குழந்தைகளுக்கான உணவு வகைகளை புதுகைத்தென்றல் மற்றும் விஜி முன்னவே பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவுகளையும் பார்வையிட்டு, பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். தன் குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு தாயும் எத்தனை பாடுபடுகிறார்கள் என்பது இங்கிருக்கும் பதிவுகளை படிக்கும் போது தெரிகிறது. :)
எனக்கு தெரிந்த சில உணவு செய்முறைகளை பதிவிடுகிறேன். அதற்கு முன் சுயபுராணம். :)
நவீனுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் மிகவும் சிரமப்பட்டேன் எனலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து, 3 நேரம் எடுத்துக்கொள்வான், வாயில் எப்படியும் 2, 3 உருண்டுகளை இந்த பக்கமும் அந்த பக்கமும் அடக்கி வைத்துக்கொண்டு உள்ளே முழுங்காமல் வைத்திருப்பான். எனக்கு பல நேரங்களில் பொறுமை இழந்து போகும், ஆனாலும் நீயா நானா என்று பார்த்துவிடுவோமடா என்று முழுவதுமாக ஊட்டி முடித்துவிட்டு தான் விடுவேன். பொறுமையுடன் இருக்கவேண்டும் என்பதால், நான் முதலில் சாப்பிட்டு விடுவேன், இல்லையேல் எனக்கு ஏற்படும் பசியில் பொறுமை இழுந்து விட்டால் என்ன செய்வது.?
அடுத்து என் அண்ணன் மகன் நிவேதன், இவனின் அம்மா இவன் 1.5 வயதாகும் போது இறந்து போனார்கள். அவனுக்கு பழக்கமே இல்லாத நான் என்னுடன் அவனை அழைத்து வரும்படியாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் அழைத்தும் வந்து விட்டேன். அவனுக்கு அப்போது பேச்சும் வரவில்லை. எப்போதும் அம்மாவை தேடி அல்லது காரணமேயின்றி அழுதுக்கொண்டே இருப்பான்,
அவனுக்கு புதிய, தெரியாத சூழலில் அவனை அழைத்து வந்து விட்டதால் அவன் மட்டும் இல்லை நானும் உடன் சேர்ந்து கஷ்டப்பட்டேன். இவன் நவீனுக்கு எதிர்மறை, எவ்வளவு எளிதாக சாப்பாடு தொல்லை இல்லாமல் நவீனை வளர்த்தேனோ அதற்கு மாறாக ரொம்பவும் சிரமப்பட்டேன். காரணம், இவனுக்கு எந்த உணவும் சட்டென்று ஒற்றுக்கொள்ளாது. ஒரு உருண்டை அதிகமாகிவிட்டால் கூட சாப்பிட்ட அத்தனையும் அப்படியே வாந்தி எடுத்துவிடுவான். ரொம்பவும் உடல் மெலிந்து, எடை குறைந்த குழந்தையாக இருந்தான்.
நவீன் அப்படி இல்லை. அதனால் நவீனை போலவே அவனையும் சக்தியுடையவனாக மாற்ற வேண்டும் என்று இரவும் பகலும் நிவேதனை மட்டுமே கவனிக்க ஆரம்பித்தேன். நிவேதனுக்கு சர்க்கரை, சாப்பாடு, காய்கறி என்று எல்லாமே ஒரு அளவில் தான் இருக்க வேண்டும், டாக்டர் கலோரி கணக்கிட்டு பட்டியில் இட்டு கொடுத்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு பால், இவ்வளவு சர்க்கரை என்றால் அவ்வளவு தான் உள்ளே செல்ல வேண்டும், அதிகபடியாக சென்றால் உடனே அவன் உடம்பு பாதிக்கப்படும். அதனால் மிக மிக கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதில் அவன் பக்கமே திரும்பி படுக்க சொல்லுவான். அவனுக்காக இரவில் ஒரே பக்கமாக படுத்து என்னுடைய இடுப்பு, மற்றும் கால் பகுதிகளில் தோல் தடித்து, புள்ளி புள்ளியாகி கறுப்பு நிறம் படற ஆரம்பித்துவிட்டது. அதை போக போக சரி செய்து கொண்டேன் என்றாலும் குழந்தையை அம்மா இல்லாமல் வளர்க்க எத்தனை சிரமப்பட்டேன் என்பதை மனதளவில் உடலளவில் உணர்ந்தேன். சில நேரங்களில் தாங்க முடியாமல் வீட்டு கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடிவிட்டு அந்த குழந்தையை இறுக்கி கட்டிக்கொண்டு சத்தம் போட்டு ஓ'வென்று அழுவேன். எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வளர்த்து கொடுத்துவிட்டேன். :)
நவீன் மற்றும் நிவேதனுக்கு கொடுத்த சில உணவுகள்.
1. துவரம் பருப்பை 5-6 பூண்டுகள் போட்டு வேகவைத்து கடைந்து, நெய் 2 ஸ்பூன் விட்டு, சுடசாதத்தை நன்கு பிசைந்து, அல்லது மிக்ஸியில் ஒரு அடி அடித்து பருப்பை சேர்ந்து பிசைந்து ஊட்டிவிடுவேன். தேவைப்பட்டால் ரசம் மேலோட்டமாக சேர்த்துக்கொள்வேன்.
2. இட்லி தோசை எப்போதும் போல.. நெய் சர்க்கரை தொட்டு அல்லது பால் விட்டு சர்க்கரை சேர்த்து மசித்து கொடுப்பேன்.
3. சத்துமாவு கஞ்சி
4. முட்டை
* முட்டையை வெங்காயம் சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்,
* கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்
* முட்டை வேகவைத்து இரண்டாக வெட்டி, மிளகு போடி தூவி கொடுக்கலாம்.
* முட்டை வேகவைத்து மிளகு சேர்த்து வறுத்துக்கொடுக்கலாம்
* பொட்டுக்கடலை, மிளகு இரண்டையும் மிக்ஸியில் மாவாக்கி, முட்டையுடன் கலந்து ஆம்லெட்
* கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி லேசாக வதக்கி முட்டையுடன் சேர்த்து அடித்து ஆம்லெட்.
5. முந்திரி, பாதாம், திராட்சை - இவற்றை நிவேதன் பாக்கெட்டில் தினமும் ஒரு 5-10 போட்டு விடுவேன். காலையில் போட்டுவிட்டு சொல்லுவேன், குட்டி மதியத்துக்குள் சாப்பிடு அப்பத்தான் நவீன் மாதிரி ஆகலாம். இதில் குறிப்பிட வேண்டியது, என்னுடைய குழந்தையாக இருந்தாலும் நவீனுக்கு இவற்றை நான் கொடுத்தது இல்லை. நிவேதனுக்கு மட்டுமே கொடுப்பேன். அப்படியே கொடுத்தாலும் அதன் அளவு குறைவாகவே இருக்கும்.
6. கேக், ஸ்வீட், ஐஸ்கிரீம் - இதுவும் நிவேதனுக்கு முதலிடம். அவன் ஆசைப்படுவானே தவிர்த்து அவனால் நவீன் போல சாப்பிட முடியாது. இருப்பினும் ஸ்வீட், கேக் எப்படியும் வாரத்தில் 3 முறை கொடுத்துவிடுவேன். ஐஸ்கீரீம் அடிக்கடி இல்லை என்றாலும் மாதத்தில் 2 முறை கொடுப்பேன்.
7. சாக்லெட் - இது அதிகமாக கொடுக்காவிட்டாலும், சளித்தொல்லை வராத அளவு பார்த்துக்கொடுப்பேன்.
8. காய்கறி : இது ஓரளவு இருவரும் சாப்பிட ஆரம்பித்தவுடன் கோஸ், கேரட், பீட்ரூட், வெண்டக்காய், புடலங்காய், பாவக்காய் இவை அடிக்கடி சேர்ப்பேன். இதை தவிர்த்து வறுக்கும் காய்கரிகள் உருளை, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் வறுத்து தருவேன்.
9. சுண்டல் - தினம் ஒரு சுண்டல், கடலைபருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டகடலை, வேர்கடலை, முழுபயறு, காராமணி பயறு, மொச்சை போன்றவை. எல்லாவற்றிலும் மிளகுதூள் சிறிது தூவி கொடுத்தல் நலம்.
10. வத்தல் : சீரகம் அதிகம் சேர்த்து, மிளகாய் குறைத்து மிக்ஸியில் நன்கு அடித்து, வேகவைத்த அரிசிமாவில் கலந்து, இடியாப்ப அச்சியில் பிழிந்து காயவைத்துக்கொள்வேன். முள் அச்சுலும் கொஞ்சம் பிழிந்து காயவைத்துக்கொள்வேன். சீரகம் அரைத்து போட காரணம் குழந்தைக்கு தொண்டையில் அடைத்துக்கொள்ளாது என்பதால். உருளைக்கிழங்கு சிப்ஸ் போல சீவி, தேவையான உப்பு சேர்த்து பாதியளவு வேகவைத்து, வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ளுவேன்.
11. முருங்கைகாய் லேசாக உப்பு போட்டு வேகவைத்து, உள்ளிருப்பதை மட்டும் வழித்து, மிளகு தூவி, பருப்பு சாதம் ஊட்டும் போது உடன் சேர்த்து கொடுத்துவிடுவேன். இது சளிக்கு மிக சிறந்தது.
அத்தோடு இன்றோடு இங்கிருந்து விடைபெறுகிறேன், தேவைப்பட்டால் திரும்பவும் வந்து எழுத முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த முல்ஸ் மற்றும் தவறாமல் படித்த எல்லா அம்மாஸ் க்கும் எங்களது நன்றிகள். :)
அணில் குட்டி அனிதா :- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு வழியா கிளம்பிட்டாங்களா.. நிம்மதி... !
பீட்டர் தாத்ஸ் :- You can learn many things from children. How much patience you have, for instance.
9 comments:
கவிதா, அம்மா இல்லாமல் ஒரு குழந்தையை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பதை ஏற்கனவே அனுபவித்திருந்தாலும், கதவை சாத்தி அழுதேன் என்றது ரொம்ப கஷ்டமாக போனது. கடவுள் நிவேதனை நல்லபடியாக வைத்திருப்பார். நவீனுக்கு வாழ்த்துக்கள். மீண்டும் உங்கள் எழுத்துக்களை எதிர்பார்கிறேன்.
சரியான நேரத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளீர்கள். பல வருடங்களுக்கு முன்பு அவள் விகடனில் சரத் பாபுவின் அம்மாவைப் பற்றி சாதனைத் தாய்மார்கள் என்ற கட்டுரையை படித்தது ஞாபகம் வருகிறது.
மீண்டும் ஒரு முறை நல்ல அரசியல் தலைவரின் அன்னை என்ற கட்டுரையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
மிக்க நன்றி கவிதா! உங்கள் அனைத்து பதிவுகளுமே மிகுந்த பயனுள்ளவை! தங்கள் நேரத்தை ஒதுக்கி எங்கள் வலைப்பூவில் பங்களித்தமைக்கு நன்றிகள் பல! நவீனுக்கும்,நிவேதனுக்கும் எங்கள் அன்பும் வாழ்த்துகளும்! எங்கள் வலைப்பூவில் தங்களுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு! அணிலு & தாத்ஸ் : thanks for your special appearance! :-)
//எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வளர்த்து கொடுத்துவிட்டேன். :)//
தலைவணங்குகிறேன்! [நானும் உங்கள் நிவேதனும் ஏறக்குறைய ஒன்றுபோல் வளர்ந்தவர்கள்தான் :-(]
மீண்டுமொரு பயனுள்ள குறிப்புகள். இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்.
உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம்... புயல் மாதிரி வந்து மின்னல் மாதிரி கிளம்புறீங்களே
:(
ரொம்ப நன்றிங்க :)
நிவேதனுக்கும் தாயாய் இருந்து பார்த்துக் கொண்ட உங்கள் உயர்ந்த மனதுக்கு என்றும் தலை வணங்குவேன்!
உங்க நல்ல மனசுக்கு நிவேதன் நன்றாகவே இருப்பான் எல்லா வளங்களும் பெற்று!
//கதவை சாத்தி அழுதேன் என்றது ரொம்ப கஷ்டமாக போனது.//
:) அப்படி அழுதுவிட்டால் மனம் லேசாகி அடுத்த வேலையை திருப்பியும் ஒரு மனதிடத்துடன் ஆரம்பிக்க வசதியாக இருக்கும். அதற்கு அழுகை வந்தால் நன்றாக அழுதுவிடவேண்டும் என்பது என் பிலாஸஃபி.. :)
நன்றி விஜி... :)
************************
//மீண்டும் ஒரு முறை நல்ல அரசியல் தலைவரின் அன்னை என்ற கட்டுரையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
//
கிருஷ்ணா பிரபு :) உங்கள் கருத்துக்கு நன்றி. சரத்பாபு வின் உடன் பிறந்தவர் அத்தனை பேர் இருக்க சரத்பாபு மட்டும் தானே இத்தனை பேரும் புகழும் பெற்றார். :) அப்படி எல்லா குழந்தைகளும் சரத்பாபு வை போன்று ஆவது இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. என் குழந்தையிடம் இருந்து எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை... அப்படியே இருந்தாலும் அது அவன் நலனாக இருக்கும் :) (கொஞ்சம் சுயநலம்)
***************************
//தங்கள் நேரத்தை ஒதுக்கி எங்கள் வலைப்பூவில் பங்களித்தமைக்கு நன்றிகள் பல! //
முல்ஸ் ..!! ஏஏன்ன்ன்ன்ன்ன்?!!
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.. !!
(ஏன்'னு கேட்காம இருக்கனும்னு நினைத்தேன்..கேட்க வைத்து விட்டீர்கள்.. )
//தலைவணங்குகிறேன்! [நானும் உங்கள் நிவேதனும் ஏறக்குறைய ஒன்றுபோல் வளர்ந்தவர்கள்தான் :-(]
//
:( உழவன், வருத்த படாதீர்கள், எல்லாம் நன்மைக்கே..!!
நன்றி..
****************************
//
உங்கள் அடுத்த வருகைக்காக காத்திருக்கிறோம்... புயல் மாதிரி வந்து மின்னல் மாதிரி கிளம்புறீங்களே
:(
//
ஆகாயநதி, :))) நீங்க எல்லாருமே சூப்பர்ர் சூப்பர்ர்ர்ர்ர்ராஆஆஆ எழுதறீங்கப்பா..
//நிவேதனுக்கும் தாயாய் இருந்து பார்த்துக் கொண்ட உங்கள் உயர்ந்த மனதுக்கு என்றும் தலை வணங்குவேன்!
//
என்னங்க இது?? எதுக்கு இது எல்லாம்? .என்னுடைய கடமை இல்லையா..? அண்ணியை இழந்து என் அண்ணன் நிற்கும் போது இதை கூட செய்யவில்லை என்றால் எப்படிங்க.. :)
//
உங்க நல்ல மனசுக்கு நிவேதன் நன்றாகவே இருப்பான் எல்லா வளங்களும் பெற்று!
//
ரொம்ப நன்றிங்க......!! :)
அண்ணனுக்காக அண்ணிக்காக நீங்க பண்ணியது பெரிய விஷயம்... முக்கியமா உங்க கணவரை தான் அதிகம் பாராட்டனும்... :)
எனது பதிவிற்கான சுட்டி கொடுத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான பங்காக அவர்களின் உணவுப் பழக்கத்தைத்தான் நான் கருதுகிறேன்.
அருமையான பதிவுக்க்கு பாராட்டுக்கள்.
பீட்டர் தாத்ஸ்க்காக என் ஷ்பெஷ்ல் பாராட்டுக்கள்
Post a Comment