Sunday, May 3, 2009

அன்னையர் தினத்துக்காக - ”சிறுமுயற்சி” முத்துலெட்சுமியிடமிருந்து!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறுமுயற்சி” முத்துலெட்சுமி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி முத்துலெட்சுமி! ”வழி வழியாய்” என்று தலைப்பிடப்பட்ட அவரது பதிவு இதோ :-


ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.
ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.



வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெ ற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள். முன்னோர்களின் விஷய ஞானம் படித்து அறிந்து கொள்வது விட செவி வழி அதுவும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.



பெற்றவள் அறிவு பூர்வமாக சொல்லித்தருகையில் பாட்டி
கதைகள் சொல்லி பேரக்குழந்தைகளை ஒரு கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்... குழந்தைகள் புதிதாக கற்பனை வளத்தைப் பெறுகிறார்கள். மரம் வந்து பேசுமாம் ,கிளி வந்து பேசுமாம், ஏழு மலைகளும் ஏழு கடல்களுக்கும் அப்பால் இருக்கும் அபாயம் மிகுந்த பகுதிக்குக் கூடப் போய் வரும் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய் குழந்தைகளுக்கு தைரியம் வருகிறது.



இப்புனைவு கதைகளில் குணநலம் கூட கற்றுத் தரப்படுகிறது. கடும் பயணத்தில் கதாப்பாத்திரத்தால் முன்பு உதவி பெற்ற எறும்பும் , மீனும் வந்து உதவும்.
முன்பு கடுமையாய் நடந்து கொண்ட கதாப்பாத்திரத்துக்கோ ஆபத்துகளில் மீள இப்படி உதவி எதுவும் கிடைக்காது. நட்பும் உதவியும் ஆபத்தில் உதவும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இயற்கையை நேசிப்பதற்கு இயற்கையோடு ஒன்றிப் போவதற்கு கற்றுத்தந்தார்கள். வீட்டுத்தோட்டமும் பிறஉயிர் பேணுதலும் இயற்கையாய் பழகித் தந்தார்கள்.


உடல் நலத்திற்கு வழிவழியாய் வந்த அனுபவத்தில் இந்த உணவு இதற்கு நல்லது , இந்த கால நிலைக்கு உகந்தது இது என்று அறிந்து கடுக்காயிலிருந்து கஷாயம் வரை உபயோகிப்பது அறிந்திருப்பார்கள் பெண்கள்.



நான் நன்கறிந்த முதல் பெண் என் தாய்.
நான் என் தாய் வழி கற்றவை ஏராளம். சாந்தமும் நேர்மையும் அவர்களின் குணநலன். யாருக்கும் தீங்கு நினைத்தலும் நமக்கு கெடுதல் என்று சொல்வார்கள்.
ஆன்மீகமும் அறிவியலும் பொதுஅறிவும் விளையாட்டாய்
போதித்தார்கள்.



வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை.


மனிதன் மனிதத்தின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத்
துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேஎண்டுமென்று மன்மார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனும் மகரிஷியின் தத்துவங்களில் அவர்களுடைய ஈடுபாடும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்னை வியக்கவைக்கும். நேற்று பேச ஆரம்பித்திருக்கும் மழலையிடமிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் சமமாய் கொள்ளும் நட்பின் சாயல் தாய் வழியாய் எனக்கும் என்வழி மகளுக்கும்.


அன்பும் ,கருணையும், பெண்கள் கற்ற கல்வியும் அவளுக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும்.. அக்குடும்பத்து நபர்களால் சமூகத்திற்கும் வழிவழியாய் சென்றடையட்டும்.

10 comments:

ஆயில்யன் said...

அன்னையர் தின வாழ்த்துக்களுடன்...!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு. நன்றி சந்தனமுல்லை! வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

அன்னையர் தின வாழ்த்துக்களும்..!

சென்ஷி said...

அன்னையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

நல்ல கருத்துக்கள்!

பத்மா அர்விந்த் said...

நன்றி முத்துலகெட்சுமி. இதனால்தான் பெண்களுக்கான கல்வியறிவு முக்கியமாக படுகிறது. இதன்மூலமே தடுப்பூசிகள் வழங்குவதன் முக்கியத்துவம், குழந்தைகலின் உடல்நலம குடும்பத்தாரின் உடல்நலம், நல்ல சத்துள்ள உணவு சமைத்தல் என உடல்நலனிலும் தாய்மாரின் பங்கு அதிகம். நாளைய உலகம் அன்பானால் ஆனதாக மாற்ற இன்றைய குழந்தைகள் மூலம் அன்னையர்கள் அதிக பங்களிக்க முடியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முத்து கயல் ,அம்மாவைக் கொண்டாடும் அம்மா.
உங்கள் பெண்ணும் உங்களைப் போலவே வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி முல்லை :)
ஆயில்யன் ,சென்ஷி, வல்லி, ராமலக்ஷ்மி, பத்மா உங்களுக்கும் நன்றி.

Thamiz Priyan said...

அன்னைகளுக்கு வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

மிக நல்ல பகிர்வு சிஸ்டர்:)

ஆகாய நதி said...

அருமையான மேட்டர அருமையா சொல்லிட்டீங்க! :)

Anonymous said...

//வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை//
வாழ்க்கைல நான் மவுன விரதம் இருந்ததே இல்லை.உண்மையிலையே மவுன விரதம் இருக்கறது பெரிய விஷயம் இல்ல !!!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger