Wednesday, July 29, 2009

பள்ளி செல்ல விரும்பு... பாடம் வெல்லக் கரும்புபள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல்.

அருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளி என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் படித்தது அரசு பள்ளி என்பதால், பிரபல பள்ளிகளைத் தேடிச் செல்ல எண்ணவில்லை. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளிகள் என்றே பார்த்தேன்.

முதலில் ப்ளே ஸ்கூல் தேவைப்படாது என்று எண்ணினேன். ஆனால் இரண்டு வயதில் இருந்து விளையாட துணை தேடும் குழந்தையின் ஆர்வம் கண்டு, இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூல் சேர்த்தேன்.

ப்ளே ஸ்கூலில் நான் எதிர்பார்த்தவை:

- குழந்தைகள் குஷியாக பொழுது போக்குமாறு ரைம்ஸ், கதை விளையாட்டு போன்றவை. பாடம் தேவையில்லை

- பள்ளியின் தூய்மை

- அளவான எண்ணிக்கையில் குழந்தைகள்

- அதிக பணம் கேட்கும் பள்ளியோ, ஏ.சி வசதியோ நான் தேடவில்லை. என் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏ.சி என்பது என்னைப் பொறுத்தவரை சுகம். பள்ளியில் அந்த சுகம் தேவை இல்லை என்பது எனது கருத்து.அடுத்து பள்ளியில் போடும்பொழுது, மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ என்று இருந்ததில் மெட்ரிக் (அ) சி.பி.எஸ்.இ என்று முடிவு செய்தோம். மற்றவற்றைப் பற்றி எதுவும் புரியாததால் இந்த முடிவு. எல்.கே.ஜி நேர்முகத்திற்கு நந்தினியை அழைத்துச் சென்றேன்.
அவள் ஒரே அழுகை. சற்று நேரம் பொறுத்து என்னுடன் வர சம்மதித்தாள். ஆசிரியர்களின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததது. ஓரளவு பெரிய மைதானம் இருந்தது.

குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, "ஹாப்" என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து "ஹாப்" என்றார்கள். குழந்தை குதித்தது."புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை விழித்தது. "பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.

- தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

- ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.

- ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 30 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 35 கூட பார்க்கிறோம்.

- லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.

- போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்ததுஇவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:

1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.

2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு

3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.

4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை "தின்கிங் ஸ்கில்ஸ்" என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.

5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.

6. "அப்சர்வேஷன் டே" என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.

7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.

8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.

9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.

10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள்.


என்ன பிடிக்கவில்லை?

எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன்.

அடுத்தது... கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின்? இதற்கு தீர்வு உண்டா? என் தோழிகளிடமும் விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

7 comments:

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அமுதா, பள்ளிக்கூடம் பற்றிய அறிமுகம்!நன்றி!

Anonymous said...

good :)

pudugaithendral said...

எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன். //

பயிற்சி ஒன்றா இருந்தாலும் தனி மனித ஒழுக்கம், பொறுமை, கையாளும் திறன் இது வேறுபடுமே!!

மருத்துவர்கள் பலவிதம் போல் ஆசிரியர்களூம்.

பள்ளிக்கூடம் பற்றிய பதிவு நல்லா இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

குழந்தைகளை அதிகபடியாக சேர்க்கும் போது ஆசிரியர்களின் போக்கும் மாறுகிறது. 25 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பில் இருந்தால் ஆசிரியர்கள் கையால்வது கடினமே. இப்பொழுதைய பாடதிட்டமும் அப்படி உள்ளது. ஆகையால், மாணவர்கள் ஆசிரியர் ratio மிக முக்கியம்.

சிங்கக்குட்டி said...

//ப்ளே ஸ்கூலில் நான் எதிர்பார்த்தவை//
எனக்கு தேவையானது கிடைத்து விட்டது ...நல்ல பதிவு நன்றி :-))

அமுதா said...

நன்றி முல்லை
நன்றி மயில்
நன்றி தென்றல்.
/*பயிற்சி ஒன்றா இருந்தாலும் தனி மனித ஒழுக்கம், பொறுமை, கையாளும் திறன் இது வேறுபடுமே!!*/
உண்மைதான்.

நன்றி அமுதா கிருஷ்ணா./* மாணவர்கள் ஆசிரியர் ratio மிக முக்கியம்.*/
மிக உண்மை

நன்றி சிங்கக்குட்டி

Kiruthika said...

useful info..thanks

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger