Thursday, April 30, 2009

பார்ட்டிக்கு போலாமா?

நாம் எங்காவது பார்ட்டி களுக்கு நம் குழந்தைகளையும் அழைத்து செல்கிறோமானால்,அதிலும் நம் குழந்தை மற்றவரிடம் பேச தயங்குவதானால்,செல்லும் முன்னரே குழந்தைகளுடன் சிறிது நேரம் அமர்ந்து அவர்களுக்கு போகும் இடத்தில் அனைவரிடமும் எப்படி பேச வேண்டுமென்றும் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டாமென்றும் முன்னரே சொல்லிக் கொடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.நான் இப்படி செய்வதினால் அவர்களும் அதற்க்கேற்றவாறே நடந்து கொள்வர்.அதை விடுத்து போன இடத்தில் குழந்தையிடம் யாரவது பேசும் பொழுது அவர்கள் பேசத் தயங்கினால் உடனே அவர்களை அந்த இடத்திலேயே வர்ப்புறுத்துவது அவர்களுக்கு அங்கே மிகவும் அவமானமாக இருக்கும்.அந்த உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வெளியே எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை சொன்னால் அவர்களும் கூச்சமின்றி பழக ஆரம்பிப்பார்கள்.இதே போல் ஓரிரு முறை வெளியே செல்லும் முன் நாம் செய்தல் அடுத்த முறை அவர்களாகவே போகுமிடங்களில் மற்றவர்களிடம் அழகாகப் பேசி நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிடுவர்!!
இது அவர்களின் வருங்கலத்திற்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும்!!!

Wednesday, April 29, 2009

Rheumatic fever - தெரிந்து கொள்ளுங்கள்

Rheumatic fever - rheumatoid arthritis என்று சொல்லப்படும் இந்த காய்ச்சல் மிக கொடியது. இது வந்தால் குழந்தைகளை எளிதில் பாதிக்கும். முதலில் தொண்டை வலியும் எதுவும் முழுங்க முடியாதபடி இருக்கும். அடுத்த நாள் கால், கை joints வீங்கி பயங்கரமா வலிக்கும். இந்த வியாதி ஒரு பழமொழி சொல்றாங்க டாக்டர் :

Rheumatic காய்ச்சல் வந்தால் " Kiss the mouth, lick the knee, and bite the heart" என்று சொல்லுவாங்க. அதாவது முதலில் தொண்டை வலி வரும், பின் கை, கால் முட்டி, விரல் இணைப்புகள் வீங்கி வலிக்கும், பிறகு இதயத்தின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வகை காய்ச்சல் சின்ன குழந்தைகளுக்குதான் அதிகம் வரும், வந்தால் சில டெஸ்ட் எடுத்து உறுதி செய்து, பிறகுதான் சிகிச்சை தருவார்கள். கண்டிப்பாக எக்கோ எடுப்பாங்கள். இது ஒருமுறை வந்தால் பிறகு எப்போது வேண்டுமானாலும் வரும்.

இதற்கு மருத்து காய்ச்சல் வரும் பொது தருவதுதான், ஆனால், அதற்கு பிறகு வருவதுதான் கொடுமை. சரியாக 21 நாட்களுக்கு ஒரு முறை பென்சிலின் ஊசி போடவேண்டும். முதலி சிறிய அளவு சோதனை ஊசி, பிறகு நெஜமாகவே பெரிய ஊசி, பயங்கரமா கடுகடுன்னு வலிக்கும். இதை அந்த குழந்தைக்கு என்ன வயதில் வருதோ அன்று முதல் அதன் 21 வயது வரை போடனும்.

இந்த காய்ச்சல் வருவதற்கு காரணம் ஒன்றும் இல்லை, யாருக்கு வேண்டுமாலும் வரலாம். மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Tuesday, April 28, 2009

விதம் விதமா இட்லி சுடலாம் நம்ம குட்டீஸ்கு- வெஜ் இட்லி

வெஜ் இட்லி:

தேவையானவை:

துருவிய கேரட் தேவைக்கேற்ப
துருவிய சிறிய (அ) பெரிய வெங்காயம்
பொடியாக அறிந்த கொத்துமல்லி இலைகள்
மிகவும் பொடியாக அறிந்த பீன்ஸ்
உப்பு
மிளகு தூள்
இட்லி மாவு
நல்லெண்ணெய்

செய்முறை:

குழந்தைக்கு எளிதில் மென்று முழுங்கவும், செரிக்கவும் இவை இரண்டையும் துருவிக் கொள்வது நல்லது.

வெங்காயம் எளிதில் வெந்துவிடும் ஆனால் கேரட் துருவியிருப்பதால் அதற்கு பொருத்தமாக வெங்காயத்தையும் துருவிக்கொள்வோம்.

கொத்துமல்லி இலைகளை பொடியாக அறிந்து, பீன்ஸையும் பொடியாக அறிந்து வைத்துக் கொள்வோம்.

முதலில் இவை நான்கையும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்வோம்

பின் இந்தக் கலவையில் சிறிது நெய் மற்றும் மிளகு தூள் சேர்த்துக் கொள்வோம்

இட்லிமாவு எடுத்து சென்ற முறை கூறியது போலவே நல்லெண்ணெய் தடவிய இட்லி தட்டில்
சிறிது ஊற்றி பின் இந்த கலவையை வைத்து அதற்கு மேலும் மாவினை ஊற்றி வேகவைத்து எடுத்தால் வெஜ் இட்லி ரெடி!

குட்டிப்பாப்பாக்களுக்கு இது மிகவும் பிடிக்கும்! :)

பள்ளி செல்லும் குட்டீஸ்கும் ஏற்ற உணவு :)

Monday, April 27, 2009

ஒரு அம்மாவின் குறிப்புகள் - 5

குழந்தைகளுக்கான உணவு வகைகளை புதுகைத்தென்றல் மற்றும் விஜி முன்னவே பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவுகளையும் பார்வையிட்டு, பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். தன் குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு தாயும் எத்தனை பாடுபடுகிறார்கள் என்பது இங்கிருக்கும் பதிவுகளை படிக்கும் போது தெரிகிறது. :)

எனக்கு தெரிந்த சில உணவு செய்முறைகளை பதிவிடுகிறேன். அதற்கு முன் சுயபுராணம். :)

நவீனுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் மிகவும் சிரமப்பட்டேன் எனலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து, 3 நேரம் எடுத்துக்கொள்வான், வாயில் எப்படியும் 2, 3 உருண்டுகளை இந்த பக்கமும் அந்த பக்கமும் அடக்கி வைத்துக்கொண்டு உள்ளே முழுங்காமல் வைத்திருப்பான். எனக்கு பல நேரங்களில் பொறுமை இழந்து போகும், ஆனாலும் நீயா நானா என்று பார்த்துவிடுவோமடா என்று முழுவதுமாக ஊட்டி முடித்துவிட்டு தான் விடுவேன். பொறுமையுடன் இருக்கவேண்டும் என்பதால், நான் முதலில் சாப்பிட்டு விடுவேன், இல்லையேல் எனக்கு ஏற்படும் பசியில் பொறுமை இழுந்து விட்டால் என்ன செய்வது.?

அடுத்து என் அண்ணன் மகன் நிவேதன், இவனின் அம்மா இவன் 1.5 வயதாகும் போது இறந்து போனார்கள். அவனுக்கு பழக்கமே இல்லாத நான் என்னுடன் அவனை அழைத்து வரும்படியாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் அழைத்தும் வந்து விட்டேன். அவனுக்கு அப்போது பேச்சும் வரவில்லை. எப்போதும் அம்மாவை தேடி அல்லது காரணமேயின்றி அழுதுக்கொண்டே இருப்பான்,

அவனுக்கு புதிய, தெரியாத சூழலில் அவனை அழைத்து வந்து விட்டதால் அவன் மட்டும் இல்லை நானும் உடன் சேர்ந்து கஷ்டப்பட்டேன். இவன் நவீனுக்கு எதிர்மறை, எவ்வளவு எளிதாக சாப்பாடு தொல்லை இல்லாமல் நவீனை வளர்த்தேனோ அதற்கு மாறாக ரொம்பவும் சிரமப்பட்டேன். காரணம், இவனுக்கு எந்த உணவும் சட்டென்று ஒற்றுக்கொள்ளாது. ஒரு உருண்டை அதிகமாகிவிட்டால் கூட சாப்பிட்ட அத்தனையும் அப்படியே வாந்தி எடுத்துவிடுவான். ரொம்பவும் உடல் மெலிந்து, எடை குறைந்த குழந்தையாக இருந்தான்.

நவீன் அப்படி இல்லை. அதனால் நவீனை போலவே அவனையும் சக்தியுடையவனாக மாற்ற வேண்டும் என்று இரவும் பகலும் நிவேதனை மட்டுமே கவனிக்க ஆரம்பித்தேன். நிவேதனுக்கு சர்க்கரை, சாப்பாடு, காய்கறி என்று எல்லாமே ஒரு அளவில் தான் இருக்க வேண்டும், டாக்டர் கலோரி கணக்கிட்டு பட்டியில் இட்டு கொடுத்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு பால், இவ்வளவு சர்க்கரை என்றால் அவ்வளவு தான் உள்ளே செல்ல வேண்டும், அதிகபடியாக சென்றால் உடனே அவன் உடம்பு பாதிக்கப்படும். அதனால் மிக மிக கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதில் அவன் பக்கமே திரும்பி படுக்க சொல்லுவான். அவனுக்காக இரவில் ஒரே பக்கமாக படுத்து என்னுடைய இடுப்பு, மற்றும் கால் பகுதிகளில் தோல் தடித்து, புள்ளி புள்ளியாகி கறுப்பு நிறம் படற ஆரம்பித்துவிட்டது. அதை போக போக சரி செய்து கொண்டேன் என்றாலும் குழந்தையை அம்மா இல்லாமல் வளர்க்க எத்தனை சிரமப்பட்டேன் என்பதை மனதளவில் உடலளவில் உணர்ந்தேன். சில நேரங்களில் தாங்க முடியாமல் வீட்டு கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடிவிட்டு அந்த குழந்தையை இறுக்கி கட்டிக்கொண்டு சத்தம் போட்டு ஓ'வென்று அழுவேன். எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வளர்த்து கொடுத்துவிட்டேன். :)

நவீன் மற்றும் நிவேதனுக்கு கொடுத்த சில உணவுகள்.

1. துவரம் பருப்பை 5-6 பூண்டுகள் போட்டு வேகவைத்து கடைந்து, நெய் 2 ஸ்பூன் விட்டு, சுடசாதத்தை நன்கு பிசைந்து, அல்லது மிக்ஸியில் ஒரு அடி அடித்து பருப்பை சேர்ந்து பிசைந்து ஊட்டிவிடுவேன். தேவைப்பட்டால் ரசம் மேலோட்டமாக சேர்த்துக்கொள்வேன்.

2. இட்லி தோசை எப்போதும் போல.. நெய் சர்க்கரை தொட்டு அல்லது பால் விட்டு சர்க்கரை சேர்த்து மசித்து கொடுப்பேன்.

3. சத்துமாவு கஞ்சி

4. முட்டை

* முட்டையை வெங்காயம் சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்,

* கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்

* முட்டை வேகவைத்து இரண்டாக வெட்டி, மிளகு போடி தூவி கொடுக்கலாம்.

* முட்டை வேகவைத்து மிளகு சேர்த்து வறுத்துக்கொடுக்கலாம்

* பொட்டுக்கடலை, மிளகு இரண்டையும் மிக்ஸியில் மாவாக்கி, முட்டையுடன் கலந்து ஆம்லெட்

* கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி லேசாக வதக்கி முட்டையுடன் சேர்த்து அடித்து ஆம்லெட்.

5. முந்திரி, பாதாம், திராட்சை - இவற்றை நிவேதன் பாக்கெட்டில் தினமும் ஒரு 5-10 போட்டு விடுவேன். காலையில் போட்டுவிட்டு சொல்லுவேன், குட்டி மதியத்துக்குள் சாப்பிடு அப்பத்தான் நவீன் மாதிரி ஆகலாம். இதில் குறிப்பிட வேண்டியது, என்னுடைய குழந்தையாக இருந்தாலும் நவீனுக்கு இவற்றை நான் கொடுத்தது இல்லை. நிவேதனுக்கு மட்டுமே கொடுப்பேன். அப்படியே கொடுத்தாலும் அதன் அளவு குறைவாகவே இருக்கும்.

6. கேக், ஸ்வீட், ஐஸ்கிரீம் - இதுவும் நிவேதனுக்கு முதலிடம். அவன் ஆசைப்படுவானே தவிர்த்து அவனால் நவீன் போல சாப்பிட முடியாது. இருப்பினும் ஸ்வீட், கேக் எப்படியும் வாரத்தில் 3 முறை கொடுத்துவிடுவேன். ஐஸ்கீரீம் அடிக்கடி இல்லை என்றாலும் மாதத்தில் 2 முறை கொடுப்பேன்.

7. சாக்லெட் - இது அதிகமாக கொடுக்காவிட்டாலும், சளித்தொல்லை வராத அளவு பார்த்துக்கொடுப்பேன்.

8. காய்கறி : இது ஓரளவு இருவரும் சாப்பிட ஆரம்பித்தவுடன் கோஸ், கேரட், பீட்ரூட், வெண்டக்காய், புடலங்காய், பாவக்காய் இவை அடிக்கடி சேர்ப்பேன். இதை தவிர்த்து வறுக்கும் காய்கரிகள் உருளை, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் வறுத்து தருவேன்.

9. சுண்டல் - தினம் ஒரு சுண்டல், கடலைபருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டகடலை, வேர்கடலை, முழுபயறு, காராமணி பயறு, மொச்சை போன்றவை. எல்லாவற்றிலும் மிளகுதூள் சிறிது தூவி கொடுத்தல் நலம்.

10. வத்தல் : சீரகம் அதிகம் சேர்த்து, மிளகாய் குறைத்து மிக்ஸியில் நன்கு அடித்து, வேகவைத்த அரிசிமாவில் கலந்து, இடியாப்ப அச்சியில் பிழிந்து காயவைத்துக்கொள்வேன். முள் அச்சுலும் கொஞ்சம் பிழிந்து காயவைத்துக்கொள்வேன். சீரகம் அரைத்து போட காரணம் குழந்தைக்கு தொண்டையில் அடைத்துக்கொள்ளாது என்பதால். உருளைக்கிழங்கு சிப்ஸ் போல சீவி, தேவையான உப்பு சேர்த்து பாதியளவு வேகவைத்து, வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ளுவேன்.

11. முருங்கைகாய் லேசாக உப்பு போட்டு வேகவைத்து, உள்ளிருப்பதை மட்டும் வழித்து, மிளகு தூவி, பருப்பு சாதம் ஊட்டும் போது உடன் சேர்த்து கொடுத்துவிடுவேன். இது சளிக்கு மிக சிறந்தது.

அத்தோடு இன்றோடு இங்கிருந்து விடைபெறுகிறேன், தேவைப்பட்டால் திரும்பவும் வந்து எழுத முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த முல்ஸ் மற்றும் தவறாமல் படித்த எல்லா அம்மாஸ் க்கும் எங்களது நன்றிகள். :)

அணில் குட்டி அனிதா :- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு வழியா கிளம்பிட்டாங்களா.. நிம்மதி... !

பீட்டர் தாத்ஸ் :- You can learn many things from children. How much patience you have, for instance.

Sunday, April 26, 2009

விதவிதமா இட்லி சுடலாம் நம்ம குட்டீஸ்கு!

ஹாய் அம்மாஸ்...

நம்ம குட்டீஸ் 8வது மாதம் முதல் நாம் நம் தமிழகத்தின் முக்கிய உணவான இட்லி கொடுக்க ஆரம்பிக்கிறோம்... இட்லி என்பதை சாதாரணமா நினைச்சுடக் கூடாது!

உலக அளவில் சத்தான உணவு பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க உணவியல் ஆய்வாளர்கள் இறங்கியபோது அவர்கள் தந்த இன்ப அதிர்ச்சி- "உலகிலேயே தலை சிறந்த சத்தான செய்வதற்கும் எளிய உணவு இட்லி தான்" என்பதே அது!

அப்படிப்பட்ட இட்லி சுடும் ஊரில் பிறந்த நாம் நம் குட்டிக்கண்ணுகளுக்கு விதவிதமா இட்லி சுட்டுக்கொடுத்தோம்னா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க... கைக்குழந்தை முதல் பள்ளி கல்லூரி அலுவலகம் என்று தொடங்கி பல் போன காலத்திலும் சாப்பிடும் இட்லியை எப்படி பல விதங்களில் சுடலாம் என்று நான் எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்.

அதில் ஏதேனும் சுவை கூட்டியோ சத்து கூட்டியோ சேர்க்கலாம் என்று யாருக்கேனும் தோன்றினால் தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறலாம்.

இன்று முதலில் நாம் பார்க்கப் போவது... "கைக்குழந்தைக்கான மசாலா இட்லி"

தேவையானவை:

இட்லி மாவு,
வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு
சிறிதளவு பெருங்காயம், மிளகு தூள்
தேவைக்கேற்ப உப்பு
மிகவும் பொடியாக அரிந்த சிறிய வெங்காயம்

செய்முறை:

மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக அரிந்த வெங்காயம், மிளகு தூள் சிறிதளவு, உப்பு, பெருங்காயம் மிகச் சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு பிசறி வைத்துக்கொள்ளுங்கள்

இப்போது இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, முதலில் சிறிதளவு மாவு ஊற்றி பின் இந்த பிசறி வைத்த மசாலாவில் சிறிது எடுத்து வைத்து பின் அதற்கு மேலும் இட்லி மாவினை ஊற்றி வைத்துவிட வேண்டும்.

இவ்வாறே உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப ஊற்றிக்கொள்ளலாம். முக்கியமான விஷயம் காரம் அதிகமாகிவிடக்கூடாது கைக்குழந்தைகளுக்கு.அப்புறம் மிளகாய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

இப்படி இட்லி வெந்ததும் குட்டிக்கு கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும். பெரிய குழந்தைகளுக்கு சாம்பார் தொட்டுக்கொள்ள வைத்துத் தரலாம் :)

குழந்தையின் வயது கூட கூட அவர்கள் விரும்பும் அளவு காரம் சேர்க்கலாம்.

Saturday, April 25, 2009

உணவு முறை 0- 1 வயது வரை

பிறந்த குழந்தைகள் குளியல் முறை மிக முக்கியமானது. எங்கள் வீட்டில் பிறந்த குழந்தையை குளிக்கவென ஒரு ஆயா வருவார்கள், அவர்களுக்கு வெற்றிலை பாக்கு தரனும், அவர் வந்து குளிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு பெரிய சடங்கு நடத்துவர், இப்படி திருப்பி அப்படி திருப்பி குழந்தைக்கு மயக்கமே வந்திருக்கும். இப்பதான் தெரியுது அதெல்லாம் தேவையே இல்லை. குழந்தைகளின் உடம்பு மிக மிருதுவானது, அதன் மேல் என்ன அழுக்கு படிய போகுது.

கவிதா சொன்னது போல் எல்லாம் எடுத்து வைத்து பின் குளிக்க வைங்க. குளிக்க வைக்கும் முன் எதுவும் சாப்பிட குடுக்க கூடாது. குளித்தவுடன் மிருதுவாக துடைத்து மெல்லிய உடை அணிய வைக்க வேண்டும். பொட்டு, பவுடர் போன்றவை குறைந்தது 5 மாதங்களுக்கு வேண்டாமே . மை, பொட்டு போன்றவைகளையும் தவிர்க்கலாம். மிக மிருதுவான சருமம் இதனால் பாதிக்கப்படும். வேங்கை பால் பொட்டு என கிடைக்கும், அது வேண்டுமானால் 5 மாதம் பிறகு வைக்கலாம்.

உங்களுக்கு மை தயாரிக்க தெரிந்தால் நல்லது. வெண்ணை அல்லது விளக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட மை நல்லது.

இன்றைக்கு உணவு முறைகளை பார்க்கலாம்:

கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வரை கொடுக்கணும். ( என் இரு பெண்களுக்கு 3 வயது வரை கொடுத்தேன.) பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6 மாதம்:

ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். முளை கட்டிய சாது மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை குடுக்க வேண்டும். முக்கியமா கவனிக்க வேண்டியது ஒரு புது உணவு குடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக படுத்த கூடாது. அப்பதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிக கொஞ்சம் அடுத்த நாள் அளவு கூட்டி தர வேண்டும்.

7, 8 மாதங்கள்:

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சதம், பால் சாதம் ஆப்பிள், வேகவைத்து மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கட் ஊற
வைத்து கொடுங்க. வெறும் பருப்பு சாதமா குடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுங்கள். பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுங்கள். பசும்பால் அறிமுகபடுத்துங்கள்.

9. ,10 மாதம்:

இப்போது, இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.

11, 12 மாதங்கள் :

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டு குழந்தைக்கு பழக்கபடுத்துங்கள்.

எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்காதீங்க. அப்பறம் சாப்படவே பழகாது. குறைவாக இருந்தாலும் பார்க்கும் போதே சாப்பிட துண்டும் வகையிலும், சத்துள்ள தாகவும் கொடுங்கள். முக்கியமா குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்ளுங்கள். அதை அடிக்கடி சுட்டு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை என்று கவலை பட்டு ஒன்றும் போவதில்லை. உணவு வகைகளை மாற்றி, அடிக்கடி கொடுங்கள்.

உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக் இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.
7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால்:-எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,
8 மணி - குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்க
குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.
8.30 - காலை உணவு - திட உணவாக இருக்கட்டும்
10.30 - தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.
12 - திட உணவு
4 மணிவரை எதுவும் தேவை இல்லை. அப்பறம் பால் கொடுங்கள், கூட இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு.
7.30 மணிக்கு முழு திட உணவு கொட்டுங்கள்.
9 மணி மீண்டும் பால். இதற்க்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.

இப்ப வயிறு நிறைந்து இருக்கும், குழந்தை நடுவில் எழுது கொள்ளாது. தேவை இல்லாமல் அதற்க்கு நடு இரவில் பால் கொடுத்துஎல்லாம் பழக்காதீர்கள். 8 மாதம் பிறகு வளர்ந்த குழந்தையாக நினைத்தால் எல்லா பழக்கமும் சொல்லி தர முடியும்.

இதெல்லாம் என் சொந்த அனுபவம், என் குழந்தைகள் நடு இரவில் அழுததே இல்லை. காரணம் வயிறு நிறைந்த உணவு நல்ல தூக்கம் கொடுக்கும் தானே?

டிப்ஸ்: அம்மாகளுக்கு பால் கட்டி இருந்தால், ஒரு பாத்திரத்தில் உங்களால் பொறுத்து கொள்ள கூடிய அளவு சுடுதண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரும் வைத்து கொள்ளுங்கள். இரண்டிலும் ஒரு சின்ன டவல் போட்டு இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி துணியை தண்ணீருடன் எடுத்து பத்து போட்டது போல் போடுங்கள். தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் குளிக்கும் போதும் செய்தல், கட்டிய பால் தானாகவே வெளியேறும். பிறகுதான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு அம்மாவின் குறிப்புகள் - 4

மிக பெரிய பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தை தருவது குழந்தை பிறந்தப்பின் அம்மாக்களுக்கு ஏற்படும் உடல் பருமன். குழந்தை பேறு என்பது ஒரு தாய்க்கு அடுத்த பிறவி என்பார்கள். குழந்தை பேற்றால் நம் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முதலில் இருப்பது நம் உடலின் எடை. மிக சிலர் மட்டுமே எப்போதும் போல் இருப்பார்கள், அதற்கு குடும்பவழி காரணமாக இருக்கலாம். ஆனால் 99% பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் :-

1. இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள்

2. குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்துக்கொள்வதில்லை

3. குழந்தைக்காக நன்றாக சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது.

4. அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது.


அடிவயிற்று சதையை மட்டும் குறைக்க (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்) வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயற்சிகளை குறிப்பிடுகின்றேன். இதை செய்யவதற்கு முன்


1. உடற்பயற்சி செய்யும் போது, மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் நிறுத்திவிடவேண்டும்.

2. வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாது. திட உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டால் குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

3. உடற்பயிற்சி முடிந்தவுடன் சாப்பாடு சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

4. தண்ணீர் நிறைய குடிக்கலாம், அதுவும் சுடத்தண்ணீராக இருந்தால் நலம்.

5. பயிற்சியின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும், நமக்கு வேகமாக குறைக்க வேண்டும் என்று, கடுமையாக செய்யக்கூடாது.

கீழ்கண்ட படத்தில் இருப்பது போன்று படிப்படியாக செய்து பாருங்கள்.

1. தரையில் விரிப்பு ஏதாவது போட்டு நேராக படுத்துக்கொள்ளுங்கள்

2. இடது காலை மட்டும் மெதுவாக மேலே தூக்குங்கள். முடிந்தவரை தூக்கிவிட்டு இறக்கிவிடுங்கள்.

3. அடுத்து வலது காலை மெதுவாக மேலே தூக்குங்கள். மெதுவாக இறக்கிவிடுங்கள்.

இதை வேகமாக செய்யக்கூடாது, மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அப்போது தான் தசைகளுக்கு நல்லது.

இதில் படம் 2, 3 ல் காட்டியுள்ள உடற்பயிற்சிகளை மட்டும், முதலில் ஒரு 5 முறை மேலே தூக்கி இறக்குமாறு எண்ணிக்கை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்து மொத்தம் 10 முறை. இதனை குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். 5 என்ற எண்ணிக்கை 10 ஆக்கி கொள்ளலாம். உங்களால் நன்றாக சுலபமாக வலியில்லாமல் கால்களை தூக்கி இறக்க முடிந்தவுடன், படம் 4 ஐ முயற்சி செய்யுங்கள்.

4. இரண்டு கால்களையும் ஒரு சேர மெதுவாக தூக்கி, ஒரு சேர மெதுவாக இறக்குங்கள். இப்படி தினமும் உங்களால் முடிந்த அளவு விடாமல் செய்து வந்தால் அடிவயிற்று சதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டிப்பாக குறையும்

5. எப்போது உடற்பயற்சி செய்தாலும் கடைசியில் ஒரு நிமிட அளவு உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்களை மூடி அப்படியே படுத்து இருந்துவிட்டு எழுந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக படம் 6 இல் காட்டி இருப்பது போல் எப்போது எல்லாம் தரையில் உட்காருகிறீர்களோ அப்போது எல்லாம் கால்களை குத்திட்டு, கைகளால் இறுக்கி உடம்போடு அழுத்தி உட்காருங்கள். இதை டிவி பார்க்கும் போது செய்யலாம். உட்காரும் போது எல்லாம் இப்படி உட்கார்ந்து பழக்கப் படித்துக்கொண்டால், அடிவயிற்று சதை குறையும். இதை தனியாக உடற்பயிற்சியாகவும் செய்யலாம். ஆனால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் முடியும் போது எல்லாம் செய்யுங்கள்.

நாம் உட்காரும் போது சோபா, சேர் என்று உட்காராமல், தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம், அதுவுமே ஒரு உடற்பயற்சி தான்.

இப்படி உடற்பயிற்சிகள் எல்லாம் என் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் நான் ஆரம்பித்தேன். அதுவரையில் எனக்கு அதன் தேவை இல்லாமல் இருந்தது, அதற்கு பிறகு நடைபயிற்சி. இது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 -3 கிமி நடந்து செல்லுவேன். பள்ளிக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல நடந்தே சென்று வருவேன். இரண்டு சக்கர வாகனம் இருந்தாலுமே உபயோகப்படுத்தாமல் இருந்தேன். நடப்பதினால் என் உடல் பருமன் ஏறாமல் இருந்தது.

வீட்டில் டிரட் மில் இருந்தால், குறைந்த பட்சம் 10 நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை உடலுக்கு தேவையான பயிற்சியையும், உங்களை எப்போதும் Active ஆக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

பின் குறிப்பு : :) படங்கள் பெயின்ட் பிரஷ்'ஷில் வரைந்தேன். ஏதாவது குறை இருந்தால்.. கண்டுக்காமல் நைசா விட்டுடுங்கோ !! :) முடிந்தால் அடுத்தமுறை ஏதாவது வரையும் போது கையால் வரைந்து, ஸ்கேன் செய்து போடுகிறேன்.. :)

அணில் குட்டி அனிதா :- ம்ம்.... அம்மணி வூட்டுல இது எல்லாம் செய்ய தெரிஞ்சாலும் செய்யாம ஜிம் க்கு போறாங்க... ஆனா உங்களை வூட்டுல செய்ய சொல்றாங்க.. .என்னத்த சொல்ல.. ?! :(

பீட்டர் தாத்ஸ் : “It typically takes about three months to reach a moderate fitness level, and then you just want to maintain that.

Friday, April 24, 2009

நமது வலைப்பூ - சில யோசனைகள்!

நமது குழுப்பதிவை மேலும் சுவாரசியமாக்க ஒருசில எளிய யோசனைகள்!

1. இடுகைகளில் லேபிள்கள் relevant-ஆக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே இருக்கும் குறிச்சொற்களையே திரும்ப பயன்படுத்த முயல்வோம். எ.கா - வயது வரம்பு, புத்தகங்கள்,பாடல்கள், கதைகள் என்று இயன்ற வரை பொதுப்படையானதாக, தேடுவதற்கு எளிதானவையாக இருக்கட்டும்.

2. மேலும், இடுகைகளின் குறிச்சொற்களோடு, இடுபவரின் பெயரையும் ஒரு குறிசொல்லாக பயன்படுத்துவோம். (ஆகாயநதி மற்றும் அமித்து அம்மா-வின் இடுகைகள் அவ்வாறே இருக்கக் காணலாம்.) இது சடுதியில் இனம்காண உதவியாயிருக்கும்.

3. நமது இடுகைகள் அம்மாக்கள் பற்றியதும், குழந்தைகள் பற்றியதாய் மட்டும் இருக்கட்டும்.
அது அனுபவங்களாகவோ, விவாதமாகவோ இருக்கலாம். பிற தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்தியாயிருப்பின், சுட்டியை இணைத்து வைப்போம்.

4. தொடர்ந்து எழுதுவதை மனதிற் கொள்வோம். குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒரு இடுகையாவது இடவேண்டுமென மனதிற் கொள்வோம். நமக்கு நாமே உதவி செய்துக் கொள்கிறோம், இந்த வலைப்பதிவின் மூலம்...ஒருவரிடமிருந்து மற்றொருவர் என! நாம் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இருக்கிறோம், நாமனைவரும் நண்பர்களே என்று உணர்வோம். தேவையற்ற விவாதத்தைத் தவிர்ப்போம்!

5. வாழ்த்துகள், அறிவிப்பு பற்றிய இடுகைகளாக இருப்பின், ஏற்கெனவே அதைப் பற்றிய இடுகை இருக்கிறதாவென அறிந்தபின் இடலாம். இதன்மூலம், பல இடுகைகள் ஒரே அறிவிப்பைக் குறித்து இடுவதைத் தவிர்க்கலாம்.

6. நமது குழுப்பதிவின் இடுகைகளைப் பற்றிய முன்னோட்டங்கள்/முன்னுரை அல்லது சுட்டிகளை நமது சொந்த வலைப்பூவிலும் இடலாம். அதனால் இன்னும் பலரை சென்றடைய வாய்ப்புகள் பெருகும்.

மேற்சொன்னவற்றை முன்பாகவே வரையறுத்திருக்கலாமெனினும், குழப்பங்களை தவிர்க்க இது தேவையானதாகப் படுகிறது. இன்னும் சொல்வதற்கு யோசனைகள் இருப்பின் தெரிவிக்கவும். குழுப்பதிவை மேன்மையானதாக்குவோம்! ஒத்துழைப்பிற்கும், புரிதலுக்கும் நன்றி! ஹூர்ரே..!!

எல்லோரும் வாங்க - குட் டச் பேட் டச் கலந்துரையாடல்

அமிர்தவர்ஷிணி அம்மா செய்த ஒரு நல்ல விஷயம் குட் டச் பேட் டச் பற்றியது. பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடிந்த வரை எல்லோரும் வாங்க.நான் டிக்கெட் confirm ஆனா கண்டிப்பா வருவேன்.

உங்களை எல்லோரும் நேரில் பார்க்க ஆவலாய் உள்ளேன். நிறைய கேள்விகள் தயார் பண்ணிட்டு வாங்க.

நாள் : மே 10, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி.

இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )



மேலும் விபரங்களுக்கு இங்க
http://www.luckylookonline.com/2009/04/blog-post_7750.hthml

நன்றி

ஒரு அம்மாவின் குறிப்புகள்- முத்தம் - 3

முத்தம் நம் அன்பை வெளிப்படுத்த இதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்ன? அதிலும் குழந்தைகளை கையில் எடுத்தாலோ தூக்கினாலோ, நம்மை அறியாமல் நாம் அவர்களுக்கு முத்தங்களை கொடுக்க ஆரம்பிப்போம். இதனால் வரும் பிரச்சனைகளை கொஞ்சமும் நாம் யோசிப்பது இல்லை. குழந்தைகளை தூக்குவதற்கு முன் நம் கைகளை கழுவிவிட்டு பின்பு தான் தூக்கவேண்டும். இதில் முத்தம் எல்லாம்... ?!! கொடுக்கவே கூடாது.

இது எப்போது யாருடைய குழந்தையை அன்போடும், பாசத்தோடும் பார்க்க சென்றிருந்தாலும், தூக்குவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். முத்தம் கொடுத்து அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படத்தக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் தொற்றிவிடும். குறிப்பாக அம்மாவிற்கு சளிபிடித்தால் கூட, அந்த அம்மா குழந்தைக்கு முத்தமிடக்கூடாது. எளிதில் அது குழந்தைக்கு தொற்றிக்கொள்ளும். நம் உமிழ்நீரிலில் ஏதேனும் கிருமிகள் இருப்பின், நம் வாயை சரிவர சுத்தம் செய்யாமல் இருந்து அதில் கிருமிகள் இருந்து, நாம் குழந்தையை முத்தமிட்டால், மிக மிக எளிதாக அது குழந்தைகளை தொற்றிக்கொள்ளும்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு. கண் வலி வருகிறது. இது ஒரு வைரஸ் கிருமியால், தொற்றி பரவுவதே. இந்த கிருமி தொற்றுவதால் மட்டுமே நமக்கு இருக்கும் கண் வலி மற்றவருக்கு தொற்ற வாய்பிருக்கிறது. ஆனால் நம்மவர்கள் கண்களை பார்த்தாலே வந்துவிடும் என்று எண்ணி கருப்பு கண்ணாடி போடுவார்கள். கருப்பு கண்ணாடி போடுவதின் நோக்கம், கண் வலியில் கண்கள் சிவந்து, வீங்கி, அழுக்கு சேர்ந்து பார்க்கவே மிகவும் மோசமாக இருக்கும், அதை மற்றவர்கள் பார்த்து பயப்படவோ, அருவருக்கவோ வேண்டாம் என்பதாலேயே கருப்பு கண்ணாடி போடும் பழக்கம் உள்ளது. எனக்கு கண் வலி வந்தால், மிகவும் மோசமாகிவிடும், வெளியில் செல்வதை தவர்த்துவிடுவேன், வீட்டில் இருப்பதால், கண்களுக்கு கண்ணாடி போடமாட்டேன். ஆனால் கண் வலி சரியாகும் வரை, நான் கை வைக்கும் எந்த பொருளையும் அடுத்தவர் தொடாதவாறு பார்த்துக்கொள்வேன், குறிப்பாக, தனி டம்ளர், தட்டு, தலையணை, பெட்ஷீட், கர்சீப் , இப்படி சொல்லலாம். அவற்றை கண் வலி சரியாகும் வரை தனியாக உபயோகிப்பேன். எல்லோரும் உபயோகிக்கும் பொருளை தொடமாட்டேன், கம்பியூட்டர் கீ போர்டு, டிவி ரிமோட், ஏசி ரிமோட், பிரிட்ஜ் போன்றவற்றை தொடமாட்டேன். இப்படி இருந்ததால் வீட்டில் இருக்கும் மற்ற யாருக்கும் கண் நோய் பரவவேயில்லை, இத்துடன் எனக்கு கண்களுக்கு மருத்து போட்டுவிட்டவுடன் என் கணவர் கையை கழுவிவிட்டாரா என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இது அதிகப்படியான கவனமே என்றாலும்,

நவீனுக்கு வரக்கூடாது என்பதில் என் கவனம் அதிகமாக இருக்கும். அதனால் எனக்கு என்ன உடல் உபாதை வந்தாலும் அவனுக்கு அது தொற்றிக் கொள்ளாமல் இருக்க ஆவன செய்வேன். மேலே விழுந்து பிரள அனுமதிக்காமல் ஏதாவது சொல்லி பயமுறுத்தி வைப்பேன். அதுவும் சின்ன வயதில் ரம்யா கிருஷ்ணன் நடித்த "அம்மன் " படத்தை நினைவு கூர்ந்து, அவனிடம் அம்மன் சாமி வரும், கண்ணை குத்தும் என்று சொல்லி கொஞ்சம் பயம்முறுத்துவேன். இது ஒரு தவறான அணுகுமுறை என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும், அடங்காத சில நேரங்களில் என்ன தான் செய்வது.. ஆனால் அது எல்லாம் ஒரு காலக்கட்டம் வரை தான்.... ஒரு வயதிற்கு மேல்.. "ஓ அம்மன் சாமியா வர சொல்லு..வர சொல்லு, .ஐயம் மோர் இன்டரஸ்டட் டு மீட் ஹர், நான் இங்கேயே வெயிட்டிங். .கண்ணை எடுக்க என்ன டூல் அவங்க யூஸ் செய்வாங்க, அவங்க காஸ்டியூம் நல்லா இருக்கு ஆனா கண்ணை மட்டும் ஓவரா உருட்ட சொல்லாத. அதை செய்ய நீ தான் இங்க இருக்கியே " ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

வியாதிகள் உண்டாவதற்கு மூலக்காரணம், தொற்று கிருமிகளால் தான் என்பதால், குழந்தைகளுக்கு ஒரு சிலர் இடும் முத்தங்களினால் கண்ணங்களில் புண்கள் கூட வர வாய்ப்புகள் உண்டு. நமக்கே தெரியாது அது ஏன் வந்தது என்று? ஆனால் வந்து இருக்கும். விருந்தினர், சொந்தங்களை குழந்தைகக்கு ஆசையாக முத்தமிட வரும்போது " முத்தம் கொடுக்காதே " என்று எளிதாக சொல்லிவிட முடியாதே.. ஆனால் சொல்லித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு அம்மாவும் இருக்கிறார்கள், காரணம் குழந்தையின் ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம் அல்லவா?. நம் வீட்டில் இருப்பவர்களிடம் நேரிடியாக சொல்லிவிட முடியும் ஆனால் மற்றவர்களை.? விருந்தினரோ, சொந்தங்களோ குழந்தைகளை பார்க்க வரும்போது, அவர்கள் வந்து குழந்தையை தூக்குவதற்கு முன்னரே. ... டாக்டரிடம் சென்று வந்தோம், குழந்தையை ரொம்பவும் கவனமாக பார்த்துக்கொள்ள சொன்னார்கள், என்னையே முத்தமிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றார் பாருங்களேன்... என்று சொல்லி பேச்சை ஆரம்பித்து அவர்களுக்கு புரியவைக்கலாம், அப்படியே.. நீங்களும் குழுந்தையை தூக்கி கொஞ்சுங்கள் ஆனால் முத்தம் மட்டும் வேண்டாம்... அப்படியே கொடுத்தாலும் கையில் (உள்ளங்கைக்கு மேற்புறம்) கொடுங்கள் என்று சொல்லிவிடுங்கள். விருந்தினர் சென்றவுடன் முத்தமிட்ட இடங்களை கிருமி நாசினி கலந்த சுடத்தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு துடைத்து எடுத்துவிடுங்கள். இதை மறக்காமல் செய்ய வேண்டும், அல்லது அவர்களின் எதிரில் கூட செய்யலாம், அப்படி செய்வதால், இன்னொரு முறை முத்தமிட மாட்டார்கள் அல்லது வேறு குழந்தைகளிடம் இப்படி செய்ய மாட்டார்கள்.

அன்பாக இருந்தாலும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்று வரும்போது விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? ஆரோக்கியம் தானே முதல், அதனால் அம்மாக்களே... உங்களின் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வருபவரை நீங்கள் முன்னே நின்று தடுத்து நிறுத்துங்கள்.. அது குழந்தையின் அப்பாவாக இருந்தாலும் சரி... :) , தடுக்க தயக்கம் காட்டாதீர்கள்... :)

அணில் குட்டி அனிதா : கவி..... முடிச்சாச்சா..?!! கிளம்பலாமா.. எனக்கு இந்த வீடு ரொம்ப போர் அடிக்குது.. அவ்வ்வ்வ்வ்!! ஒரே அம்மாஸ்.. நோ ஃபன்.... எல்லாம் ரொம்ப சீரியஸா இருக்க்காங்க.. அப்புறம் குட்டீஸ் ஒன்னையும் காணோம்... கண்ணை கட்டி காட்டுக்குள்ள விட்டாப்பல இருக்கு... ஆமா உங்க பிரண்டு. . இந்த ரோஜால இருக்குமே அந்த .."முல்ஸ்" தானே... அவங்க எப்படி இங்க இருக்காங்க... ஆங்.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... ஒகே... சரி.. இன்னைக்கும் நான் தூங்கறேன்..... யூ டேக் ரெஸ்ட் அணிலு.. அம்மாக்கள்ஸ் எப்படியும் வந்து.. முத்தம் முத்தம் முத்தம்ம் ன்னு கமெண்ட போறாங்க. ஹி ஹி.. வர அம்மாக்கள் எல்லாம் எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு போகனும் ஒகேஸ். .டீல் !! ...

பீட்டர் தாத்ஸ் :A kiss is just a pleasant reminder that two heads are better than one

Thursday, April 23, 2009

அடிப்படை

முதலில் ஒரு விஷயம், உங்கள் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று நீங்கள் மட்டும் தீர்மானம் பண்ணுங்கள். ரொம்ப குண்டா இருக்கும் குழந்தை தான் அழகோ, ஆரோக்கியமோ அல்ல. மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து மட்டும் கேளுங்கள். உடனே செயல் படுத்த முற்ப்படாதீர்கள். நம் பாட்டி காலம் வேறு, நம் அம்மாவின் காலமும் வேறு, ஏன் நம் சின்ன வயதில் இருந்தது போலவா இப்போது குழந்தைகள் இருக்கிறார்கள். கால கட்டங்களின் மாறுதலுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக மாறித்தான் வேண்டும்.

பொதுவாகவே நாட்டு மருந்துகள் இப்போதைய சுழலில் நன்றாக தெரியாமல் கொடுப்பது நல்லது அல்ல. ஆனாலும் எப்போதும் அலோபதி மருந்தும் நல்லது அல்ல. முடிந்தவரை குறைந்த அளவில் மருந்து கொடுத்து பழகுங்கள்.

காய்ச்சல் : குழந்தைகள் காய்ச்சல் வந்தால் மிகவும் சோர்ந்து போவார்கள். முதலில் அவர்கள் நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டும். காய்ச்சல் தான கண்ணு சரியாய் போய்டும், இந்த ரச சதம் சாப்பிட்டு, நல்ல ரெஸ்ட் எடு என்று தான் ஆரம்பிக்கவேண்டும். ஐயோ என்று நாம் டென்ஷன் ஆவதில் அர்த்தம் என்ன?

அவர்களுக்கு மிதமான சூட்டில் உடம்புக்கு குளிக்க செய்து, அவர்களுக்கு பிடித்த சவுகர்யமான ஆடை அணிந்து, ரச சத்தமோ, ரொட்டியோ, பாலோ கொஞ்சம் சாப்பிட கொடுங்கள், மருந்தும் கொடுங்கள். அதை விட முக்கியம் சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சுடு தண்ணீரை ஆற வைத்து அதில் ஜூஸ் பிழிந்து கொடுங்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் நிம்மதியா தூங்கினாலே பாதி சரியாய் போகும்.

மிக சிறிய குழந்தை எனில் உடல் சுடு அதிகம் இருந்தால் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதன் இரு அக்குளும் தலையும் சேர்த்து சில நிமிடம் வைத்து, பிறகு துடைத்து விடுங்க.

சளி: உண்மைகளில் சளிக்கும் குளிப்பதற்கும் சம்மந்தமே இல்லை. தலயில் ஈரம் இல்லாமல் பார்த்து கொண்டால் போதும். மிளகு , பனங் கற்கண்டு, திப்பலி பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ( செய்முறை தனியாக எழுதுகிறேன்)

மிக சிறிய குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கலாம், மிக பொறுமையாக கொடுக்கணும். இல்லேன்னா ஒரு பெரிய வெற்றிலை எடுத்து சிறிது நல்ல எண்ணெய் தடவி விளக்கு திரியில் லேசாக சூடு பண்ணி குழந்தையின் நெஞ்சில் பற்று போடுங்கள், சளி வெளியில் வாந்தியவோ, மலத்திலோ வெளியே வரும்.

லூஸ் மோஷன் : இது தான் கொஞ்சம் டேஞ்சர் ,முடிந்த வரை டாக்டரிடம் எடுத்து சென்று விடுங்கள்.

வயது வாரியாக பார்க்கலாம்.
அதற்க்கு முன்: குழந்தைகளை பார்க்கும் அதே கவனத்துடன் நம்மையும் பார்த்துக்கணும்.

இன்றைய டிப்ஸ்: கர்ப்பமாக இருக்கும் பொது, எப்போ தெரியுதோ அப்போதிருந்து moisturex என்னும் கிரீம் வயிற்றில் தடவி வந்தால் வரிவரியான தழும்புகள் இருக்காது. அல்லது விட்டமின் ஈ ஆயில் கூட தடவலாம். பிரசவத்திற்கு பின் இருக்கும் தழும்புகள் உடனே போகாது, ஆனாலும் தினமும் சிறிது நல்லெண்ணையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து வயிறில் தடவி பிறகு குளித்தால் கொஞ்ச நாளில் போய்டும்.

அறிமுகம்

வணக்கம் தோழிகளே. இந்த உலகத்தில் நான் பிறந்ததில் இருந்து இதுவரை செய்த பெருமையான செயல் ஒரு அம்மாவாக இருப்பதுதான். என் குழந்தைகள் பிறந்த அந்த கணம் நான் கொண்ட ஒரு நிறைவான சந்தோசம் இதுவரை திருப்பி அனுபவிக்கவில்லை.

நான், விஜி ராம், கோவை வசிப்பிடம், கடந்த ஜனவரி வரை OJASVI என்ற பெயரில் திருப்பூரில் பெண்கள் ஆடையகம் ( சுடிதார் ஷோ ரூம்) வைத்திருந்தேன். மேலும் மிகுந்த விருப்பத்துடன் SAP CONSULTANT ஆனேன். எல்லாமே கடந்த காலத்தில் குறிப்பிட காரணம் என் குழந்தைகள், அவர்கள் நலனுக்காக அதிலிருந்து வெளி வந்து விட்டேன். இப்போது வீட்டில் பொடிக் வைத்திருக்கேன். இரண்டு பெண் குழந்தைகள், வர்ஷா பெரியவள் 8 வயது, சிறியவள் விபாஷா (பப்பு) 4 வயது. என் இரண்டு குழந்தைகளும் யார் துணையும் இல்லாமல் முழுக்க என்னால் மட்டுமே வளர்க்கப்பட்டவர்கள். என் அம்மா உடல் நலம் சரியில்லாதவர் என்பதாலும் , என் மாமியார் டாக்டர் என்பதாலும், வீட்டில் மேலும் ஒரு குழந்தைகள் நல டாக்டர் இருந்ததாலும் இரு பிரசவங்களும் மாமியார் வீட்டில் தான் நடந்தது.

இதில் முக்கியமான விஷயம் என் இரண்டாவது பெண் pre term baby, இனிவரும் நாட்களை குழந்தைகளை பற்றி முடிந்த வரை எழுதுவேன். உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள், முடிந்தவரை எங்கள் வீட்டு டாக்டர்களிடம் கேட்டு சொல்கிறேன்.

நன்றி
விஜி

ஒரு அம்மாவின் குறிப்புகள் - 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சி........

குழந்தைகள் வளர்ப்பு பொதுவாக குழந்தைகளுக்கு உடல் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொண்டால், நாமும் நலம், குழந்தையும் நலம். அதில் குறிப்பாக அடிக்கடி குழந்தைகளிடம் பார்ப்பது சளித்தொல்லை. பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால் அதற்கான முழுப்பொறுப்பு குழந்தையின் அம்மாவே சேரும். சளிப்பிடிப்பதால் குழந்தைகள் சாப்பிடுவதும், சாப்பாட்டின் அளவும் ரொம்பவும் குறைந்துவிடும், தூக்கம் கெடும், மூச்சு பிரச்சனை போன்றவை ஏற்படும், சளிப்பிடிக்காமல் இருக்க..

1. அம்மா சரியான உணவை சாப்பிட வேண்டும். அதிக குளிர்ச்சியான உணவுகள் கூடாது. செள செள (பெங்களூர் கத்திரிக்காய்), பீரிக்கங்காய், புளித்த தயிர், சுடசாதத்தில் தயிர் விட்டு சாப்பிடுவது, வியர்வையோடு குளிப்பது, சுடத்தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் இரண்டையும் கலந்து குடிப்பது, வியர்வையோடு சில்லென்று தண்ணீர் குடிப்பது போன்றவையால் உடனுக்குடன் சளிப்பிடிக்கும். ஒவ்வாத குளிர்ச்சியான காய்கரிகள் சாப்பிடக்கூடாது. தலைக்கு குளித்தால் தலையை ஈரத்தோடு விட்டுவிடுவது போன்றவை.

2. கைவிரல்களின் நகங்கள் சுத்தமாக இருக்கவேண்டும். நகங்களே இல்லாமல் இருந்தால் நலம். ஒவ்வொரு முறை கழிவரை சென்று வந்த பிறகு சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

3. தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு எது செய்தாலும் கை கழுவிவிட்டு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

4. எல்லோரையும் குழந்தைக்கு முத்தமிட அனுமதிக்கக்கூடாது. இதை தடுப்பது அம்மாக்களில் கையில் மட்டுமே இருக்கிறது.

5. குழந்தைக்கு குளிக்க ஊற்ற அழைத்து செல்வதற்கு முன், தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். அதாவது தண்ணீர் பதமான சூட்டில் இருக்கிறதா? என்று பார்த்து பதமான சூட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், சோப்பு, ஷாம்பூ, (அ) சியக்காய், உடல் துடைக்க டவல் போன்றவை கைக்கு எட்டும் தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையை குளிக்க எடுத்த சென்ற பிறகு இந்த வேலை எல்லாம் செய்யக்கூடாது. அதே போல் குழந்தைக்கு உடலில் தண்ணீர் ஊற்றும் போது சின்ன அளவு குவலையை பயன்படுத்த வேண்டும். எங்கள் வீட்டில் ஆயா குழந்தைக்கு தண்ணீர் ஊற்ற டம்ளரை தான் பயன்படுத்துவார்கள். காரணம் அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சில சமயம் குழந்தை சுவாசிக்க கஷ்டப்படும். டம்ளரில் கூட அரை அரை டம்ளராக உள்ளங்கையால் டம்ளரின் வாயை பாதி அளவு மூடி வேக வேகமாக ஊற்றுவார்கள். பின் குளித்தமுடித்த கையோடு, டவலால் குழந்தையை உடனே சுற்றிவிடவேண்டும். 4-5 வயது வரை கூட இப்படி செய்வது நல்லது. தண்ணீரில் குழந்தைகளை ரொம்ப நேரம் விளையாடவிடுவதும் கூட சளித்தொல்லைக்கு காரணம்.

6. குளித்துமுடித்து பிறகு, பஞ்சை திரியாக்கி காது, மூக்கில் விட்டு தண்ணீர் இருந்தால் எடுத்துவிட வேண்டும். இது செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். சில சமயம் மூக்கில் விடும் போது குழந்தை மூச்சை நன்றாக இழுத்துவிட்டால் பஞ்சி உள்ளே சென்றுவிடும். அதனால் மிகவும் ஜாக்கறதையாக செய்ய வேண்டிய விஷயம். இது ஒவ்வொரு முறை குளித்த பிறகும் செய்யவேண்டும். நம்மை அறியாமல் காதிலோ மூக்கிலோ தண்ணீர் சென்று இருந்தால், இப்படி செய்வதின் மூலம் உடனுக்குடன் எடுத்துவிடலாம்.

7. தலை காயவைக்க நான் சாம்பிராணி புகை போடுவேன். ஆனால் இது எல்லா குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் ஒற்றுக்கொள்ளாது என்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் இப்படி புகை போட்டு தலைமுடியை காயவைப்பது தான் பழக்கம். அதனால் நவீனுக்கு எப்பவும் அப்படியே செய்வேன். இதுவும் டாக்டரின் ஆலோசனை கேட்டு உங்களுக்கும் குழந்தைக்கும் ஒற்றுக்கொள்ளும் பட்சத்தில் செய்யலாம். சாம்பிராணி புகையால் சளித்தொல்லை இருக்காது, கூந்தல் வாசனையுடன் இருக்கும்.

8. பொதுவாகவே நம் உடம்பில் எப்போதும் உள்ளுக்குள் சளி இருக்கும். அது இயற்கை. குளிக்க ஊற்றி முடித்தவுடன், ஆயா நவீனின் ஒரு மூக்கின் ஒரு துளையில் விரல் விட்டு அடைத்து இன்னொரு துளையில் வேகமாக ஊதுவார்கள். அவனுக்கு சளி இல்லை என்றால் கூட அவர்கள் அப்படி செய்யும் போது சளி வெளியே வரும். இதுவும் அதில் தேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அவன் வலிதாங்காமல் அழுவான், அவன் அழுவதை பார்த்து ஆயா இதைமட்டும் இனிமே நீ செய்யாதே என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவேன். :). எனக்காக ரொம்பவும் ஊதாமல் விட்டுவிடுவார்கள். :)

9. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வசம்பு, கண்டத்திப்பிலி, சாதிக்காய் இவற்றை விளக்கெண்ணெய் விட்டு எரியும் விளக்கில் சூடாக்கி கரியாக்கி, சின்ன சந்தனகல்லில் இழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுவார்கள். இதன் பலன், செய்முறை முழுமையாக தெரியாது, யாருக்காவது தெரிந்தால் எழுதி விளக்கவும்.

(மேற்க்கூறிய குறிப்புகள் அத்தனையும் ஆயா எனக்கு சொல்லிக்கொடுத்து தினப்படி நான் பழக்கிக்கொண்டது. )

அணில் குட்டி அனிதா : ... எனக்கு தூக்கம் வருது... :((

பீட்டர் தாத்தா :- Cough is very common in children. However, cough and cold medicines are not useful in children and can actually be harmful. In most cases, a cough that is unrelated to chronic lung conditions, environmental influences, or other specific factors, will resolve on its own.

Wednesday, April 22, 2009

சிசேரியனும் தாய்பால் பற்றாக்குறையும் - உண்மை என்ன?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்காகவே இந்த பதிவு!

பொதுவாகவே சிசேரியன் மூலம் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் போதிய அளவு இருக்காது என்ற கருத்து நிலவுகிறது :( இது முற்றிலும் தவறான கருத்து. நான் சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற்றேன்... எனக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டதும் இல்லை... நானும், என் தாயாரும், என் அத்தையும்(மாமியார்) அப்படி ஒரு நிலை உண்டாகவிட்டதும் இல்லை.

இப்படி ஒரு தவறான கருத்து இருப்பதற்குக் காரணம் சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள். நான் அப்படிலாம் இல்லைங்க... மயக்க மருந்து கொடுத்தாலும் குழந்தையை பார்க்க விழித்தே இருந்தேன் அறுவை சிகிச்சையின் போது கூட :) சரி என் மொக்கை வேண்டாம் மேட்டருக்கு வருவோம்... அப்படி மயக்கத்தில் இருப்பாதால் குழந்தைக்கு பால் கொடுப்பதில்லை.. இங்கு தான் துவங்குகிறது பால் பஞ்சம்.

சீம்பால் என்ப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்... குழந்தை வெளியே வந்ததும் வரும் முதல் பால் குழந்தை ஆயுட்கால நோய் எதிர்ப்பு கேரண்டி மாதிரி... தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட இருக்கும் பெண் எப்படியாவது அந்த குழந்தை பால் குடிக்க வழி செய்ய வேண்டும்... பிறகு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் நன்கு பால் கிடைக்கும்... அதை விடுத்து பால் குரைவாக தான் இருக்கிறது, குழந்தைக்கு குடிக்கத் தெரியவில்லை என்றெல்லாம் சாக்கு சொல்லி புட்டி பால் கொடுத்து குழந்தையின் எதிர்கால உடல்நிலை குறைகளுக்கு வித்திடக்கூடாது! உயிரையே கொடுத்து செத்து பிழைத்து நம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நாம் பால் கொடுப்பதற்கு யோசிக்கலாமா?

தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்! உங்களுக்கு கற்றுப் பழகாமல் எதையும் எடுத்தவுடன் திறமையாக செய்யமுடியுமா? அப்படித்தான் பிறந்த குழந்தையும்... அப்போது பிறந்த குழந்தைக்கு பால் குடித்து குடித்துப் பழகினால் தான் சரியாக குடிக்கத் தெரியும்... நீங்களும் பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகும்.

ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துகள் மற்றும் விட்டமின்கள் மாறிக் கொண்டே இருக்கும்... அதனால் 6மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே கொடுக்கலாம்... குழந்தைக்கு பிடித்த எளிதில் செரிக்கக் கூடிய தூய்மையான உணவு இது! 7வது மாதத்தில் இருந்து மற்ற உணவுகளை சிறிது சிறிதாக துவங்கி பழக்கப் படுத்தலாம்! குறைந்தபட்சம் 1வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இரு விதமான சிக்கல் ஏற்படும்; எடை அதிகரித்தல் அல்லது குறைதல்... இரண்டுமே பால் கொடுப்பது முடிந்ததும் சரியாகிவிடும். பால் கொடுப்பது தாய்க்கு பிற்காலத்தில் கேன்சர் வருவது, எலும்பு தேய்வது போன்றவற்றைத் தவிர்க்கும்.

சிசேரியன் அதனால் பால் போதலை என்று மட்டும் சொல்லாதீர்கள்! போன பதிவில் கவிதா அவர்கள் கூறிய உணவு மற்றும் நான் கூறும் இந்த உணவுகளை சேர்த்து பாருங்கள்...

1. பூண்டு
2. கீரைகள்
3. கத்திரிக்காய்
( கவிதா அவர்களின் கருத்தினை ஏற்று கத்தரிக்காய் வேண்டாம் அவர் கூறுவது சரிதான்)
4. கேரட்
5. டபுள் பீன்ஸ்
6. ஓட்ஸ்( உடனடிப் பலனுக்கு)
7. பிரட்/ரஸ்க் (உடனடிப் பலனுக்கு)
8. தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்
9. பால் அதிகம் குடிக்க வேண்டும்
10.சுறா மீன் மற்றும் அனைத்து மீன் வகைகள்
11.தயிர்

இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்.
தயவு செய்து புட்டிபால் கொடுக்காதீர்கள்.

அம்மாக்களுக்கு ஒரு அம்மாவின் குறிப்புகள்....

அம்மாவாக ஒரு சின்ன அறிமுகம் செய்துக்குறேன்..! எனக்கு ஒரே மகன் , பெயர் நவீன். அவனை எந்த /யார் உதவியும் இன்றி தனியாக வளர்த்தேன் என்பது என் வாழ்க்கையின் சாதனையாகவே நினைக்கிறேன். மூன்று மாதங்கள் வரை ஆயா துணை இருந்தாலும் அவரின் வயது காரணமாக அவரால் ரொம்பவும் குழந்தையை கவனித்து க்கொள்ள முடியாது. நானே அவர்களுக்கு ஒரு குழந்தை என்பதால் என்னை கவனிப்பதில் அவரின் கவனம் இருந்தது. ஆயாவின் நேரடி கவனிப்பில் அந்த மூன்று மாதங்கள் இருக்கும் போதே எப்படி எல்லாம் குழந்தையை வைத்துக்கொள்ள வேண்டும், என்னுடைய & குழந்தையின் உணவு பழக்கம், குளிக்க ஊற்றுதல், குறிப்பாக தலைக்கு ஊற்றுதல், என் மற்றும் குழந்தையின் தூக்கம், தாய்ப்பால் போன்ற நிறைய குறிப்புகளை என்னில் பதியவைத்துக்கொண்டேன். பின்பு எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தேவைப்படும் போது கடிதம் எழுதி ஆயாவிடம் கேட்டுக்கொள்வேன். அப்போதும் அவர் எனக்கு கொடுக்கும் குறிப்புகள் உணவும் , தூக்கம் சம்பந்தமாகவே இருக்கும்.

ஆயாவின் ஒரு சின்ன அறிவுரையோடு ஆரம்பிக்கிறேன். "உணவே மருந்து !! எந்த அளவு நீயும் குழந்தையும் ஒழுங்கான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து சாப்பிட்டு வருகிறீர்களோ.. .அந்த அளவு நீங்கள் டாக்டருக்கு பணம் கொடுக்க வேண்டாம், டாக்டருக்கு கொடுக்கும் பணத்தை உணவாக மாற்று !! "

இந்த வரிகள் இப்போதும் எனக்குள் உள்ளது, சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு எல்லாம் எல்லாம் என்னையும் சரி நவீனையும் சரி டாக்டரிடம் போகாமல் இருக்க தேவையானவற்றை வீட்டிலே செய்துக் கொள்ள பழகிக்கொண்டேன். உடல் பிரச்சனைகள் குறிப்பாக நவீனுக்கு வராமல் பார்த்துக்கொள்ள ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொள்வேன். அவற்றில் சில

1. சுத்தமான தண்ணீர்
2. விளையாடிவிட்டு வந்தவுடன் கை, கால் கழுவுதல், அல்லது குளித்தல்
3. கொசுக்கடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இதற்கு ரொம்பவும் சிரமப்பட்டேன் எனலாம்.
4. வேளைக்கு தகுந்த, தேவையான உணவு (நேரம் தவறாமல் எப்படியும் கொடுத்துவிடுவேன், இதற்காக அடுத்தநாள் உணவு என்று எழுதி வைத்து தயார் செய்ய வசதியாக்கி க்கொள்வேன், நேரத்திற்கு ஒரு லிஸ்ட் எழுதி வைத்துக்கொள்வேன்)
5. உடம்பை கஷ்டப்படுத்தாத ஆடைகள், பொதுவாக மெல்லிய பருத்தி ஆடைகள், தவிர்ப்பது நைலான், நிறைய சிமிக்கி வேலைபாடுகள் உள்ள ஆடைகள், மிகவும் இறுக்கமான ஆடைகள்.
6. சுத்தமான படுக்கை, படுக்கை பொதுவாக குழந்தைகளுக்கு வெள்ளை நிறத்தில் கவர் போட்டு இருக்க வேண்டும், அப்போது தான் பூச்சி, எறும்பு போன்றவை இருந்தால் தெரியும்.
7. நேரத்திற்கு சரியான தூக்கம்
8. ஆடைகள் துவைக்கும் போது , கிருமி நாசினி (டெட்டால்) யை கலந்து உலர்த்துவேன். தலையணை உறைகள், பெட் கவர்கள், உள்ளாடைகளை வாரம் ஒருமுறையாவது சுடத்தண்ணீரில் கொதிக்க வைத்து துவைப்பது.

உணவு முறைகள் :-

தாய்ப்பால் :- தாய்ப்பாலை விட சிறந்த உணவு இல்லை. குழந்தைக்கு தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை அந்த குழந்தையின் வாழ்நாள் முழுதும் கொடுப்பதும், நல்ல திடமான தேக ஆரோக்கியத்துடன் இருக்க இது தான் அடிக்கல் எனலாம். குறைந்தபட்சம் 1 வருடம் அதிகபட்சம் அவரவரின் விருப்பத்தை பொருத்தது. இப்போது எல்லோரும் வேலைக்கு செல்வதால் இது எந்த அளவு சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் அறிய
http://www.indiaparenting.com/diet/data/diet23_03.shtml
http://www.indg.in/health/child-health/benefits-of-breastfeeding
http://www.babycenter.com/0_how-breastfeeding-benefits-you-and-your-baby_8910.bc

தாய்ப்பால் கொடுக்கும் தாயிக்கான சிறந்த உணவுகள் :-

1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வர வாய்ப்புகள் அதிகம்.
2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும். (கண்டிப்பாக.)

குழந்தைகளுக்கான உணவு:-

இது 7 மாதங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இருப்பினும் உங்களின் குழந்தை டாக்டரிடம் கலந்து ஆலோசித்து பிறகு கொடுங்கள். நவீனுக்கு டின் ஃபுட் எதுவுமே கொடுக்கவில்லை. கொடுக்கக்கூடாது என்று தவிர்த்துவிட்டேன் எனலாம். அதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் சத்துமாவு கஞ்சி கொடுப்பேன்.

சத்துமாவு கஞ்சி :-
பச்சரசி : 1/4 கிகி
சம்பா கோதுமை : 1/4 கிகி
கேழ்வரகு : 1/4 கிகி
சோளம் : 100 கி
பார்லி : 50 கி
கம்பு : 50 கி
சுக்கு : சுண்டு விரல் அளவு 3
ஏலக்காய் : 5
பொட்டுகடலை : 200 *
முந்திரி : 200 *
பாதாம் : 200 *

இதில் * இட்டதை வீட்டில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள், மீதமுள்ளதை நன்கு கழுவி சுத்தம் செய்து, காயவைத்து மிஷினில், அரிசி அரைத்த பிறகு இதை கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள், பிறகு வீட்டில் அரைத்து வைத்ததை இதனுடன் கலந்து , வயதிற்கு தகுந்தார் போன்று தேவையான அளவு எடுத்து கஞ்சி காய்த்து, பால் , சர்க்கரையுடன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

தினமும் குழந்தையின் உணவு பட்டியலில் சேர்க்கவேண்டியவை

கீரை :- தினமும் ஒரு கீரை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்,
முட்டை :- தினம் ஒரு வித சுவையில் செய்து கொடுங்கள்
சுண்டல் : ஏதாவது ஒரு சுண்டல் தினமும் ஒரு வேளை இதை கொடுக்கலாம்
பசும் பால் : - ஏதோ ஒரு வகையில் இதுவும் உள்ளே செல்ல வேண்டும்
சீரக தண்ணீர் : வெறும் தண்ணீர் கொடுப்பதற்கு பதில் சீரகம், காய்ந்த திராட்சை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து (திராட்சையை நசுக்கி விடவும்) குழந்தைகளுக்கு இதையே கொடுத்துவந்தால், உணவு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
பிஸ்கட் : க்ரீம் இல்லாத பிஸ்கட் கொடுக்கலாம் (க்ரீம் இருப்பவற்றை குழந்தைகளுக்கு தயவு செய்து கொடுத்து பழக்கவேண்டாம்)
வத்தல் : கடையில் வாங்குவதாக இருந்தால் கலர் வத்தலாக இல்லாமல், வெள்ளையாக இருப்பதை மட்டும் வாங்கி பொரித்து கொடுக்கலாம் வீட்டில் செய்தால் குழந்தை சாப்பிட வசதியாக அதிக பச்சைமிளகாய் சேர்க்காமல் செய்து வைத்து கொடுக்கலாம்.

இன்றைக்கு இதோடு.. இன்னும் தொடர முயற்சிக்கிறேன்...

வாய்ப்பு கொடுத்த முல்ஸ்' க்கு அன்பு முத்தங்கள்.. :)

அணில்குட்டி அனிதா : அம்மணி என்ன இப்ப எல்லாம் அவங்க வீடு தங்காம வீடு வீடா போக ஆரம்பிச்சிட்ட்டான்ங்க..... வெயில் அதிகமா போச்சோ.. ஸ்ஸ் ஒரு வீடே தாங்கமுடியாம இருக்கேன்.. இதுல இது வேற.... அதுவும் மாட்டினது பாவும் சின்ன புள்ளைங்க... அம்மாங்களா. .சாக்கறதை... அம்மணி சொல்றாங்களேன்னு நீங்களும் அப்படியே எதையும் செய்துபிடாதீங்க...

பீட்டர் தாத்ஸ் :- God could not be everywhere and therefore he made mothers."

நமது முதல் சிறப்பு விருந்தினர் - Super Mom!!!

"பார்வைகள்" கவிதா! அறிமுகம் தேவையா என யோசிக்கிறேன்! புகைப்படம், பாடல், கதை, சுவையான சமையல் குறிப்புகள் (பத்மாஸ் கிட்சன்) மற்றும் மகுடமாக கேப்பங்கஞ்சி என்று பல அவதாரங்கள் எடுப்பவர்! அணிலு, பீட்டர் தாத்ஸ் என்று பன்முகம் கொண்டவர்!நமது "அம்மாக்கள் வலைப்பூ"க்களில் சிறப்பு விருந்தினராக குழந்தை வளர்ப்பு மற்றும் அம்மாக்கள் உலகோடு சம்பந்தப் பட்டதாக பதிவுகள் எழுத ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. வாங்க கவிதா அவர்களே...உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்!! ரெடி..ஸ்டார்ட் மீஜிக்!!



பி.கு: அம்மாக்கள் வலைப்பூவில் விருந்தினர் இடுகை எழுத விரும்புவோர் தனிமடலிடவும்.
பரிந்துரைக்க விரும்புவோரும் கொடுக்கப் பட்டுள்ள இ-மெயில் ஐடி-க்கு மடலிடலாம்! பொருள் பெற்றோர் மற்றும் குழந்தை சம்பந்தப் பட்டதாக மட்டுமே இருத்தல் வேண்டும்!

Tuesday, April 21, 2009

புத்திமான் பலவான்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் படித்தேன். நல்ல நகைச்சுவையுடன் சிறு சிறு கதைகளும் நல்ல கருத்துகளும் கொண்டிருந்தது புத்தகம். பிரதாப முதலியார் தனது சரித்திரத்தை நகைச்சுவையுடன் நயம்பட கூறியிருப்பார். அதில் நான் இரசித்த பிரதாப முதலியாரின் அனுபவம் ஒன்று என் குழந்தைகளும் இரசித்ததால் "கதை நேரத்தில்" என் மொழியில்....

ஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்குள் நுழைந்தான். அவனது செருப்புகள் பிய்ந்து போனதால் அங்குள்ள ஒரு செருப்பு விற்பவனிடம், "நீ எனக்கு செருப்பு தந்தால் நான் உனக்கு சந்தோஷம் தருகிறேன்", என்றான். செருப்பு விற்பவனும் செருப்பு தந்தான். வழிபோக்கன் ஒரு பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிபோக்கன் ஐந்து பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான்.இப்படியே நூறு பணம் கொடுத்தும் செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிப்போக்கன் இதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாது என்றான். ஆனால் செருப்பு விற்பவனோ "நீ எனக்கு சந்தோஷம் தருகிறேன் என்று கூறினாய், எனவே சந்தோஷம் கொடு", என்றான். இருவர் பிரச்னையும் தீராததால் அரசரிடம் செல்ல முடிவெடுத்தார்கள்.

அரசனிடம் போகும் வழியில் சத்திரம் ஒன்றில் தங்கினார்கள். அங்கு சிலர் சீட்டாட்டம்
ஆடினார்கள். சீட்டு ஆடும் பொழுது பந்தயம் வைத்து தோற்றவர் ஜெயித்தவருக்கு பொருள் கொடுக்குமாறும் விளையாடுவர். எனவே வழிப்போக்கன் அவர்களிடம் "என்ன பந்தயம்?" என்று வினவினான். அவர்கள் "சும்மா" என்றார்கள். வழிப்போக்கனும் பந்தயம் இல்லை என்றெண்ணி கொஞ்ச நேரம் விளையாடினான். வழிப்போக்கன் விளையாட்டில் தோற்றுப் போனான். உடனே சத்திரத்துக்காரர்கள் "சும்மா கொடு" என்று அவனைப் பிடித்துக் கொண்டார்கள். எனவே அவர்களும் அவனுடன் அரசரிடம் செல்ல சேர்ந்து கொண்டார்கள்.

போகும் வழியில் ஒரு குடிசையில் இருந்து நல்ல சமையல் வாசனை வந்தது, வழிப்போக்கன் அதன் வாசனையை இரசித்து மூச்சை உள்ளிழுத்தான். உடனே சமையற்காரன் "எனது சமையலை முகர்ந்து உன் வயிற்றை நிரப்பிக் கொண்டாய், எனக்கு பணம் தா" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

போகும் வழியில் குருடன் ஒருவன் வந்து "நேற்று என்னிடம் நல்ல கண்ணைக் கடன் வாங்கி குருட்டுக் கண்ணைக் கொடுத்தாயே, என் நல்ல கண்ணைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான். அது போல் ஒரு முடவனும் ""நேற்று என்னிடம் நல்ல காலைக் கடன் வாங்கி நொண்டிக் காலைக் கொடுத்தாயே, என் நல்ல காலைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

எல்லோரும் அரசனிடம் வந்தார்கள். அரசன் வழக்கை விசாரித்தான். இந்த விசித்திர வழக்கை காண ஊரில் எல்லோரும் வந்தார்கள். முதலில் அரசன் செருப்பு விற்றவன் வாதத்தைக் கேட்டான். பின் அவனிடம் "நான் அரசனாக இருப்பதில் உனக்கு சந்தோஷமா?" என்றான். செருப்பு விற்றவன் இல்லையென்றா சொல்ல முடியும், "சந்தோஷம்" என்றான். உடனே அரசன் "அந்த சந்தோஷத்தை வைத்துக் கொள் , உனது பிரச்னை முடிந்தது" என்று கூறிவிட்டான்.

அடுத்து சீட்டாட்டக்காரர்களைப் பார்த்து ஒரு குவளையைக் காட்டி "இதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார். அவர்களும் "ஒன்றுமில்லை, சும்மாதான் இருக்கிறது" என்றனர். "சரி, அந்த சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அரசர் கூறிவிட்டார்.

பின் அவர் சமையற்காரனை விசாரித்தார். வழிப்போக்கனிடம் சில காசுகள் வாங்கி ஒரு பையில் போட்டு குலுக்கினார். சமையற்காரனிடம், "இந்த காசுகளின் சத்தம்தான் உனது சமையலின் வாசனைக்கான தொகை" என்றி தீர்ப்பளித்தார்.

பின் குருடனையும் முடவனையும் விசாரித்தார். குருடனிடம் "உன் குருட்டுக் கண்ணைக் கொடு, அவன் நல்ல கண்ணைத் தருவான்", என்றார். குருடன் "என்னால் என் குருட்டுக்கண்ணை எடுக்க முடியாது" என்றான். அரசர் "நான் எடுக்கவா " என்றார். அவன் "எனக்கு இந்த கண்ணே போதும் என்று கூறிவிட்டான்". இதே போல் முடவனிடமும் "உன் நொண்டி காலைக் கொடு, அவன் நல்ல காலைத் தருவான்" என்று கூற முடவன் "எனக்கு நொண்டி காலே போதும்" என்று கூறிவிட்டான்.

எல்லோரும் அரசனின் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்தார்கள்; "புத்திமான் பலவான்" என்பது உண்மையே என்று மகிழ்ந்தார்கள்.

Thursday, April 9, 2009

மாண்டிசோரி புத்தகம்

சந்தனமுல்லையின் கூற்றுக்கிணங்க, மாண்டிசோரி புத்தகம் "A montessori mother" by Dorothy Canfield Fisher download செய்வது பற்றிய தகவல் இங்குள்ளது.

Wednesday, April 8, 2009

டான்கிராம் (Tangram)

Floor puzzle, peg puzzle மாதிரி இல்லாமல் புது வகையான பஸில் தேடிய பொழுது என் கவனத்திற்கு வந்தது டான்கிராம். பல பேருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு புதிதாக இருந்ததால், என்னைப் போல் தெரிந்திராத பெற்றோருக்குத் தெரிவிக்கவே இப்பதிவு.டான்கிராம் பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்லாது கணிதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. It is good for problem solving and pattern design skills.

இந்தப்பழமையான விளையாட்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெறும் ஏழு பீஸுகள் மட்டுமே உள்ளன. அதை வைத்து ஆயிரத்திற்க்கும் மேல் உருவங்கள் உருவாக்கலாம். இதன் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. ஏழையும் உபயோகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பீஸும் அடுத்ததைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றின் மேல் ஒன்று இருக்கக்கூடாது. அதில் உருவான உருவங்களைக் காண வியப்பாக இருக்கிறது. பார்க்க எளிதாகத் தோன்றினாலும் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.

இதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரடாக்ஸ்(Paradox). A paradox is a statement of conclusion that seems self-contradictory but is really true. பாரடாக்ஸுக்கு ஒரு பிரபலமான உதாரணம் "I always lie". பொய் சொல்லுவது உண்மையாக இருந்தால், இந்த வாக்கியம் மூலம் உண்மையைக் கூறுவதால் contradictory. டான்கிராமில் நிறைய paradox உருவாக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று.



இரண்டு சதுரமும் ஒரே அளவிலான ஏழு டான்கிராம் பீஸுகளால் ஆனது என்றால், ஏன் இரண்டாவது சதுரத்தில் இரண்டு செவ்வகங்களில் இல்லை?

சற்றே பெரிய குழந்தைகளுக்கு (ஏழு வயதிற்கு மேல்)அறிமுகப்படுத்தலாம்.

டான்கிராம் பீஸுகள் செய்யும் முறை
http://tangrams.ca/inner/foldtan.htm

குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த
http://www.enchantedlearning.com/crafts/chinesenewyear/tangram/

குழந்தைகள் ஆன்லைனில் விளையாட
http://pbskids.org/cyberchase/games/area/tangram.html

Tuesday, April 7, 2009

ஆத்திச்சூடிக் கதைகள் (1.அறம் செய விரும்பு )

தினம் ஒரு கதை சொல்வதாகச் சொல்லி நாட்கள் பல கடந்த நிலையில் இன்று என் சோம்பேறித் தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு முதல் கதையை ஆரம்பித்திருக்கிறேன்.இன்று மெட்ரிக் ...சி.பி.எஸ்.சி எனத் தேடி தேடி நம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நேரத்தில் தமிழ் இரண்டாம் மொழியாகி விடுவது சகஜம் .

ஆத்திச்சூடி மறக்கக் கூடாதல்லவா? ஒளவைப் பாட்டியும் தான் .

சரி இனி கதைக்குப் போகலாம்.

இது நான் பாப்புவுக்கு சொன்ன கதை ...கொஞ்சம் முன்னே..பின்னே இருந்தாலும் படித்து கருத்தை சொல்லுங்கள்

சினேகா எல்.கே.ஜி படிக்கிறாள். சிநேகாவுக்கு அன்று பள்ளி விடுமுறை . வெள்ளிக் கிழமை தான்...ஏதோ அரசு விடுமுறை தினம் அது ;அப்பாவுக்கும் விடுமுறை தான்.இரவு உணவுக்கு சரவணபவன் செல்வதென முடிவு செய்தாயிற்று. அம்மா காலையில் செய்த இட்லி மற்றும் சாம்பார் மீதம் இருந்ததை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடினாள்.

அப்படியும் கொஞ்சம் புடலங்காய் கூட்டு மீதம் ஆனாதை உள்ளே எடுத்து வைக்காமல் அப்படியே பொட்டலம் கட்டி குப்பையில் போட்டாள்...புடலங்காய் கூட்டு மட்டும் எப்போது செய்தாலும் சரி செய்யும் அந்த ஒரு நேரம் மட்டுமே உண்பார்கள் ...கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதி எல்லாம் குப்பைக்கே .
சிநேகா பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா புடலங்காய் கூட்டை குப்பையில் கொட்டுவதை ;

மாலையில் அப்பாவோடு பழம் வாங்க கடைக்குப் போனாள் .

ஒரு டஜன் மலை வாழைப் பழங்கள் 35 ரூபாய்கள் என வாங்கினார்கள் ,ஆப்பிள் கிலோ 80 ரூபாய்கள் .வீட்டிற்கு வந்தார்கள்...அம்மா வெளியே பக்கத்து வீட்டு பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.பாட்டி பழப் பையை பார்த்து விட்டு வாழைப் பழம் டஜன் எவ்ளோ சிநேகா குட்டி என்றார் .35 ரூபாய்கள் என்றதும் "கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் உங்களை...நேத்து நைட் எம்பொண்ணு அதே கடைல தான் 28 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தாளே!?ஒரே நாள்ல 7 ரூபா கூட்டி விக்கிறானே?! என்று அங்கலாய்த்தார்.

சிநேகா இதையும் பார்த்துக் கொண்டிருந்தாள் .

மணி 6.30 தைத் தாண்டியதும் அம்மா மளிகைச் சாமான் வாங்க ரிலையன்ஸ் போகவேண்டும் ...அதற்கு பின் ஒரு எட்டு மணிக்கு சரவணபவன் போகலாம் என்றதும் அப்பா சரி என்று ரிலையன்ஸ் அழைத்துக் கொண்டு போனார். விலை சகாயமோ இல்லையோ ...அம்மா தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்தபின் தேவையற்றதும் சில பொருட்களின் அழகில் மயங்கி அதையும் எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டாள்...சிநேகா டி.வி விளம்பரத்தில் பார்த்த மயக்கத்திலும் குஷியிலுமாக "கிண்டர்ஜாய் " ஒன்று அல்ல இரண்டு வேண்டும் என அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள் .

எட்டு மணிக்கு சரவணபவன் உள்ளே நுழைந்தார்கள் .
ஆளுக்கு ஒரு சாம்பார் இட்லி ...சினேகாவுக்கு ஒரு செட் சூடான இட்லி ...ஒரு பிளேட் ரவா கேசரி ...கடைசியில் சினேகாவுக்கு ஒரு ஸ்ட்ரா பெர்ரி ஐஸ் கிரீம் ...அப்பாவுக்கும் ...அம்மாவுக்கும் மாதுளம் பழ ரசம் ,முடித்துக் கொண்டு பில்லுக்கு காத்திருந்தார்கள்.பில்லுக்கு முன்பு ஒரு தட்டில் கல்கண்டு...வாசனைப் பாக்குத் தூள் ,சோம்பு என்று நீட்டப் பட்டது. சினேகா கல்கண்டையும்...சோம்புவையும் கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு என டிஸ்யூ பேப்பரில் வேறு எடுத்து வைத்துக் கொண்டாள் .பரிமாறிய சிப்பந்தி சிநேகவைப் பார்த்து சிரித்தார்.

பதிலுக்கு சிரித்து விட்டு இது நான் வீட்ல போய் சாப்பிடுவேன் என்றாள்.

பில் செலுத்தி வெளியில் வந்தார்கள் .

ரோட்டோரம் நிறுத்தி இருந்த வாகனத்தை எடுக்க செல்லும் போது அங்கே ஒரு வயதான பெரியவர் ...ஆதரவற்ற எளியவர் போலும் காசுக்கு கை நீட்டினார். முதலில் அப்பாவோ...அம்மாவோ கண்டு கொண்டதாகக் காணோம் .

அந்தப் பெரியவர் நெருங்கி வந்து கேட்கவே அப்பா சட்டைப் பாக்கெட்டை துழாவி விட்டு சில்லறை காசு இல்லையே என்று வண்டியை எடுப்பதில் முனைந்து விட்டார்.அம்மாவோ "வெள்ளிக் கிழமை " இன்னைக்கு போட வேண்டாம் என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.சினேகா அப்பாவையும் ..அம்மாவையும் மாறி..மாறி ஒருமுறை பார்த்தாள்,பிறகு அப்பாவின் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அந்த முதியவரின் கையில் போட்டு விட்டு அப்பாவையும்...அம்மாவையும் பார்த்து சிரித்தாள் .

ஒரே செல்லப் பெண் தான்...ஆனாலும் அப்பாவுக்கும் ...அம்மாவுக்கும் திடுக்கென்று தான் இருந்தது இவளது செயல் அங்கே ஒன்றும் பேசாமல் வீடு வந்த பின் "ஏண்டா அப்படி செஞ்ச என்றனர் ஒருவர் மாற்றி ஒருவர்.

சினேகாவோ ...அம்மா ...வாழைப் பழக் கடையில எட்டு ரூபாய் கொஞ்சம் புடலங்காய் கூட்டு ...என்னோட கிண்டர்ஜாய்...அப்புறம் கொஞ்சம் ஸ்நாக்ஸ் ...கூல் ட்ரிங்க்ஸ் ...ஐஸ்-கிரீம் ...எல்லாம் வாங்கினோம் இல்லம்மா ...பாவம் அந்த தாத்தா கை நீட்டிக் கேட்கறார் இல்ல?! அவர் கிட்ட இருந்தா கேட்க மாட்டார் இல்ல? பசிக்குது போல ...பாவமா இருந்துச்சா அதான் டாடி பாக்கெட்ல இருந்து பத்து ரூபாய் எடுத்துப் போட்டுட்டேன்.

எங்க தமிழ் மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கம்மா போன வாரம் "அறம் செய விரும்பு" ன்னு அது இதான மம்மி !!!

நீ படிக்கலையா ஸ்கூல்ல !!!

"ஆத்திச்சூடி அறம் செய விரும்பு "
ஒரு கணம் திக்கித்து நின்ற அம்மாவும்...அப்பாவும் மறு நொடியில் கல கலவெனச் சிரித்தவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .சினேகா கார்ட்டூன் பார்க்க தொடங்கினாள்.

என்ன செலவு பண்ணாலும் இந்தக் காலத்து குழந்தைங்க படு உஷார் தான் !!!

அப்போ புரியுதுங்களா "அறம் செய விரும்பு"

Thursday, April 2, 2009

குழந்தை வளர்ப்பும்... பெற்றோர் பொறுப்பும்...!

இந்த பதிவினை குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் செயல்கள் பற்றிய பதிவாகவும்,
அவர்கள் எதிர்காலம் பற்றிய பதிவாகவும் நினைத்துக் கொண்டு நான் துவங்குகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரே பையன், ஒரே பெண் என்று செல்லம் அதிகமாகக் கொடுத்தே வளர்க்கிறார்கள். செல்லம் கொடுப்பது தவறல்ல; ஆனால் அதோடு பொறுப்பு, தன்னிச்சையாக தன் காரியங்களை செய்து கொள்ளுதல், பிறருக்குக் கேட்காமலேயே சென்று உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுத்தருவதோடு சிறு சிறு வீட்டு வேலை முதல் சமையல், துணி துவத்தல் என அனைத்து வேலைகளையும் செய்யப் பழக்குதல் அவசியம்.

இந்த காலத்தில் ஆண்(அ)பெண் எந்த குழந்தையானாலும் எல்லா வேலைகளையும் செய்யப் பழகியிருத்தல் மிகவும் அவசியம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

நான் என் வயதையொத்த, என்னுடன் பழகிய, என்னுடன் படித்த என்று பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இன்னமும் அம்மா தான் தலை வாரி விட்டு உணவு ஊட்டிவிட்டு என அனைத்துமே அம்மா தான் செய்ய வேண்டும். தன் பெண்ணிற்கு பொறுப்பினை ஊட்டாமல் உணவு ஊட்டும் தாய் அங்கு அவரை அறியாமலேயே அவர் பெண்ணின் எதிர்காலத்தினை பாதிக்கும்படி செய்கிறார்.

இவ்வளவு ஏன் திருமணம் ஆன பிறகும் கூட பல பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்!
பெண்கள் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தினையே தாங்கி நிற்கும் தூண்கள்; குடும்பத்தினர் அனவருக்கும் தாயாக இருந்து தேவையானதை செய்யும் மிகப் பெரிய பொறுப்பு பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உள்ளது. ஆனால் தன் காரியங்களை செய்யவே தாயை எதிர்பார்க்கும் பெண் எப்படி வெளி உலகையும் சமாளித்து ஒரு குடும்பத்தினை தாங்கி நிற்கும் தூணாவள்.


ஆணுக்கும் இதே தான். தன் காரியங்களை தானே செய்து கொள்ள பெற்றோர் குழந்தை பருவம் முதலே பழக்கி விட வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அம்மாவை எதிர்பார்க்காமல் பள்ளி செல்லும் பருவம் முதல் சிறிது சிறிதாக தன்னிச்சையாக தன் வேலைகளை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து செல்ல மகன் என்று ஷூ பாலிஷ் செய்வது, டை அணிவிப்பதில் இருந்து தலை வாரி ஷூ மாட்டிவிடுவது வரை அம்மாவே எல்லாம் செய்தால் அந்த மகனுக்கு பொறுப்பு என்பது வராமலே போய்விடும்.

குழந்தைகளை இளம் வயது முதலே பொறுப்புள்ளவர்களாக இருக்கப் பழக்கிவிடுவது பெற்றோர்களின் முதற்கடமை. இன்றும் 2வயது மகனுக்கு வெளியில் வைத்து இடுப்பில் தூக்கிக் கொண்டே சாப்பாடு ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு.


குழந்தைப் பருவத்திலேயே தன் விளையாட்டு சாமான்களைப் பொறுப்புடன் அதன் இடத்தில் அடுக்கி வைப்பது, தன் துணிகளை தானே மடிக்கக் கற்றுத் தருவது, முக்கியமாக 1வயது முதலே குழந்தைகள் தானே தன் கையால் உணவு உண்ணப் பழக்கிவிடுவது, தானே குளிப்பது, உடையணிந்து கொள்வது முதல் , ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல், மரியாதை என அனைத்தையும் சிறு வயதிலேயே பழக்கிவிடுவது நல்லது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வரைபடங்கள் கூட அவர்கள் தன்னிச்சையாக செய்ய வேண்டும்.

பேரண்ஸ் கிளப் வலைப்பூவில் எப்படி குழந்தைகளை மாண்டிசோரி கல்வி மூலம் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எண்ணுகிறேன் :)

அதுமட்டுமல்லாமல் நடைமுறையிலும் இதனை தீஷூ நிகழ்த்திக் காட்டுகின்றார். இந்த வலைப்பூவை படித்ததும் அசந்துவிட்டேன். நன்றி தீஷு அம்மாவிற்கும் :)எல்லாரும் ஒரு முறை இங்கு சென்று வாங்க!


" ஓடி விளையாடு பாப்பா!...." என்னும் பாடல் வரிகள் சிறந்த குழந்தைகளை உருவாக்க உருவானவை என்றே எண்ணுகிறேன்!
குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்களானால் சிறந்த வீடும், ஊரும், நாடும் உருவாகும்.:)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger