Sunday, November 30, 2008

குழந்தை வளர்ப்பும் இணையமும்

அனைவருக்கும் வணக்கம்.
பரபரப்பான இந்த வாழ்க்கையில் இணையம் நம் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகிவிட்டது. நான் கருவுற்றிருந்த சமயமும் சரி குழந்தை பெற்றெடுத்தப் பின்னும் சரி என்னில் இருந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடை கண்டுப்பிடிப்பதில் கொஞ்சம் திணறித்தான் போனேன். அதுவும் குழந்தைக்கு 5 மாதங்கள் இருக்கும்போது மீண்டும் தனிக்குடித்தன வாழ்க்கை. தனியாக குழந்தையை வளர்ப்பது ரொம்ப சிரமமாகப்பட்டது. பிறகு இணையத்தில் தேடி கொஞ்சம் தெளிவு பெற்றேன். எனக்கு உபயோகமாகத் தெரிந்த சில தளங்கள் இதோ:



1. Baby Center : இந்த தளம் நீங்கள் கருவுற்ற சமயத்திலிருந்து குழந்தை பெற்று வளர்க்கும் முறை வரை பல டிப்ஸ்களை அள்ளித்தருகிறது. இந்த தளத்தில உங்கள் இ-மெயில் முகவரியை பதிந்து (இலவசம் தான்) கொண்டால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றால வாராவாரமும், ஒரு வயதுக்கு மேல் என்றால் மாதத்திற்க்கு ஒருமுறையும் (உங்கள் குழந்தையின் பிறந்த தினத்திர்க்கு ஏற்றார்போல்) மெயில் அனுப்புகிறார்கள். அதில் அந்த காலத்திற்கான குழந்தையின் வளர்ச்சி, கொடுக்கப்படவேண்டிய உணவுகள், அதன் செய்முறை, போடப்பட வேண்டிய தடுப்பூசிகள், விளையாட்டுகள் என பல விஷயங்களை கொடுக்கிறார்கள். மிகவும் உபயோகமான தளம்.


2. குழந்தை உணவுகள் : ஆர்குட் கம்யூனிட்டியான இதில் குழந்தைகளுக்கான உணவுகளை தயாரிக்கும் முறை கொட்டிக்கிடக்கிறது. ஆறு மாதத்திலிருந்து தரக்கூடிய உணவுகளின் ரெசிபி இங்கு விவாதிக்கப்படுகிறது. இதில் அட்வாண்டேஜ் எல்லாமே tried and tested.


3. India Parenting : இதுவும் baby center போல நிறைய விஷயங்களை தருகிறது. இங்கு பிறரின் அனுபவங்கள் மூலம் பாடம் கற்கலாம்:)


மிக முக்கியமாக எதையும் செய்வதற்க்கு முன்னால் உங்கள் (குழந்தைகளின்) மருத்துவரின் ஆலோசானையை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.


உங்களுக்குத் தெரிந்த உபயோகமுள்ள பிற தளங்களைப் பற்றி பின்னூட்டங்களில் தெரிவியுங்களேன்.


Happy Parenting:)

Saturday, November 29, 2008

அம்மாக்களினால், அம்மாக்களுக்காக, அம்மாக்களைப் பற்றி!!

இந்த வலைப்பூவை தொடங்க பல காரணங்கள் உண்டு. பப்புவுக்கு இப்போது வயது மூன்று. அம்மாவாக எனக்கு வயது அதுதான். அவள் வளர்ந்துக் வருகையில், என்னிடம் நிறைய கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன். பேரண்டிங் இணையத் தளங்கள், இண்டஸ்லேடிஸ் குரூப் என்று மிக தேடித் தேடி தெளிந்து கொண்டிருந்தேன். சிலசமயங்கள் ஆன்லைனிலும் போனிலும் தோழிகளிடமும். ஆங்கிலத்தில் நிறைய இணையத் தளங்கள் காணக் கிடைக்கின்றன.ஆனால், எனக்குத் தேவைப்பட்ட போது எனக்கு கிடைத்தவை தமிழில் வெகுசில (somewhere to relate).மேலும் இங்கு இருக்கும் நம் அனைவருக்கும் வேர்கள் ஒன்றே..பொதுவாக பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கலாம்!
என்னிடம் இருக்கும் சில விஷயங்கள் வேறு யாருக்கேனும் பயன்படலாம். உங்களுக்குத் தெரிந்தது எனக்குப் பயன்படலாம்.பகிர்ந்துக் கொள்ள ஒரு பொதுத் தளமாக இந்த வலைப்பூ இருக்கலாம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்ப நீட்டி முழக்க விரும்பவில்லை :-)!

என்னைப் போல பலருக்கும் கேள்விகள் இருந்திருக்கும்..எப்படி கடந்து வந்தீர்கள்? பாட்டா, டான்ஸா? எந்த வயதிலிருந்து? டாய்லெட் ட்ரெய்னிங்? டம்ப்ள் டாட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னென்ன புத்தகங்களை தெரிவு செய்கிறோம், குழந்தைகளுக்கு? சாப்பாட்டு விஷயங்கள்?

இப்படி பகிர்ந்துக்கொள்ள மட்டுமல்ல, நமது அனுபவங்களை,எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதை வைத்து நம்மை எடை போடாமல் பொறுமையாக கேட்க வாய்ப்பளிக்கும் தளமாகவும் இருக்கலாம். இப்படி நமது எல்லோரது தளமாக இருக்கப் போகின்றது. நமக்கு நாமே திட்டம்..;-) ஒரே ஒரு கண்டிஷன், பேசுப்பொருள் குழந்தைகளைப் பற்றியும் அம்மாக்களைப் பற்றியதாய் மட்டுமே!!

நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால், உங்களிடம் இருக்கும் அனுபவங்கள்/எண்ணங்கள் பிறருக்கு உபயோகமாகும் என்று எண்ணினால் mombloggers@gmail.com மடலிடவும். எங்களோடு இணைத்துக் கொள்ள அழைப்பை அனுப்புகிறோம், ஏற்றுக் கொண்டு ஆரம்பிக்கலாம் கச்சேரியை.
வருக, மேலான ஆதரவைத் தருக!

Friday, November 28, 2008

தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து




தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து
தமிழில் : ஜீவா ரகுநாத்

வயது : மூன்று - ஐந்து வயதினருக்குட்பட்டது


இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நானே ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடிய புத்தகம். அபுவின் பந்து உதைக்கப்படும்போது அது பயணிக்கும் திசைகளில், சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச் செல்கிறது ஒருவித தாள கதியில்.

திந்தக்கம் திந்தக்கம் திந்தக்கம் தா என்றும் தரிகிட்ட தகிட்ட தரிகிட்ட தகிட்ட தா என்றும் பரதத்தின் தாளத்தில் சொல்லும் பாங்கு குழந்தைகளை ஈர்ப்பதாயிருக்கிறது. சில வாக்கியங்கள் முடியும்போது ஒரே மாதிரி வார்த்தைகளால் முடிவதால், பப்புவும் என்னோடு சேர்ந்து சொல்ல ஏதுவாயிருக்கிறது. பந்து செல்லும் ஒவ்வொரு இடமும் நமது கற்பனைக்கேற்றவாறு காட்சிகளை விரிக்கலாம்.

மேலும் மெயின் கதாபாத்திரம் அபு மற்றும் பந்து. அபுவின் காலடியிலிருந்து எழும்பிய பந்து
ஊரின் பல இடங்களை சுற்றி அவனது காலடிக்கே எப்படி, யார் யாரை சந்தித்து வருகிறது என்பது கதை.

ஒவ்வொரு பக்கமும் அதிகபட்சம் 15 வார்த்தைகளில் இருப்பதால், எழுத்துக்களை கற்கும்போதும் உபயோகமாக இருக்கும். இரண்டு வயதினருக்குக் கூட படித்துக்காட்டலாம்.

குழந்தைகளுக்கு எந்தப் புத்தகம் பிடிக்குமென்று தெரிந்துக் கொள்வது எளிதல்ல. அவர்களாக படிக்க துவங்கும் வரையில், தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோர்களாக நாம்தான் புத்தகங்களை தெரிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. அதாவது, நாம் அவர்களுக்கு இது பிடிக்கலாமென்று எண்ணி மட்டுமே தெரிவு செய்கிறோம். அது சில சமயங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் போய்விடுகிறது. இந்த புத்தகம் அப்படி சரியான ஒன்றாக, நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.


மூலக்கதை மலையாளத்தில் : ஜேகப் சாம்சன் முட்டடா

பதிப்பகம் : தூலிகா

Thursday, November 27, 2008

வணக்கம்!!!

அனைவருக்கும் வணக்கம்!

தங்கள் குழந்தைகளைப் பற்றி வலைபதியும் அம்மாக்களின் பதிவுகளை ஓரிடத்தில் இணைத்தால் படிக்க வசதியாக இருக்குமென்ற காரணத்தினால் வந்த வலைப்பூ இது.

லிஸ்ட்-டில் சுவாரசியமான அம்மாக்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் தயை செய்துத் தெரிவியுங்கள்.

பேரண்டிங் டிப்ஸ் கொடுக்க பேரண்ட்ஸ் கிளப் இருக்கிறது, குட்டீஸ் பற்றி அறிய குட்டீஸ் கார்னரும் இருக்கிறது. சோ, இதில் என்ன? இந்த வலைப்பூவிற்கு பரிந்துரைக்க உங்களிடம் ஏதாவது உண்டென்றால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger