Wednesday, July 29, 2009

பள்ளி செல்ல விரும்பு... பாடம் வெல்லக் கரும்புபள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல்.

அருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளி என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் படித்தது அரசு பள்ளி என்பதால், பிரபல பள்ளிகளைத் தேடிச் செல்ல எண்ணவில்லை. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளிகள் என்றே பார்த்தேன்.

முதலில் ப்ளே ஸ்கூல் தேவைப்படாது என்று எண்ணினேன். ஆனால் இரண்டு வயதில் இருந்து விளையாட துணை தேடும் குழந்தையின் ஆர்வம் கண்டு, இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூல் சேர்த்தேன்.

ப்ளே ஸ்கூலில் நான் எதிர்பார்த்தவை:

- குழந்தைகள் குஷியாக பொழுது போக்குமாறு ரைம்ஸ், கதை விளையாட்டு போன்றவை. பாடம் தேவையில்லை

- பள்ளியின் தூய்மை

- அளவான எண்ணிக்கையில் குழந்தைகள்

- அதிக பணம் கேட்கும் பள்ளியோ, ஏ.சி வசதியோ நான் தேடவில்லை. என் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏ.சி என்பது என்னைப் பொறுத்தவரை சுகம். பள்ளியில் அந்த சுகம் தேவை இல்லை என்பது எனது கருத்து.அடுத்து பள்ளியில் போடும்பொழுது, மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ என்று இருந்ததில் மெட்ரிக் (அ) சி.பி.எஸ்.இ என்று முடிவு செய்தோம். மற்றவற்றைப் பற்றி எதுவும் புரியாததால் இந்த முடிவு. எல்.கே.ஜி நேர்முகத்திற்கு நந்தினியை அழைத்துச் சென்றேன்.
அவள் ஒரே அழுகை. சற்று நேரம் பொறுத்து என்னுடன் வர சம்மதித்தாள். ஆசிரியர்களின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததது. ஓரளவு பெரிய மைதானம் இருந்தது.

குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, "ஹாப்" என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து "ஹாப்" என்றார்கள். குழந்தை குதித்தது."புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை விழித்தது. "பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.

- தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

- ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.

- ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 30 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 35 கூட பார்க்கிறோம்.

- லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.

- போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்ததுஇவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:

1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.

2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு

3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.

4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை "தின்கிங் ஸ்கில்ஸ்" என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.

5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.

6. "அப்சர்வேஷன் டே" என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.

7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.

8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.

9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.

10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள்.


என்ன பிடிக்கவில்லை?

எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன்.

அடுத்தது... கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின்? இதற்கு தீர்வு உண்டா? என் தோழிகளிடமும் விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

Tuesday, July 28, 2009

சின்ன குழந்தைகளுக்கு வேண்டாத சின்ன பொருட்கள்!!

மோதிரம்:

சிறு குழ‌ந்தைகளு‌க்கு ‌நகைகளை மா‌‌ட்டி‌க் கா‌ட்‌சி‌ கூடமா‌க்க வே‌ண்டா‌ம்.கை‌ ‌விர‌லி‌ல் போட‌ப்படு‌ம் மோதிர‌ம் வே‌ண்டவே வே‌ண்டா‌ம். ஏனெ‌னி‌ல் குழ‌ந்தைக‌ள் எ‌ப்போது‌ம் கைகளை ச‌ப்‌பி‌க் கொ‌ண்டே இருக‌்கு‌ம். மோ‌திர‌ம் ‌சில சமய‌ங்க‌ளி‌ல் வா‌ய்‌க்கு‌ள் போ‌ய்‌விடவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது.
மேலு‌ம், மோ‌திர‌ம் ‌கீழே ‌விழு‌ந்து காணாம‌ல் போ‌ய்‌வி‌ட்டா‌ல் கூட, குழ‌ந்தை முழு‌ங்‌கி‌வி‌ட்டிரு‌க்குமோ எ‌ன்று பய‌ந்து கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌‌ம்

மோ‌திர‌த்‌தி‌ல் க‌ல் வை‌த்து இரு‌க்கு‌ம். அதுவு‌ம் ‌மிகவு‌ம் தவறு. த‌ற்செயலாக அ‌ந்த க‌ல் ம‌ட்டு‌ம் கூட குழ‌ந்தை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ள் போ‌ய்‌விட வா‌ய்‌ப்பு‌ண்டு.மேலு‌ம், மோ‌திர‌த்‌தின அடி‌ப்பாக‌த்‌தி‌ல் அழு‌க்கு சே‌ர்‌‌ந்து ‌விடு‌ம். அ‌ந்த ‌விரலை ச‌ப்பு‌ம் போது குழ‌ந்தை‌க்கு உட‌ல் உபாதைக‌ள் ஏ‌ற்படலா‌ம். எனவே குழ‌ந்தைகளு‌க்கு மோ‌திர‌ம் அ‌ணி‌வி‌க்கா‌தீ‌ர்க‌ள்

ஸ்டிக்கர் பொட்டு:
சின்ன குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்க வேண்டாம். சின்ன குழந்தைகளின் அம்மாக்களும்ஸ்டிக்கர் பொட்டு குழந்தைகள் பெரியவராகும் வரை வைக்க வேண்டாம். சில குழந்தைகள் உடன் படுத்து இருக்கும் போது அம்மாவின் முகத்தை தடவி கொண்டுஇருக்கும் போது பொட்டை எடுத்து அதன் வாயில் அல்லது மூக்கில் வைத்து கொண்டு விடும் நமக்கு தெரியாமலே.

ஜிகு ஜிகுனு டால் அடிக்கும் ட்ரெஸ்:
நம்ம சீதோஸ்ஷணத்திற்கு காட்டனே சிறந்தது. ஜிகினாக்கள் அவர்களின் மெல்லிய தோலினை குத்தும்.
கைக்கெட்டும் தூரத்தில் கத்தி, ப்ளேடு போன்ற ஷார்ப்பான பொருள்களை மறந்தும் வைக்க வேண்டாம்.

செல் போன்:தூங்கும் போது செல் போனை படுக்கையில் வைக்க வேண்டாம்.

ஸ்கூல்..ஸ்கூல்...விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள - வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

பப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,

1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்!

2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்!) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்!)

3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.

4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல! (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே...!!)

5. individual attention

6.டொனேஷன் கொடுக்க முடியாது.

பின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) - அணுகினோம்.

1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.
பத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.

2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.

3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே! ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.

4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து - மூன்றரை வயதினருக்கு)

5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.

6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

சேர்க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்!

Monday, July 27, 2009

ஏன் இந்த பள்ளி?

இந்த தொடர் இடுகை எழுதி பதிநைந்து நாள் ஆகி விட்டது, தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வர்ஷா பிறக்க பத்து நாட்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவை வந்தோம், அது வரை திருப்பூரில் இருந்தோம். குழந்தை பிறந்து வளர்ந்து இரண்டரை வயது ஆகும் போது ரொம்ப நல்ல பேசுவாள், தெளிவாக திருக்குறள், சின்ன பாடல்கள் எல்லாம் சொல்லி குடுத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் இரண்டு மணி நேரம் தினமும் அனுப்பி வைப்பேன். ஸ்கூல் சேரும் வயது என்ற போது கோவையில் இருக்கும் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினைந்து பள்ளிகள் பார்த்தேன், நாங்கள் இருப்பது நகரின் மைய பகுதி, எல்லா பள்ளிகளும் குறைந்த பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

பள்ளிகளுக்கு முக்கிய தகுதி யாக நான் எதிர்பார்த்தது:

# குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க வேண்டும்,

# ஹோம் வொர்க், படிப்புன்னு ரொம்ப தொல்லை பண்ண கூடாது,

# மொழி ஒரு முக்கிய விஷயம், என்னதான் நாம் தமிழ் என்று கதறினாலும் ஆங்கிலம் நன்றாக பேச வர வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன், வரும் காலத்தில் குழந்தைகள் மிக கடுமையான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும், நாம என்ன நாற்காலியில இருக்கோம் தமிழ் மட்டும் படிச்சு மந்திரி ஆக.. ( சிரிங்கப்பா)

# போட்டிகளில் தொடர்ந்து ஊக்கம் தரும் பள்ளியாக இருக்க வேண்டும்.

# ஒரு குறிப்பிட்ட மதமோ, ஜாதியோ அதிகமாக இருக்கும் பள்ளிகள் வேண்டாம் என்பதும் என் எண்ணம்.

# பள்ளி நல்ல சுற்று புறத்துடனும், கலாச்சாரத்தை கற்று கொடுக்க வேண்டும்.

# மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் நன்றாக இருக்க வேண்டும்.

( இத்தனையும் இருக்கணும் நா நான் படித்த ஸ்ரீ வாசவி வித்யாலயம் ஸ்கூல் தான் போகணும், அது ரொம்ப தூரம் ஆச்சே)

முதலில் பள்ளிகளில் ஒரு வரிசை பட்டியல் தயார் செய்தேன், நானும் என் கணவரின் தங்கையும் ஒரு நல்ல நாளில் காலையில் கிளம்பினோம், , முதலில் நகரின் மிக புகழ் பெற்ற நூற்றி ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அங்கே பெற்றோர் குறைந்த பட்சம் ஒரு கார் வைத்திருப்பது விரும்பத்தக்க தகுதியாக இருந்தது...இது ஆவறது இல்ல..

அடுத்து: என் மனதில் இந்த பள்ளியில் சேர்த்தலாம் என்று நினைத்தேன், ஆனால் இது shift முறையில் செயல் பட்டதால் ஊரெங்கும் கிளைகள் கொண்ட பவன் பள்ளியும் லிஸ்டில் கழிந்தது.

நகரின் பெண்கள் பள்ளி ஒன்று காலை விண்ணப்பம் வாங்க முதல் நாள் இரவே துண்டு போட்டு வைக்கணுமாம், ஆனால் படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள், கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றது, என் வீட்டில் இருந்து ரொம்ப தொலைவு அதனால் அதுவும் அடிபட்டது.

ரயில் நிலையம் அருகில், கலை கல்லூரி பின்புறம் இருக்கும் மூன்று பள்ளிகளில் ஒன்று நன்றாக இருக்கும் ஆனால் நம்ம அம்மிணி வயசு பத்து, பத்தாவது எழுதும் போது பிரச்சனை என்றார்கள். சரி விடு ஜூட்டு...

இது போல் கழிப்பறை நன்றாக இல்லை, கட்டிடம் விழுந்துவிடுவது போல இருக்கு என்று சில பள்ளிகள் கழிக்கப்பட்டன,

இன்னும் ஒரு முக்கியாயமான விஷயம் நான் தனியாக பெண்கள் பள்ளியில் என் குழந்தைகளை சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை, இரு பாலரும் இருக்கும் பள்ளியில் தான் சேர்த்த வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தேன்.
ஆகவே இப்போது படிக்கும் பள்ளி ( S.B.O.A.) ஓரளவிற்கு எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது, கட்டணம் கொஞ்சம் ஏற்கனவே அதிகம் இப்போது மேலும் 50% அதிகரித்து உள்ளார்கள், அது பற்றி என் கருத்துகள் இங்கே.

சின்ன வகுப்பில் தேர்வுகளே இல்லை, ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள், மாணவர்கள் அதிகம் இருப்பினும் தனி கவனம் செலுத்துகிறார்கள், படிப்பைத்தவிர மற்ற விசயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்போது பாட்டு வழி படிப்பு என்னும் புதிய அறிமுகத்தில் இன்னும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக மொழி பயிற்சி மிக திருப்தியாக உள்ளது. சில பல தேவையில்லாத போராட்டங்களுக்கு பின் இந்த வருடம் பள்ளி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நான் பெற்றோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளதால் நம் கருத்துகள் மற்றும் மற்றவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

எனக்கு மட்டும் பிடித்து என்ன செய்ய என் குழந்தைகளும் இந்த பள்ளியில் நன்றாகவே உணருகிறார்கள். வருடாவருடம் கொலுவிற்கு வர்ஷாவின் தோழர்கள் பெற்றோருடன் வந்து விழாவை சிறப்பிப்பார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வு அதுதான்.

ப்ளே ஸ்கூலை பொறுத்தவரை எங்கள் பகுதியில் நல்ல பள்ளி இல்லை என்று கருதுகிறேன். நான் அனுப்பிய பள்ளிகள் எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அனுப்பினேன். பாதியில் நிறுத்தி விட்டேன்.

Thursday, July 16, 2009

Nebulisation in Children

For those who dont know about Nebulisation,the definition is :

"Nebulisation is the breaking down of a liquid into very small droplets, which in the case of medication, can be inhaled and in consequence deposited right into the problem area in the lungs. The advantage of that is that a concentrated amount can be deposited into a targeted area."

In the simple terms,its the inhalation of medicines into the lungs directly to stop wheezing that has developed due to severe phlegm which doesn't go away with oral medicines.

We had been doing nebulisation for Janas during the second week for Ranju and third week for Rakshu in June. Even with the strong medicines they were taking for severe cough and phlegm they did not recover. Hence when we took them to the doctor he suggested nebulisation to ease out breathing.They had developed wheezing and could not sleep at nights.But I was a bit reluctant to go on with the process but doctor said it is definitely needed otherwise they may not be able to get "sufficient oxygen to brain".

We had bought separate kits for each of them.The medicines used were berodual and plumicort though dosages were different.4 times(means 4 hourly) for Ranju and 3 times(means 6 hourly) for Rakshu.They definitely felt better and were able to sleep at nights after the process.After 3 days of nebulisation at home, we continued with medication for few more days until they felt better.

The disadvantage of nebuliser is the cost itself and they are not designed to alleviate acute symptoms such as asthma attacks which might arise.Child nebulisers turn the respiratory medicine into a mist, which the child then breaths for at least five to ten minutes. It might be difficult for parents to keep their child still for the entire length of treatment.

Wednesday, July 15, 2009

படித்ததில் பிடித்தது

நான் அடிக்கடி எழுத்தாளர். திரு. எஸ். ராமகிருஷ்ணணின் வலைப்பக்கத்தை மேய்வதுண்டு.
அப்படி இன்று பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் வலைப்பக்கத்தில் இருந்த இந்த கற்கத்தவறிய பாடம்” என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதற்கான சுட்டி இங்கே: கற்கத்தவறிய பாடம்

பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று.

Tuesday, July 14, 2009

என் செல்லங்கள் பிறந்த போது..

என் செல்லங்கள் இந்த உலகை எட்டி பார்த்த அந்த இனிய தருணம் ரெண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் பசுமையாய் எனக்கு நினைவில் இருக்கிறது.குறை மாதத்தில்(34-வது வாரம்) பிறந்த ரெட்டை குழந்தைகள் வெறும் 1.75 kg மட்டுமே எடை இருந்தார்கள்.ஐந்து நாட்கள் வரை incubation-ல் வைத்திருந்து ரூம்-க்கு கொண்டு வந்தோம்.

எனக்கு சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறந்ததால் தையல் போட்ட இடத்தில் வலி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.இதனால் ஒவ்வொரு முறையும் எழுந்து செல்லங்கள் பசி போக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் எனக்கு.குளிப்பதற்கு அம்மாவின் உதவி கண்டிப்பாக தேவை பட்டது.மேலும் இரவில் குழந்தைகள் மாற்றி மாற்றி எழுந்து பாவம் அம்மா எனக்காக,எங்களுக்காக ரொம்பவும் சிரமம் பட்டார்கள்.

தினமும் நர்ஸ் வந்து குழந்தைகளை சுடு நீரில் துடைத்து துணி மாற்றி கொடுத்துவிடுவார்.எனக்கு என் கண்மணிகளை(they were very tiny) சரியாக எடுக்க கூட தெரிந்திருக்கவில்லை...போல்யோ ட்ராப்ஸ் கொடுக்கபட்டது.

ரூம்-க்கு கொண்டு வந்த அன்றே உடல் மஞ்சள் நிறம்மாக மாறவும் ரொம்பவும் பயந்து போய் டாக்டரிடம் கேட்டதும் காலை நேர வெயில்லில்(7-8) காட்ட சொன்னார்.சரியானதும் தான் நிம்மதி ஆனது.

ஒரு வழியாக எங்களை வீட்டுக்கு போக சொன்னார்கள்.குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை குளிக்க வைக்க வேண்டாம் என்றும் பவுடர்,லோஷன் எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்றும் சொன்னார்கள்.என்னவர் காரை ஒட்ட அப்பாவும்,நானும் குழந்தைகளை பின் சீட்டில் ஜாக்கிரதையாக வைத்து கொண்டு குனியமுத்தூர் போய் சேர்ந்தோம்.அம்மா வீட்டில் இருந்து தேவையானவை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து arrange செய்து வைத்திருந்தார்.

When I was about to enter into house,I felt it like I am on a new journey now, leaving my old self behind, the old immature me who at one point in time couldn’t take care of my own self bonk. Having twins has changed my life, yes, but I am going to enjoy every moment of it and would not give it up for anything.

About a month back we celebrated our kids second birthday on June 5th.We all have come a long way since my delivery but still have to go a long long long way.I thank almighty for blessing me with two lovely sweet and cute angels and really feeling proud as a mother of 2 year old wonderful girls..I've promised myself to spend more time with them,teach them life's good things,empower them with knowledge for self-sustainment and be for them whenever they need me.Wednesday, July 8, 2009

அம்மாக்களே இது நமக்காக!!!

நம் குழந்தைகளை சாப்பிட வைக்க:

ஸ்டார் தோசை,பூ தோசை, சப்பாத்தியில் நிலா வடிவம்,முக்கோணம்,சதுரம், பூரியில் ஸ்டார், குட்டி பூரி, கேரட் சாதம், தேங்காய் சாதம் என கலர்ஃபுல்லான சாதங்கள், அவ்வொப்பொழுது சாப்பிடும் தட்டையும் புதிது புதிதாக கொடுக்கலாம், இலையில் பரிமாறலாம் ...அப்புறம் பாருங்க சாப்பாடு எப்படி பறக்கிறதுனு.

ஹோம் வொர்க் செய்ய வைக்க:

படிக்கும் முன் சாமி ரூமில் கொஞ்ச நேரம் உட்கார வைத்து சாமி கும்பிட வைத்து பின் நல்ல பிள்ளைகளை தான் ஆஞ்சனேயருக்கு பிடிக்கும்..முருகனுக்கு பிடிக்கும் என்று கூறி, அவர்களுக்கு பிடித்த பேனா, பென்சில், கலர் பென்சில், ரப்பர் சர்ப்ரைசாக அவ்வப்போது கொடுத்து, இடையிடையே ஜோக் சொல்லி, அவர்கள் ஸ்கூலில் நடந்த விஷயங்களை பேசி, ஹோம் வொர்க் செய்ய வைத்தால் அவர்களுக்கு சுமையே தெரியாது..

அதிகமாக டி.வி பார்ப்பதை குறைக்க:

ரிலாக்ஸான நேரங்களில் கார்டனில் பொழுது போக்க பழக்கவும், அட்லீஸ்ட் மொட்டை மாடியில் இரண்டு தொட்டியில் செடி வைத்து தினம்
கண்காணிக்க செய்தால்..எத்தனை மொட்டு, எத்தனை பூ என்று மனசு போகும்...மீன் வளர்த்தல், நாய் வளர்த்தல் என்று பிஸி ஆக்கினால் அவர்களுக்கு ஒரு இண்ட்ரஸ்ட் வந்து விடும். நாமும் டி.வி..சீரியலில் மாட்டிக் கொள்ள கூடாது.,

பெரியவர்களிடம் மரியாதை ஏற்படுத்த:

நல்ல நாள், பெரிய நாளில் தனிகுடித்தனம் இருந்தாலும் பெரியவர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டி போய் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
தாத்தா, பாட்டி முன்னாடி கால் நீட்ட கூடாது, சத்தமாய் பேசகூடாது, என்னிடம் சொன்ன எல்லா ஸ்கூல் விஷயத்தையும் அவர்களிடமும் கூறுமாறு செய்தல் வேண்டும்.

உதவும் குணத்தை ஏற்படுத்த:

தெருவில் விளக்குமாறு, கீரை போன்ற பொருள்களை விற்கும் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் தூக்கி வருவர். அவர்களுக்கு
நம் குழந்தைகளை விட்டே அவர்களின் பொருள்களை கொடுக்க வைக்க வேண்டும். விளையாட்டு சாமான், உடைகள், நோட்டுகள், கலர் பென்சில்கள் என்று கொடுக்கலாம். உதவும் பொழுது ஏற்படும் சந்தோஷம் எத்தகையது என்பதை அவர்களே உணரட்டுமே.

Attachment parenting

அன்பு நெஞ்சங்களே ,
அம்மாக்களின் பகிர்வுகளில் என்னுடைய முதல் பகிர்வு. இது ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். என்னுடைய நான்கு மாத குட்டிய வச்சிக்கிட்டு தமிழ்ல எழுத சிரமமா இருக்கு. நண்பர்கள் மன்னிபீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இந்த பகிர்வு சமீபத்தில் நான் ஒரு நாளேட்டில் படித்தது.This writting is going to be about Attachment Parenting. Let me explain about attachment parenting in simple terms : Attachment parenting is a style of caring for your infant that brings out the best in the baby and the best in the parents.

To learn your ideal level of Attachment parenting, choose the number between 1 and 10 that most accurately rates your parenting goals and abilities in each category in the following link. when you are done, add up those numbers and read your corresponding Attachment profile.

http://spreadsheets.google.com/ccc?key=tFUFz0bOyPQvjdiUmJs1yrw

Your Attachment parenting profile :

7 ~ 29 : What worked for your mother will work just fine for you. you have been carrying baby around 40 weeks and thats just plenty, thank you very much

30 ~ 49 : All things in moderation. After all, breastfeeding is free and these days baby carriers are convenient as all get out. There is nothing wrong with a little together time.

50 ~ 70 : Having a baby was not a casual decision for you, and you are set on doing this motherhood thing right. A happy baby means a happy mommy....

Monday, July 6, 2009

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!

1. நான் பேசுவதைக் கவனிப்பவர்கள் தான் என்னுடைய சிறந்த நண்பர்கள்:

குழந்தைகள் யாரிடம் அதிகம் ஒட்டுகின்றன என்று கவனித்துப் பாருங்கள் -அவர்கள் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பவர்கள் மீது தான் குழந்தை அதிகம் ஒட்டுதலோடு இருக்கும். அடுத்த முறை யாரேனும் பிரச்சைனையோடு வந்தால் அவர்களுக்கு செவி கொடுப்போம்.

2. அமுதாகவே இருந்தாலும் அளவிற்கு மீறினால் ஆபத்துதான்:

குழந்தை தங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை கூட ஓரளவிற்கு தான் சாப்பிடும். அந்த சுய கட்டுப்பாடு வருவது வயற்றில் இருந்து அல்ல. மூளையில் இருந்து வருகிறது. இது சாப்பாடு விஷயத்திற்கு மட்டும் அல்ல. மணிக்கணக்காக வேலை, படிப்பு, நெட், என்று எதாவதில் அளவிற்கு அதிகமாக கவனம் செலுத்துகிறவர்கள் ஆபத்தில் கால் வைக்கிறார்கள் என்பதை குழந்தைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. வீடு- வெளியே என்ற வித்தியாசம் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும்:

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தை அதன் பிறகு வீட்டு பாடம் செய்து விட்டு விளையாட்டு, அம்மா, அப்பாவுடன் கொஞ்சல் என்று கவனத்தை திருப்பிவிடுகின்றது.
இது பெற்றோருக்கு புரிவதில்லை.அலுவலகப் பணி அழுத்தத்தை வீட்டில் கோவமாக காண்பித்து விடுகிறோம்

4. நன்கு விளையாடுங்கள் மனம் விட்டு சிரி்யுங்கள்:

நமக்கு பொருளற்றதாக தோன்றும் விளையாட்டுகள் தான் அவர்களை மணிக்கண்க்கில் மகிழ்ச்சியாக வைத்து உள்ளன. எந் நேரமும் பணி என்று இருந்தால் எப்படி சிரிப்பு வரும்.

5.ஒரு விஷயம் எப்படிச் செயல் படுகிறது என்று தெரியாவிட்டால், அதை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்துப் போடுங்கள், எல்லாம் புரிந்துவிடும்:

எந்த பொம்மையையும் ஒரு நாளில் உடைத்து விடும் குழந்தையைக் கடிந்து கொள்கிறோம். உண்மையில் அது எப்படி இயங்குகிறது என்று ஆராய்கிறார்கள்.
இந்த உத்தியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு விஷயத்தை பிரித்து ஆராய்ந்தால் தீர்வு நிச்சயம்.

6. வாழ்க்கையில் விதிமுறைகள் வேண்டாமே:
ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டுதான் ஆட வேண்டுமா?? நின்று கொண்டு ஆடுகிறார்கள்.பேப்பரில் தான் எழுத வேண்டுமா?? சுவரில், தரையில் எழுதுகிறார்கள்.
பெரியவர்கள் தங்கள் வேலைகளை ஒரேமாதிரி செய்வதால் சோர்வு அடைகிறார்கள். சின்ன மாற்றத்தை செய்து பார்ப்பது இல்லை.

பெண்ணே நீ என்ற புத்தகத்தில் என்.சொக்கன் எழுதி நான் படித்தது..


Sunday, July 5, 2009

வேண்டாமே சிசேரியன்!!

சிசேரியன் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு நார்மலாகப் பிறக்கும் குழந்தைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமாம்.
பிற்காலத்தில் அக்குழந்தைகளை டையாபடிஸ், ஆஸ்த்துமா, லுக்கேமியா ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாம். ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு இது.
சிசேரியனில குழந்தை திடிரென்று பிறந்து விடுவதால் வெளி உலகம் உடனே பழக முடியாமல் வரும் ஸ்ட்ரெஸால் தான் white blood cells-ல் உள்ள DNA மாற்றத்தை சந்திக்கிறது. அதனால் நோய் எதிப்பு சக்திக் குறைகிறது.
இயற்கைக்கு எதிராக நடக்கும் எதிலேயும் பின்விளைவுகள் உண்டு.

இயற்கையாக பிறக்கும் குழந்தைகள் மெதுவாக ஒரு அழுத்தத்தை உணர்ந்து பின் வெளி உலகை அனுபவிக்க ஆரம்பிக்கும். எனவே ஸ்ட்ரெஸ் என்பது மிகவும் குறைவு. சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம். நம் மருத்துவர்கள் பணம் பண்ணும் எண்ணத்தில் இல்லாமல் சமுக சிந்தனையுடன் பணியாற்றி, சிசேரியனுக்கு வலியுறுத்தும் பெண்களையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.

Saturday, July 4, 2009

என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி...

முல்லையின் பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவு..

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் நாம் யோசிக்க வேண்டிய
விடயங்கள் நிறைய்ய.. சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. பள்ளி நம் வீட்டிற்கு அருகில் இருக்கிறதா? மிக அருகில் இல்லாவிட்டாலும்
கூட நியாயமான தூரம் அதிக பட்சமாக 5 கிமீ வரை இருந்தால்
பரவாயில்லை.

2. 100% ரிசல்ட் தரும் பள்ளி என்பதாலோ, பெயர் பெற்ற பள்ளி
என்பதாலோ அந்த பள்ளியில் பிள்ளையை சேர்க்க நினைக்க
வேண்டாம்.

3. அவர்கள் பெயரை தக்க வைக்கவும், 100 சதவிகித ரிசல்ட்
தரும் மாணாக்கர்களுக்காகவும் தான் பள்ளி நடத்துகிறார்கள்.

4. அனைத்து மாணவரும் 100% சதவிகிதம் எடுப்பது கஷ்டம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். சில பிள்ளைகளால்
அதிக மதிப்பெண் எடுக்க இயலாது(thanks to the mechale system :( )

5. படிப்பு படிப்பு என்று பாடப்புத்தகத்தை மட்டுமே கவனிக்கும்
பள்ளியில் பிள்ளையைய் சேர்க்க வேண்டாம். விளையாட்டு,
இசை, யோகா,போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரும்
பள்ளியா என்று பார்ப்பது அவசியம்.

6. ஆசிரியைகள் எப்படி? கண்டிப்பாக இருக்கிறார்களா?
கனிவாக நடத்துகிறார்களா என்பதை கவனித்து, விசாரிக்க
வேண்டும்.

7.வகுப்பறைகள் காற்றோட்டமிக்கதாக இருக்கிறதா?
வகுப்பில் எத்தனை மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்பதையும்
பார்க்க வேண்டும்.

8. பொதுவாக நாம் பார்க்க தயங்கும் ஒருஇடம் அது
பள்ளியின் கழிப்பறை. கழிப்பறை வசதி சரியாக இருக்கிறதா?
என பார்ப்பது மிக மிக அவசியம்.

9. பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என
பார்க்க வேண்டும்.

10. கற்பது என்பதை ஒரு சுமையாக ஆக்காமல்
கூடிய மட்டும் இனிமையாக ஆக்கும் பள்ளியா
என்பது பார்க்கப் படவேண்டிய விடயம்.

என் பிள்ளைகள் 7 வருடங்கள் கொழும்புவில்
பிரிட்டீஷ் கல்வி முறையில் படித்தவர்கள்.
அங்கே ஹோம் வொர்க் கிடையாது, எல்லாம்
ப்ராஜக்ட் சிஸ்டம். படிப்பு ஸ்ட்ரெஸ் தரக்கூடியதாக
இல்லாமல் பிராக்டிகலாக கற்றவர்கள்.

ஆஷிஷாவது 3 வருடங்கள் இந்திய பாடத்திட்டத்தில்
படித்திருந்தான். அம்ருதாவுக்கோ ஆரம்பமே அங்குதான்.
ஆரம்பக்கல்வி மாண்டிசோரி முறை + ப்ரீ ஸ்கூல் முறைக்
கல்வியின் கலவையாக இருக்கும்.

இங்கே ஹைதைக்கு வந்து பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றதும்
உடனடியாக முடிவெடுத்துவிடாமல், நண்பர்கள் சேர்த்திருக்கிறார்கள்
என்பதற்காக அங்கே ஓடாமல் 1மாதம் முழுதும் இருந்து
தினமும் 4 ஸ்கூல் சென்று தேடி மனதுக்கு பிடித்தால்
மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்திருந்தோம்.

சில பள்ளிகள் பள்ளி விடும் நேரம் சென்று எப்படி
வேனில் ஏற்றுகிறார்கள்? ஆயாக்கள் பொறுப்பாக
இருக்கிறார்களா? என பார்த்தோம்.

பெயர் பெற்ற சில பள்ளியில் பெற்றோரை மதிக்கவேயில்லை.
உட்கார வைத்துக்கூட பேசாமல், நிற்க வைத்தே பேசி
அனுப்பிய பள்ளிகளை தவிர்த்தோம்.

டொனேஷன்கொடுக்க நிர்பந்தித்த பள்ளியை
முடிந்த வரை தவிர்த்தோம்.

ஆஷிஷும் அம்ருதாவும் ஒரே பள்ளிக்குச் செல்ல
வேண்டும். அப்போதுதான் விடுமுறை பரிட்சை
போன்றவை ஒரே நேரத்தில் இருக்கும், தயார்
செய்வதும் எளிது என்பதிலும் கண்டிப்பாக இருந்தோம்.

இப்போது படிக்கும் பள்ளி என் எதிர் பார்ப்புகளுக்குத்
தகுந்த பள்ளி. பள்ளியில் யோகா, தபலா, நடனம்,
பாட்டு ஆகியவை டைம்டேபிளில் கட்டாயம் உண்டு.

ஃப்ரெண்ட்லியான ப்ரின்சிபல், இன்னொரு தாயாய்
பார்த்துக்கொள்ளும் ஆசிரியைகள், பிரச்சனை ஏதும்
வந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

நீச்சல் கட்டாய பாடம். இங்கே மற்ற பள்ளிகளில்
சனிக்கிழமை கூட பள்ளி உண்டு. பாடம் நடக்கும்.
ஆனால் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ
சனிக்கிழமை extra curricular activities.
9-12 மணி வரை. ஒவ்வொரு குழந்தையும்
2 பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பியானோ,நீச்சல், கிரிக்கட், டென்னீஸ்,
நடனம், கராத்தே, சமையற்கலை, ஓவியம்,
கைவண்ணம் என கொஞ்சம் பெரிய லிஸ்ட்.


வகுப்பில் அதிகம் போனால் 28 மாணவர்கள்தான்.

C.B.S.C வழிக்கல்வி. ஆனால் காலாண்டு, அரையாண்டு,
முழுப்பரிட்சை கிடையாது.

CONTINUOUS COMPREHENSIVE ASSESSMENT (C.C.A)
எனும் திட்டப்படி மாதாந்திர தேர்வுகள்
நடைபெறும். 15,40,40 மார்க்குக்கு தேர்வுகள்.
5 மார்க் practical/viva/oral projects
ஒவ்வொரு பாடத்துக்கும் இப்படி தேர்வு நடைபெறும்.
GRADING SYSTEM தான்.

வருட இறுதியில் ஒவர் ஆல் அசெச்மெண்டில்

Punctuality(submission of completed assignments on time,)
communication skills (participation in class discussions),
listening skills(concentration and attention span),
thinking skills (out of the box thinking and reference work),
social skills (Discipline)
இவைகளுக்கு தலா 20 மார்க்குகள் கிடைக்கும்.

இவ்வளவு +கள் சொல்கிறேன். அதனால் Fees
அதிகமோ என நினைக்க வேண்டாம். எட்டாவது
படிக்கும் என் மகனுக்கு வருடத்திற்கு 17,000. இதில்
பாடப்புத்தகங்கள்,நோட்டுக்கள்,லேபிள், ப்ரவ்ன் ஷீட்,
டயரி,BADGE, BELT சேர்த்துதான் Fees.
(கணிணி பயன்பாடு, நீச்சல், நியூஸ் பேப்பர் ஆகியவற்றிற்கு
தனி கட்டணமில்லை) ஆந்திர பிரதேச அரசால்
C.B.S.C வழிக்கல்வி பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
தொகையில் 40% குறைவாகத்தான் இந்தப் பள்ளியில்
Fees என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் கட்டண
உயர்வு உண்டு.

பிள்ளைகளும் சந்தோஷமாக பள்ளிக்கு போய்
வருகிறார்கள். டென்ஷனில்லாமல் கற்கிறார்கள்.
இப்படி ஒரு பள்ளிக்காகத்தான் தேடி அலைந்தேன்.

சென்ற வருடம் புதுகையில் அப்பாவுக்குத்
தெரிந்தவர்கள் ஹைதைக்கு மாற்றலாகி வந்த
பொழுது எந்த பள்ளியில் சேர்க்கலாம்? என்று
கேட்க என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை
கை காட்டினேன். அவர்களுக்கும் திருப்தி.

Thursday, July 2, 2009

என் குழந்தைக்கான பள்ளி - அறிவிப்பு!

தந்தையர் தினத்தை கருத்தாகக் கொண்டு இடுகையிட்டு கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்! இந்த ஜூன் ஜுலையென்றாலே பள்ளிகள் ஆரம்பித்து விடும். புது பள்ளிக்கு சேர்க்கைக்கு அலைவது, எந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்று நமக்குள் பலவித கருத்துகள்/ எண்ணங்கள்! பள்ளிக்கு இல்லையென்றால் கூட, டே கேர் செண்டர்கள் அல்லது ப்ளே ஸ்கூல்கள்!பள்ளிக்கூடம்/டே கேர்/ப்ளே ஸ்கூல்கள் இவற்றை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு கேள்விகள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் - இந்த மாதம் இவற்றைக் குறித்து நாம் அனைவரும் பேசுவோமா?!

குழந்தை இரண்டு வயதானாலே நமக்குள் வரும் கேள்வி எப்படிபட்ட ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அல்லது பள்ளிக்கு அனுப்புவது? என்னென்ன தகுதிகள் இருக்கும் இடத்திற்கு நாம் நமது குழந்தைகளை அனுப்புவோம்? அல்லது என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறோம்? உங்கள் மகள்/மகன் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் என்ன? நீங்கள் பள்ளியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏதோவொன்று உங்களுக்குள் தோன்றியிருக்கும் அல்லவா, இந்த பள்ளியில் நமது மகள்/மகன் சேர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நன்றாக வளருவார்கள் என்று..அதை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் உபயோகப்படும்.

உங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லையெனில் என்ன மாதிரி பள்ளி/டே கேர்/ப்ளே ஸ்கூல்-ஐ தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்! என்ன மாதிரி போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இடம் கிடைப்பதில் இருக்கும் சோதனைகள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இவ்வளவு போட்டி, என் ஆர் ஐ மக்களுக்கு மட்டுமான பள்ளிகள், குளிரூட்டபட்ட பள்ளிக்கூட அறைகள் பற்றி உங்கள் கருத்து...எல்லாவற்றையும் பேசுவோம்!அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களும் பங்களிக்கலாம்.
லேபிள்கள் உங்கள் பெயர் மற்றும் என் குழந்தைக்கான பள்ளி!


பி.கு: அடுத்த மாதத்திற்கான தீம்கள் வரவேற்கப்படுகின்றன!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger