Thursday, February 26, 2009

உங்களுக்குத் தெரியுமா?

நான் அறிந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்கவே இதை எழுதுகிறேன்.

பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது என்று நினைத்தீர்களா?

இப்போது நமக்கு கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள் கிடைக்கிறது.அது பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது.அந்தப் பழஅங்கள் பழுத்து சுமார் ஒரு வருட காலம் இருக்கும்.ஆனால்,அழுகி விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு வித மெழுகினால் கோட் செய்கிறார்கள்.இப்படி செய்வதால் அந்த பழங்கள் வாய்ப்புகள் விடுகிறது.

கடைகளில் வாங்கும் நாமோ அதை நன்றா............கக் கழுவி குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம்.இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

மெழுகினால் கோட் செய்யப்பட பழம் என்பதால் உடலில் போய் செரிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகிறது.அதுவரை உடலினுள் செரிக்காமல் இருப்பதால் பக்கவிழவுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்..:-(

அதனால் இவ்வாறான விளைவுகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது:

*தநீரை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதில் பழங்களை அறை மணி நேரம் போட்டு எடுத்து சாப்பிடலாம்.

*தொலை நீக்கி விட்டு சாப்பிடலாம்.

இன்னொரு விஷயமும் உள்ளது.

நாம் வாங்கும் மசாலாவுடன் சேர்ந்த நூடில்சில் கூட ஒரு வித மெழுகினால்கோட் செய்கிறார்கள்.அதனால்,அதில் போட்டிருக்கும் செய்முறையை விடுத்து வேறொரு முறையை கையாண்டால் உடலுக்கு நல்லது.

*தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் வெறும் நூடில்சைப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

பின்னர் அந்தத் ண்ணீரை கீழே கொட்டிவிட்டு ,வேறொரு தண்ணீரில் அதே நூடில்சைப் போட்டு மசாலா கலந்து செயலாம்.

அதிக பட்சம் ஒரு வாரத்திற்கு மூன்று முறை நூடில்சை செய்து சாப்பிடலாம்.

குழைந்தைகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை என வைத்துக் கொள்வோமே!!

அவர்களின் நலம் காப்போம்!!!

Tuesday, February 24, 2009

பயணத்திற்க்கு உதவும் checklist

தொலைதூர பயணமாகட்டும், இல்லை அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வதாகட்டும் இந்த பேக்கிங் வேலை ரொம்ப கஷ்டம். எப்படியாவது எதையாவது மறந்துவிடுவோம். அதுவும் கைக்குழந்தைகளோடு பிரயாணம் செய்கையில் ரொம்பவே கஷ்டம். அதற்காக நான் தயாரித்த செக்லிஸ்ட் இது. உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்:)

உடைகள்:

(குளிர் பிரதேசமெனில்) உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள்
(குளிர் பிரதேசமெனில்) இரண்டு ஸ்வெட்டர்கள்
(குளிர் பிரதேசமெனில்) கையுறைகள்
(குளிர் பிரதேசமெனில்) காலுறைகள்
காலணி
நிறைய டயப்பர்கள்
சிறிய டவல்கள்
குழந்தைக்கு பயன்படுத்தும் போர்வை (சிறியது போதும்)

உணவு:

Cerelac - குழந்தைக்கு பிடித்த flavour
பால் பவுடர் (உபயோகிக்கும் பட்சத்தில்)
ஜூனியர் ஹார்லிக்ஸ் (உபயோகிக்கும் பட்சத்தில்)
பிஸ்கட்
நல்ல தரமான பேக்கரியிலிருந்து வாங்கிய muffins (பயணத்தின் போது உதவும்)
சின்ன கப் (cerelac/சாதம் ஊட்ட)
2 அல்லது 3 ஸ்பூன்கள்
சின்ன flask (நான் 500ml வைத்திருக்கிறேன்)
பால் பாட்டில்/ சிப்பர்/ டம்ளர்
சுத்தப்படுத்த சிறிய பிரஷ்

சில பேர் cerelac போன்ற உணவுகளை அப்படியே டப்பாவோடு தூக்கிக்கொண்டு வருவார்கள். இது தேவையில்லாத சுமை. நீங்கள் எத்தனை நாள் தங்கப்போகிறீர்கள், உங்கள் குழந்தை உட்கொள்ளும் அளவை கணக்க்கிட்டு அதை விட ஒரு வேளைக்கு அதிகமாக இருக்கும்படி சின்ன டப்பாக்களில் எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல் 3/4 அடுக்கு கொண்ட milk dispenser baby shopல் விற்கிறார்கள். இதில் மூன்று வேளைக்குத் தேவையான உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டால் கரைத்து ஊட்ட வசதியாக இருக்கும்.

மருந்து:

பிரயாணத்திற்க்கு முன் குழந்தை நல மருத்துவரை சந்தித்து நீங்கள் செல்லப்போகும் இடத்தின் தட்ப வெப்ப நிலையை கூறி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் நீங்களே மருந்து கொடுக்காதீர்கள். ஜுரத்திற்க்கு மட்டும் crocin/calpol syrup கொடுக்கலாம். அதுவும் டாக்டரிடம் கேட்டுவைத்துக்கொள்ளுங்கள்.

சிறிய காட்டன் ரோல்
விக்ஸ் (கண்டிப்பாக மூக்கில் தடவ கூடாது)
Nappy Rash cream

மற்றவை:

Wet wipes
Tissue papers
சிறிய பாட்டில் பாடி வாஷ்
கொஞ்சம் disposable bags. வேண்டாத பொருட்களை/மீந்த உணவுகளை இதில் போட்டு குப்பையில் போட்டுவிடலாம்.

முடிந்தவரையில் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள். தூக்குவது ரங்கமணிகளானாலும் நமக்குத் தான் வீண் சுமை:)
ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்:)

விக்ஸ்


இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் தோழமைகளே.

Monday, February 23, 2009

ஸ்கூலுக்கு ஏன் போகணும்?

அம்மாக்கள் வலைப்பதிவுல எழுதி ரொம்ப நாள் ஆச்சு. என்ன எழுதறதுனு யோசிச்சால் ம்ஹூம் ஒண்ணும் தோணலை. மிஸஸ் டவுட் கொடுத்த ஐடியாதான் நினைவுக்கு வந்தது. அதனால் "கதை நேரம்" என்று ஒன்று போட்டு விட்டேன்.

என்கிட்ட குழந்தைகள் இப்பவும் விரும்பி கேட்கிற என் கற்பனை கதை இது. என் பொண்ணு ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிச்சப்ப உருவாகி அவளை ஸ்கூலுக்கு தயார் செய்ய வச்ச கதை. என் தோழி அவள் பொண்ணு ஸ்கூல்ல சொல்லி குட்டி குழந்தைகள் விரும்பி இரசித்த கதை. என் வலைப் பதிவுல இருந்து எடுத்து , இணையத்தில் இருந்து படங்களோட போடறேன். உங்க குழந்தைகளுக்குப் பிடிச்சிருக்கானு சொல்லுங்க..


ஒரு காட்டில் ஒரு யானை இருந்ததாம். அது ஒரு நாள், வாக்கிங் போச்சாம். ஒரு முயல் பார்த்ததாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை
சொல்லுச்சாம். "நானும் வரேன்", அப்படீனு முயல், யானை மேல ஏறிக்கிச்சாம்.
முயல் யானை மேல வர்றதை பார்த்து, குரங்கு வந்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு குரங்கு, யானை வால்ல தொஙகிட்டு வால்தனம் பண்ணிட்டு வர ஆரம்பிச்ச்தாம்.குரங்கு, பண்ற சேட்டையை, அணில் பார்த்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு அணில், யானை துதிக்கையில் ஏறி விளையாடுச்சாம்.அப்படியே காட்டில் மயில், குயில், மான் எல்லாம் சேர்ந்து, இயற்கையை இரசிச்சிட்டே போனாங்களாம். திடீர்னு, "உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." அப்படீனு சத்தம். பார்த்தால், சிங்கம் நின்னுச்சாம்."எல்லாரும் எங்க் போறீங்க", அப்படீனு சிங்கம் உறுமுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லா மிருகமும் சேர்ந்து கத்துச்சாம். "யானை மேல ஏறிகிட்டு என்ன வாக்கிங்... எல்லாம் இறங்குங்க, நானும் வரேன்.." அப்படீனு சிங்கம் சொல்லிச்சாம்.
எல்லாம் கீழே இறங்கி,ஜாலியா குளத்த்து கிட்ட வந்தாங்களாம். குட்டி முயலுக்கு ஒரே தாகம். ஓடிப் போய் தண்ணில வாய் வச்சுதாம். உள்ள இருந்து ஒரு முதலை வந்துச்சாம்.
"எல்லாரும் எங்க போறீங்க" அப்படீனு முதலை மிரட்டுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லா மிருகமும் சேர்ந்து கத்துச்சாம். உடனே முதலை அழ ஆரம்பிச்சதாம். பெரிய மீன் ஒண்ணு வந்துச்சாம்.அதுவும் எல்லாரும் வாக்கிங் போறாங்கன்ன உடனே அழுதுதாம். எல்லாரும் "ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாங்களாம். மீனும் முதலையும், எங்களுக்கும் வாக்கிங் வர ஆசையா இருக்கு, ஆனா நாங்க தண்ணிய விட்டு எப்படி வர்றது" அப்படீனு அழுதுதாம்.எல்லா மிருகமும் அழ ஆரம்பிச்ச்தாம்.

அப்ப யாழ் பாப்பா வந்தாளாம். "எல்லாரும் ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாளாம். சிங்கம் காரணத்தை சொல்லுச்சாம். உட்னே யாழ் பாப்பா சிரிச்சாளாம், "இதுக்கா அழறீங்க? நான் ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?", அப்படீனு கேட்டாளாம். எல்லாரும் "என்ன என்னனு" கேட்டாங்களாம். யாழ் குட்டி சொன்னாளாம், "எல்லாரும் ஜாலியா தண்ணில குதிச்சு நீந்துவோம்". எல்லோருக்கும் சந்தோஷமாம். ஜம்முனு தண்ணில குதிச்சு விளையாடினாஙகளாம்.யாழ் பாப்பாக்கு மட்டும் எப்படி இது தோணிச்சாம்?
யாழ் பாப்பா புத்திசாலி.

யாழ் பாப்பா ஏன் புத்திசாலி?
சிங்கம் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யானை ஸ்கூலுக்கு போகுதா? இல்ல? மீன் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யாழ் பாப்பா ஸ்கூலுக்கு போறாளா? ஆமாம். அதான் புத்திசாலியா இருக்கா..


Friday, February 20, 2009

வழிகாட்டுங்கள் ப்ளீஸ்........

இப்போது பத்மாவிற்கு பள்ளி விடுமுறை என்பதால் அவளுக்கு பிடித்ததுபோல்தான் வீட்டில் சமையல் செய்கிறேன்.ஆனால் அவளோ,என்னை பொறுமையின் எல்லைக்.............கே கொண்டுபோய் விடுவாள்.அவள் என்னை டென்ஷன் ஆக்குவது உணவே வேளையின்போதுதான்.
இத்தனைக்கும் நான் பத்மாவிற்கு நொறுக்ஸ் எதுவும் கொடுப்பதில்லை (காலை முதல் மதியம் வரை).ஆனாலும்,சாப்பாடு என்றால் அவளுக்கு எப்படிதான் இருக்குமோ தெரியவில்லை.
சாப்பிடாமல் விடவும் என்னால் முடியாது.....நான் என்னதான் செய்வது.இப்போது நான் இதை எழுதுவதற்கு காரணமே இன்று எனக்கு அவளுடன் நடந்த போராட்டத்தின் பாதிப்பே.
இதுபோல் எனக்கு மட்டும்தான் நடக்கிறதா,இல்லை எனை போன்ற அம்மாக்களும் இங்கே உண்டா?
இவளுக்கு நான் எப்படித்தான் உணவின் மேல் விருப்பத்தைக் கொண்டு வருவது.......
தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!!!!!!

Thursday, February 19, 2009

எழுதச் சொல்லிக் கொடுப்போம் வாங்க...

இதற்கு முந்தையப் பதிவிற்கு இங்கே.

பேட்டர்ன்களை பிள்ளைகள் மனதில் சரியாக
பதிய வைக்க வேண்டும். நாம் வரைந்து
பிள்ளையை அந்த வடிவத்தின் பெயர்
சொல்லச் சொல்லலாம், நாம் பெயர் சொல்ல
பிள்ளை அந்த வடிவத்தை வரையலாம்.
இப்படி நன்கு பதிந்த உடன் எழுத ஆரம்பிக்கலாம்.

இதுவும் பெரிய 4வரி நோட்டில் கலர் பென்சிலால்
எழுதப்படவேண்டும். காபி ரைட்டிங் என்பார்களே
அது போல் புள்ளிகளின் மேல் பல முறை எழுதப்
பழக்க வேண்டும்.

ஆங்கில் எழுத்துக்கள் என்பதால் எப்படி
எழுதச் சொல்வது என்பதை ஆங்கிலத்தில்
தருகிறேன். (மன்னிக்கவும்)

முதலில் small letters எழுதப் பழக்க வேண்டும்.

1. left curve + standing line = a
2. left curve - c
3. left curve up and right curve down - s
4. left curve upside down and one tail- n
5. left curve + right curve - o
6. standing line, left curve +right curve - p
7. standing line plus left curve upside down - h
8. left curve and standing line - d
9. r
10 f - standing line with a tail
11. standing line and a dot - i
12. left curve upside down 2 times - m

இப்படி எழுத்தின் வடிவத்தை மனதில்
பதிய வைத்தால் குழந்தை முறையாக
எழுத பழக்கப்படும்.

********************************
இந்தப் பேட்டர்ன்கள் எந்த மொழிக்கும்
சொல்லலாம்.

Wednesday, February 18, 2009

வேண்டுகோள்!!!!

எனது மகன் தனது சிறு வயது தோழியைப்
பற்றி புது பள்ளியில் சொல்லியிருக்கிறான்.

இந்தப் பிள்ளைகள் அதற்கு கண், காது
மூக்கு எல்லாம் வைத்து அழகாக
பறக்கவிட்டுவிட்டார்கள்!!! மனது
நொறுங்கிப்போனான் ஆஷிஷ். இப்படி
ஒரு பெண்ணுடன் தன்னை இணைத்துப்
பேசுகிறார்களே! இது அந்த தோழிக்கு
தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்!!
என்று வேதனையுடன் அழத் துவங்கிவிட்டான்.

தினம் தினம் பள்ளியில் அவர்களின்
பேச்சு எல்லை கடந்து, முறையற்றுப்
போன நிலையில்
ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.

ஆஷிஷின் வகுப்பு மாணவி அம்ருதாவின்
வகுப்பில் இருக்கும் தன் அத்தை மகனை
பொது இடங்களில் ஆஷிஷைக் காணும்
பொழுதெல்லாம் கிண்டல் செய்யச் சொல்லி
கொடுத்திருந்தாள். (இனி ஒரு முறை
இது நிகழ்ந்தால் பள்ளியிலிருந்து
இருவரும் நீக்கப்படுவார்கள் என்று
எழுதி பெற்றோர்களுக்கு அனுப்பி
விட்டார்கள்)

ஆவன செய்வதாக சொல்லி, (செய்தும் விட்டார்கள்)
அந்த ஆசிரியை (வைஸ் பிரின்சிபால்) என்னிடம்
பகிர்ந்ததை நான் இங்கே கட்டாயம் பகிர்ந்தே
ஆக வேண்டும்.

மேடம்! இந்த நிகழ்வில் யாரும் குற்றவாளி இல்லை.
குற்றம் சாற்ற வேண்டியது மீடியாவைத் தான்என்றார்.

இந்த 24மணி நேர சேனல்கள் வந்த பிறகுதான்
மெகா சீரியல்கள் அதிகமாகின. நாட்டுல
நடப்பதைத் தான் காட்டுகிறார்கள் என்று
சொல்லி மக்கள் அதிலும் பெண்கள்
பார்க்கத் துவங்கிவிட்டனர்.

வீட்டில் மெகா சீரியல் ஓடிக்கொண்டிருந்தால்
அதை அங்கே இருக்கும் குழந்தையும்
பார்க்கிறது. வேண்டாத எண்ணங்கள் அதன்
மனதிலும் பதிகிறது என்பதை பலர் யோசிப்பதே
இல்லை!! மாமியார் மருமகள் சண்டை,
கணவன் மனைவி பிரச்சனை, குத்து, வெட்டு,
கொலை, தவறான திட்டங்கள் இவை கண்முன்
காட்டப்படும் பொழுது அந்த பிஞ்சு மனதில்
பசுமரத்தாணி போல்பதிந்துவிடுகிறது.

அதன் விளைவுதான் பிள்ளைகள் கூட
ஸ்ட்ரெஸ் மிகுந்த வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சின்னச் சின்ன சண்டைகளுக்கு கூட மிகப் பெரிய
வார்த்தைகள் உபயோகிக்கிறார்கள்.

என்றார். சத்தியமான வார்த்தைகள்

என் வேண்டுகோள் என்ன?

தயவு செய்து உங்கள் வீட்டில் மெகா சீரியல்
ஓடிக்கொண்டிருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

இனி உபயோகமான நிகழ்ச்சி தவிர ஏதும்
பார்ப்பதில்லை என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

சீரியல் பார்த்து சீரழிந்து போக மாட்டோம்.
எங்கள் குடும்பத்திற்கு நிம்மதி தேவை
என அடிக்கடி சொல்வது நல்லது.

ஆண் நண்பர்களே! வீட்டில் மெகா சீரியல்கள்
பார்க்கக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லுங்கள்.
சண்டை வரும். ஆனாலும் உறுதியாக இருங்கள்.

சீரியல் பார்க்கும் நேரங்களில் பிள்ளைகளுடன்
அளவளாவலாம்.

சீரியல் பார்ப்பதைத் தவிர்ப்பதால் பிள்ளைக்கு
எவ்வளவு நன்மை என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
புரிய வையுங்கள். அவசியமேற்பட்டால்
கவுன்சிலிங்கிற்கும் அழைத்துச் செல்லலாம்.

சீரியல்கள் பார்ப்பதை எப்படித் தடுக்க முடியும்?
உங்கள் ஐடியாக்களை பின்னூட்டங்களில்
சொல்லுங்கள். பலருக்கும் உதவியாக இருக்கும்.

*********************************************
இத்தனைக்கப்புறம் ஆஷிஷ் சொன்னது தான்
ஹைலைட்.

பாவம்மா! என் வகுப்புத் தோழர்கள்!
அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்
வேலைக்குப் போயிடறாங்க. அவங்க
வர்ற வரைக்கும் தனியாக இருக்காங்க.

நீங்க சொல்வது மாதிரி அவங்களுக்கு
எடுத்துச் சொல்ல ஆளில்லை. அப்பா
மாதிரி அன்பா, பாசமா பாக்க அவங்களுக்கு
நேரமில்லை. இதெல்லாம் விடக் கொடுமை
நீங்க வகையா செஞ்சு கொடுக்கற மாதிரி
அவங்களுக்கு ஃபுட் கிடைக்க மாட்டேங்குதுங்கற
காண்டுஎல்லாமா சேர்ந்து என்னிய இப்படி
பேசறாங்க. :(( :)))
Tuesday, February 17, 2009

அம்மாவுக்கு, அப்பா சொன்ன அறிவுரை

தலைப்பு மாதிரி நீளமா இருக்காதுங்க இந்தப் பதிவு.

ரெண்டு நாளைக்கு முன்னே, டேபிளின் மீதிருந்த பொருளை அமித்து தள்ளிவிட்டாள். வழக்கம்போல ! அது கீழே விழுந்துவிட்டது. அருகிலிருந்த நான் உடனே அதை எடுத்து வைத்துக்கொண்டே, அம்மு இது மாதிரியெல்லாம் தள்ளக்கூடாது, அது தப்பு, கீழே விழுந்தா உடைஞ்சிடும்னு அமித்து கிட்ட நீட்டி முழக்கினேன். அமித்துவும் அவளின் ட்ரேட் மார்க் சிரிப்போடு நான் எடுத்து வைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதை கவனித்த அமித்து அப்பா, அவ தள்ளி விட்டானா, அவளையே எடுத்து வைக்க சொல்லு, அத விட்டுட்டு நீயே அத சரி செஞ்சிட்டு வாயால சொல்றதால அவ எதையும் செய்யக் கத்துக்கமாட்டா.
மறுபடியும் அவ வந்து தள்ளுவா, நீ இதையே செய்வ, அவளுக்கு அது ஒரு விளையாட்டா போய்டும் அப்படின்னு சொல்லிட்டு, மேலே எடுத்து வைத்த அந்தப் பொருளை, மறுபடியும் கீழே வைத்து விட்டு
அமித்துவை கூப்பிட்டு அம்முடா, நீ இதை மேலே எடுத்து வை. பார்க்கலாம். அமித்துவும் அதே ட்ரேட் மார்க் சிரிப்போடு அதை மேலே எடுத்துவைத்தாள்.

ம்ஹூம் என்னத்த சொல்ல, ஒரு ஆச்சர்யத்தோடு அப்பா, மகளை பார்த்துக்கொண்டே திட்டிக்கொண்டேன் என் மடத்தனத்தை (மனசுக்குள்ள தான்).


(இனிமே இது மாதிரி அம்மாக்கள் வலைப்பூக்கள்ல அப்பாக்கள் சொல்ற அட்வைஸையும் எழுதுங்க சகா(கோ)க்களே)

Monday, February 16, 2009

எழுதச் சொல்லிக்கொடுப்போம் வாங்க!!

தீஷூ இந்தப் பதிவை போட்டிருந்தாங்க.
அதில் எழுதச் சொல்லிக்கொடுப்பது எப்படின்னு பதிவு
போடறேன்னு சொல்லியிருந்தேன். அந்தப் பதிவு இதோ.

ஹார்ட்வேர்ட் கடைகளில் கிடைக்கும் சாண்ட் பேப்பர்களில்
எழுத்துக்களை எழுதி அந்த வடிவத்திற்கு கட் செய்து
அதை ஒரு கெட்டியான அட்டையில் ஒட்டி
வைத்துக்கொள்ள வேண்டும்.

படத்தில் குழந்தை செய்வது போல் விரல் நுனியால்
அந்த எழுத்துக்களின் மேல் எழுதுவது போல்
ட்ரேஸ் செய்யவேண்டும். ட்ரேஸ் செய்துமுடித்ததும்
அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும்.மரத்தினால் அல்லது பிளாஸ்டிக்கில் எழுத்துருவங்கள்
கிடைக்கும் அதை MOVABLE ALPHABET என்போம்.
அதைக் கையில் எடுத்து பார்த்து குழந்தை
உணர வைக்க வேண்டும்.


முதலில் vowels எனப்படும் A E I O U எழுத்துக்களை
சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பிறகே consonants.


எழுத்தின் வடிவம், உச்சரிப்பு ஆகியவை
மனதில் நன்கு பதிந்த பின்னரே எழுதப் பழக்க வேண்டும்.

sand paper letters, movable alphabets ஆகியவற்றைக்
கொண்டு 2 எழுத்து வார்த்தைகள், 3 எழுத்து
வார்த்தைகள் ஆகியவை செய்ய கற்றுக் கொடுக்க
வேண்டும்.

picture + letters (a for apple, b for ball போல)
செய்து மனதில் பதிய வைக்கலாம்.

இதன் பிறகுதான் எழுத்துப் பயிற்சி. அப்பொழுதும்
தான் கற்ற எழுத்துக்களை உடனடியாக
எழுதச் சொல்லக்கூடாது.

patterns எனப்படும் வடிவங்களை கற்றுக்
கொடுத்தால் எப்படி எழுத வேண்டும் என
குழந்தை புரிந்துக்கொள்ளும்.


கீழே கொடுத்திருக்கும் patterns புள்ளி புள்ளியாக
வைத்து BROAD LINE NOTE BOOK எனப்படும்
பெரிய 4 வரி நோட்டில் எழுதிக்கொடுத்து
கலர் பென்சிலால் புள்ளிகளை இணைக்கச்
சொல்ல வேண்டும்.
STANDING LINE - SLEEPING LINE

LEFT SLANTING LINE -RIGHT SLANTING LINE

TEMPLE STROKE
LEFTCURVE - RIGHT CURVE
இவை எந்த மொழிக்கும் அடிப்படை பேட்டர்ன்கள்
ஆகும்.

இவைகளை எழுதப் பழக்கிய பிறகு(strokes களின்
பெயர்களை பிள்ளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்)
ஆல்ஃபபட்களை எழுத பழக்கலாம்.

இதை அடிப்படையாக வைத்து எப்படி எழுதப் பழக்குவது??
அது அடுத்தபதிவில்.

Wednesday, February 11, 2009

நான் எழுதுகிறேனே மம்மி

ஒவ்வொரு குழந்தைக்கும் எழுத, வாசிக்கப் பழகுவது முக்கியமான ஒரு கட்டமாகும். எழுதுவது, வாசிப்பது போன்றவை பேசுவது போல் இயற்கையாக வருவதில்லை. நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த வயதில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஐயம் எல்லோர் மனதிலும் உண்டு. சிறு வயதிலே எழுதப் பழக்குகிறார்கள் என்ற காரணத்தால் சில தோழிகள் சில பள்ளிகளை நிராகரித்திருக்கிறார்கள்.

சிறு வயதில் எழுதப் பழக்குவது தவறா? குழந்தை விருப்பமில்லாமல் இருந்தால் தவறு. விருப்பமில்லாத குழந்தைகளை வற்புறுத்துவதால் அவர்கள்களுக்கு எழுதுவதன் மேல் ஒரு வெறுப்பு வந்து விடும். எழுதுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு கை, கண், விரல், மூளை அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். மூளையில் பதிந்துள்ள எழுத்துக்களின் வடிவங்களை விரல்கள் ஒரு இடத்தில் எழுத கையும், கண்ணும் உதவ வேண்டும்.

எப்பொழுது எழுதப் பழக்கலாம்? அது குழந்தைக்கு குழந்தைக்கு மாறுபடும். ஒரு குழந்தை சீக்கிரமாக எழுதுவதால் அறிவாளி என்றோ, எழுதாததால் மக்கு (சாரி, வேறு வார்த்தை தெரியவில்லை) என்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தையின் வளரும் சூழலுக்கு ஏற்ப அதன் எழுதத் தொடங்கும் வயது மாறுபடும். பெற்றோர்கள் அதிகம் புத்திகங்கள் வாசித்தாலோ, எழுதினாலோ குழந்தைகளும் எழுத விருப்பப்படுவார்கள். சிறு வயதிலிருந்தே (பிறந்ததிலிருந்தே) புத்தகங்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டினால், அவர்கள் வேகமாக எழுதப் பழகுவார்கள்.

எழுதப் பழக்குவதற்கு முன்

1. எழுத்துக்களைக் கண்டுபிடிக்கப் (identify letters) பழக்குங்கள்.
2. பேப்பர், பேனா, மார்க்கர், crayons போன்றவற்றை எப்பொழுதும் குழந்தைக்கு எடுக்க வசதியாக இருக்கும் இடத்தில் வைத்திருங்கள். கிறுக்கவும், வரையவும் பழக்குங்கள்.
3. குழந்தைகளுக்கு பலவித வடிவங்கள் வரைய கற்றுக் கொடுங்கள். புள்ளி புள்ளியாக வடிவங்கள் வரைந்து புள்ளிகளை இணைக்கச் சொல்லுங்கள்.
4. பெயரை எழுதப் பழக்குங்கள். கடிதம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பொழுது அவர்கள் பெயரை அவர்களே எழுத சொல்லுங்கள்.

ஆதாரங்கள் :

http://www.everyday-education.com/articles/teachtowrite.shtml
http://www.ed.gov
http://www.zerotothree.org
http://children.webmd.com/features/when-should-kids-learn-read-write-math

Tuesday, February 10, 2009

இது ரொம்ப அவசியம்!!!

குழந்தைகளுக்கு நாம் எவ்வளவோ கற்றுக்கொடுக்கிறோம்.ஆனால் அவர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டியவைகளுள் இதுவும் அடக்கம்.
பெற்றோரின் தொலை(கை)பேசி எண்கள்.சமயங்களில் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள இது ரொம்ப அவசியம்!!
இதெல்லாம் எதற்கு?நாம்தான் பள்ளியில் விடுகிறோம்,பின்பு அழைத்து வருகிறோம்.எங்கு சென்றாலும் நாம்தான் கவனமாக பார்த்துக்கொள்கிறோம்!என்று மட்டும் நினைக்க வேண்டாம்.நம்மையும் அறியாமல் சில இக்கட்டான சூழ்நிலைகள் வர வாய்ப்புகள் உண்டு.எதையும் கற்றுக்கொடுப்பதில் தவறில்லை அது வீணாகவும் போகாது.
அவர்கள் எத்தனை பெரிய பாடல்களாக இருந்தாலும் அதை எளிதாக படித்து விடுகிறார்கள்.இந்த பத்து எண்கலையா மனதில் பதித்துக்கொள்ள முடியாது?
மூன்று வயது குழந்தைகள் முதல் அனைத்து வயது குழந்தைகளுக்கும் பொருந்தும்!

Friday, February 6, 2009

இதையும் சேத்துப்படிங்க!!!

நான் பத்மாவிற்கு முதலில் புத்தகத்தில் உள்ள கதைகளை மட்டுமே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் அவளுடைய டீச்சர் குழந்தைகளுக்கு புத்தகத்தின் உபயோகத்தை பற்றி சொன்னதிலிருந்து நானும் அதை மறக்காமல் பாலொவ் செய்கிறேன்.
அது என்னென்ன்ன தெரியுமா?

புத்தகத்தில் உள்ள கதைகள்(அதுதான் எனக்கு தெரியுமேன்னு சொல்றது காதுல விழுதுங்க!)
புத்தகத்தின் அட்டை பக்கத்தின் நிறங்கள் மற்றும் படங்கள்
புத்தகத்தின் ஆசிரியர்
புத்தகத்தின் வெளியீடு பற்றிய விபரங்கள்
(அதாவது எந்த ஆண்டு,யார்,எங்கு வெளியீடு செய்யப்பட்டதென்று ).

கதையோடு சேர்த்து அவர்களுக்கு பொது அறிவையும் வளர்த்து விடுவோமே!

இது மூன்று வயதிலிருந்து எல்லார்க்கும் பொருந்தும்.

அலட்சியம்

கடந்த மாதம் சஞ்சய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். நான்கு நாட்கள் அங்கேயிருந்தபோது டாக்டரிடமோ, நர்சுகளிடமோ குழந்தை என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாதது கண்டு ரொம்பவே அதிர்ச்சியானேன். குழந்தைக்கு ரத்தப் பரிசோதனைக்கு சாம்பிள் எடுப்பதிலிருந்தே நர்சுகள் எரிந்து விழுந்தார்கள். எதற்குத் தெரியுமா? ஊசி குத்திய பின்னும் குழந்தை அழுதுக்கொண்டே தான் இருந்தான். "ஏண்டா அழற. அதான் needle எடுத்தாச்சுல்ல" என்று அதட்டினார். Needle எடுத்துவிட்டால்
வலியிருக்காதா குழந்தைக்கு??

நரம்பு(IV) மூலமாக தான் மருந்தும், குளுக்கோசும் செலுத்தினார்கள். குழந்தையோ கையிலிருக்கும் பேண்டேஜைப் பார்த்து பார்த்து அழுகிறான். நர்சுகள் வந்தாலே அழுகை இன்னும் ஜாஸ்தியாகிவிடும். என்ன மருந்து கொடுக்கிறீர்களென கேட்டபோது "சொன்னா உங்களுக்குப் புரியுமா" என்றார். "புரியற மாதிரி நீங்கதான் சொல்லனும்" என்றேன். முறைத்துவிட்டு வீசிங்
குறைய மருந்தும், ஆண்டிபயாடிக்குடன் குளுக்கோசும் ஏறுகிறது என்றார். டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது சில கேள்விகள் கேட்டோம். எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த அவர். "இப்படிதான் இருக்கும். நான் ஒரு நாளைக்கு 300 கேஸ்??? பார்க்கிறேன்." என்றார். அவருக்கு வேண்டுமானால் என் குழந்தை 300ல் ஒரு கேஸாக இருக்கலாம். ஆனால் எனக்கு??

மருத்துவமனைகளில், அதிலும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கு பாலூட்ட ஒரு அறைக்கூட இல்லை. அடையாறில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கழிவறையில் கை அலம்புமிடத்தில் பெண் தன் குழந்தையின் பசியாற்றிக்கொண்டிருந்தார். அதிர்ந்து போனேன். உள்ளே நுழைந்தாலே நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இடத்தில், குழந்தைக்கு பால் தருவது எவ்வளவு முட்டாள்தனமானது. இத்தனைக்கும் அப்பெண் படித்தவர். கேட்டதற்க்கு வேறு இடமில்லை என நர்ஸ் கூறியதாக சொன்னார். கோடி கோடியாக செலவு செய்து மருத்துவமனை கட்டுபவர்கள் ஒரு சிறிய அறையை இதற்கென ஒதுக்கலாமே. கவனிப்பார்களா?

குழந்தைகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் உரிமையும் கூட. மேலும் இந்த சிகிச்சையின் பலன்கள் எப்படி இருக்கும், மருந்துகளை எத்தனை நாட்கள் கொடுக்க வேண்டும், மருந்து கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ஏதேனும் உண்டா, மருந்து முடிந்த பின் மீண்டும் பரிசோதனைக்கு வரவேண்டுமா போன்ற கேள்விகளை தவறாமல் கேளுங்கள்.

பி.கு : இது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம் தான். நான் எல்லா மருத்துவர்களையும் குறை கூறவில்லை.

Tuesday, February 3, 2009

அம்மாக்கள் கவனத்திற்கு.....

நானும் ஒரு குழந்தைக்குத் தாய் என்னும் முறையில் நான் இது நாள் வரை குழப்பத்திலேயே செய்து வந்த சில பழக்கங்களுக்கு சரியான தீர்வு கிடைத்துவிட்டது :)

நான் கூறுவது குழந்தைகள் பராமரிப்புப் பற்றியது. பொழிலன் பிறந்ததும் பெரியவர்கள் ஒவ்வொருவரும் பொதுவான சில பழக்கங்கள் மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்களை குழந்தைக்கு செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் தற்கால மருத்துவர்கள் கூற்றையே அதிகம் நம்புவேன். அக்கால தட்பவெப்ப நிலை, உணவுப் பழக்கங்கள் எல்லாம் இப்போதையவற்றை விட மாறுபட்டவை.
அதனாலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அதுவும் நல்லாதாய் போனது.
மருத்துவர்கள் சில பழக்கங்களை ஆதரித்தாலும் பல பழக்கங்கள் தேவையற்றவை ஆபத்தானவை என்றே கூறுகிறார்கள். அதன் படி நான் கற்றுக்கொண்டவற்றை உங்களுக்கும் கூறுகிறேன்.
வருமுன் காப்பதும், எச்சரிக்கையும் குழந்தைகள் விஷயத்தில் அதிகம் தேவை.

* குழந்தைகள் கண்களில் எண்ணை விடுதல் கூடாது. இன்னமும் பலர் அவ்வாறு செய்வதை
நேரிலேயே கண்டிருக்கிறேன்.

* வாயினுள் கைவிட்டு சளி எடுத்தல் தவறான சுகாதாரமற்ற செயல்

* குளித்தபின் காதுகளை குழந்தைகளுக்கென்றே விற்கப்படும் தரமான காது துடைப்பான்
கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். காதினையும் மூக்கையும் ஊதிவிடுதல் நல்லதல்ல.

* 3,4 மாதத்தில் திட உணவு தருதல் கூடாது; பால் போதாது என்று எண்ணினால் தாய்மார்கள்
உணவின் அளவினை அதிகப்படுத்தினாலே போதும். போதிய அளவு தாய்பால் கிடைக்கும்.

* முடிந்தவரை பிஸ்கட்டுகளை தவிர்க்க வேண்டும்.

* 6 மாதம் வரை கிரைப் வாட்டர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு மேலும்
தேவைப்பட்டால் மட்டுமே தரலாம்(அ) மருத்துவரின் ஆலோசனைப்படி தரலாம்;
நாள்தோறும் கொடுக்கவேண்டியதில்லை.

* விரல் சப்புவதை குழந்தை தானே மறந்துவிடும், அதற்காக நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க
தேவையில்லை, அதைத் தடுக்கும் போதுதான் அதிகமாகிறது. அதற்கு பதில் டீதர் போன்ற
பொருட்களை அவர்கள் கையில் கொடுக்கலாம்(அ) வேறு விளையாட்டுகளில் அவர்கள்
கவனத்தை மாற்றலாம்.

* வாரம் 1முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டலாம்.

* குழந்தைக்கு மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் 3நாட்கள் வரை காத்திருக்கலாம். அதற்கு
மேலும் போகவில்லயெனில் வெது நீர் கொடுத்துப் பார்க்கலாம் பின் மருத்துவரை அணுகலாம்.
அதை விடுத்து சோப்புவிடுதல், வெற்றிலைக் காம்பு விடுதல் போன்ற தவறான செயல்களை
தவிர்க்க வேண்டும்.

* குழந்தைக்கு தாயின் அரவனைப்பு அதிகம் தேவை, ஆதலால் முடிந்தவரை உங்கள்
கைக்குழந்தையை நீங்களே பார்த்துக்கொள்வது அவசியம்.

* 2 வயது வரை தொலைக்காட்சி காண்பிப்பது கூடவே கூடாது.


இந்த விஷயங்களில் தாய்மார்களான நாம் கவனமாக இருப்பது நலம்.

Monday, February 2, 2009

Bubbles series - Kids books

புத்தகம் : Bubbles Owns Up, Bubbles Goes to School,Bubbles the Artist
வயது : 2-6
வழி : ஆங்கில புத்தகம்


எளிய புத்தகம். எளிய வார்த்தைகள். எளிய நடை. குழந்தைகளைக் கவரும் விதத்தில் படங்கள். ஏனோ, எளிய புத்தகங்களே எனக்கு விருப்பமானவை, பப்புவிற்கு படித்துக் காட்ட, கதைச் சொல்ல..

பபிள்ஸ் தான் இந்த சீரீஸின் ஹீரோ! 7-10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கும். எளிய ஆங்கில வார்த்தைகளில் கதாபாத்திரங்கள் பேசுவதுதான் மொத்தக் கதை! உதாரணத்திற்கு, பபிள்ஸ் ஓன்ஸ் அப் என் சீரிஸில், பபிள்ஸ் தனதுப் பொருட்களை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்கிறான் எனது சிறு சிறு நிகழ்வுகள் மூலம் விளக்கப் பட்டிருக்கும்!

எல்லாப் புத்தகத் தொடருமே, ஏதாவதொரு நல்ல வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நமது அன்றாட நிகழ்ச்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருப்பதுதான் இதன் பலம். வெகு எளிதில் குழந்தைகள் அந்த இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்வார்கள்.

தடிமனாக இல்லாமல் மெல்லிய பக்கங்களாக இருப்பதால், பெரியவர்களின் அருகாமை அவசியம்!

பபிள்ஸ் புத்தகம் பற்றிய மேல்விபரங்கள் இங்கே!!

Sunday, February 1, 2009

நாங்க ரெடி ...நீங்க ரெடியா ?(கதை சொல்லத்தாங்க)

தினமும் இரவு தூங்குவதற்கு முன் பாப்புவிற்கு கதை சொல்வதென கொஞ்சநாட்களுக்கு முன்பிலிருந்து தீர்மானித்திருந்தேன் . தினம் ஒரு கதை என நான் முடிவு செய்ததை அவளிஷ்டத்திற்கு இரண்டு ...மூன்று என்று அவளே மாற்றி அமைத்துக் கொண்டாள்.இது ஒரு கஷ்டமான வேலை தான் என்பதை அவள் ஏனோ இப்போது வரை ஒத்துக் கொள்வதே இல்லை .அது மட்டுமல்ல நானும் தான் தினம் தினம் என்ன கதையைத் தான் புது புதுசாகச் சொல்லிக் கொண்டே இருப்பதாம் ?

நான் சின்னவளாக இருந்த போது என் பாட்டிகள் இருவரும் அருமையாகக் கதை சொல்வார்கள்.அதிலும் என் அம்மா வழிப் பாட்டி சொன்ன "குத்து விளக்கு..சர விளக்கு" கதை அது பாட்டுக்கு ஒரு மாதம் ஒன்றரை மாதம் வரை கூட இழுத்துக் கொண்டே போகும்...கதையின் சுவாரஷ்யம் நம்மையும் கதைக்குள் இழுத்துக் கொண்டு போய் நம்மையும் மறந்து நாம் தூங்கி விட்டிருப்போம் ;எப்போது தூங்கினோம் என்பதே விடிந்து எழும் போது ஆச்சரியமாக இருக்கும் .கதை கேட்டவாறு தூங்கும் ஒவ்வொரு இரவும் மிக மிக நுட்பம் வாய்ந்த பல அற்புதக் கனவுகளுடன் தான் நமக்கு விடிந்திருக்கும்.

நிச்சயமாக கனவில் ராட்சசன் வந்திருப்பான் ...வெள்ளை உடை அணிந்து கொண்டு கையில் நட்ச்சத்திர வடிவ மந்திரக் கோல் பிடித்துக் கொண்டு சிறகுகளுடன் தேவதைகள் வந்திருப்பார்கள்...வேட்டைகாரனும் ...புறாவும் வந்திருப்பார்கள் .சிங்கமும் ...புலியும் வந்து நம்முடன் பேசி விட்டுப் போயிருக்கும்.

என் பாட்டி ஒரு "சுண்டெலிக் கதை "சொல்வார்கள் .ஏதோ ஒரு முனிவரின் தவத்தைக் கலைத்ததால் ஒரு அழகான இளவரசி "சுண்டெலியாகச்" சபிக்கப் பட்டு விடுகிறாள். அந்த சுண்டெலி பிறகு அழுது அழுது சாப விமோஷனம் கேட்டதும் முனிவரும் மனமிரங்கி கொடுத்த சாபத்தை மீட்டு எடுக்க முடியாது ;ஆனால் நீ வேண்டுமானால் பகலெல்லாம் சுண்டெலியாகவும் இரவில் மட்டும் அழகான இளவரசியாகவும் இருந்து கொள் உன் சாபம் முடியும் வரை என்று கூறி விட்டுப் போய் விடுவார் .இந்தக் கதையையும் என் பாட்டி இரண்டு மாதங்களுக்கு நீட்டி முழக்கி இழுத்து விடுவார் .

இந்தக் கதை மட்டுமா ...!

பாட்டி சொன்ன கதைகள் :-

 1. அலிபாபாவும் நாற்ப்பது திருடர்களும் கதை
 2. பால நாகம்மாள் கதை
 3. நல்ல தங்காள் கதை
 4. பட்டி விக்கிரமாதித்தன் கதை
 5. போஜ ராஜன் கதை
 6. கோவலன் கண்ணகி கதை (இது சிலப்பதிகாரம் என்பதெல்லாம் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகே தெரிய வந்தது!!!)
 7. கர்ணன் கதை
 8. குசேலன் கதை
 9. கிருஷ்ண லீலைகள்

இவையெல்லாமே என் பாட்டி சொன்ன கதைகளே ...அதென்னவோ அவர்களிடம் எப்போது போய் கதை கேட்டாலும் டக்கென்று ஏதாவது ஒரு கதையை கை வாசம் வைத்திருப்பார்கள்.

தலை முடியை மிருதுவாக வருடியவாறு பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே வளர்வதென்பது ஒரு அழகான ஆனந்தம் தான் .என் பாப்புவுக்கு அந்த ஆனந்தம் அத்தனை நிறைவாகக் கிடைக்கவில்லை என்பது எனக்கொரு குறையே!?எனது குழந்தைப் பருவத்தில் எனக்கு கிடைத்த பல சுவாரஷ்யங்கள் என் குழந்தைக்கு இப்போது இல்லை.காலம் மாறி விட்டது .

அன்றெல்லாம் நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலுமே இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் இருப்பார்கள் .கிராமம் என்றால் சொல்லவே வேண்டாம் ...மாலை மயங்குகையில் எல்லா குழந்தைகளும் தெருவில் தான் கூடி நிற்பார்கள் .

 1. பாண்டியோ (இதை நொண்டி என்றும் சிலர் கூறுவார்கள் !)
 2. கள்ளன் ...போலீசோ (
 3. உதவியோ ?!(லாக் அண்ட் கீ )
 4. ஐஸ் பால் (அல்லது ஐஸ் ஒன் ...ஐஸ் டூ வோ !)
 5. கொலை கொலையாம் முந்திரிக்காயோ
 6. கண்ணா மூச்சி ரே...ரே வோ
 7. கிளியாந்தட்டோ
 8. கிட்டிப் புல்லோ

ஏதோ ஒரு விளையாட்டு தட புடல் பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் .

அது முடிந்ததும் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடி விட்டு கதை கேட்க கூடுபவர்களும் கூடுவார்கள் .எது எப்படி ஆயினும் கிராமங்களில் (90 )தொன்னூறுகளில் எட்டு மணிக்கே ஊர் அடங்கி விடும். அதனால் குழந்தைகளும் சீக்கிரமே தூங்கியாக வேண்டிய கட்டாயம் இருந்தது அப்போது .

இப்போதைப் போல 11 மணி வரை டி.வி பார்க்க வகையில்லை அப்போது...எனென்றால் டி.வி யே அப்போது எங்கோ ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும் .இப்படியெல்லாம் இருந்ததினால் அப்போது எல்லோருக்குமே கதை சொல்வதும் ...கதை கேட்பதும் ஒரு வித பொழுது போக்காக இருந்திருக்கலாம்.சிலர் திரைப் படங்களைப் பார்த்து விட்டு வந்து அதையும் கதை போலவே சொல்வார்கள் .
 1. அலிபாபாவும் நாற்ப்பது திருடர்களும்
 2. ஹரிச்சந்திரன் கதை
 3. சம்பூர்ண ராமாயணம் இதெல்லாமே அந்த வகை ;

இவையெல்லாம் தாண்டி என் அம்மா எனக்குச் சொன்ன சில கதைகளும் உண்டு .

 1. முயல் ஆமைக் கதை (slow and steady win the race)
 2. நான்கு சிங்கங்கள் கதை (the strength of unity)
 3. வேடனும் புறாவும்..எறும்பும் கதை (பலன் கருதாமல் செய்த உதவியின் நற்பலனை உணர்த்தும் கதை)
 4. தவளையும் எலியும் கதை (கூடா நட்பை உணர்த்தும் கதை)
 5. காகமும் பாம்பும் கதை (புத்திசாலித் தனத்தின் அவஷியத்தை உணர்த்தும் கதை)

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .இதில் பல கதைகள் இங்குள்ள எல்லா அம்மாக்களுக்கும் தெரிந்தே இருக்கலாம்.தெரியாதவர்களுக்கு வாரம் ஒன்று வீதம் இனி நான் இங்கே சொல்கிறேன் .மேலே நான் குறிப்பிட்ட சில கதைகள் வெறும் கற்பனையை மட்டுமே தூண்டக் கூடியவை .என் அம்மா சொன்னதாக நான் குறிப்பிட்டவை மட்டுமே குழந்தைகளை அறிவுப் பூர்வமாக சிந்திக்கச் செய்யக் கூடியதாக இருக்கலாம் .

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நம் குழந்தைகளுக்கு வெறும் அறிவு மட்டுமே போதும் என்பதாக எண்ண முடியவில்லை.அறிவோடு சேர்ந்து சிறிது கற்ப்பனை வளமும் வேண்டும்.எதிர் மறையான சிந்தனையை ஏற்படுத்தாமல் ராமாயணம்...பாரதம்...கர்ண பரம்பரைக் கதைகள்...பஞ்ச தந்திரக் கதைகள் ....ராமகிருஷ்ணரின் ஆன்மீகக் கதைகள்...ஹனுமனைப் பற்றிய கதைகள் எல்லாவற்றையும் பாசிடிவ் எண்ணங்கள் தூண்டப் படும் விதமாக சற்றே மாற்றி அல்லது முலாம் பூசி நாம் அவர்களிடத்தே சொல்லத் தகும் என்பதே என் கருத்து .

இங்கிருக்கும் அம்மாக்கள் எண்ண நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் கூறுங்கள் .பாப்புவோடு கதை கேட்க நீங்கள் ரெடி என்றால் சொல்ல நாங்களும் ரெடி ....பிறகு தொடரலாம் ....பலப் பல வண்ண ...வண்ணக் கதைகளை.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger