Wednesday, May 6, 2009

அக்கா என்றாலும் அம்மா

எனக்கும் என் அக்காவிற்கும் சரியாக 16 1/2 வருட இடைவெளி. என் அக்காவின் திருமணத்தின் போது நான் ஒரு வயது முடியாத குழந்தை. நான் பிறந்த தருணத்தில் அம்மாவுக்கு ஜன்னி கண்டுவிட 3 மாதங்கள் அம்மா ஆஸ்பத்திரியிலேயே தங்கிவிட வேண்டிய நிலை. எனக்கு பால் பவுடர் கரைத்து பால் புகட்ட ஆரம்பித்ததிலிருந்து, என் கல்யாணத்திற்கு பாத பூஜை செய்து கொண்டது வரை என் அக்காதான். இதை எழுதும் போதே என் கண்கள் பனிக்கிறது.

ஆஸ்பத்திரியிலிருக்கும் அம்மாவை பார்க்க, எனக்கு அதே ஆஸ்பத்திரியில் ஊசி போட என எல்லாவற்றிற்கும் என்னை அழைத்து போகுமாம் அக்கா. பாவாடை, சட்டை போட்ட ஒரு சின்னப்பொண்ணு, இவ்ளோ சின்னக்குழந்தைய தூக்கிட்டு போதே அப்படின்னு நெறைய பேர் ஆச்சரியமா பார்ப்பாங்களாம் அக்கா. அம்மா வயிற்றில் நான் இருக்கும் போதே தங்கச்சி தான் வேணும்னு சாமி கிட்ட வேண்டிக்குமாம். ஆனா அம்மா ஆண் குழந்தைதான் வேணுமுன்னு லஸ் நவசக்தி விநாயகர் கோவிலுக்கு நடந்து போய் வேண்டிகிட்டு வருவாங்களாம். இன்னும் என் அம்மாவின் இந்த வேண்டுதல் தொடருகிறது, அது எங்களனைவரின் நலன் குறித்தான வேண்டுதல்.

அக்காவுடனான என் நிறைய சின்னப்பிள்ளை நிகழ்வுகள் நிழல் போல ஞாபகத்தில். என் அன்பு மொத்தத்தில் முக்கால் பாகம் என் அக்காவிற்குதான். அக்காவை யாரும் ஒரு சொல் சொல்லக்கூடாது. மாமா அக்காவை ஒரு சொல் கடிந்து பேசினாலும், அவரோடு சரிக்கு சரி மல்லுக்கு நிற்பேன். வளர்ந்த பின் அக்காவை ஒரு வேலை செய்ய விடமாட்டேன். அம்மா எதற்காகவேனும் அக்காவிடம் சண்டை போட்டால் அம்மாவோடு பேசமாட்டேன். அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள் (பெண் ஒன்று, ஆண் ஒன்று) இருந்தாலும், என்னை தன் முதல் பெண் போலதான் வளர்த்தது. எந்தப் பொழுதிலும் என்னை விட்டுக்கொடுத்தது கிடையாது. என்னை மாமா ஏதேனும் சொல்லிவிட்டால், அவரோடு பேசாது. இப்படியாய் நிறைய எனக்கான அக்காவின் தருணங்கள்.

தருணங்களின் தருணமாக. அமித்து பிறந்த மறுநாள் இரவு ஆஸ்பத்திரியில், வலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எழ முடியவில்லை, உட்கார, நிமிர என்று எதுவும் முடியவில்லை, ஜூரம் வேறு.
ஆப்பரேஷனின் முன்னர் எனிமா கொடுக்காததால், குழந்தை பின்னர் வயிறு உப்புசமாகவே இருக்க, வயிறு க்ளின் ஆக வேண்டுமென்று ஏதோ மாத்திரை கொடுக்க, அது பேதியில் முடிந்தது. ஹைய்யோ வயிறு புரட்டி புரட்டி பேதியாகிக்கொண்டிருந்தது எனக்கு. எழவே முடியவில்லை, இதில் எழுந்து எங்கு பாத்ரூம் வரை போவது. அப்போது என் அக்கா, எத்தனை முறை எனக்கு பெட் பேன் வைத்து எடுத்திருக்கும் என்று சொல்ல முடியாது. இன்னொரு பக்கம் குழந்தை எழும் போதெல்லாம் அதனை சமாதானப்படுத்தும் வேலை வேறு. பாவம் அக்கா. அந்த சூழலிலும் எனக்கு என் அக்காவை கஷ்டப்படுத்துகிறோமே என்றுதான் கண்ணீர் வருகிறது.

அக்கா, பிறப்பில் நீ எனக்கு அக்காவாக இருந்தாலும், வளர்ப்பில் நீ தான் எனக்கு அம்மா. அமித்துவிடம் நீ பெரிம்மா என்று சொல்லி கூப்பிட சொல்லும்போதெல்லாம் நான் உன்னை அம்மா என்று கூப்பிட நினைத்த ஆசையை தீர்த்துக்கொள்கிறேன்.


அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா............. மற்றும் அம்மாவுக்கும்.

11 comments:

Vidhya Chandrasekaran said...

உறவினைப் பற்றிய மிக நெகிழ்ச்சியான பதிவு.

எம்.எம்.அப்துல்லா said...

அன்னையர் தினமாச்சே...அம்மா வாழ்கனு சொல்லாம்னு பார்த்தா எலக்‌ஷென் நேரம் தப்பா அர்த்தமாயிரப்போகுது :))

pudugaithendral said...

அன்னையாக அக்கா செய்வதை காலம் தாழ்த்திதான் தங்கைகளோ, தம்பிகளோ புரிந்து கொள்வார்கள்.
அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஆகாய நதி said...

ரொம்ப நெகிழ்வா இருந்தது.. :)

வாழ்த்துகள் உங்கள் அக்காவுக்கு!

அமுதா said...

நெகிழ்வான பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நெகிழ்ச்சியாத்தான் இருக்கு.. அவங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சொல்லமறந்துட்டேனே டெம்ளேட் தலைப்பு இருக்கிற படம் கவிதையா அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்

தீபாதேன் said...

என் அம்மாவும் உங்கள் அக்காவைப் போல தன் தங்கையை மூத்தப் பெண் என்பவர். உங்கள் அனுமதியுடன் இந்தப் பதிவை என் தாய்க்கு 'அன்னையர் தின' காணிக்கையாக்குகிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

பலருக்கு அம்மாக்கள் அம்மா என்கிற உறவிலேயே இருக்கிறார்கள். சிலருக்கும் வேறொரு உறவுமுறையின் மூலம் அம்மாக்கள் கிடைக்கிறார்கள். நானும் என் பாட்டியை (அம்மாவின் அம்மா) அம்மா என்றுதான் இன்றும் அழைப்பேன். நீங்கள் சொல்கிற இந்த அக்கா கார்த்தியின் பாட்டியா? அவர்களை இந்த அளவிற்கு மிகவும் பெருமையுடன் எண்ணிப்பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களுக்கும் மற்றும் அனைத்து அம்மாக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்

ராமலக்ஷ்மி said...

மிகவும் நெகிழ்வான பதிவு! அம்மாக்களுக்கு ஈடான அன்பைத் தருவதில் அக்காக்களுக்கு இணை எவருமில்லை. பகிர்தலுக்கு மிக்க நன்றி அமித்து அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அமித்துவுக்கு இப்படி ஒரு பெரியம்மாவா!!1இப்படி ஒரு அக்கா நான் பார்த்ததில்லை. வாழ்த்துகள் அவர்களுக்கும் உங்களுக்கும் அமித்து அம்மா.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger