, அதுவே நெகட்டிவ் ஆகப்போய்க் கொண்டிருக்கிறது.

1. வீட்டில் அவனும், அவன் அப்பாவும் சாப்பிடும் போது, அவன் அப்பா முதலில் சாப்பிட்டு எழுந்துவிட்டால், இவன் கோபித்துக்கொண்டு, முகத்தை உர் ரென்றும் வைத்துக்கொண்டு அதற்கப்புறம் சாப்பிட மாட்டானாம்.இப்போதெல்லாம் அவன் அப்பா சாப்பிட்டு முடித்தபின் ஒரு கவளத்தை இவன் சாப்பிட்டு எழும் வரை தன் தட்டில் வைத்துக்கொண்டிருக்கிறாராம்.

2. அவன் ஸ்கூலில் (எய்ம்ஸ், செய்யாறு) எல்.கே.ஜிக்கே ஸ்கூல் ஆண்டு விழாவில் முதல் வந்த குழந்தைக்கு மெடலெல்லாம் போட்டு கான்வொகேஷன் நடத்தி இருக்கிறார்கள். இவன் நன்றாகப் படிக்கும் பையன் தான். என்ன காரணத்தினாலோ மூன்றாவதோ, நான்காவதோ வந்திருக்கிறான். போச்சு, அங்கேயே அழுகை ஆரம்பிக்க வீட்டுக்கு வரும் வரைக்கும் அடங்கவில்லையாம், கூடவே நான் இப்பவே அந்த மெடலை போட்டுக்கனும் என்று அடம் வேறு. சரி முதல் வந்த குழந்தை இவன் ப்ரெண்ட் தானே என்று அந்தக் குழந்தையின் அப்பா, ம்மா, கொஞ்சம் அந்த மெடலை ஹரி போட்டுக்கட்டும் குடும்மா என்றதற்கு அது தராமல் போகவே, இன்னும் ஆர்ப்பாட்டம் கூடியிருக்கிறது.

3. லீவிற்காக சென்னைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தபோதும் இதே கதைதான். அமித்துவிற்கு எதையாவது விட்டுத்தந்தாலும், அவள் எதையாவது முதலில் எடுத்துவிட்டாளோ, செய்து விட்டாளோ அவ்ளோதான் எல்லாம் போயே போச். சார் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்து விடுவார். மீறி ஏதாவது கேட்டால் அழுகை வெடிக்கும், நான் தான் மொதல்ல எடுப்பேன்னு சொன்னேன்ல , பின்ன ஏன் அவ எடுத்தா என்பது மாதிரியான டயலாக்ஸ்.

4. அவனின் இந்தப் போக்கை குறித்து என்னை மிகவும் பாதித்த ஒரு விஷ்யம்: ஒரு பேப்பரில் நிறைய யானைகள் கும்பலாகவும், ஒன்றன் பின் ஒன்றாகவும் போய்க்கொண்டு இருப்பது போன்ற படம் இருந்தது. நான் அமித்துவிடம் த்தோ, பாரு யானை, குட்டியானை, பெரிய யானை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவளும் பார்த்துக்கொண்டிருந்தாள். அமித்துவும் த்தோ த்தோ என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இந்தக் குட்டியானை தான் வர்ஷினியாம் என்றும் சொன்னேன்.அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவன், அதை விடுத்து, பேப்பரிடம் வந்து, மாமி எது வர்ஷினின்னு சொன்னீங்க என்றான், த்தோ இதுதாண்டா குட்டியா இருக்குப் பாரு என்றேன் நடுவில் இருந்த யானையை காண்பித்து, உடனே இவன் இது வர்ஷினி, அதற்கு முன்னர் இருந்த யானை சஞ்சு (அவனை விடப் பெரிய அவனின் மாமா மகள்), அதற்கும் முன்னர் முதலில் இருந்த யானை தான் எனவும் கூறினான். அதற்கு நானோ, சஞ்சு உன்னோட பெரியவடா, அப்ப அது அவள் தானே என்றேன். இல்ல இல்ல அதான் நானு, எனக்குப் பின்னாடி தான் சஞ்சு என்றான். எனக்கு நான் சொன்னது தவறா, இல்லை அவனுக்கு நான் எப்படி சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் என்றும் புரியவில்லை.

இதை படிக்கும் அம்மாக்கள், இவனுக்கு இருக்கும் இந்த பர்ஸ்ட் என்ற வார்த்தையின் தாக்கத்தை எப்படி சொல்லி புரிய வைப்பது என்றும் சொல்லிவிடுங்கள்.

11 comments:

Deepa said...

அற்புதமான பதிவு அமித்து அம்மா. குதிரை ரேஸுக்குத் தயார் செய்வது போல் ”ஃபர்ஸ்ட்” ஃபர்ஸ்ட் என்று குழந்தைகளை மோகம் கொள்ளச் செய்வது என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தெளிவு படுத்தியுள்ளீர்கள்.

எல்லா குழந்தைகளுக்குமே ஓரளவு இருக்குமென்றாலும் ஹரி விஷயத்தில் கொஞ்சம் அதிகம் தான்.

அவன் விரைவில் சமர்த்துக் குழந்தையாகி விடுவான் என நம்புகிறேன். சில சமயம் அடுத்து ஒரு தம்பியோ தன்கையோ பிறந்தால் சரியாகி விட வாய்ப்புண்டு.

Deepa said...

முயல் ஆமை கதையைச் சொல்லிப் பார்க்கலாம். அதைக் கொஞ்சம் மாற்றி ”ஆமை மெதுவாக வந்ததால் நிறைய நண்பர்களிடம் பேசிக் கொண்டு ஜாலியாக வந்ததாம். முயல் சீக்கிரமாக ஓடிப்போய் போரடித்துக் கொண்டு இருந்ததாம்” என்ற ரீதியில்.

இது ஏதோ எனக்குத் தோன்றியது.
மற்றவர்களின் கருத்துகளை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

அமுதா said...

நல்ல பதிவு அமித்து அம்மா. என் குட்டி பெண் கூட எதிலேயும் ஃபர்ஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பாள். ஆனால் எப்பொழுதும் நான், ஃபர்ஸ்ட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறுவேன். கொஞ்சம் சமாதானமாகத் தோன்றினாலும் ஒரு எரிமலை கனன்று கொண்டிருக்கும். நாம் திரும்ப திரும்ப "ஃபர்ஸ்ட் வந்தால் குட். இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீ குட் தான்" என்ற எண்ணத்தை ஊட்டினால் வளர வளர அவர்க்ளே உணர்வார்கள். "நீ ஃபர்ஸ்ட் தான் இருக்கணும்" என்று எரிகிற தீயில் நெய் ஊற்றாது இருந்தாலே எல்லாம் சரியாகி விடும் என்பது என் எண்ணம்.

Muruganandan M.K. said...

இந்தப் போட்டி யுகத்தில் பிள்ளைகளை ரேஸ் குதிரை போல தயார் செய்யும் அவலம் எதில் போய் முடியுமோ. சிந்திக்க வைக்கும் பதிவு.
பாராட்டுக்கள்.

செந்தில்குமார் said...

அமித்து அம்மா, ரொம்ப நல்ல பதிவுங்க..

இந்த 'ஃபர்ஸ்ட்'-ங்கற மேட்டர் ரொம்ப ஜாக்கிரதையா கையாள வேண்டிய ஒரு விஷயம்... ஹரி கூடிய சீகிரமே இந்த 'ஃபர்ஸ்ட்' நிலைல இருந்து மாறிடுவான்னு தான் எனக்கும் தோணுது.. கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு புரிய வேய்க்க முயற்சி செய்யலாம்...தீபா சொல்லி இருக்கற மாதிரி 'முயல் ஆமை' கதையைப்போல சிலவற்றை கூறலாம்... மேலும்... எதை செய்தாலும் அதில் சென்ற முறையை விட சிறப்பாக செய்தல் அவசியம் ... அதுக்கு 'ஃபர்ஸ்ட்'-ஆ தான் வரணும்ங்கறது கட்டாயம் இல்லை..அப்படின்னு புரியவைங்க... எப்பவும் யாரோடையும் ஒப்பிட்டு பாக்க வேண்டாம் அப்படிங்கறதே தெளிவு படுத்துங்க..

சின்ன குழந்தைக்கு ரொம்பவும் பிரஷர் போடவேண்டாம்... பொறுமையா சொன்னா நிச்சயம் அது அவங்களுக்கு புரியும்னு நெனைக்கறேன்...

Thamiz Priyan said...

நல்ல பதிவு! பர்ஸ்ட் பர்ஸ்ட் என்று குழந்தைகளை நெகடிவாக யோசிக்க வைப்பவர்களுக்கு ஒரு நல்ல அறிவுரைக் கட்டுரை!

Anonymous said...

ரொம்ப சரியான நேரத்தில் வந்த பதிவு இது அமிது அம்மா... இதற்க்கு மொத்த காரணம் பெரியவர்கள். கொஞ்ச நாள் கழித்து பிறந்தாலும், ஒரே குழந்தையாக வளர்வதால் வரும் பாதிப்பு. ரொம்ப சென்சிடிவான விஷயம். தீபா சொன்னதுபோல் தம்பியோ தங்கையோ வந்தால் கண்டிப்பாக சரியாகும். அதுவும் வயது அதிக வித்தியாசத்தில் வந்தால் இன்னும் பிரச்சனை. ஹோம் மாதிரியான இடங்களுக்கு அழைத்து சென்று அவன் கையால் பிற குழந்தைகளுக்கு எதாவது கொடுக்க சொல்லுங்கள், இதை ஒரு பழக்கமாக கொண்டு வாருங்கள். அப்போது மெதுவாக அவனுக்கு சொல்லி கொடுக்கலாம். பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாததாலும் அதிக செல்லத்தினாலும் வரும் விளைவு. ஐந்து வயதில் ஆரம்பித்து விடுங்கள். சரியாகிவிடும். வாழ்த்துகள்,

ஆகாய நதி said...

தீபா மற்றும் செந்தில்குமார் இவர்களோட கருத்துகளோட ஒத்துப் போகிறேன்... விடுக்கொடுக்கும் மனப் பக்குவமும் தேவை... இந்த முறை அவன் முதலிடம் அடுத்த முறை நீ என்று பிரித்து பகிர்ந்தளிக்கும் விதத்தைக் கற்றுக்கொடுத்தல் நலம் அமித்து அம்மா... இதற்கு அடுத்து வரும் குழந்தையும் தீர்வாகலாம்... தம்பி/தங்கைக்கு முதலிடம் விடுக்கொடுக்க எளிதில் கற்றுக்கொள்வான் :)

eniasang said...

இது பெற்றோர்களுக்கு போய் சேர வேண்டிய விஷயம்.நம்ம காரியத்துக்காக நம்ம குழந்தையை கூட பயன்படுத்த கூடாது.குழந்தையின் இயல்பிலேயேதான் குழ்ந்தை வளரனும். இப்ப குழந்தையிடம் நான் சாப்பிட்டு முடித்து விட்டால் நான் முதல் என்பது இப்ப மட்டுமே . எப்பவும் முதல் என்பது நடமுறையில் சிரமம்.என விளையாட்டா சொல்லி கண்டுக்காம போனால் நாளடைவில் சரியாகிவிடும். எல்லா நேரமும் அழவிடாம பிள்ளை வளர்க்க முடியாது

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.

Deepa said...
முயல் ஆமை கதையைச் சொல்லிப் பார்க்கலாம். அதைக் கொஞ்சம் மாற்றி ”ஆமை மெதுவாக வந்ததால் நிறைய நண்பர்களிடம் பேசிக் கொண்டு ஜாலியாக வந்ததாம். முயல் சீக்கிரமாக ஓடிப்போய் போரடித்துக் கொண்டு இருந்ததாம்” என்ற ரீதியில்.

இது ஏதோ எனக்குத் தோன்றியது. //

இதே கதை தான் அவனிடம் சொல்ல விழைந்தேன். ப்ச்ச் அதற்குள் அவன் ஊருக்கு சென்று விட்டான்.
அவன் அம்மாவிடம் தான் சொல்லவேண்டும். மேலும் ஹரியின் குணத்துக்காகவேனும் இன்னொரு குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறேன்.

பார்க்கலாம்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள், நல்ல எடுத்து சொல்லி இருக்கிறீகள் யானை முலம், குழந்தைகள் அப்படி தான் இருக்கிறார்கள்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger