அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறகடிக்க ஆசை” Sathananthan தனது படைப்பைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி Sathananthan! ”'அம்மா - நேரில் நின்று பேசும் தெய்வமாக வேண்டாம். அம்மாவாகவே.........!' - என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-
கொண்டவர்க்கு எது பிடிக்கும்; குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன
உண்பதில் எவருடம்புக்கெது உதவாது என்றெல்லாம்
கண்டனள் கறிகள் தோறும் உண்பர் தம்மைக் கண்டாள்.
பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும் சுவை மணக்கும்
அருந்துமா சிறிய பிள்ளை என என்னும் அவளின் நெஞ்சம்
இருந்தந்தச் சிறிய பிள்ளை இச் என்று சப்புக்கொட்டி
அருந்தியே மகிழ்வதைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்.
ஈழத்தில் பிந்திய 80 களில் 6 ம் 7 ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்த பாடல் இது.
இதை ஆசிரியர் விளக்கிக் கற்பித்த அன்றே வீட்டில் வந்து அம்மாவைக் கவனித்தேன். நான்கு பிள்ளைகளுக்கும் நான்கு விதமாக முட்டை பொரித்தார். நான்கு விதமாகத் தோசை சுட்டார். இது பல குடும்பங்களிலும் தாய்/மனைவி செய்வது தான் என்றாலும் ஏனோ தானோ என்று சமைப்பவர்களும் செய்து முடித்தால் போதும் என்று செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இப்போதும் வீடுகளில், (மேலை நாட்டினர் கூட) சமையல் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருக்கிறது. (நளபாகம் என்பதையோ வெளியில் restaurant இல் chef ஆக இருப்பவர்களைத் தவிர்த்து) ஆனால் இதற்குரிய அங்கீகாரத்தைப் பெரும் பெண்கள் எத்தனை பேர்? ஒருநாள் உப்பு கூடிவிட்டால் சலித்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் நன்றாக இருக்கும் நாட்களில் பாராட்டி இருப்பார்கள்?
இதைப் புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. சிறு பிள்ளைகள் சரி. 10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்குப் போகும் அம்மாக்களும் பிள்ளைக்கும் கலந்து கொண்ட நிகழ்வில் பல குறைகளையும் கூறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கும் பல குறைகள் இருக்கும். நானும் அழகன் படத்தில் வருவது போல வேலைக்குப் போகாத அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டு. துரதிர்ஷ்ட வசமாக எனது ஆறு வயதில் அப்பாவைப் பிரிந்த எனக்கு வேலையும் பார்த்து எங்களையும் "கைம்பெண் வளர்த்த கழுதைகள்" ஆகி விடக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அம்மா வில்லியாகவே தோன்றியதும் உண்டு. ஆனால் 13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.
அம்மாவென்றாலே தியாகிகள் என்று வைத்திருக்கும் மனப்பாங்கும் மாற வேண்டும்.
அப்படி இருப்பது அம்மாக்களின் இயல்பு.
ஆனால் அதைப் புரிந்து அனுசரணையாக இருப்பது
உறவுகளின் உன்னதம்.
Photo: Mom hiding kid from shelling in Sri Lanka
Photofromhttp://my.telegraph.co.uk/chandradavid/blog/2009/05/04/a_paradise_turned_into_kingdom_of_vultures
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
4 comments:
அந்த படம் கண்ணீரை வரவழைக்கிறது :(
//13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.//
உலகிலே யாருமே அனுபவிக்கக் கூடாத கொடுமை!!!:(((
மனதை உருக்கும் பதிவு.
//10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.// மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
உங்கள் அம்மா உங்களைப் பார்த்து நிச்சயம் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்.
நன்றி ஆகாயநதி, படங்களாகக் கிடைப்பது எப்போதோ ஒரு முறை தான். ஆனால் ஓராயிரம் தடவை நிஜத்தில் பார்த்திருக்கிறேன். ஏதாவது ஷெல், குண்டுத்தாக்குதல் என்றால் மற்றவர்கள் வீழ்ந்து குப்புறப் படுப்பார்கள். ஆனால் அம்மாக்கள் இப்படித்தான், பிள்ளைகளைக் கங்காரு போல வைத்து வளைந்து படுப்பார்கள்.
நன்றி சசிரேகா, யாரும் அனுபவிக்கக் கூடாது தான். ஆனால், ஈழத்தின் இன்றைய நிலையில், இப்படி எத்தனை குழந்தைகள்... பெற்றோரில் யாருக்காவது ஒன்று நடப்பது மற்றவர்களுக்கு சம்பவம்; சில நாள் கவலை. ஆனால் பிள்ளைகளுக்கு....
வாழ்க்கையின் போக்கே மாறி விடும். எங்கள் நிலை பரவாயில்லை. ஒவ்வொரு பிள்ளை பிறந்த போதும் சிறு தொகை எங்கள் பெயரில் அப்பா வங்கியில் போடுவதை வழமையாகக் கொண்டிருந்ததால் திடீரென அவர்களிலாத போதும் பண விடயத்தில் சார்ந்திருக்கத் தேவை இருக்கவில்லை. ஆனால் அதுவும் இல்லாத அநாதை நிலை என்பது கொடுமை. ஈழ்ப் பிரச்சனையில் பலரும் எத்தனையோ விதமாகக் கவலைப் பட நான் கவலைப் படுவது ஒன்றிரண்டு குழந்தையையாவது தத்தெடுத்து ஒழுங்கான வாழ்வு கிடைக்க வழி செய்ய வேண்டுமென்பதே.. பல நடைமுறைச் சட்டச் சிக்கல்கள் இந்த நாடுகளில்.. பார்ப்போம்.
நன்றி தீபா, பல வீட்டிலும் இதைப் பார்த்துக் கவலைப் பட்டிருக்கிறேன். முக்கியமாக வேலைக்குப் போகும் அம்மாக்கள்.
பதில்களே பதிவின் நீளத்தைத் தாண்டி விடும் போல இருக்கிறது...
Post a Comment