பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில்( விசாரித்த வரை) சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!
குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!
அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....
ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...
இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...
ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)
மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...