Showing posts with label கார்த்திகாவாசுதேவன் தொடர்கதை. Show all posts
Showing posts with label கார்த்திகாவாசுதேவன் தொடர்கதை. Show all posts

Thursday, July 8, 2010

மீன் இளவரசி மீனலோஷினி பார்ட் - 2

ஆச்சர்யத்தில் உறைந்து போன மச்சேந்திர மனோகரனை அதிக நேரம் இம்சிக்காமல் உடனே பேச ஆரம்பித்தது மீன் ;

இளவரசனே என்னை உன் கையில் இருந்து நொடியில் கடலுக்குள் வீசு இல்லையேல் நான் அடுத்த பத்தாம் நிமிடம் வெறும் கருவாடாகிப் போவேன்,இது உண்மை ,என் சொல்படி செய்,சீக்கிரம்...சீக்கிரம் என்னை கடலுக்குள் வீசு. சொல்வதை செய் , மீன் கோபமாய் ஆணையிட்டது

மச்சேந்திரனுக்கு மீன் பேசுவது ஒரு அதிசயம் எனில் அது இவனுக்கு ஆணையிடுவது இன்னும் அதிசயமாய் தோன்றியது.

ஏ ...தங்க மீனே உன்னை பிடித்துக் கொண்டு போய் என் தங்கையின் கையில் ஒப்படைக்காவிட்டால் நான் அவளுக்கு பாசமிக்க அண்ணனாக இருக்கும் தகுதியை இழந்து விடுவேன் அதனால் வாயை மூடிக் கொண்டு என்னோடு வா.அரண்மனையின் தங்கத் தொட்டியில் உன்னை விட்டதும் பிறகு நீ பேசுவதை நான் பொறுமையாக கேட்டுக் கொள்கிறேன் .

அவன் எள்ளலாய் கையிலிருக்கும் மீனைப் பார்த்துக் கொண்டே பேசப் பேச மீன் இப்போது சுவாசமின்றி துடித்து துள்ளி துள்ளி திணற ஆரம்பித்திருந்தது .

"இ...ள...வர...சனே நான் இத்த...னை சொல்லியும் கேளா...மல் நீ தவறு செய்கிறாய் ..இதற்கான ப...ல...னை"

(அதற்குள் பத்தாம் நிமிடம் கடந்து விட தங்க மீன் காய்ந்து வெறும் கருவாடகிப் போகிறது!

மச்சேந்திர மனோகரன் சட்டென நிகழ்ந்து விட்ட இந்த காரியம் கண்டு திக்பிரமையில் அதிர்ந்து போனான்.

கப்பலின் விளிம்பை கடலுக்குள் இருந்தவாறே தலை உயர்த்தி நோக்கினான்.மீனலோஷினி இந்த தங்க மீனுக்காக எத்தனை ஆசையோடு காத்துக் கொண்டிருப்பாள் ,அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற வருத்தம் அவனை உற்சாகமிழந்து தளர்ந்து போக வைத்தது ,கையில் கருவாடாகிப் போன மீனை ஏந்திக் கொண்டு தங்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறோமோ என்ற அளவில்லாத ஏமாற்றத்துடன் இளவரசன் கப்பலை நோக்கி நீந்தி நூலேணியில் கப்பலுக்குள் ஏறி இளவரசியும் மன்னனும் மற்றவர்களும் இருக்கும் இடத்துக்கு வருகிறான் .

அங்கே அவன் கண்ட காட்சி அவனை பேரதிர்ச்சியில் சில்லிட்டு உறைய வைப்பதாக இருந்தது.

என்னருமை தங்கைக்கு என்ன ஆயிற்று ? ஏன் ...இப்படி உருமாறிப் போனாள் என்று மச்சேந்திரன் தங்கை மீனலோஷினியின் அருகே விரைந்து செல்கிறான்.


இவனைப் போலவே கடலுக்குள் தங்க மீனைத் தேடச் சென்ற மற்ற சகோதரர்களும் அங்கே முன்பே வந்து விட்டபடியால் அனைவருமே ஒரே விதமான அதிர்ச்சியால் தாக்கப் பட்டு செய்வதறியாது திகைத்து போய் நின்றிருந்தனர்.

மன்னன் மற்றும் மகாராணியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது,

தனக்கு நேர்ந்த உருமாற்றத்தால் அதிர்ச்சியில் மயங்கித் துவண்டிருந்த இளவரசி மீனலோஷினி தன் அன்னையான மகாராணியின் மடியில் தலை சாய்த்திருந்தாள். தலை உடல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது ஆ...னால்....ஆ...னால் அவளது கால்....கால்...கால்களை மட்டும் காணோம்...

எங்கே போயின இளவரசியின் கால்கள் !

இளவரசியின் கால்களுக்கு என்ன ஆயிற்று !!!

நாளை வரை காத்திருங்கள்.


தொடரும்...

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger