Wednesday, August 19, 2009

The happy Hedgehog - புத்தகம்



The happy Hedgehog

வயது : 5 - 12 வயதுவரை
மொழி : ஆங்கிலம்


இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் தேர்வு செய்தேன், எந்தவொரு அபிப்ராயமுமில்லாமல். சமீப நாட்களாக பப்பு முள்ளம்பன்றி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அங்கிருந்த டீடெய்ல் மட்டும் பார்த்து வாங்கிவிட்டேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.


மிக்கோ என்பது அந்த முள்ளம்பன்றியின் பெயர். பூச்சி நண்பர்களும், நறுமணமுள்ள பூக்கள் நிரம்பியதுமான ஒரு அழகான தோட்டத்தில் வசித்து வந்தான். எல்லாச் செடிகளும் அவனுக்குப் பரிச்சயம். மூலிகைகளையுங்கூட அறிந்திருந்தான். மிக்கோவின் தாத்தா, இவனை இப்படியேவிட்டால் பகல் கனவு கண்டுக்கொண்டு எதையும் வாழ்வில் சாதிக்கமாட்டானென்று எண்ணினார். தோட்டத்தை விட்டு வெளியே சென்று மற்ற மிருகங்களைப் பார்த்து அவைகளைப் போல் சாமர்த்தியமாக, வேகமாக, பலமுள்ளவனாக இருப்பது எப்படியென்று கற்றுக்கொள் என்று அனுப்பிவிட்டார். வேகமாக ஓட பயிற்சியெடுக்கும் ஒரு ஆமை, புத்தகத்தை வைத்து மனப்பாடம் செய்யும் முயல், பாரமான கல்லைத் தூக்கி பயிற்சியெடுக்கும் கீரியை சந்திக்கிறான் மிக்கோ. ஆனால் இவர்களில் யாருமே அந்தந்த வேலையை செய்வதால் மகிழ்ச்சியடைவதில்லை என்று அறிந்துக்கொள்கிறான். தனக்கு அந்த தோட்டத்தில் வாழ்வதே மகிழ்ச்சியைத் தருகிறதென்று உணர்ந்து தோட்டத்திற்கு வந்துவிடுகிறான்.




இந்தக் கதை பப்புவின் வயதுக்கு அதிகம் என்றாலும் புத்தகத்தின் படங்களும்
சொல்லப்பட்ட நகைச்சுவை பாணியும் பப்புவிற்கு பிடித்திருந்தது. அடிக்கடி ரிப்பீட்டு செய்ய வேண்டும் இந்தக்கதையை. பிறரின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது மற்றவர்கள் செய்கிறார்களென்றக் காரணத்திற்காகவோ நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிடித்ததுப் போல நீ வாழ்வை தேர்ந்தெடுக்கலாமென்று சொல்லலாம்தானே, நம் குழந்தைகளுக்கு!

Tuesday, August 18, 2009

The mixed-up chameleon - புத்தகம்



The mixed-up chameleon - Eric Carle

வயது : 3-6
மொழி : ஆங்கிலம் & இந்தி
விலை : ரூ 175


எரிக்-இன் புத்தகங்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான், The very hungry caterpillar ஒன்றே போதும்! வழக்கம்போல எளிய கதை. தன் தோற்றத்தைக் குறித்தும், தனது சுவாரசியமற்ற வாழ்க்கையைக் குறித்தும் அதிருப்தியடைகிற ஒரு பச்சோந்தியே மெயின் கேரக்டர். தன்னால் நிறங்களை மாற்றிக்கொண்டு வாழ முடியுமென்று அறிந்திருக்கிறது. நாவை நீட்டி பூச்சிகளைப் பிடித்து உணவுண்கிறது. அதனால் பெரிதும் பயனில்லை என்று நினைக்கிறது.

ஒரு நாள் ஜூவிற்குச் செல்கிறது. அங்கு பல விலங்குகளைப் பார்க்கிறது. அந்த விலங்குகளின் உடலமைப்போல தனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமேயென்று எண்ணுகிறது. அப்படி எண்ணியதும் அது விருப்பப்படியே நடந்தும் விடுகிறது. ஃபெளமிங்கோவின் கால்களும், ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தும், நரியைப் போன்ற வாலும் கிடைக்கப் பெறுகிறது. இப்படி எல்லாமுமாக இருக்கும் நேரத்தில் ஒரு பூச்சி பறந்துச் செல்வதைப் பார்க்கிறது.மாற்றங்கொண்ட தோற்றத்தால் பச்சோந்தியால் பூச்சியைப் பிடிக்க இயலவில்லை. பூச்சியை பிடிக்க வேண்டுமானால் அது பழையத் தோற்றத்துக்கு திரும்ப வேண்டுமென்பதை அறிந்து பழைய பச்சோந்தியாக மாற விரும்புகிறது. அதன் விருப்பமும் நிறைவேறுகிறது.




வண்ணமிகு படங்களுடன், கொஞ்சமே கொஞ்சம் எழுத்துகள் இருக்கிற புத்தகங்களையே தேர்ந்தெடுப்பது எனது வழக்கம். அந்த வகையில், படங்களே இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம். பலவகையான விலங்குகளின் தனிச்சிறப்பம்சங்களை அழகாக விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நாம் நாமாக, நமதுத் தனித்தன்மையுடன் இருப்பதன் அவசியத்தையும், அழகையும் சொல்லாமல் சொல்கிறது. மற்றுமொரு கலக்கலான புத்தகம் எரிக்கிடமிருந்து!


வெளிநாட்டு பதிப்பு - போர்டு புத்தகம் எழுநூறு ரூபாய்கள் வரை. ஆனால், இதன் இந்திய பதிப்பு கரடி டேல்ஸ் மற்றும் அமரசித்ர கதாவிலிருந்துக் கிடைக்கிறது, ரூ 175-க்கு. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கதையின் வரிகள்.

சென்னைவாசிகளுக்கு : பெசன்ட் நகரில் words&worth என்று ஒரு கடை இருக்கிறது. சிறிய கடைதான். மிககுறைந்த விலையில் நல்ல புத்தகங்கள்,இந்திய பதிப்பில் கிடைக்கிறது.

Words & Worth
2nd Avenue, Indira nagar,
Besant nagar,
chennai.

Monday, August 17, 2009

Grizzly Dad - புத்தக விமர்சனம்



கதை : Grizzly Dad
மொழி : ஆங்கிலம்
வயது : 3-8 வயது வரை


ஒரு நாள் காலையில் அப்பா எழுவதற்கு மனமில்லாமல் எழுகிறார். எழும்போதே மூட் அவுட்!திரும்ப படுக்கைக்குச் சென்று விடுகிறார். குட்டிப்பையன் அப்பாவின் பொறுப்பில். அம்மா தங்கைகளைக் கூட்டிக்கொண்டு தங்கைகளை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றுவிடுகிறார். குட்டிப்பையன் அப்பாவை எழுப்புகையில், தன் அப்பா ஒரு பெரிய கரடியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான்!!அப்பா-கரடிக்கு முகம் கழுவ, ரெடியாக உதவி செய்கிறான். காலை உணவை இருவரும் அருந்துகிறார்கள். அப்பா, கரடியாக இருப்பதால் எல்லாவற்றையும் மேலே கீழே கொட்டி வீட்டை வீட்டை நாசமாக்குகிறார். பின்னர் சிறுவனும் அப்பா-கரடியும் சினிமாவுக்குப் போகிறார்கள், பின்னர் பார்க்கில் சென்று ஸ்கேட்டிங் பழகுகிறார்கள், கரடிக்கு ஸ்கேட்டிங் தெரியாததால் சிறுவன் கற்றுத் தருகிறான். கரடி சிறுவனுக்கு மரம் ஏறவும், ஒன்றுமே செய்யாமல் மரக்கிளையில் எபபடி இருப்பது என்றும் சொல்லித் தருகிறது. பின்னர் வீட்டுக்கு வந்து இருவரும் சாண்ட்விச் செய்து சாப்பிடுகிறார்கள். கரடி சிறுவனை கட்டியணைத்துக்கொள்கிறது. அந்த நொடியில் கரடி திரும்ப அப்பாவாகிவிடுகிறது! அம்மாவும் தங்கைகளும் வீடு வந்து சேர்கிறார்கள். வீடு குப்பையாக இருப்பதை பார்க்கும் அம்மா, இது வீடா அல்லது பன்றிகளின் கூடாரமா என்று கேட்கும் போது இருவரும் சுத்தம் செய்யக் கிளம்புகிறார்கள். அப்போது இருவருக்கும் பன்றிக்குட்டியின் வால் முளைத்து இருக்கிறது!! :-)




உணர்ச்சிகளை பற்றிய ஒரு எளிதான கதை. கதையில், பப்புவை மிகக் கவர்ந்த அம்சம் படங்கள். அப்பாவுக்குக் கோபம் இருந்தாலும், அதைச் சிறுவனிடம் வெளிக்காட்டாமல் இருவரும் ஒரு நாளை எப்படி செலவழிக்கிறார்கள் என்றும் சொல்கிறது, சிறுவனின் பார்வையில்!!

Tuesday, August 11, 2009

குழ‌ந்தைக‌ளுக்கான‌ க‌தைக‌ள்

எல்லா குழ‌ந்தைக‌ளுக்கும் க‌தை கேட்கும் ஆர்வ‌ம் உண்டு. ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாம் ந‌ம் க‌ற்ப‌னையில் உதித்த‌ க‌தைக‌ள் சொன்னாலும், சில‌ நேர‌ங்க‌ளில் தெரிந்த‌ க‌தைக‌ளும் கை கொடுக்க‌த்தான் செய்கின்ற‌ன‌.

அவ்வ‌கையில் முக்கிய‌மான‌ க‌தைக‌ளும் புத்த‌க‌ங்க‌ளும் கீழே உள்ள‌ லிங்குக‌ளில் உள்ள‌ன‌,

1. http://www.mainlesson.com/displaybooksbytitle.php
2. http://www.mainlesson.com/displaystoriesbytitle.php
3. http://www.mainlesson.com/display.php?author=bailey&book=hour&story=_contents

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.

பன்றிக்காய்ச்சல்...

சென்னை வேளச்சேரி சிறுவன் சஞ்சய் மரணம் ரொம்பவே பாதித்தது. இறைவா அந்த தாய்க்கு மனதில் திடத்தை கொடு.

Monday, August 10, 2009

I can...

"As a man thinketh; so is he " - பைபிள்.

”வெள்ளத்தனைய மலர்நீட்டம்” - திருக்குறள்.

நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன! நம்மைப் பற்றி நாம் கொள்ளும் எண்ணங்களே நமக்கான இடத்தைத் தீர்மானிக்கின்றன! சிநேகிதியின் இந்தக்கட்டுரை நம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!!நன்றி சிநேகிதி!!

Wednesday, August 5, 2009

தாய்மார்களும் தாய்ப்பாலும்




உலக தாய்ப்பால் வாரத்திற்கான வாழ்த்துகள் அனைத்து தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கும், குழந்தைகளுக்கும்! :)

தாய்ப்பால் பற்றி மயில் நன்கு விளக்கிவிட்டார்! அவருக்கான என் நன்றியோடு மேலும் சிலவற்றை எனக்குத் தெரிந்தவரை உங்களுடன் பரிமாரிக்கொள்ளவே இப்பதிவு! நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றை பரிமாரிக்கொள்ளுங்கள்!

தாய்பால் பற்றாக்குறை:

இப்படி ஒரு நிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை.... இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தப் பதிவினைப் பார்க்கலாம்!

தாய்பாலூட்டலின் நன்மைகள் தாய்மார்களுக்கு:

குழந்தைகளுக்கான நன்மை பற்றி மயில் விளக்கி்விட்டார்... அதனால் தாய்மார்களுக்கான நன்மைகளைப் பார்ப்போம்...

* தாய்ப்பால் ஊட்டுவதால் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக் குறைந்து பிரசவத்திற்கு முன் ஏறிய உடல் எடை தானாகக் குறைந்துவிடும்

*மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது

*உங்களுக்கும் குழந்தைக்குமான அன்யோன்யம் அதிகரிக்கிறது

*பிரசவத்திற்கு பின் இருக்கும் பெருத்த வயிறும் ஓரளவு கட்டுப்படும் தாய்ப்பால் ஊட்டுவதால்

தாய்ப்பாலின் வேறுசில பயன்கள்:

இந்தப் பதிவினில் பார்க்கலாம்.... ஆனால் குழந்தை அருந்தியது போக மீதமிருக்கும் தாய்பாலினை தான் பிற பயன்பாடுகளுக்கு எடுக்க வேண்டும்

அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக:

அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக் கொண்டு ஆடையை நனைப்பது ஆகிய இரண்டுமே!

தாய்ப்பாலானது ஃபிரிட்ஜில் வைக்காமலேயே 5மணி நேரம் வரைக் கெடாமல் இருக்கும்..... அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் பாதுகாக்கலாம்...

இப்படி சேமிக்கப்பட்ட பாலை நாம் வீட்டில் இல்லாத போது நம் குழந்தைக்கு பாட்டி, தந்தை, குழந்த பராமரிப்பாளர் என குழந்தையோடு நெருங்கிப் பழகும் யார் வேண்டுமானாலும் புகட்டலாம்....

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேனுவல் பிரஸ்ட் பம்ப் எனப்படும் கீழ்காணும் படத்தில் உள்ளக் கருவியை வாங்க வேண்டும்.... இந்தக் கருவியைப் பயன்படுத்தி காலை நீங்கள் அலுவலக்ம் செல்லும் முன்பு குழந்தைக்கு நன்கு பாலூட்டியதும் நீங்கள் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்துவிட்டு ஒரு 30நிமிடங்கள் கழித்து உங்கள் மார்பகத்தில் உள்ள பாலினை இந்த பம்ப் மூலம் எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், இது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் குழந்தைக்குப் பயன்படும்।

இதனை சேமித்து வைக்க குழந்தைக்கு பாலூட்டும் நான்_டாக்ஸிக் பால் புட்டிகளையே பயன்படுத்தலாம்... இதனால் இதனை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதாலும் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை!

பம்பின் அமைப்பு:

இந்த பம்ப் ஒடு பாட்டில், கையினால் பம்ப் செய்ய ஒரு ரப்பர் பந்து, காற்று விசை வர ஒரு டியூப், பால் வடகட்டி, மூடி, நிப்பிள், மார்பக உறை ஆகியவற்றைக் கொண்டது.... இது மேனுவல் பம்ப் என்றால்....

மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் பம்பும் உள்ளன.... இதனை பற்றி நான் விளக்க விரும்பவில்லை.... இது அத்துணை சரியான வழியல்ல....
வலுக்கட்டாயமாக தடாலடியாக பாலினை எடுக்கக் கூடாது... அதனால் நான் கையின் மூலம் பாலினை வெளியேற்றும் பம்ப் பற்றி மட்டுமே விளக்குகிறேன்!
மேலே காணும் படத்தில் இதன் விளக்கங்கள் ஓரளவு உங்களுக்குப் புரியும்...
செய்முறை:
படத்தில் உள்ளது போல அந்த மார்பக உறை போன்ற கப்பினை பால்வடிகட்டி இணைத்து பாட்டிலோடு இணைக்கவேண்டும்,
பின்பு அந்தக் கப்புடன் டியூப் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் பந்தினைக் கையில் பிடித்துக் கொள்ளவேண்டும்,
பிறகு அந்த கப்பினை மற்றொரு கையால் மார்பகத்தில் வைத்து மூட வேண்டும்,
பால் வெளிவரும் இடம் கப்பில் பால் செல்லும் வழிக்கு நேராக இருக்கும் படி மார்போடு பொருத்த வேண்டும்,
இப்போது முதலில் மிக மெதுவாக பந்தினை அமுக்க வேண்டும்,
பின் சிறிது சிறிதாக அழுத்தம் கூட்டிக்கொண்டே வரவேண்டும்
இப்போது மார்புப்பகுதியில் ஒரு இறுக்கம் தெரியும் அப்படியானால் நீங்கள் மிகச் சரியாக பொருத்தியிருப்பதாக அர்த்தம்
இப்போது பால் வெளிவரத் துவங்கும்
ஒரு மார்பு முழுதும் பால் வெளிவரும் வரை பம்ப் செய்து எடுத்துவிடுங்கள்
பின் இதே போல மற்றொரு மார்பு!
இதன் பயன்கள்:
குழந்தைக்கு பால் சேமித்துவைக்கவும்
பால் கட்டாமல்/கசியாமல் அவ்வப்போது வெளியேற்றவும்
பால் குறைவாகத் தெரியும் போது குழந்தை சரியாகப் பால் குடித்தாலே பால் நன்கு ஊறிவிடும் ஆனால் குழந்தையின் உடல் சூழ்நிலையால் குழந்தை பால் சரியாகக் குடிக்காமல் குறைந்தால் இப்படி பம்ப் செய்து இருக்கும் பாலை எடுப்பதன் மூலம் பால் அதிகம் ஊறும்!
அலுவலகத்தில் இந்த பம்ப் மூலம் எடுக்கும் பாலை ஐஸ் பாக்ஸில் வைத்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்குப் புகட்டலாம்!
இந்தப் பம்புன் விலை ரூபாய்।இருநூறில் இருந்து இருக்கிறது!
வேலைக்கு சென்றாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கும் போது இருநூறு ரூபாயெல்லாம் ஒரு மேட்டரா? :)


Tuesday, August 4, 2009

உலக தாய்ப்பால் வாரம்


ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம், தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தி நிறைய நிகழ்வுகள் நடக்கும். நம் பங்கிற்கு ....

உலகில் கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால், குழந்தை உருவானவுடன் பால் சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யும் குழந்தை பிறந்த மறுநிமிடம் பால் வெளிவரும். முதலில் வரும் பால் அனைத்து சத்துக்களையும் கொண்டு இருக்கும் சீம்பால் ஆகும், அதை கண்டிப்பாக குழந்தைக்கு தர வேண்டும். பாலில் சரியான விகிதத்தில் நீர் கலந்து இருப்பதால் ஆறுமாதம் வரை குடிக்க தண்ணீர் தர கூடாது, தேவையும் இல்லை.


அம்மாக்கு உணவு முறை: குழந்தை பிறந்ததும் அது சாப்பிடகூடாது, இது சாபிடாதே என்று கட்டுப்பாடுகள் இருக்கும் , ஆனால் உண்மையில் அதெல்லாம் அந்த காலத்தில் மட்டுமே சாத்தியம். இப்போது நாம் சாதாரணமாக உண்ணும் உணவுகள் சாபிடலாம். உங்களுக்கு எது முதலயே ஆகாதோ அதை விட்டு விடுங்கள்.

பால், ரொட்டி, பிஞ்சு கத்திரி, அவரை, புடலங்கை போன்றவற்றை பாசி பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். முருங்கை கீரை மிக மிக நல்லது. பால் சுறா என்னும் கருவாடு, மீன் போன்றவைகளும் பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பால் நமக்கு சுரக்கவில்லை, குழந்தைக்கு பத்தலை என்பதுஎல்லாம் நம் கற்பனை. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர் கழித்தால், அது தேவையான பால் எடுத்து கொள்கிறது என்று அர்த்தம். குழந்தையை சும்மாவாவது மார்புகளை சப்ப அனுமதிக்க வேண்டும், ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்கள் வெறும் உடம்பின் மேல் குழந்தையை படுக்க வைத்து அதன் உடல் முழுதும் வருடி கொடுக்கவும், நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ளும்.

குழந்தைக்கு பால் கொடுக்க சோம்பேறித்தனம் படகூடாது, அது என்ன மீறீ போனால் ஒரு இரண்டு வருடம் குடிக்கும் அதற்குள் இரவு தூக்கம் அது இது என்று காரணம் எதுவும் வேண்டாம், நாம் தருவது தாய்ப்பால் மட்டும் அல்ல அதன் எதிர்கால வாழ்க்கை என்று நினைவில் கொள்ளுங்கள். வேலைக்கு போகும் அம்மாக்கள் தாய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து குளிர்சாதனபெட்டியில் வைத்து தேவைப்படும் போது அறையின் தட்பவெப்பத்திற்கு வந்தவுடன் சங்கில் புகட்டலாம், குறைந்த பட்சம் இரண்டு வருடம் பால் கொடுங்கள்.. தவறில்லை. நீங்களும் சரியான உள்ளாடை போட்டால் மார்பு சரிவதை தடுக்கலாம்.

சங்கில் புகட்டும் போது மடியில் போட்டு ஊற்றக்கூடாது, நாம் பால் கொடுக்கும் நிலையில் வைத்து அதன் தலை நம் முழங்கைமேல் இருக்க வேண்டும் அப்போதுதான் புரை ஏறாது. ஒவ்வொரு முறை பால் குடித்ததும் தட்டி கொடுத்து ஏப்பம் வரவைக்கவும். அதேபோல் ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய கப்பில் தண்ணீர், கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு பால் கொடுக்கும் முன்பும் பிறகும் பஞ்சால் மார்பு காம்புகளை துடைக்கவும். குழந்தையின் உதட்டையும் துடைக்கவும், இல்லாவிட்டால் அதன் உதடு கறுத்து விடும். பால் கொடுக்கும் போது குழந்தை நுனி காம்பில் குடிக்க கூடாது, படத்தில் உள்ளது போல் அதன் வாய் கொள்ளும் வரை நம் மார்புகள் இருக்க வேண்டும்.



இது ஒரு மிக பெரிய அனுபவம், பால் கொடுத்த அனைத்து அம்மாக்களும் உணர்ந்த அனுபவம், நமக்கும் குழந்தைக்கும் மட்டுமே உண்டான பந்தம், அதை அனுபவித்து ரசித்து செய்யுங்கள்.

Sunday, August 2, 2009

பண்டிகை கொண்டாட்டங்களும் குழந்தைகளும்

இப்போதுள்ள காலகட்டத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை மட்டுமே முக்கியத்துவம் அளித்து நாம் கொண்டாடுகிறோம்.அதுவும் அவசரம் அவசரமாக காலையில் குளித்து கடவுளை வழிபட்டு ஏதோ சாப்பிட்டு தொலைகாட்சி முன் உட்கார்ந்து விடுகிறோம். குழந்தைகளும் பண்டிகைகளை பற்றியும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள் என்பது என் கருத்து.

பாட்டி தாத்தா இருந்தால் கதைகள் பாடல்கள் மூலம் குழந்தைகளின் அறிவுக்கு எட்டும் வகையில் சொல்லி தருவார்கள்.இப்போது நம்மில் நெறைய பேர் சில பல காரணங்களுகாக வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறோம்.நிலைமை இவ்வாறு இருக்க நாம்தான் நம் வழிபாட்டு முறைகள்,விரதங்கள், பண்டிகைகள் பற்றி விரிவாக குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல கடமைபட்டு இருக்கிறோம்.

சின்ன பண்டிகைகள் மற்றும் விரதங்கள்(உதாரணம்: வரலக்ஷ்மி விரதம்,விநாயகர் சதுர்த்தி,பிரதோஷம்,ஏகாதேசி) பற்றியும் அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் நமக்கே அவ்வளவு(நான் எல்லாரையும் சொல்லவில்லை) தெரியாத போது நம் குழந்தைகளுக்கு அவை பற்றி நாம் எவ்வாறு சொல்லி கொடுப்பது?

இதற்கு முதல் படி நம் வீட்டில் விரதங்கள், பண்டிகைகளை முறையாக கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்.வீட்டு பெரியவர்களிடம் இவை பற்றி கேட்டறிந்து நம் குழந்தைகளுக்கும் புரியுமாறு எடுத்துரைத்து,அவர்களையும் ஈடுபடுத்தி பக்தியுட ன் செய்ய தொடங்க வேண்டும்.முடிந்தால் அவர்களின் தோழி தோழரைகளையும்,வீட்டு பக்கத்தில் இருக்கும் குழந்தைகளையும் அழைத்து பாடல்கள்,ஸ்லோகங்கள் படிக்கலாம்.

பூஜை முடிந்த பின்பு நம்மாலான சிறு அன்பளிப்பு,பிரசாதம் அளித்து ஊக்கபடுத்தலாம்.சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் உச்சரிக்கும் முறை அவற்றின் விளக்கம் பற்றி தெரிந்தவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி தரலாம். தொலைக்காட்சியை இந்த தினங்களில் பார்க்க வேண்டாம் என்ற உறுதியையும் எடுக்கலாம் (முடிந்தால்!!!!!)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger