Tuesday, April 27, 2010

அறிமுகம்...

வணக்கம்.... வணக்கம். நான் குந்தவை. என்னை பற்றி சொல்லுவதற்க்கு பெரிதாக ஒன்றும் இல்லைங்க. ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி?).

இந்த அம்மாக்களின் வலைபூவில் என்னுடைய முதல் பதிவு இது, அதனால் ஒரு கதை சொல்லி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இது சிறுவர்களுக்கான கதை என்றாலும் நாமும் இதை எப்போதும் நினைவில் வைத்து கொள்வது நல்லது என்பதால் பதிவிடுகிறேன்.


Peace begins with Justice.


ஒரு ஏழை பால் வியாபாரி தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் திடீரென்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டதால், கிராமத்தினர் அனைவரும் வந்து அந்த இரண்டுபேருக்கும் சொத்தை சமமாக பிரித்து கொடுத்தார்கள்.ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு பசு மாட்டை எப்படி பிரித்து கொடுப்பது என்று பிரச்சனை வந்தது. யாருக்கும் வழி தெரியவில்லை. கடைசியாக பசு மாட்டின் முன் பகுதி தம்பிக்கும் பின் பகுதி அண்ணனுக்கும் என்று முடிவு செய்தார்கள்.


பசியால் அந்த பசு மாடு கத்தும் போதெல்லாம்.... முன் பகுதியை சொந்தம்கொண்டாடிய தம்பி அதற்கு உணவு கொடுக்கும் பொறுப்பில் இருந்தான். பின் பகுதியை சொந்தம்கொண்டாடிய அண்ணனோ மேனி நோகாமல் பால் கறந்து ஜாலியாக இருந்தான். அதைப்பார்த்த தம்பிக்கு கோபம் வந்து ஊர் பெரியவர்களிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லை.

அண்ணனும் இந்த பிரச்சனைக்கு நியாயமான வழியை சிந்திக்காததால் கோபமடைந்த தம்பி அந்த பசு மாட்டுக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டான். அப்புறம் என்ன..... அண்ணன் பால் கறக்க போனால் பெரும் உதை தான் கிடைத்தது.


வேறு வழியில்லாததால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரம் அண்ணன் பால் கறந்து கொள்ளலாம், தம்பி சாப்பாடு போடவேண்டும் என்றும், அடுத்த வாரம் தம்பி பால் கறந்து கொள்ள அண்ணன் சாப்பாடு போட வேண்டும் என்று நியாயமாக ஒரு தீர்ப்பை தேர்ந்தெடுக்க இருவருள்ளும் அமைதி திரும்பியது.

நல்லாயிருந்தாலும் சொல்லுங்க... 'இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்குன்னு' நினைத்தாலும் சொல்லுங்க. சொல்லைன்னா இது மாதிரி கொடுமைகள் தொடரும்.

Saturday, April 17, 2010

குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!

மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!

பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்!
:-)

இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும்.
)

அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)

1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்

2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்

3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.

4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!


5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!

குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!


என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)

Thursday, April 15, 2010

Summer camp @ Blogdom!



ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.

2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )


1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்)
mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.

2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.

2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.

3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.

4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.

5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது
mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.

குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும்
நன்றிகள்!!

Thursday, April 8, 2010

குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ்

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நான் வந்தால் போதும்..கதவை திறக்க ஓடி வருவாள். உள்ளே நுழையும் முன், ”ஆபிஸிலே என்ன சாப்பிட்டே, லஞ்ச் பாக்ஸ்லே இருந்ததையெல்லாம் ஃபுல்லா சாப்பிட்டியா” என்று அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள். சென்ற வாரத்தில் ஓரு நாள் அவளது பையை எடுப்பதும் எதையோ எடுத்துப் பார்ப்பது பின் மறைத்து வைத்துக்கொள்வதுமாக இருந்தாள்.

'எனக்கும் காட்டு பப்பு, என்னது அது' என்றதற்கு 'நான் உன் ஃப்ரெண்ட் இல்ல, தேஸ்னா ஃப்ரெண்ட்” என்று மறைத்து வைத்துக்கொண்டாள். கலர்கலராக ஒரு பேப்பரில் ஏதோ வரைந்திருந்தது. ரொம்ப கேட்டால் ஓவராக பிகு பண்ணிக் கொள்வாள் என்று லூசில் விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து 'நான் உனக்கு மட்டும் காட்டறேன், அப்பாக்கு கிடையாது' என்று சொல்லிவிட்டு காட்டினாள். ஒரு அட்டையில் கேட்டர்பில்லர், மரம், பூ, தென்னை மரம் என்று குட்டி குட்டியாக படங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேஷ்னா, பப்புவுக்குத் தந்ததாம் அது. அவங்க அப்பா வரைஞ்சதும் தேஷ்னா கலரடிச்சு பப்புவுக்கு கிஃப்ட் கொடுத்தாளாம்.

வீட்டிலிருக்கும் பழைய டைரிகள் எல்லாம் இப்போது பப்பு வசம். எழுதுவது, வரைவது, பெயிண்டிங் அப்புறம் கிழிப்பது என்று எல்லாவற்றும் எளிது. திடீரென்று பேப்பர் கேட்கும்போது தேடி அலைய தேவையில்லை. அன்றிரவு படுக்கையில் பார்த்தால் பாதி படுக்கையை டைரியிலிருந்து கிழித்த பேப்பர்கள் நிறைத்திருந்தது. டைரி முன் அட்டையும் பின் அட்டையுமாக இளைத்திருந்தது. 'பப்பு என்னது இது..ஏன் இப்படி கிழிச்சு வைச்சிருக்கே' என்றதற்கு நாளைக்கு தேஷ்னாவுக்கு தருவதற்கு இவள் வரைந்துக் கொண்டிருக்கிறாளாம். எல்லாவற்றிலும் ஏதேதோ கிறுக்கல்கள். பேனாவால், க்ரேயான்ஸ்-ஆல்... 'அய்யோ..இதை எப்போ க்லீன் பண்ணி எப்போ படுக்கிறது' என்று ஆயாசமாக இருந்தது.

”போதும்,எடு பப்பு” என்று கெஞ்சியதற்கு பிறகு பெரிய மனசு பண்ணி எல்லாவற்றையும் அடுக்கி வெளியே எடுத்துச்சென்றாள். அடுத்த நாள் காலை லஞ்ச்பாக்ஸ் வைக்க பையை திறந்தபோது அந்த பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. இரவு பையில் வைத்துச் சென்றிருக்கிறாள் போல.

இது இப்போது தினமும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. தினமும் ஏதாவது பேப்பர் கொண்டு வருவதும், இவள் ஏதாவது ஆர்ட் ஒர்க் செய்து எடுத்துச் செல்வதுமாக! எல்லாம் தேஷ்னா,சுதர்சன்,கீர்த்தி, அர்ஷித் கைலாஷ்-க்கு கொடுப்பதற்காம். க்ரூப் இப்போ பெரிசாகிடுச்சுன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் எனது இந்த ஐடியாவிற்கு வித்திட்ட தேஷ்னாவிற்கு ஒரு தேங்ஸ்! :-)

இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. pen friends என்ற பெயரில் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

இதே பேனா நண்பர்கள் தங்களது டிராயிங் மற்றும் பெயிண்டிங்குகள், வண்ணங்கள் மூலம் தங்கள் உலகை பரிமாறிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுவும் குட்டீஸ்?!

ஒரு கடிதமாக இருக்கலாம் அல்லது புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தையாக இருக்கலாம் ஏன் கதையாகக் கூட!

உங்களுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் பத்து வயதிற்குள் குட்டீஸ் இருந்தால் எனக்கு ஒரு மடலிடுங்கள். ”குட்டீஸ் பேனா நண்பர்கள்” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு, தங்கள் குழந்தையின் பெயர்,வயதுடன் மின்மடலிடுங்கள்.மேலும் , gender preference இருந்தாலும் தெரிவியுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஆஃபர் உண்டு. எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதையும் குட்டீஸின் வயதைப் பொறுத்தும் கொண்டு மேட்ச் செய்து உரியவர்களிடம் தெரிவிக்கிறேன்.அப்புறம் என்ன..குட்டீஸ்-கள் டிராயிங்குகளை/
கடிதங்களை ஸ்கேன் செய்து மின்மடல் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்..அல்லது முகவரிகளைப் பெற்றுக்கொண்டு கடிதங்களாகவும்(surface mail) பரிமாறிக் கொள்ளலாம்..அது உங்கள் வசதி! என்ன சொல்றீங்க?

பதிவரின் குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குட்டீஸுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால், டிராயிங்/கடிதங்களை அனுப்பவும் பெறவும் ஆர்வமிருந்தால் mombloggers@gmail.com என்ற ஐடிக்கு மடலிடுங்கள். அடுத்த சனிக்கிழமை அறிவிப்புகள் வெளியாகும்.

இன்னும் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

(ஒன்றரை மாசம் லீவு..எப்படியாவது பொழுதை போக்கணும் இல்லே.. எது எப்படியாயினும், தேஷ்னாவுக்கும் பப்புவுக்கும் எனது அன்பும் நன்றிகளும்!)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger