Showing posts with label வாசக்டமி. Show all posts
Showing posts with label வாசக்டமி. Show all posts

Tuesday, June 29, 2010

கருத்தடை- அம்மாக்களின் கவனத்திற்கு

இரண்டு வாரத்துக்கு முன்பு பேப்பரில் வந்த செய்தி மிக முக்கியமானதும், மக்களுக்கு நல்லதும் கூட. ஆண்களுக்கான கருத்தடை பற்றிய அறிவிப்பு அது. மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக இருப்பதால் இது பரவலாக போய் சேர வேண்டும். வாசக்டமி என்னும் இந்த அறுவை சிகிச்சை பெண்களுக்கு செய்யும் எந்த ஒரு கருத்தடை முறையையும் விட எளியது, நல்லதும் கூட. விந்து பைகளில் இருந்து உயிரணுக்களை கொண்டுவரும் VAS DEFERANS என்னும் குழாயை கட் செய்து விடுவது தான் வாசக்டமி, மீண்டும் குழந்தை வேண்டும் நிர்பந்தம் வரும் போது ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரி செய்து விடலாம்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறையான Mini Lapratomy எனப்படும் இரு ஃபெலோப்பியன் குழாய்களையும் கருப்பையோடு இணைய விடாமல் துண்டித்து விடுவது ஒரு முறை. இதிலேயே உள்ள இன்னொரு முறை ஃபெலோப்பியன் குழாயை இழுத்து பிடித்து பேண்ட் போட்டுவிடும் லேப்ராஸ்கோபி. இதில் உள்ளே போடப்படும் பேண்ட் தெறித்து விழும் வாய்ப்புக்கள் அதிகம். என்னதான் இது நிரந்தர கருத்தடை முறையாக இருந்தாலும் இதனால் நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதது. எலும்பு தேய்மானம், ஆஸ்டோபோரிஸ் போன்றவைகள் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சதவீதமும் ஒழுங்காக இல்லாமல் உடல் அதிக பருமன் ஆவது, அல்லது மிகவும் இளைத்து இருப்பது போன்றவைகளும் ஏற்படும்.

இது போக தற்காலிக கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பதும் பெண்களுக்கு மிக வேதனை அளிப்பது தான். அதில் லூப், மாத்திரைகள், ஊசி போன்றவைகளும் அடங்கும்.

லூப் : IUCD - INTRA UTERINE CONTRACEPTIVE DEVICE : இது ஆங்கில எழுத்தி 'T' வடிவில் இருக்கும், பிரசவம் முடிந்து நன்கு கர்ப்பப்பை சுருங்கியதும் லூப் போடலாம், வஜினா வழியாக கருப்பைக்குள் செலுத்தி அதன் உட்புறம் பொருத்துவார்கள். இதன் ஒரு முனையில் ஒரு நூல் இருக்கும், பொருத்திய பின்பு அடுத்த முறை மாதவிலக்கின் பின்பு ஒரு முறை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மிக அவசியம்.

பக்க விளைவுகள் : ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படும், அதிகம் உதிரப்போக்கு உள்ளவர்களுக்கு இது சரிவராது, ஏனெனில் இது சாதரணமாகவே உதிரபோக்கை அதிகப்படுத்தும், தலைவலி, முதுகுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலசமயம் அதிக உதிரப்போக்கினால் இந்த லூப் தானாகவே கழண்டுவிடும். உடம்பு இதை ஏற்றுக்கொள்ளும்வரை இந்த உபாதைகள் தொடரும். ஒரு முறை பொருத்திவிட்டால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் புதிது பொருத்த வேண்டும்.

மாத்திரைகள் : இது போதுவாகவே மிக அதிக பக்க விளைவுகள் கொண்டது. தினம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது வந்திருக்கும் I-PILL கருத்தடை மாத்திரை அல்ல. அது கரு முட்டை உருவாகாமல் தடுக்கும், அல்லது கருமுட்டை உருவாகியிருந்தால் அதனோடு உயிரனுக்கள் சேராமல் தடுக்கும். மற்றபடி கரு உருவானபின் இந்த I-pill எடுத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. இது கருத்தடை மாத்திரையோ, அபார்ஷன் மாத்திரையோ அல்ல.

இந்த கருத்தடை மாத்திரைகளும் அதிக பக்கவிளைவுகள் கொண்டதே. இதனாலும் தலைவலி, வாந்தி, முதுகு வலி, இடுப்பு வலி, உதிரப்போக்கு அதிகரித்தல், ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி போன்றவைகள் ஏற்படும்.

ஊசி : DEPO PROVERA என்னும் ஊசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கின் முதல் நாள் போட்டுக்கொள்வது. இது தற்போது இருக்கும் பெண்களுக்கான கருத்தடை ஊசி. இதுவும் உடல் பருமன் ஏற்ற இறக்கம், வாந்தி, தலைவலி, முதுகுவலி, உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், சில சமயம் நடுக்கம் போன்றவைகளையும் உருவாக்கும்.

இந்த பக்கவிளைவுகளை சகித்துக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வது பெண்களுக்கு மிக கடினம். எங்காவது ஒரு இடத்தில் தினம் வலியையும், ஒரு அசாதாரண உதிரப்போக்கை ஒவ்வொரு மாதமும் அனுபவிப்பதும் மனதளவில் அவர்களை மிக பாதிக்கும். அதுவும் மெனோபாஸ் எனப்படும் சம்யம் கண்டிப்பாக இதன் வெளிப்பாடுகள் நன்றாகவே தெரியவரும்.. அதனால் ஆணகளுக்கான வாசக்டமி திட்டம் பரவலாக தெரிய வேண்டும், வெற்றி பெறவும் வேண்டும்.



 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger