
வீடெங்கும்
இறைபட்டிருக்கும்
பொருட்கள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
ஓடும் ஆனா ஓடாது,
நிலையிலிருக்கும்
சாவி கொடுக்கும்
பொம்மைகள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
எடுத்த பொருளை
அடுத்த நாள்
தேடும்போது
கிடைக்கா பொருள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
அலம்புவதும் அலசுவதுமாய்
டெட்டால் வாசம் வீசும்
வீடு சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
புதுசு புதுசா வார்த்தைகள்
கண்டுபிடிக்கும்
மூளை சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
வருவோர் போவோரை
ஒரு நிமிடம்
நம் வீடு நோக்கி வரச் செய்யும்
வித்தை சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
தீர்ந்தும் தீராமலிருக்கும்
ஏகப்பட்ட மருந்து குப்பிகள்
சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
நித்தம் நித்தம் துணி காயும்
கொடி சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
எந்த கவலையிருந்தாலும்
எவ்வளவு உடல்
பளு இருந்தாலும்
இனிதாய் விலக்கி
எதையும் எதிர்கொள்ளும்
மனது சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென
எப்போதும் சிரிப்பு சத்தம்
எதிரொலிக்கும்
சுவர்களும் கூரையும்
நித்தமும் சொல்லிக்கொண்டேயிருக்கும் இது குழந்தையிருக்கும் வீடென....,,,,
நினைவெல்லாம் நிவேதா - 7
14 years ago
