Wednesday, October 6, 2010

வாங்க!!! விளையாடலாம்

இந்த பதிவு என் தளத்தில் எழ்தியது. இங்கும் பதிகிறேன்.

என் குழந்தை எல்லா சினிமா பாட்டும் பாடும், எல்லா சீரியல் பெயரும் தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அம்மாக்களை நாம் பார்த்து இருக்கிறோம். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் டிவி பார்க்கக் கூடாது. வேகமாக வளரும் அவர்கள் மூளையில், டிவியில் வேகமாக மாறி மாறி வரும் காட்சிகள் பதிந்து, பின்னாளில் அதே வேகத்தை அவர்கள் வாழ்க்கையிலும், பள்ளியிலும் எதிர்பார்த்து, கிடைக்காததால் அவர்கள் அடையும் எதிர்பலனை இங்கு காணலாம்.

அதே போல் குழந்தைகள் விளையாட வேண்டிய அவசியத்தை இங்கு காணலாம். தீஷுவிடம் அப்பா உன்னோட என்னவெல்லாம் செய்வார் என்றவுடன், அவள் சொன்னது,"கதை சொல்லுவார், யானை மாதிரி, தவளை மாதிரி, குதிரை மாதிரி போக சொல்லுவார்... என்று லிஸ்ட் நீண்டது. அம்மா என்னவெல்லாம் செய்வார் என்றவுடன் ஒன்னுமே செய்ய மாட்டாள் என்றாள். அவளுக்கு அவள் வயதுக்குப் பிடித்தது கதை கேட்பதும், விளையாடுவதும்.

யாரும் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் நான் தீஷுவுடன் கழிக்கும் என் நேரத்தைப்பதிவதன் சொந்த காரணங்கள் - ஒன்று பின்னாளில் தீஷு படித்துப் பார்ப்பாள், மற்றொன்று பதிவு எழுதி நாளாகிவிட்டாது என்பதால் எதையாவது புதிதாக யோசிக்கத்தூண்டும் எண்ணம். Childhood is a journey, not a race. நம் குழந்தையின் பயணத்தில் நாமும் பங்கு கொள்ளலாமே.

நம் குழந்தையை மகிழ்விக்க அவர்களுடன் சேர்ந்து ராக்கெட் ஸைன்ஸ் பற்றி பேச வேண்டாம். கையைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போனால் போதும். குழந்தையின் டிவி நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் நம்முடைய நேரத்தைச் செலவிட்டு, அதை பதிவோம். நாம் எல்லாம் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.

சேர்ந்து செய்வதற்கு என்னுடைய ஐடியா:

1. குழந்தையுடன் செய்த ஏதாவதை ஒன்றை தங்கள் தளத்தில் பதிய வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து செய்தது எதுவாகவும் இருக்கலாம். வாசித்தது, பேசியது, விளையாண்டது, குதித்தது, சமைத்தது, நடந்தது என எதுவாகவும். குழந்தை வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. ஒவ்வொரு புதன் கிழமையும் நான் வாங்க, விளையாடலாம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுவேன். பதிவின் முடிவில் ஒரு லிங்க் வைத்திருப்பேன். அந்த வாரம் முழுவதும் அந்த லிங்க்கில் நீங்கள் உங்கள் தளத்தில் பதிந்த இடுகையில் லிங்க்கை ஏற்றலாம். அதனால் நீங்களும் புதன் கிழமை தான் பதிவு போட வேண்டும் என்பது இல்லை. அந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பதிந்து, உங்கள் இடுகையை லிங்க்கில் ஏற்றலாம்.

3. உங்கள் இடுகையின் முடிவில் dheekshu தளத்தில் இணைத்திருப்பதைத் தெரிவித்தால், இங்கு வந்து பிறருடைய லிங்கையும் படிக்க அனைவரும் வசதியாக இருக்கும்.

நாம் இந்த சிறு முயற்சியின் மூலம், பிறரையும் பங்கு கொள்ள செய்து வளமான தலைமுறை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முயற்சியை வேறு விதமாக செய்யலாம் என்று தோன்றினால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்ளலாம்.

லிங்க் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். எனக்கும் இது தான் முதல் முறை. தெரிந்த வரை சொல்லுகிறேன். இந்த பதிவின் முடிவிலும் லிங்க் இருக்கிறது. ஏதாவது ஒரு பதிவை பதிந்து லிங்க் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் இடுகையை இந்த லிங்கில் ஏற்றுங்கள்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger