Showing posts with label மதர்ஸ் டே 09. Show all posts
Showing posts with label மதர்ஸ் டே 09. Show all posts

Friday, May 22, 2009

அன்னையர் தினத்துக்காக - " பார்வைகள் " கவிதா

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”பார்வைகள் கவிதா தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி கவிதா! ”கன்னத்தில் முத்தமிட்டால்' என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு இதோ :-

"அம்மாக்கள் தினம்" கொண்டாட்டம் !! முல்லை அம்மாக்கள் வலைப்பூக்களில் அம்மாக்கள் தினம் சிறப்பாக அம்மாக்களை பற்றி எழுதச் சொல்லி இருந்தார். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதி தள்ளுகிறார்கள். ஆனால்

கவிதா
ஒரு
அம்மாவாக
ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுதமுடியும் !

குழந்தையாக
எதுவுமே
எழுத தோன்றவில்லை
எழுதுபவர்களை
பார்த்தால்
பொறாமை
ஏக்கம்..

'கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கதாபாத்திரமான அமுதா என்ற குழந்தையை போன்று இன்னமும் அம்மாவை தேடும் ஒரு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த பதிவில் என்னுடைய ஏக்கத்தையும், அம்மா இருப்பவர்களையும் அவர்களுக்கு அம்மாவிடம் கிடைக்கும் பாசத்தையும் பார்க்க பொறுக்காத பொறாமையிலும் எழுதுகிறேன். பொறாமை என்பது கூடாது தெரியும்..ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வந்துவிடும்.. கொஞ்சமாக எல்லாம் இல்லை ஏகத்துக்கு பொறாமை உண்டு. :)

கண்டிப்பாக சோகம், துக்கும், துயரம், அழுவாச்சி எதுவும் இல்லை. :)

எனக்கு அம்மாவாக இருந்து தோற்றுப்போனவர்கள்-

ஆயா
அப்பா
சின்ன அண்ணன்
என் கணவர்
என் மகன்
என் நண்பர்கள்
நண்பர்களின் அம்மாக்கள்
நண்பர்களின் குழந்தைகள்

இவர்கள் எல்லோருமே என் மேல் அதிகமாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்க்கும் அன்பை என் அம்மாவாக அவர்களால் கொடுக்க முடியவில்லை. கொடுப்பது எனக்கு என் அம்மாவின் இடத்தை மனதளவில் இன்னமும் நிறைவு செய்யவில்லை எனலாம்.

சொல்ல விரும்புவது, ஒரு குழந்தைக்கு அம்மா' வாக அந்த குழந்தையை பெற்ற தாயை தவிர்த்து யாராலும் முழுமையான அந்த குழந்தையின் மனதை நிறைவு செய்யும் அளவிற்கு அம்மா'வாக இருக்கவே முடியாது என்பது என் அனுபவத்தில் நான் கற்றது, பெற்றது. என்னுடைய ஆயாவை போன்று என்னை கவனித்தவர் இல்லை, என்னை வளர்த்தவர் இருக்குமுடியாது என்றாலுமே அவர் கூட என் அம்மா வாக முடியாது என்பது பல நேரங்களில் நான் உணர்ந்தது. என் அண்ணன் மகனிற்கு நான் அம்மாவாக இருக்கும் வாய்ப்பை பெற்றபோதுக்கூட அவனுக்கும் என்னால் அவனின் அம்மாவை போன்று இருக்கமுடியவில்லை என்பது உண்மை. அத்தையாக இருப்பது எளிது, அம்மாவாக.... :(


அம்மா - ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை.. அறிந்தவரை- குழந்தைகள் அம்மாவின் மடியில் உட்காரும், தலைவாரிக் கொள்ளும், சாப்பாடு ஊட்டிக்கொள்ளும், பள்ளியில், கல்லூரியில், சினிமா தியேட்டர்களில், கடைகளில் பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் அம்மாவோடு வரும், இறுக்கமாக அம்மாவை கட்டிக்கொண்டும் வரும். பள்ளியில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் வரும் போது எல்லாம் என் தோழிகளின் அம்மாக்கள் வருவார்கள், அம்மாக்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் டீச்சரிடம் சிரித்து சிரித்து பேசுவார்கள். :( எனக்கு பிடிக்காது. ஓரமாக நின்று கவனிப்பேன். பொறாமை வரும் இடங்களில் முக்கியமானது பள்ளி. பிரச்சனை என்று வந்தால் உடனே குழந்தைக்கு சப்போர்ட் செய்துக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். எனக்கு எப்பவுமே நானே துணை. (அதனாலே வாதிட பழகிக்கொண்டேனோ என்று நினைப்பேன்.) ஆயாவின் வயதிற்கு அவர்களால் அழைத்தற்கு எல்லாம் வர முடியாது. அதனால் அவரை தொந்தரவு செய்தது இல்லை.

அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது. யாரிடமும் சொன்னது இல்லை. விடுமுறைக்கு என் அக்கம் பக்கம் இருப்பவர்கள் குழந்தைகளுடன் அம்மா வீடு என்று சென்று விடுவார்கள். அல்லது குழந்தைகளையாவது அனுப்பிவிடுவார்கள். அப்படி ஒரு நாள் கூட என் வாழ்நாளில் எங்கும் சென்றது இல்லை. செல்ல இடமில்லை என்பது யதார்த்தம். சில சமயம் இது தான் வாழ்க்கை என்று தெரிந்தாலும் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை. . செல்ஃப் கவுன்சிலிங் கொடுக்கும் போது இதை எல்லாமும் யோசித்து என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஏக்கம் என்பது இப்பவும் இருக்கத்தான் செய்கிறது. இருந்துவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் கவுன்சிலிங் கொடுத்து என்னை தேற்றிக்கொள்ளவும் நினைப்பது இல்லை. அழவேண்டுமா அழுதுவிடு, சிரிக்கவேண்டுமா சிரித்துவிடு, யார் உயிரையாவது வாங்க வேண்டுமா வாங்கிவிடு என்பதை நடைமுறை படுத்திவிடுவதுண்டு :)


உலகத்தில் அம்மா இல்லாமல் நான் மட்டுமா இருக்கிறேன்.? இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படாமல், இல்லாதவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு க்கொள்ளலாமா? அது் தவறில்லையா? தவறாகத்தான் தோன்றி இருக்கிறது, அம்மா இல்லாத யாரைப்பார்த்தாலும் நான் படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து என்னை போல் இவர்களும் கஷ்டப்படுகிறார்களே என்று தோன்றுமே தவிர்த்து, அவரை விடவும் நான் மேல் என்று என்றுமே நினைத்தது இல்லை. அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்....

குழந்தைகள் பெற்றுவிட்டால் மட்டுமே ஒரு பெண் அம்மா'வாகிவிட முடியாது.!



அணில் குட்டி அனிதா : இதோடா ! அம்மணி அட்டண்டண்ஸ் கொடுத்துட்டாங்க..!! ஏழு கழுத வயாசாச்சு... பெத்தப்புள்ளைக்கு நாலு கழுத வயசாச்சி.. இன்னமும் ம்ம்மா...!! யம்மா.. ! ஆத்தா... ன்னு பதிவு போட்டுக்கிட்டு.. தாங்கலடா இந்த கொசு த்தொல்லை. .யாராச்சும் ச்சப்புன்னு அடிச்சி கொல்லுங்க முதல்ல...!!

பீட்டர் தாத்ஸ் :- When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.
-------------------------------------------
Take time to read; it is the foundation of wisdom

Tuesday, May 12, 2009

அன்னையர் தினத்துக்காக - ”சிறகடிக்க ஆசை” சதானந்தன்!!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறகடிக்க ஆசை” Sathananthan தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி Sathananthan! ”'அம்மா - நேரில் நின்று பேசும் தெய்வமாக வேண்டாம். அம்மாவாகவே.........!' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-



கொண்டவர்க்கு எது பிடிக்கும்; குழந்தைகள் எதை விரும்பும்


தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன


உண்பதில் எவருடம்புக்கெது உதவாது என்றெல்லாம்


கண்டனள் கறிகள் தோறும் உண்பர் தம்மைக் கண்டாள்.



பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும் சுவை மணக்கும்


அருந்துமா சிறிய பிள்ளை என என்னும் அவளின் நெஞ்சம்


இருந்தந்தச் சிறிய பிள்ளை இச் என்று சப்புக்கொட்டி


அருந்தியே மகிழ்வதைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்.





ஈழத்தில் பிந்திய 80 களில் 6 ம் 7 ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்த பாடல் இது.


இதை ஆசிரியர் விளக்கிக் கற்பித்த அன்றே வீட்டில் வந்து அம்மாவைக் கவனித்தேன். நான்கு பிள்ளைகளுக்கும் நான்கு விதமாக முட்டை பொரித்தார். நான்கு விதமாகத் தோசை சுட்டார். இது பல குடும்பங்களிலும் தாய்/மனைவி செய்வது தான் என்றாலும் ஏனோ தானோ என்று சமைப்பவர்களும் செய்து முடித்தால் போதும் என்று செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.


இப்போதும் வீடுகளில், (மேலை நாட்டினர் கூட) சமையல் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருக்கிறது. (நளபாகம் என்பதையோ வெளியில் restaurant இல் chef ஆக இருப்பவர்களைத் தவிர்த்து) ஆனால் இதற்குரிய அங்கீகாரத்தைப் பெரும் பெண்கள் எத்தனை பேர்? ஒருநாள் உப்பு கூடிவிட்டால் சலித்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் நன்றாக இருக்கும் நாட்களில் பாராட்டி இருப்பார்கள்?


இதைப் புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. சிறு பிள்ளைகள் சரி. 10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.


சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்குப் போகும் அம்மாக்களும் பிள்ளைக்கும் கலந்து கொண்ட நிகழ்வில் பல குறைகளையும் கூறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கும் பல குறைகள் இருக்கும். நானும் அழகன் படத்தில் வருவது போல வேலைக்குப் போகாத அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டு. துரதிர்ஷ்ட வசமாக எனது ஆறு வயதில் அப்பாவைப் பிரிந்த எனக்கு வேலையும் பார்த்து எங்களையும் "கைம்பெண் வளர்த்த கழுதைகள்" ஆகி விடக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அம்மா வில்லியாகவே தோன்றியதும் உண்டு. ஆனால் 13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.


அம்மாவென்றாலே தியாகிகள் என்று வைத்திருக்கும் மனப்பாங்கும் மாற வேண்டும்.


அப்படி இருப்பது அம்மாக்களின் இயல்பு.


ஆனால் அதைப் புரிந்து அனுசரணையாக இருப்பது


உறவுகளின் உன்னதம்.

Photo: Mom hiding kid from shelling in Sri Lanka

Photofromhttp://my.telegraph.co.uk/chandradavid/blog/2009/05/04/a_paradise_turned_into_kingdom_of_vultures

Sunday, May 10, 2009

அன்னையர் தினத்துக்காக - திருமுருகன்!

திருமுருகன், Keep walking எனும் ஆங்கில வலைப்பூவில் எழுதிவருகிறார். நமது வலைப்பூ வார்ப்புருவை வடிவமைத்தவர். மிக அழகாக header-ஐ விரும்பியபடி செய்துக்கொடுத்தார். Header-ல் இருக்கும் வரைபடங்களை, அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களின் குழந்தைகளிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை முன்வைத்தவர். ”அன்னையர் தினத்துக்காக ஃபேமஸ் பதிவர்கள்கிட்டே அவஙக அம்மா பத்தியோ அல்லது அன்னையர் தினத்தைப் பற்றியோ எழுதச் சொல்லிக் கேளுங்க” என்று ஐடியா சொன்னவரையே எழுதச் சொன்னதும் வெகு விரைவில் மடலில் அனுப்பியிருந்தார். நன்றி திருமுருகன். தங்கள் அன்னைக்கு வாழ்த்துகள்! அவரது அன்னையர் தினப் பதிவு இதோ:

நான் ஸ்கூல்ல படிக்கும் போது மதர்ஸ் டே-ன்னு ஒரு கதை படிச்சு இருக்கேன். ஒரு குடும்பமே மதர்ஸ் டே-வை முன்னிட்டு ஒரு பிக்னிக் போலாம்னு பிளான் பண்ணி கிளம்புவாங்க. அம்மா சீக்கிரமே எந்திரிச்சு எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் ரெடி பண்ணிட்டு, எல்லா குழந்தைகளையும் எழுப்பி, குளிப்பாட்டி, சீவி சிங்காரிச்சு விட்டுட்டு ரெடி ஆகி பாத்தா, பிக்னிக் வேன்-ல ஒருத்தருக்கு மட்டும் எடம் பத்தாது (ஏன்னு கேக்காதீங்க, அந்த மாதிரி ஆயிடும்). சரி, யாரை வீட்ல விட்டுட்டு போலாம்னு இங்கி-பிங்கி-பாங்கி போட்டு பாப்பாங்க. எல்லாரும் நான் வீட்-ல இருக்க மாட்டேன்னு சொல்லிடுவாங்க. கடைசியா அம்மா நான் வீட்லயே இருந்துக்கிறேம்பாங்க. சரி-ன்னு அவங்களை விட்டுட்டு மிச்ச எல்லாரும் ஜாலியா போய்டுவாங்க.


எங்க (எல்லா) அம்மாவும் இப்படித்தான். ரெண்டு வருஷதுக்கு முன்னாடி ஒரு நாள் தங்கச்சி போன் பண்ணினா. 'அண்ணா, மதர்ஸ் டே வருது, நாம ஒரு (கிரீடிங்) கார்டு வாங்கி நம்ப அம்மாவுக்கு குடுக்கலாமே'-ன்னு சொன்னா. அம்மாவுக்கு கார்டா? சேச்சே, எதுக்குன்னு நினைச்சேன், அப்புறம் "உங்களை அம்மாவா அடைஞ்சுது வரம்-னா, நாங்க எவ்ளோ நாள் தவம் செஞ்சு அந்த கடனை தீக்கபோறோம்னு தெரியலன்னு" ஆரம்பிச்சு தத்தக்க, பித்தக்க கவிதை ஒன்னு எழுதி குடுத்தோம். அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கொஞ்சம் கேவலமா இருந்துச்சு.


ஏன்னா இப்ப தனியா வேற நாட்ல இருக்கும் போது தான் அவங்க அருமை தெரியுது. பெங்களூர்-ல வேலை செஞ்சுட்டு இருக்கும் போது பஸ்ல கூட்டமா இருக்குமேன்னு சொல்லி சொல்லி, நெறைய பண்டிகை நாள்களில் அம்மாவை பாக்க நான் போனதே இல்லை. எங்க அம்மாவுக்கு வருசத்துக்கு ஒரு மதர்ஸ் டே விஷ்ஷஸ் எல்லாம் ரொம்பவே too little. அவங்களை நல்லா பாத்துக்குற மாதிரி நாங்க அவங்க கூட இருக்கணும், அந்த வாய்ப்பு கெடைக்கும்-னு நம்பறேன்.


இப்பதான் கொஞ்ச நாளா இந்த வலைப்பூவை (நன்றி: கைப்புள்ள , சந்தனமுல்லை ) பாக்கறேன். ரொம்ப நல்லா இருக்கு, நெறைய இளம் அம்மாக்களுக்கு உங்க பதிவுகள் எல்லாம் உபயோகமா இருக்கும்-னு நம்பறேன், அதனால எல்லாரும் நெறைய எழுதுங்க (சொல்லிட்டாருயா கவர்னரு!!!), எல்லாருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.


--திருமுருகன் --

அன்னையருக்கு வாழ்த்துகள்


"செல்வத்துள் செல்வம் மக்கட்செல்வம்"
அச்செல்வத்தினை அடையப் பெற்ற, பிறவிப் பலன் எய்திய
அன்னையருக்கும், வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கும் தெய்வத்திற்கு ஒப்பான அன்னையருக்கும், மனைவியாக இருந்து ஒரு தாயாகவும் மாறி கணவனைப் பார்த்துக்கொள்ளும் அன்னையருக்கும், மாமியாரானாலும் ஒரு தாயாகவே மருமகளுக்கு/மருமகனுக்கு இருக்கும் அன்னையருக்கும், இன்னும் அக்காவாக, அண்ணியாக, தங்கையாக, மகளாக உறவு ஏற்றிருந்தாலும் தாய்க்கு ஒப்பாக அன்பு செய்யும் அனைத்து தாயுள்ளங்களுக்கும் என்னுடைய "அன்னையர் தின வாழ்த்துகள்!"


அன்பு செய்வீர்! என்றும்! எப்போதும்! எங்கும்! எல்லோரிடமும்! அன்பு செய்வீர்!

'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”முத்துச்சரம்” ராமலஷ்மி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி ராமலஷ்மி! ”'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்! என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-

முந்தைய தலைமுறையின் வழி காட்டுதலுடனும் ஆசிகளுடனும் அடுத்த தலைமுறையை உருவாக்கி வரும் அன்னையரா நீங்கள்? நன்று. நல்ல அம்மாக்களாய் நாம் இன்று மிளிரக் காரணமாயிருக்கும் நம் அம்மாக்களைப் போற்றி வாழ்த்துவதோடு இந்த அன்னையர் தினம் முடிந்து விடாதிருக்க, சிந்தனைக்கு வித்திடும் சில விஷயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

'போகிற இடத்தில் பெண் குழந்தைகள் பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டுமே'யெனப் பார்த்துப் பார்த்து எல்லா வேலைகளும் பழக்கி வளர்க்கும் அம்மாக்களும் உண்டு. 'படிக்கிற குழந்தை நம் வீட்டிலிருக்கும் வரை இஷ்டம் போலிருக்கட்டுமே' என நினைத்து, தானே எல்லாம் இழுத்துப் போட்டு செய்யும் அம்மாக்களும் உண்டு. கனிவை அணையாக் கனலாய் மனதினுள் மறைத்து வைத்துக் கொண்டு கண்டிப்பாகவே இருக்கும் அம்மாக்களின் மத்தியில் கல்லூரிப் பருவத்திலும் செல்லம் கொஞ்சிக் கொஞ்சி வாயில் சாப்பாட்டைத் திணித்து அனுப்பி வைக்கும் அம்மாக்களும் உண்டு.

நாம் எப்படி வளர்க்கப் பட்டிருந்தாலும் அப்போதெல்லாம் தெரியாத அம்மாவின் அருமை, புகுந்த வீட்டிற்கு போனதும் கூட அவ்வளவாக உறைக்காத பெருமை நாமும் ஒரு தாயாகும் வேளையில் எப்படிப் புரிந்து போகிறது? குழந்தை வளரும் ஒவ்வொரு தருணத்திலும் சரி, குழந்தைக்காக இன்பச் சிரமங்களை எதிர் கொள்ளும் பொழுதுகளிலும் சரி, தத்தமது அம்மாக்களை நினைக்காதவரே இருக்க முடியாது. ‘ஓரிரு குழந்தைகளை வளர்ப்பதற்கே இப்படி. நீ எப்படி அம்மா எங்கள் அத்தனை பேரினை அப்படிப் பார்த்துக் கொண்டாய்?’ கேட்காதவர் இருக்க முடியாது.

அப்படியெல்லாம் நம்மை வளர்த்த அம்மா அப்பாவுக்கும், இன்னொரு பெற்றோராய் மதிக்கப்பட வேண்டிய மாமியார் மாமனாருக்கும் நாம்(மகள் மகன் இருவரும்தான்) செய்ய வேண்டியது என்ன? அவர்கள் 'க்ரேட்' எனப் புரிந்து கொள்ளுதல் மட்டுமேயா? அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை, செலுத்த வேண்டிய நன்றி என்றெல்லாம் சொன்னால் அவை உறவுகளுக்குள் அர்த்தமற்றவையாக, ஏன் அதிகபட்ச வார்த்தைகளாகவும் கூடத் தோன்றிடக் கூடும். ஆகையால் பாசத்துடன் உள்ளன்புடன், அவர்களே கூட பிரச்சனையாய் கருதாத சில விஷயங்களை நாம் இன்னொரு கோணத்திலிருந்து யோசித்துப் பார்க்கலாமே.

நமக்கு பிரசவம் பார்க்க எந்த வயதிலும் எந்த உடல் நிலையிலும் ஓடி வந்து உடனிருந்து உதவுகின்ற அம்மாக்கள், வேறெந்த இக்கட்டாயினும் கேட்காமலே கைகொடுக்கும் அம்மாக்கள் எல்லா சமயங்களிலும் அப்படி இருந்தேயாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளை விட வேண்டும். அவர்கள் பெற்றோராய் நமக்கு ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்த பின்னரும், இருக்கும் கடைசி காலம் வரை நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப் பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்றிருக்கக் கூடிய சில ஆசைகள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

'இரண்டு வாரம் நான் கான்ஃப்ரன்ஸுக்கு வெளிநாடு போகிறேனம்மா வந்து குழந்தைகள்கூட இரேன்' என்கிற நாம் திரும்பி வந்த பின் அவர்களை உட்கார வைத்துக் கவனிப்போம். அம்மா கையால் செய்து சாப்பிட ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அவர்க்ளுக்கு பிடித்ததை நம் கையால் செய்து கொடுத்துப் பார்த்துக் கொண்டால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி பன்மடங்காகுமில்லையா? சிறுவயதில் எத்தனை சுற்றுலாவுக்கு நம்மை அழைத்துச் சென்றிருப்பார்கள்? அவர்கள் பார்க்காத இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி வருவோம். நேரமின்மையாலோ ‘இனி எதற்கு’ என்ற எண்ணத்தாலோ விட்டு விடும் சின்னச் சின்னத் தேவைகளையும் கூட நாம் கவனமாய்க் கண்டு பிடித்துப் பூர்த்தி செய்வோம்.

இந்த தலைமுறையில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அதிகம்தான். வீட்டில் நமது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் ஒரு போதும் நம் பெற்றோர்களிடம் தருவது சரியாகாது. தவிர்க்க முடியாத அப்படிப்பட்ட சூழல்களில் எல்லா வேலைகளுக்கும் உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொடுப்பது மிகவும் அவசியம் (ஓரிரு குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மாதிரியும் ஆயிற்று). பெரியவர்கள் மேற்பார்வை மட்டுமே செய்கிற மாதிரியாக இருக்க வேண்டும். அதே போல ஓய்வு பெற்ற அப்பாக்களில் சிலர் வெளி வேலைகளை விரும்பி ஏற்றுச் செய்வார்கள். அவர்களாக விருப்பட்டாலன்றி நாமாக 'வீட்டில்தானே இருக்கிறார்கள்' என எந்த வேலையையும் அவர்கள் மேல் திணிப்பது சரியல்ல. அவர்கள் வயதினை எப்போதும் கருத்தினில் கொள்ள வேண்டும்.

சரி அதே வயதினைக் காரணம் காட்டி பெற்றோரை வீட்டோடு வைத்துக் கொள்ள நினைப்பதும் சரியல்ல. கோவிலுக்கோ உறவினர் நண்பர் வீடுகளுக்கோ பொது இடங்களுக்கோ அடிக்கடி சென்று வர பிரியப் படலாம். குறிப்பாக விசேஷ வீடுகள் சென்றால் பலநாள் பார்க்காதவரை எல்லாம் பார்க்கலாம் எனும் அதீத ஆர்வம் இருக்கும். ‘இந்த தள்ளாத வயதில் பேசாமல் வீட்டோடு இருங்களேன்’ என்றிடாமல் முடிந்தால் நாமே அழைத்துச் செல்லலாம் அல்லது தக்க வசதி செய்து கொடுத்து அனுப்பி வைக்கலாம். அந்த மாதிரியான சந்திப்புகள் அவர்கள் உள்ளத்தை எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக வைக்கிறது என்பது யோசித்துப் பார்த்தால்தான் புரியும்.

அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய். நமது தன்னலமற்ற பாசம் நம் குழந்தைகளை நோக்கி மட்டுமேயன்றி நம்மை ஆளாக்கியவர்கள் மேலும் இருக்கட்டும். நாங்கள் எவரும் அப்படியல்ல என்றால் அதைவிட சந்தோஷம் வேறில்லை. ஆனால் இதிலிருக்கும் ஏதேனும் ஒரு குறிப்பாவது எவருக்கேனும் தேவைப்படுவதாய் இருக்கலாமென்ற எண்ணத்திலேதான் இங்கு பதிந்திருக்கிறேன்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Saturday, May 9, 2009

அன்னையர் தினத்துக்காக - ”நிலாக்காலம்” கோமதி!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”நிலாக்காலம்” கோமதி தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி கோமதி! ”'அன்பென்றாலே அம்மா!' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-


பொதுவாவே மாதா, பிதா, குரு, தெய்வம்னு தான் சொல்லுவாங்க
கடவுளையும் விட உசந்த ஸ்தானத்துல இருக்கிறது அம்மா தான். ஒரு தாயை விட சிறந்த உறவு வேற எதுவும் இல்லைனே சொல்லலாம். எல்லாருமே அம்மாவோட சிறப்பை பத்தி நிறைய எழுதிட்டாங்க ஆனால் என்னை பத்து மாதம் சுமந்து பெற்று எடுத்த அம்மாவை காட்டிலும் எங்க கூடவே இருந்து என்னை குளிப்பாட்டி, உணவூட்டி, பள்ளிக்கு தயார் செய்து, கதை சொல்லி, சுவாமி சுலோகன் சொல்லி கொடுத்து, பாட்டு பாடி தூங்க வச்சுனு என்னை வளர்த்த எங்க பாட்டியை நான் எங்க அம்மாவுக்கும் சமமா தான் மதிக்கிறேன்.


எங்க பாட்டி மத்த பாட்டிகளை விட ரொம்பவே வித்தியாசமானவங்க தன்னோட என்பது வயசுலயும் சுறுசுறுப்பா இருப்பாங்க தினமும் பேப்பர் படிப்பாங்க (uptodateaa இருப்பாங்க internet பற்றி கூட தெரியும்) தன்னோட வேலைகளை தானே செஞ்சுப்பாங்க. இப்படி பாட்டி பற்றி நிறைய சொல்லலாம். முக்கியமா என்னவருக்கும் எனக்குமான காதல் திருமணத்திற்கு முதன்முதலில் பச்சைக் கொடி காட்டினது என் பாட்டி தான். பாட்டிக்கு நிறைய படிக்கணும்னு ஆசை அந்தக் காலத்துலயே Double Double Promotion வாங்குனேன்னு சொல்லும் அதுவும் எப்படின்னா மூணாம் க்ளாஸ்லேருந்து அஞ்சாம் க்ளாஸ் அப்புறம் அஞ்சாம் க்ளாஸ்லேருந்து ஏழாம் க்ளாஸாம் இது எப்படி சாத்தியம்னு எனக்குத் தெரியலை. நாங்கள்ளாம் சும்மா கதை விடாத பாட்டினு சொல்லி வெறுப்பேத்துவோம். பாட்டிக்கு தமிழ் இலக்கியத்து மேல ஆர்வம் அதிகம் என்னோட ஆறாம் க்ளாஸ்ல ஆரம்பிச்சு நான் காலேஜ் படிக்குற வரைக்கும் உள்ள எல்லா தமிழ் புத்தகஙகளையும் படிச்சுடும். இதுல கொடுமை என்னன்னா படிச்சுட்டு கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சுடும் எனக்கும் பாட்டிக்கிட்ட தமிழ் படிச்சு ஒப்பிக்குறதுனா ரொம்ப பிடிக்கும்.

அடடா தாய்மையைப் பற்றி எழுதச் சொன்னா நான் என் பாட்டியைப் பற்றி ரொம்ப எழுதி அறுக்க ஆரம்பிச்சுட்டேன் போல. பாட்டி பற்றி எழுத ஆரம்பிச்சா எழுதிட்டே இருக்கலாம். சரி அதை விடுங்க நான் எதுக்கு இந்தத் தாய்மை தலைப்புல பாட்டியை பற்றி சொல்ல வந்தேன்னா என்னை பொருத்த வரை தாய்மை என்கிற உணர்வு இருக்குற எல்லாருமே தாய் தான்.

ஓரு பக்கம் நிறைய பெண்கள் குடும்பச் சூழ்நிலையால தான் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியிலும் அனாதை இல்லங்களிலும் கொண்டு போய் விடுறாங்க. இன்னொரு பக்கம் குழந்தை இப்போ வேண்டாம் அப்போ வேண்டாம்னு கருவிலேயே அழிக்குற பெண்களும் இருக்காங்க. அவங்களெல்லாம் தாய்மைங்றது ஒரு அற்புதமான விஷயம்ங்றதை புரிஞ்சுக்கனும். அது ஒரு வரம் அதுக்காக ஏங்கி காத்துக்கிட்டு இருக்கிற பெண்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. அதுனால நம் குழந்தைகளை அனாதைகளாக்கி, கருவிலேயே அழிக்கும் கொடுமையை இனிமேலாவது செய்யாமல் இருப்போம். அதே போல குழந்தை இல்லாதவங்களும் குழந்தை இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு காலத்தை வீணாக்காமல் அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வு கொடுப்போம்.

என் திருமண்த்திற்கு பிறகு எங்க பாட்டி கொள்ளு பேரன், பேத்தியை பார்க்கணும்னு வேண்டாத சாமி இல்லை ஆனால் கடைசி வரை அவங்களால பார்க்க முடியலையெங்கிற வருத்தம் எனக்கு இருந்தாலும் என் பாட்டி இறந்த அதே மாதத்தில் (சில தினங்களிலேயே) தான் நான் கருவுற்றிருக்கிறேன் என்பது தெரிந்ததும் தன்னுயிர் கொடுத்து எனக்கு தாய்மையை கொடுத்த என் பாட்டி எனக்கு எப்பவுமே ஒரு தாய் தான்.

தாய்மையைப் போற்றுவோம். அன்னையர் தின வாழ்த்துகள்.

வாய்ப்புக் கொடுத்த முல்லைக்கும் என்னை எழுதத் தூண்டிய கவிதாவிற்கும் எனது நன்றி.

(இந்த அன்னையர் தின நன்னாளில், எனக்கு தாய்மையை கொடுத்த என் பாட்டி அம்பிகாவிற்கு இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.)

அம்மா... உன்னை வணங்குகிறேன்!



அம்மா உனக்காக உன் மகளாக நான் என்ன செய்யப் போகிறேன்?

நீ என்னை எந்த நிலையில் பெற்று வளர்த்தாய் என தெரியும்... அது உடல் ரீதியாக உனக்கு எத்துணை சிரமமானதானாலும் அது பாராமல் என்னை ஆளாக்கினாய்!

முதன் முதலில் நீ எப்போது என்னை பள்ளிக்கு அழைத்து சென்றாய் என் நினைவில்லை... ஆனால் நீ பள்ளிக்கு உணவு எடுத்து வருவாய் நான் சூடாக உண்ண வேண்டுமென!

ஒவ்வொரு வருடமும் நான் வகுப்பில் முதன்மை பெற்றதால் வருடந்தோறும் பரிசு பெற்றிருக்கிறேன்! ஆனால் மகிழ்ச்சி உன்னில் கண்டேன்! நீ பெற்ற பரிசைப் போல எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப் படுவாயே!

முதன் முதலில் இனி எனக்கும் புடவை வாங்க வேண்டும் என அப்பாவிடம் நீ கூறி அதுவும் ஒரு பட்டுப் புடவையாக வாங்கினாய்... உன் மகள் அணியும் முதல் புடவை பட்டாக இருக்க வேண்டுமென!

நான் முதன் முதலில் புடவை அணிந்து வெளியே சென்ற போது பயம் கலந்த பெருமிதத்தை உன்னில் கண்டேன்!

அப்பா தான் எனக்கு முதலில் பிடிக்கும் என எத்துணை முறை கூறியிருப்பேன்? ஆனால் முதன் முதலில் உன்னை நம் வீட்டைப் பிரிந்து விடுதிக்கு செல்கையில் விட்டேனே கண்ணீர்... அதில் நீ இருக்கக் கண்டேனம்மா!

தொட்டதற்கெல்லாம் உன்னை கடவுளிடம் வேண்ட சொல்லி கூறுவேனே... நீயும் எப்போதும் எனக்கான வேண்டுதல்களுடன் இருப்பாய்!

மணமுடிக்க நிச்சயித்த போதிருந்தே பம்பரம் போல் சுழன்றாயே! உன் உடல் நிலை மேலும் மோசமானாலும் மனம் தளராது எப்படியெல்லாம் உழைத்தாய் திருமண வேலைகளுக்காக!
திருமணத்தன்று பாதபூஜை செய்கையில் உன் காலின் பருத்த வீக்கம் கண்டு அதிர்ந்தே போனேன்!

மாங்கல்யம் ஏற்கும் அந்த நொடியில் கூட சந்தோஷம் ஒரு புறம், இப்படியெல்லாம் எனக்காக உழைத்த உன்னைவிட்டு பிரிந்துசெல்கிறேனே என்ற துயரம் ஒரு புறம் என கண்ணீர் சிந்தினேனே!

இரு சிசேரியன் கண்ட நீ... உடல் வலுவே இல்லாத போதும் எங்களைப் பெற்றாய்! ஆனால் இன்று எனக்கு சிசேரியன் என்றதும் தேம்பி தேம்பி அழுதாயே! ஏனம்மா?

உன்னை விட தெம்பான நான் நீ கண்ட வலியைக் காண மாட்டேனா? ஆனால் உன் தாயன்பு.. என் வலி பொறுக்காமல் புலம்பியதே!

உன் விடாத முதுகு வலியிலும் என்னைத் தூக்கிப் பணிவிடை செய்தாயே நான் கால் பிரச்சனையில் சுருண்ட போது!

இன்றும் கூட உன் முதுகு வலியையும் பாராது என் மகனையும் சுமக்கிறாயே! சுமந்து நடந்து சோறூட்டுகிறாயே! நீ வாழ்க!

உன் பேரனுடன் கொஞ்சுகையில் என் குழந்தையாய் நீ!

உன்னுடன் சண்டையிடுகையில் உன் தோழியாய் நான்!

அம்மா நான் உன்னை எவ்வளவு திட்டியிருப்பேன்? அது உன் மீதுள்ள அதீத உரிமையினால்... ஆழ்ந்த அன்பினால்!ஆனால் சத்தியமாய் சொல்கிறேன்... உன்னை யாரும் ஒரு வார்த்தை பேசினாலும் எனக்கு பொறுக்காது!

எனக்கு எத்துணை கதைகள் சொல்லியிருக்கிறாய்! அந்த அளவுக்கதைகளை எந்தத் தாயும் இதுவரை கூறியிருக்கமாட்டாள்!

நீ பாடும் குழந்தை பாடல்கள் யாவும் இன்னும் என் காதில் ஒலிக்கிறது!

"கை வீசம்மா கை வீசு" எனக்கு பலூன் சட்டை போட்டுவிட்டு பாடினாய்!

உனக்கான கனவுகளை எங்களோடு இணைத்துவிட்டு... எங்கள் வாழ்வில் உன் கனவினைக் காண்கிறாய்!

நீ தாயாகிய தெய்வம்... உடல் நிலை தளர்ந்த நீ விரைவில் ஊட்டம் பெற இறைவனை வேண்டுகிறேன்!

இந்த அன்னையர் தினத்திற்கு உன்னை வாழ்த்த வயதில்லை ஆதலின் வணங்குகிறேன்!

உனக்காக வேண்டுதல்களுடன் எப்போதும் நான்!

உனக்காக மட்டுமன்றி உலகில் அன்னையாய் பிறந்த அனைவருக்காகவுமே வேண்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! தாய்மைக்குத் தலை வணங்குகிறேன்!

Friday, May 8, 2009

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாபோல் வருமா?

உலகில் எத்தனை உறவுகள் கிடைத்தாலும் நிச்சயமாக ஒரு அம்மாவிற்கு ஈடு கொடுக்க என்னைப் பொறுத்தவரை யாராலும் முடியாது.நம்மை பெற்றது முதல் வளர்த்ததுவரை அவர் பட்ட துயர்கள் நாமறியோம்!இது எனக்கு நன்றாகவே பொருந்தும்!!
என் அம்மாவின் அருமையை முதன் முதலில் கொஞ்சமாய் அறிந்தது நான் விடுதியில் தங்கி இருந்த சமயம்.என்னால் அப்போதெல்லாம் என் அம்மா இல்லாமல் இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.ஆனாலும் சில நாட்கள் அம்மாவைப் பிரிந்தே கழிந்தது.அதுவே என் முதல் அனுபவம்.

என் அம்மாவின் அருமையை நான் இரண்டாவதாக அறிந்தது என் கர்ப்ப காலத்தில்.
எப்படித்தான் என்னையும் சுமந்து கொண்டு என் அண்ணனையும் வளர்த்துக் கொண்டு வீட்டிலும் வேலை செய்கிறாரோ என்று...அப்போதெல்லாம் வீட்டு வேலையை சாதரணமாக சொல்லிவிட முடியாது.அடுப்பு,உரல்,அம்மி......etc.நான்

மூன்றாவதாக என் அம்மாவின் அருமையைகண்டது என் பிரசவத்தின் பின்னர்.எனது பிரசவ வலியின் போது கூட என் அம்மாவிடம் நான் கேட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது....அம்மா நீயும் இப்படிதான் கஷ்டப் பட்டாயா என்று...
என் அம்மாவிடம் எனக்குக் கிடைத்த பதில் புன்னகை மட்டுமே!
என் பிரசவத்தின் பின்னர் நான் முதன் முதலில் பார்க்க நினைத்தது என் அம்மாவைதான்.அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு நான் விட்ட கண்ணீர் முதலில் என் அம்மாவின் அன்பிற்காக.அதை என்ன வார்த்தை கொண்டு எழுதுவதென்று எனக்கு தெரிய வில்லை!

இன்னும் எத்தனைதான் இருக்கிறதோ அம்மாவின் அருமையை அறிந்து கொள்ள?
அன்பென்றாலே அம்மா!
அருமை என்றாலும் அம்மாதான்!!

Thursday, May 7, 2009

Mother's Day - By Mrs.Golda David

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக Mrs.Golda David அக்கா இந்தப் பதிவை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். மேத்யூ, அபிகேய்ல் என்று இரண்டு சுட்டிகள். அம்மா, மனைவி,சகோதரி, வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை என்று பல முகங்கள்! தன் குடும்பத்தோடு யூஎஸ்-ல் வசிக்கிறார். கோல்டா அக்கா, கல்லூரியில் எனக்கு சீனியர். அன்னையர் தின வாழ்த்துகள், அக்கா! அவரது பகிர்வு இதோ:

Last evening, I was checking Matthew’s home work and the topic he had learned in science was metamorphosis and he had illustrated some examples on a paper. Wow! Metamorphosis for Science! Great, not sure if we learned it in first grade. This morning while arranging his school bag I asked him “What is Metamorphosis? Give me an example”. He said Metamorphosis is a process of change, like and egg changes to a chick and a chick to a big chicken and a big chicken to a duck…. I was puzzled. He said “mommy for real” with his eyes wide open and in his innocence. We laughed and went off our way to start the day.

Our conversation was in my mind driving to work. I googled to learn more facts to have a good dinner table conversation and found this one about metamorphosis. How Metamorphic Rock Is Formed Metamorphic rocks are rocks that have "morphed" into another kind of rock. These rocks were once igneous or sedimentary rocks. How do sedimentary and igneous rocks change? The rocks are under tons and tons of pressure, which fosters heat, builds up, and this causes them to change. If you exam metamorphic rock samples closely, you'll discover how flattened some of the grains in the rock are.

Wow, very true. This Sunday is mother’s day. How many of us being girls thought that we would be morphed to a mom much different from our girl like nature. Well we even worried how to handle this. Well even our families are surprised when we brag about our kids and our mommy acheivements Isn’t it surprising to visualize our strength and power being a mom? Thanks be to God to have pooled us with the right person to make exceptional off springs who make excellent mommies.

As a kid I always went to bed early woke up early and did my own thing got ready didn’t had to worry if my sister or brother got ready, didn’t wait to ask them if they were ok or help them out, never waited for any one at the table. It was my way all the time and me first when it was to take turns. Selfish it sounds right. Sharing was beyond impossible. Most of you would have a same story.

What made me to preach sharing and taking turns and not be selfish and more forgiving? What made me to move many steps up to justify the mischievous actions of my kids as innocent? How many times have I bailed them out? How many times have I cleaned the mess and still willing to do it for my kids? How many sleepless nights have gone by with a smile? Oh wow! Patience does it sound like. Is it because I am a mom?

My friend came by one day and wanted to leave her kids with me for a while to catch up some sleep. Boy oh boy! Did I say I can watch while she slept peacefully? I did share her burden because I have been through that road once and know how tough it could be. I never did that once to my siblings. Why does being a mom makes u to step on others shoes quickly. I wasn’t when my sister got a big share of the chocolate. But what is wrong with me. I can give up even my whole share now. Kind hearted am I now. Is it the effect of being a mom.

Why do I cry when kids cry? Why do I run to catch a falling kid in the play ground? Why have my preferences changed. Something abnormal has happened to me during the 9 months of pregnancy. Well the baby juices have nourished me and flattened my rough edges by constantly pressuring me for the whole 9 months. Let us get back to my example. The rocks are under tons and tons of pressure, which fosters heat, builds up, and this causes them to change. If you exam metamorphic rock samples closely, you'll discover how flattened some of the grains in the rock are. During my pregnancy I had been totally changed to what I am now a metamorphic Girl = MOTHER. I had a tough labor almost 26 hrs but I was happy when daddy got to hold her first, then grandparents and all the others waiting to see her. Finally when she cried for food that’s when I got my turn to hold you and fill your tummy and coo you to sleep. They never experienced the joy until they saw you but I was there the whole time loving you by faith and disciplining myself by avoiding certain food which were my favorite choice and those bitter poison like medicine was downed into my throat for your sake. Hey you came into me and changed me inside out. How true it is! Wow miracle isn’t it for many of us.

Mothers are their children’s role model. Most children learn from their mother because Mother spends more time in the nest than fathers. Then you hear this “I am not your friend” “you are not a good mom” and such nonsense (our interpretation) but if it had happened with my siblings it would have been different. We let go off our sadness and still work with these little monsters that slowly wear us off but we still have cherish them. Ridiculous it may sound yet self less.

It is hard work to put things together in the right place having toddlers around but we arrange it for them and after a while let them do it under our supervision. Was it hard? Yes. Was it fruitful? Absolutely. Hey now my son can arrange his room makes his bed and he puts his dirty clothes inside the hamper. Wow!!. Well one day after an while in kitchen came to see the white chair cushion transformed to pink. Color only on paper not on walls and furniture. The marker went on a time out and you too for misusing it. Did they learn the actions and consequences. Every time out was a learning experience for becoming a better person. Did I inspire them to try and never give up. Did I remind practice makes perfect always to ensure nothing is impossible. Every single incident was a huge learning experience for all. Did it make me an intelligent and inspiring mom? It sure did.

So, Mothers day is a day of recognition by every human being for who they are it may have been rough and barren and lot less comfortable for many. Your beginning was the end of a girl who underwent metamorphosis. It would have not been taken well by many, some would not have guided. Motherhood is perfect gift if it was not passed on to you. please, make sure you pass on to your generations. This world will be a better place for you and for me and for our generations to come.

Wednesday, May 6, 2009

அன்னையர் தின வரலாறு

உலகமெங்கும் அன்னையர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்னையர் தின வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கூகுளில் தேடியதில் எனக்குக் கிடைத்தத் தகவல்கள் அனைவருக்காகவும்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் கடவுளின் அன்னையான ர்கியாவை அன்னையர் தினதில் போற்றினர். பின்னர் கிறிஸ்தவர்கள் அன்னை மரியின் பெருமையைப் போற்ற ஈஸ்தர் ஞாயிறுக்கு முன்னால் இருக்கும் மூன்றாம் ஞாயிற்றை அன்னையர் தினமாகக் கொண்டாடினர். பின்பு அது எல்லா அன்னைகளுக்குமாக மாறி மதரிங் சண்டே(Mothering Sunday) என்று அழைக்கப்பட்டது. பின்பு அமெரிக்காவில் குடிப்பெயர்ந்த ஆங்கிலேயர்களால் மதரிங் சண்டே கை விடப்பட்டது.

நாம் இப்பொழுது கொண்டாடும் அன்னையர் தினம் 1907யில் ஆனா ஜர்விஸ் (Anna M Jarvis) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தன் அன்னையை கெளரவிக்க தேசிய அன்னையர் தினம் கொண்டாடினார். முதல் அன்னையர் தினத்தில் அவர் தன் தாயின் விருப்பமான மலர்களை அனைவருக்கும் வழங்கினார். அது தூய்மைக்கும், பொருமைக்கும், இனிமைக்கும் குறியாகும். அன்னத்து அன்னையர்களையும் கெளரவிக்கும் பொருட்டு, 1914லாம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வில்ஷனால் மே மாத இரண்டாவது ஞாயிறு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அன்னையர்கள் தினம் பிரபலம் அடைந்தது அடுத்து, பரிசு கொடுப்பது அதிகரிக்கப்பட்டது. அன்னையர் தினத்தின் தூய்மை இந்த வியாபாரமயமாக்கலால் கெட்டுவிட்டது என ஜர்விஸ் வருந்தினார். ஆயினும் அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டு இன்று உலகமெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

நாம் எல்லா அன்னைகளுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம். பரிசு வழங்க விருப்பப்பட்டால், அன்னைக்குப் பிடித்தப் பொருளை நம் கையால் செய்து கொடுப்போம். இது ஜர்விஸின் வருத்தை சற்றுக் குறைக்கலாம்.

அன்னையர் தின வாழ்த்துகள்.

நன்றி :
http://en.wikipedia.org/wiki/Mother's_Day
http://www.dayformothers.com/mothers-day-history/

அன்னையர் தின வாழ்த்துகளுடன்...

சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்த நாட்கள் அவை. வாரயிறுதியில் ஆம்பூருக்கு பயணம். ஏலகிரி எக்ஸ்பிரஸ் - பெயர்தான் எக்ஸ்பிரஸே தவிர பாஸ்ஞ்சர் போலத்தான். ஆனால் அது ஒரு மினி ரங்கநாதன் தெரு மாதிரிதான். வளையல் வியாபாரத்திலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை எல்லாமே தங்கள் இடம் தேடி வரும். காட்பாடி தாண்டினால் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும். குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ஊர்க்காரர்கள் மட்டுமே!இரண்டு வரிசைகள் தாண்டி ஓரிரு தலைகள் தென்பட்டன. வீட்டுக்கு செல்ல இன்னும் அரைமணிநேரம்தான் என்றெண்ணியபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலின் சீரான வேகம். தாண்டிச் செல்லும் காற்று. வீட்டில் பெரிம்மா எனக்காக சப்பாத்தியும், உருளைக்கிழங்கு மசாலும், சிக்கன் ஃபிரையும் செய்துவைத்து விட்டு காத்திருப்பதாக மெஸேஜ். ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஏதாவதொன்று புதிதாக வீட்டில் இருக்கும்..எனக்கு அறிமுகப்படுத்த புது புத்தகம், பகிர்ந்துக் கொள்ள சுவையான நிகழ்வுகள் என்று என்னை அசத்துவதில் பெரிம்மாவுக்கு நிகர் பெரிம்மாதான்!! இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள்.

“அக்கா, நல்லாருக்கீங்களா?” - அவள்தான்!

பரிச்சயப்பட்ட முகமாக, ஆனால் யாரென்றுத் தெரியவில்லை.

“நல்லாருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க” - பேச்சுவாக்கில் தெரிந்துவிடும் என்றெண்ணியபடியே!

“நல்லாருக்கேன் அக்கா, மேடம், தம்பில்லாம் எப்படி இருக்காங்க?”

”நல்லாருக்காங்க, மெட்ராஸ்லேர்ந்தா வர்றீங்க” - யாருன்னு கேட்டுடலாமா இல்லை இன்னும் பேசினால் தெரிந்துவிடுமா என்ற தயக்கத்தில்!

”ஆமாக்கா, நான் நர்ஸிங் முடிச்சுட்டு மெட்ராஸ்லதான் வேலை செய்றேன்” - அந்த பெண்.

ஓ..கண்டுபிடித்துவிட்டேன்..பெயர் தெரியாவிட்டாலும்!

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இரு வரிசைகளில் ஒழுங்கு கலையாமல் உயரகிரமமாக சீருடை அணிந்துச் செல்லும் சிறுமிகள்! முன்னும் பின்னும் அவர்களைக் கவனிக்க இரு பெரியவர்கள்! எங்கள் ஊரில் இருந்த ஹோம் அது. பெற்றோர் இல்லாமல் உறவினர் உதவியுடனோ அல்லது பெற்றோரில் ஒருவர் உதவியுடனோ ஹோமில் சேர்க்கப் பட்டவர்கள்! சுருக்கமாகச் சொன்னால் வீட்டிலேயே வைத்து பராமரிக்க இயலாமல் ஹோமிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். எங்கள் ஊரில் மூன்று பெரிய பள்ளிகள். மேனேஜ்மெண்ட் பள்ளிகள். அதில் கிறிஸ்துவ பள்ளியைச் சார்ந்த ஹோம் அது!

நான் பள்ளிக்கு செல்லும் நேரமும் அவர்கள் செல்லும் நேரமும் இண்டர்செக்ட் ஆகும். பார்த்துக் கொண்டே கடந்துச் செல்வேன். ஒரு நாள் பெரிம்மாவிடம் கேட்டேன்,

“ஏன் அவங்கள்லாம் லைனா போறாங்க, வீட்டிலேர்ந்தே அப்படி வருவாங்களா?”

பெரிம்மா சொன்னார்கள், "ஆமா ஆச்சி, அவங்கள்லாம் ஒண்ணா ஒரே வீட்டிலே இருப்பாங்க, ஒண்ணா கிளம்புவாங்க"!

அதன்பின் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. (இப்போது பெரிம்மாவுக்கு இந்நிகழ்வு நினைவில் இல்லாமலிருக்கலாம்.) ஆனால் எனக்குள் சந்தேகம் மட்டும்..எப்படி அத்தனை பேரும் ஒரே வீட்டில் இருப்பார்கள்...எப்படி குளிப்பார்கள்..சரியான நேரத்திற்கு பள்ளி செல்கிறார்கள்!



எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை தினத்தில் நாங்கள் அங்கே சென்று இறங்கினோம், ஆயா, நான், குட்டி,பெரிம்மா மற்றும் சாந்தா அத்தை. ஐந்து பெரிய தனித்தனி வீடுகள். ஒரு சமையலறை. பல பெரிய அக்காக்கள் காய் வெட்டிக் கொண்டிருந்தனர். இரு சமையற்கார அத்தைகள். ஒரு வார்டன். எல்லா சிறுமிகளும் அவரவர் நண்பர் குழுக்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சேப்பல். மரங்களுடனும் ஒரு குட்டி மைதானத்துடனும் அமைந்த ஒரு சின்னஞ்சிறு உலகம். நான் இதுவரை பார்த்திராத உலகம். பதின்மூன்று வருடங்களாக அதே ஊரிலிருந்தும் நான் அறிந்திராத உலகம். ஆதரவற்றவர்கள் என்று கதைகளில் படித்திருந்தாலும் கற்பனை செய்திருந்தாலும்!! ஒரே அறையில் பத்துச் சிறுமிகள்,ஆளுக்கொரு ட்ரங்குப் பெட்டி, ஒருவருக்கொருவர் ஆதரவாய்!

பெரியவர்கள் எல்லோரும் அலுவலக அறைக்களுக்குள் சென்றுவிட நானும் தம்பியும் மட்டும் மைதானத்தில். கூச்சலும் கொண்டாட்டமுமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மெதுவாக எங்களை சூழ்ந்துக் கொள்ளத்துவங்கினர். எங்களுக்கிடையே இருந்த பனிச்சுவர் உடைக்கப் பட்டது. ஒன்றாக விளையாட்டில் ஐக்கியமானோம்! பின் நான் பனிரெண்டாம் வகுப்பு செல்லும் வரையில் அவ்வவ்போது விடுமுறைகளில் ஒரு நாள் ஹோமுக்குச் செல்வது, அவர்களுடன் பொழுதைக் செலவிடுவது என்பது பழக்கமானது. என் பள்ளித் தோழிகளையும் அந்த ஹோம் விடுமுறைதினத்தில் சந்தித்திருக்கிறது. அந்த ஹோம் எனக்கு பல தோழிகளை கொடுத்தது. இனிமையான தருணங்களை தந்தது. அந்தத் தோழிகளில் ஒருவரைத்தான் நான் ரயிலில் சந்தித்தது. அவர்பெயர் தபித்தா, பத்தாம்வகுப்பிற்குப் பின் நர்சிங் டிப்ளமா முடித்து சென்னையில் வேலை செய்கிறார். ஆம்பூரை அடுத்த ஒரு கிராமம் அவரின் அத்தை வீடு. நெடுநாள் கழித்து தோழியைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்கு!

பிறந்தநாளுக்கு பப்புவை அருகிலிருந்த ஹோமுக்கு அழைத்துச் சென்று, அரைநாள் அங்கு செலவழித்ததிலிருந்து, பப்பு அவ்வப்போது “ஹோமுக்கு போகலாம்,ஆச்சி, ஹோமுக்கு போகலாமா” என்கிறாள். யோசித்துப் பார்க்கிறேன், ஒருவேளை பெரிம்மா எங்களை அழைத்துப் போகாமலிருந்தாலோ அல்லது நாங்கள் பார்க்காமல் அவர்களாகவோ உதவியைச் செய்திருந்தாலோ, எனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. பரிதாபப்படுவதோடோ அல்லது இயன்றபோது ஒரு தொகையைக் கொடுத்துவிட்டோ குற்றவுணர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பேன்.

ஆனால், நாமும் அவர்களோடு நேரம் செலவழிக்கவேண்டுமென்ற எண்ணத்தைத் தானாக என்னுள் எழ வைத்தது பெரிம்மாதான். எததனையோ விஷயங்களில், நான் பெரிம்மாவைப் போல் இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் பப்புவும், என் பெரிம்மாவைப் போல இருக்க வேண்டுமென நினைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று! ( This is one of those values which I would like to pass it on to pappu! )


வாழ்க்கையின் values, ஒரே நாளில் நன்னெறிக்கதைகள் மூலமாக கற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி!

Happy Mother's day, Perimma & Amma and this post is for you!!

Tuesday, May 5, 2009

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.

பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.

அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்:)

தாய்மையைக் கொண்டாடுவோம்

தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. கடவுள் ஒவ்வொருவருடனும் இருக்க இயலாது என்று தாயைப் படைத்தான் என்பார்கள். அத்தகைய தாயைக் குடும்பத்தினர் போற்ற , மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக சில நாடுகளில் கொண்டாடப் படுகிறது.



தாய்மை பெண்ணின் குணங்களை மேம்படுத்துகிறது. அவளது உலகையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது. ஒரு சின்ன எ.கா இந்த சிறுகதை

[அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்.

"அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.இரண்டு வருடங்களுக்குப் பின்... யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான். இரண்டு வருடங்களுக்குப் பின்... சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.]



தாய்மை என்பது அன்பு, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களின் வெளிப்பாடு. ஈரைந்து மாதம் சுமந்து, அமுதூட்டி அன்புடனும் பொறுமையுடனும் போற்றி வளர்க்கும் தாய்மார்கள் அனைவருமே போற்றப்படவேண்டியவரே. இந்த தாய்மையுள்ளும் சிறப்பு கவனம் செலுத்தி தாய்மையின் பல பரிமாணங்களில் மிளிரும் தாய்மாருக்கு தனிச்சிறப்பாக வாழ்த்து கூற விரும்புகிறேன்.


- உடற்கூறால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பும் ஊக்கமும் அளித்து உயர்த்தும் அன்புள்ளம் கொண்ட தாய்மார்கள்

- மனதால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பால் அவர்களது திறமையை வெளிக்கொணரும் பொறுமையான தாய்மார்கள்

- பெற்றால் தான் பிள்ளையா என்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தாயன்பு ஊட்டும் கருணை மிக்க தாய்மார்கள்

- சமூகத்தில் பல எதிர்ப்புகளுக்கும் நடுவில் எந்த துணையுன்றி குழந்தைகளின் நலனுக்காகப் போராடி உயர்த்தும் சகிப்புத்தன்மை மிக்க தாய்மார்கள்


இப்படி தாய்மையின் பரிமாணங்கள் பல பல...அன்னையரை அன்னையர் தினத்தில் போற்றுவோம், என்றென்றும் கொண்டாடுவோம்.

அன்னையர் தினத்துக்காக - "முத்துச்சரம்" ராமலஷ்மி!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”முத்துச்சரம்” ராமலஷ்மி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி ராமலஷ்மி! ”மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்! என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு இதோ :-

தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.

அன்பின் வடிவாய்... தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.

புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குடியும் இவ்வாறாகத் தாய்மைக்குக் கட்டுப்பட்டு நின்றபதாலேயே அவை உயர்வதோடு, கோலும் உயர்ந்து கோனும் உயர்கிறான்.

தத்தமது குடிகளை இப்படியாக உயர்த்துகிற தாய்மாருக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக் காட்டாக இருந்து, சாதி மத இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடவும் காரணமாயிருந்தார்கள். அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. ஆக,

அகிலத்தின் அமைதிக்கே அடிநாதமாய்
அன்பின் பிறப்பிடமாய் உறைவிடமாய்
தன்னலமற்றதாய் தன்னிகரற்றதாய்
திகழும் தாய்மையை வாழ்த்துவோம்
போற்றுவோம் மதிப்போம்
தலைவணங்கித் துதிப்போம்.

*** *** **

Monday, May 4, 2009

அன்னையர் தினத்துக்காக - “நாச்சியார்” வல்லிசிம்ஹன்!



அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”நாச்சியார்” வல்லிசிம்ஹன் தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி வல்லிசிம்ஹன்! ”அன்னையருக்கு அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள்” என்று தலைப்பிடப்பட்ட அவரது கவிதை இதோ :-

அன்னை என்பவள்

அமுதம்
,

அமைதி
,

அறிவு

அடக்கம்

அன்பு
.

இத்தனையும் ஒன்றாகக் குழைத்துச் சந்தனத்தில் கரைத்துத்

தேனில்

வடிவமைத்து
,

நிமிர்ந்து நிற்க வீரம் என்னும் முதுகெலும்பையும் கொடுத்து

இறைவன் எமக்காக அனுப்பினான்
.

அந்த இறையையும் காப்பவள் அவளே
.

ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்

அம்மா

(தாய்மையைப் பற்றி பகிர்வதற்கு நல்லதொரு யோசனையை முன் வைத்த சந்தனமுல்லைக்கு நன்றிகள்.)

ஒரு மழை நாளின் பொழுது எழுதி ஏற்கனவே பதிவிட்ட, என் அம்மாவிற்கு சமர்ப்பித்த ஒரு கவிதை இதோ மீண்டும் இங்கே.

மழையாய் நீ, மண்ணாய் நான்





வா என்று
சொல்லும் போது
வருவதில்லை

போகிறேன்
என்று சொல்லும்போது
ஓடி வருகிறாய்

சின்னத்தூறல் போல
உன் சிணுங்கல்கள்

ஓங்கி பெய்யும்
மழை போல
உன் அழுகை

விடாமல்
கெட்டியாய்
பிடித்திருக்கும்
உன் அடத்தைப் போல
இன்னும்
இந்த மழை
நிற்காமல்...

இடியோடு பெய்யும்
மழைக்கு
இதமான தேநீர்
போல
இருக்கும்
இனிக்கும்
உனது முத்தங்கள்

உனக்கு கொறிக்க
கொடுத்தால்
ந்தா இந்ந்தா வென
எனக்கே
ஊட்டி விடுகிறாய்

என்ன சொல்ல
மழையே
மன்னிக்கவும்
மகளே

புயலாய் நீ வீசினாலும்
புன்னகைச்சாறலாய் இருந்தாலும்
இந்த இளமையிலும்
இனி வரும் முதுமையிலும்

என்றும்
உன் அன்பில்
சொட்ட சொட்ட
நனையவே
காத்திருக்கிறேன்.

என்றும்
மழை போல் நீ
பொழியவேண்டும்
அதை
நான்
மண்ணாய்
நின்று
தாங்கவேண்டும்

வாய்ப்பு கொடு
மகளே
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க..........



(டிஸ்கி: மழைநாள் விடுமுறையின் போது நான் என் பெண்ணோடு இருந்த நேரம் பார்த்து என் அம்மா என்னோடு போனில் பேசினார்கள், மழை ஜாஸ்தியா இருக்கும் நேரம், ஆபிஸிக்கெல்லாம் போகாத என்றார்கள்.

ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு, இந்தக் கவிதை சமர்ப்பணம்)

Sunday, May 3, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 3



நான் என் தாய்மையை உச்சக்கட்ட உணர்வாக உணர்ந்த அந்த நிமிடங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்! இது தாயாகப் போகிற தாய்மார்களுக்கு பயனளிக்கும் தைரியம் அளிக்கும் என்று நம்புகிறேன். மொக்கையாக இருந்தாலும்... மன்னித்து என் தாய்மைக்கு, என் குழந்தைக்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் அளியுங்கள்! :) அன்னையர் தின ஸ்பெஷல் என்பதால் பொழிலன் பிறந்த தருணத்தை மட்டும் இங்கே எழுதியுள்ளேன். மற்றவை என் வலைப்பூவில் :) இங்கே தொடுப்பு கொடுத்துள்ளேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்( ஆபரேஷன் தியேட்டரில்) - 2


என் குழந்தை இந்த உலகத்தைக் காணும் பொன்னேரத்திற்காக நான் கடவுளை வேண்டத் துவங்கினேன். "கடவுளே அது பிறக்கும் இந்த நேரம் நல்ல நேரமாக, என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்... எந்த குறையும் இன்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறந்து இறுதி வரை அப்படியே ஆரோக்கியத்துடன் இருக்க அருள் பண்ணிடேன்!" இப்படியெல்லாம் என்னன்னவோ தத்துபித்துனு சாமிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

ஆஹா! வயிற்று மேலே சில கைகள்! இங்க தான் சிஸ்டர்... நல்லா பிடிச்சிக்கோங்க... அப்படி இப்படினு ஏதோ பேசிக்கிட்டாங்க... நான் தலையை அப்படி இப்படி அசைத்து கண் துணி ஓரளவு விலகி எனக்கு தெரியும் படி செய்தேன். :) என் வயிறு தான் தெரிந்தது. அப்புறம் ஒரு கோடுதாங்க போட்டாங்க வயித்துல.... குபுக் குபுக்னு தண்ணீர் கொட்டுச்சு! அடக் கடவுளே இவ்வளவு தண்ணீர் இருக்கேனு நினைச்சேன்... பின்ன ஏன் தண்ணீ இல்லனு சொன்னாங்கனு யோசிக்கும் போதே... டாக்டர் ஃபுல் கட்டிங் முடிச்சாச்சு போல... :) நல்லா இழுங்க.. பார்த்து ஜாக்கிரதைனு சொல்ல இரு கைகள் என் மேல் வயிற்றை மார்பு நோக்கி இழுத்தது பார்க்க முடிந்தது.. சரியா உணர முடியல...

ஆஹா! ஆஹா1 ஆஹா! என்ன சொல்ல எப்படி சொல்ல... அந்த ச்ங்கீதம்... வாழ்க்கையில மறக்க முடியாத இனிமையான சங்கீதம்.... "ங்கா ங்கா ங்கா"னு என் தங்கம், செல்லம், குட்டிமா சத்ததோட வந்துச்சு! :) :) :)

இதை எழுதும் போதே கண்ணுல கண்ணீர் கன்னத்துல ஓடுதுங்க! அவ்வளவு சந்தோஷம்... :) ஆனந்த கண்ணீர் இப்போ. அப்பனா அப்போ எப்படி இருந்திருக்கும் எனக்கு... என் உலகமே என் கைக்கு வரப் போகுது!

ஆனால் அந்த இரு கைகள் என் வயிற்றை இழுத்துபிடித்த படியே இருந்ததால அப்போ குட்டிமாவ பார்க்க முடியல.:(

நான் இந்த உலகத்துக்கு வந்த காரணம் புரிஞ்சாச்சு! என் பிறப்பின் அர்த்தம்... எங்கள் காதலின் கல்யாண பரிசு... குட்டியான அழகான பூ... இப்படி என்னனமோ நினைச்சு எப்படா பார்ப்போம்னு இருக்கையில, குழந்தையை சுத்தம் பண்ணி திரும்ப கொண்டு வந்தாங்க... அப்போ குழந்தை அழுகை இல்ல... எனக்கு என் வயிற்றில் தையல் போடுவது தெரிந்தது! பிறகு சில நிமிடங்கள் கண் அயர்ந்தது போல இருந்தேன்... அதற்குள் ஐயோ குழந்தையை நான் தான் முதலில் பார்க்கனும்னு கண் திறந்தா என் வயிற்றை துடைச்சிக்கிட்டு இருந்தாங்க... எல்லாம் முடிந்தாச்சு போல :)

கண் கட்டை கழட்டினாங்க... இப்போ எல்லா பக்கமும் பார்க்க முடிந்தது... நான் என் குழந்தையை தேடினேன்... :( காணோம்... பிறகு அந்த மயக்க மருந்து டாக்டர் வந்து இவங்க கிட்ட குழந்தைய காட்டலாம இல்லனா இவங்கள தூங்க வைக்கலாமானு என் டாக்டர் கிட்ட கேட்டாரு :( அடப்பாவி என்ன குழந்தைனும் சொல்லாம, கண்ணுலயும் காட்டாம... என்னயா கேள்வி இதுனு நினைச்சுக்கிட்டு " குழந்தை எங்கே?" கேட்டேவிட்டேன். :) அங்க தான் ஒரு குட்டி அறைல இருந்தது பாப்பா...

தூக்கிட்டு வந்தாங்க.... உங்களுக்கு பையன் அப்படினு சொன்னாரு.. ஆஹா! ஆஹா! எனக்கு குழந்தையா? இதுவா என் வயிற்றுல இவ்வளவு நாள இருந்தது? thank god... எப்படி அழகு... மொத்த அழகும் இங்க இல்ல இருக்கு... கடவுளே நேரில் வந்துட்டாரோ? ஆனால் இது ரோஜாப் பூ மாதிரியே இருக்கே... அதே இளஞ்சிவப்பு ரோஜா நிறம்... கண்ணை இருக்க மூடி கைகள மூடி... அழகா! எவ்வளவு அழகு? எப்படி தூங்குது... எனக்கு பேச்சே வரல... அவ்வளவு சந்தோஷம்... கண்களில் கண்ணீர் பொங்கி வழியுது அப்ப... கண்ணாலயேவும் கை ஆட்டியும் கிட்ட வர சொல்லி சைகை காண்பிச்சேன் :)

என் பக்கத்துல வந்து குழந்தையைக் காண்பிச்சாங்க...:) தொட்டேன் மெதுவா... ஆஹா! எவ்வளவு மிருதுவா... என்னால முடியல... "thank god" னு மட்டும் வாயிலிருந்து தானா வந்தது. அப்புறம் ரோஜாப்பூ மாதிரியே இருக்குலனு சொன்னேன். அந்த டாக்டர் சிரித்தார். :) அப்புறம் டாக்டர் என்னிடம் உங்க வீட்டுல எல்லார்கிட்டயும் காட்டனும் அதுனால குழந்தையை தூக்கிட்டுபோறோம்னு சொல்லிட்டு கொண்டு போயிட்டாரு!

அப்பாடா ஒரு வழியா குட்டிமா வந்தாச்சு! ஆனால் அவனைப் பார்க்கும் போது என் அப்பா, அம்மா, கணவர், மாமா, அத்தை இவங்க முகம் விரிந்து சிரிக்கும் அந்த காட்சியை பார்க்கமுடியல!

எனக்கு என் கணவரை உடனே பார்க்கனும் போல இருந்தது. ஆனால் அதற்குள் அந்த தியேட்டர் குரூப் எந்த அறிவிப்பும் இல்லாம என்ன தனி அறைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அதற்குள் ஆண்கள் அனுமதி இல்லயாம். :( அம்மா, சித்தி, அத்தை எல்லாம் வந்து பார்த்தாங்க.

குட்டிமா உள்ள மஞ்சள் லைட் கீழே விளையாடிட்டு இருந்ததது! இளம் வயது சிஸ்டர்கள் பார்த்து " எவ்வளவு அழகு! சேட்டை! உன்னை நானே கட்டிக்கிறேன்... " அப்படி இப்படினு அப்பவே ஒரே போட்டி! பெண்கள் பட்டாளம் புடை சூழ என் தங்கம் தங்க நிற வெளிச்சத்துக்குக் கீழே ஜொலிச்சது! :)

கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தேன்... இன்னமும் சொல்லிக்கிட்டே இருக்கேன்! :)
இப்படி ஒரு சந்தோஷம் என் வாழ்க்கையில வேறு எந்த சந்தோஷத்துலயும் அனுபவித்ததே இல்லை... :)

தாய்மையை உணர்ந்தேன்! அனுபவித்தேன்! மெதுவா என் கை தூக்கி குழந்தையை லேசா தொட்டேன். குழந்தைக்கு பால் கொடுக்க என் அத்தை உதவினார். அம்மா! அப்போ பொங்கின தாய்மை உணர்ச்சிய எப்படி சொல்ல... வார்த்தையே கிடையாதுங்க! எனக்கு ஒரே ஆச்சரியம்... " இப்போதானே கண்ணு வந்த... அதுக்குள்ள உனக்கு சாமி பால் குடிக்க கத்துக்கொடுத்தாட்டாரானு " கேட்டேன்... :) குழந்தையோட ஸ்பரிசம், கூடான அதோட கை... அப்பப்பா என்ன ஒரு சந்தோஷம்... இப்ப நினைச்சாலும் என் குழந்தை பிறந்த அந்த தருணம் புல்லரிக்குது! கண்ணீர் பொங்குது! தாய்மை எப்படிப்பட்ட உணர்வு! புனிதமானது!

வாய்ப்பளித்த முல்லைக்கு நன்றி! :)

அன்னையர் தினத்துக்காக - ”சிறுமுயற்சி” முத்துலெட்சுமியிடமிருந்து!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறுமுயற்சி” முத்துலெட்சுமி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி முத்துலெட்சுமி! ”வழி வழியாய்” என்று தலைப்பிடப்பட்ட அவரது பதிவு இதோ :-


ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.
ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.



வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெ ற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள். முன்னோர்களின் விஷய ஞானம் படித்து அறிந்து கொள்வது விட செவி வழி அதுவும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.



பெற்றவள் அறிவு பூர்வமாக சொல்லித்தருகையில் பாட்டி
கதைகள் சொல்லி பேரக்குழந்தைகளை ஒரு கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்... குழந்தைகள் புதிதாக கற்பனை வளத்தைப் பெறுகிறார்கள். மரம் வந்து பேசுமாம் ,கிளி வந்து பேசுமாம், ஏழு மலைகளும் ஏழு கடல்களுக்கும் அப்பால் இருக்கும் அபாயம் மிகுந்த பகுதிக்குக் கூடப் போய் வரும் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய் குழந்தைகளுக்கு தைரியம் வருகிறது.



இப்புனைவு கதைகளில் குணநலம் கூட கற்றுத் தரப்படுகிறது. கடும் பயணத்தில் கதாப்பாத்திரத்தால் முன்பு உதவி பெற்ற எறும்பும் , மீனும் வந்து உதவும்.
முன்பு கடுமையாய் நடந்து கொண்ட கதாப்பாத்திரத்துக்கோ ஆபத்துகளில் மீள இப்படி உதவி எதுவும் கிடைக்காது. நட்பும் உதவியும் ஆபத்தில் உதவும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இயற்கையை நேசிப்பதற்கு இயற்கையோடு ஒன்றிப் போவதற்கு கற்றுத்தந்தார்கள். வீட்டுத்தோட்டமும் பிறஉயிர் பேணுதலும் இயற்கையாய் பழகித் தந்தார்கள்.


உடல் நலத்திற்கு வழிவழியாய் வந்த அனுபவத்தில் இந்த உணவு இதற்கு நல்லது , இந்த கால நிலைக்கு உகந்தது இது என்று அறிந்து கடுக்காயிலிருந்து கஷாயம் வரை உபயோகிப்பது அறிந்திருப்பார்கள் பெண்கள்.



நான் நன்கறிந்த முதல் பெண் என் தாய்.
நான் என் தாய் வழி கற்றவை ஏராளம். சாந்தமும் நேர்மையும் அவர்களின் குணநலன். யாருக்கும் தீங்கு நினைத்தலும் நமக்கு கெடுதல் என்று சொல்வார்கள்.
ஆன்மீகமும் அறிவியலும் பொதுஅறிவும் விளையாட்டாய்
போதித்தார்கள்.



வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை.


மனிதன் மனிதத்தின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத்
துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேஎண்டுமென்று மன்மார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனும் மகரிஷியின் தத்துவங்களில் அவர்களுடைய ஈடுபாடும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்னை வியக்கவைக்கும். நேற்று பேச ஆரம்பித்திருக்கும் மழலையிடமிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் சமமாய் கொள்ளும் நட்பின் சாயல் தாய் வழியாய் எனக்கும் என்வழி மகளுக்கும்.


அன்பும் ,கருணையும், பெண்கள் கற்ற கல்வியும் அவளுக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும்.. அக்குடும்பத்து நபர்களால் சமூகத்திற்கும் வழிவழியாய் சென்றடையட்டும்.

Friday, May 1, 2009

அன்னையர் தினம் - அன்பென்றால் அம்மா

நல்லா பேசிட்டு இருப்போம்,திடீர்னு மூட்ஆகும், மனதை காயப்படுத்திய சம்பவங்கள் நினைவுக்கு வந்து மேலும் கிளரும். என்னை மூட் அவுட் பண்ணும் விஷயம் இரண்டு. முதல் விஷயம் என் அம்மா. என்னடாது அம்மாவ நினைத்தால் எப்படி கஷ்டமா இருக்கும்னு யோசிக்காதீங்க.

எல்லோருக்குமே அம்மா என்பது ஒரு அற்புதமான உறவு, அவர் கடைசி வரை நம்மோடு நல்லபடியா இருந்து நம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாரா இருக்கணும். இருப்பார், ஒரு அம்மாக்கு அதவிட பெரிய சந்தோசம் எதுவும் இருக்காது. ஆனால் அப்படி அம்மா எல்லோருக்கும் அமையாது, அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் .

என் அம்மா ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர், அவரோட அம்மா என் மாமா பிறந்த உடனே இறந்துட்டங்கலாம். சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டவர்கள். திருமணம் ஆகி திருப்பூர் வந்தபின் அவர் அப்பா, ( என் அப்பிச்சி) நெலம் எல்லாம் வித்து என் அம்மாவின் அருகிலே வந்து குடும்பத்துடன் செட்டில் ஆயிட்டார்.

என் கல்லூரி காலம் வரை ஒரு குடம் தண்ணீர் எடுக்க என் அம்மா என்னை விட்டதில்லை. இத்தனைக்கும் நாங்கள் நாலு பேர்( 2 தம்பி, ஒரு தங்கை), யாரையும் ஒரு வேலை செய்ய விடமாட்டார். நான் வேலைக்கு போகும் சமயம் கூட நான் வெளியில் இருந்து வண்டி ஸ்டார்ட் பண்ணி சத்தம் போட்டுடே இருப்பேன், லஞ்ச் பாக்சை தலைகீழ கவுத்து லேசா வெளியில் வந்த அப்படியே வெச்சுட்டு போய்டுவேன். ரொம்ப படுத்தி இருக்கேன். திடீர்னு ஒரு நாள் நான் ஊரில் இல்லாத சமயம் என் அம்மா தண்ணீர் தொட்டியில் கீழ விழுந்துட்டாங்க, மயக்கமும் வந்துடுச்சு, அந்த நேரம் யாரும் இல்லை, என் பாட்டி வந்து எடுத்து விட்டு ஹாஸ்பிடல் போனால் பக்கவாதம் என்று சொன்னார்கள்.

அன்று முதல் இன்னைக்கு வரை அவர்க்கு சரியாகவே இல்லை, கொஞ்சமா வீட்டுக்குள் நடப்பார், அவ்வளவு தான், இதுவரை பார்க்காத வைத்தியம் இல்லை, மருத்துவர்கள் சொல்வது, அவங்க fight பண்ணவே மாட்டேங்கறாங்க, மருந்தை விட மனசு சரியாகணும் , என் அம்மாக்கு முதல் முறை உடல் நிலை சரி இல்லாத போது என் வீட்டில் சில பிரச்னை இருந்தது. இப்ப அதெல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவர் இன்னும் குணமாக வில்லை. எதுவுமே நினைவு இல்லை, எப்பவும் என்னை பார்த்தால் அழுவாங்க.

எனக்கு குழந்தை பிறந்த சமயம் தினமும் நான் என் அம்மாவை நினைத்து அழுவேன். இன்னமும் என்னைக்கு அவரை நினைக்கிறேனோ அந்த நாள் முழுதும் அவர் நினைவாகவே இருக்கும்,

அவரிடம் நான் பலமுறை கேட்டு பதில் பெறாத கேள்வி, ஏம்மா இப்படி இருக்கே, உனக்கு என்ன வேணும் என்கிட்ட சொல், நான் கண்டிப்பா பண்றேன். மறுபடியும் என் ஸ்கூல் காலேஜ் கால அம்மா எனக்கு வேணும், இதுவரை உன் மடியில் தூங்கினதா எனக்கு நினைவே இல்லை, ஒரு தடவை யாவது தூங்கனும், எவ்வளவு வருஷம் ஆச்சு, உன் கையால் சாப்பிட்டு, எல்லோரும் சொல்லராங்க நான் உன்னை மாதிரியே இருக்கேன், உன்னை மாதிரியே சமையல் பண்றேன், அம்மா உனக்கு ஒரு கடமையும் மீதி இல்லை, உன் உடம்பு சரியில்லாமல் போன சமயம் இருந்த மாதிரி இல்லை நம் குடும்பம், எனக்கு, நம்ம குட்டி மகேஷுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நீதான் வரவே இல்லையே, நம்ம பழைய வீடு வித்துட்டாலும் புது வீடு கட்டி அதில்தான் நீ இருக்கே. உன் நிலையில் நான் இருந்து எல்லாமே முடிச்சுட்டேன். ப்ளீஸ் மா, ஒரு தடவை பழைய மாதிரி இரும்மா, உன்ன கட்டி பிடிச்சு அழக்கூட பயமா இருக்கு, உனக்கு எதாவது ஆயிடுமோன்னு, உன்னோட புடவையை என் கண் முன்னாடி வச்சுருக்கேன், எப்பவும் நீ என் கூட இரு. ஏன் என்னை பார்த்தல் அழுகறே? என்ன இருக்கு உன் மனசில், நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம், அம்மா நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன செஞ்சா நீ திரும்ப பழையபடி வருவே.

அம்மா உன்னை நான் என்னனு வாழ்த்தறது, நான் எதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடு. ப்ளீஸ்.

எவ்வளவு நாள் உன் போட்டோ , புடவையும் வைத்து உன் வாசம் பிடிப்பது, அம்மா ஒரு தரம் என்னை பார்த்து சிரி. ப்ளீஸ்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்


.

அம்மாக்கள் தினம் - அறிவிப்பு!


(image courtesy : Google)
அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கு,

மதர்ஸ் டே-வை முன்னிட்டு ”தாய்மை” எனும் தீம்/கருத்தைக் கொண்டு ஒரு இடுகை நமது குழுப்பதிவிலேயே இடலாம். இந்த மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும்! இடுகை எதுவாகவேனும், கவிதையாகவோ, கதையாகவோ, உங்கள் அம்மாவினைக் குறித்த மறக்க முடியாத நிகழ்வாகவோ அல்லது உங்களுக்கும் உங்கள் குட்டிக்கும் இடையே இருக்கும் உன்னத பிணைப்பினைக் குறிக்கும் பதிவாகவோ அல்லது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடுகையாகவோ..இப்படி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கற்பனைகளே எல்லை!

ஏற்கெனவே உங்கள் பதிவில் கேற்கண்ட கருத்தில் இடுகை இருக்குமாயின், விரும்பினால் இங்கேயும் பகிர்ந்துக் கொள்ளலாம். லேபிள்-கள்: மதர்ஸ் டே 09, தங்கள் பெயர்.
வேறு ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்!

அம்மாக்கள் வலைப்பூவின் வாசகராக இருந்தால், மேற்கண்ட தீம்-இல் பங்களிக்க ஆர்வமிருப்பின் பதிவை/பதிவின் சுட்டியை mombloggers@gmail.com -க்கு மடலிடலாம்.

நமது கலாசாரத்தில் அம்மாக்கள் தினமொன்று இல்லாவிட்டாலும், எல்லா தினமுமே அம்மாக்கள் தினமென்று சொல்லிக்கொண்டாலும் பதிவிலாவது நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம்!

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், மதர்ஸ் டே இடுகைகள் மூலம்! :-)

Happy Mother's day!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger