மிக பெரிய பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தை தருவது குழந்தை பிறந்தப்பின் அம்மாக்களுக்கு ஏற்படும் உடல் பருமன். குழந்தை பேறு என்பது ஒரு தாய்க்கு அடுத்த பிறவி என்பார்கள். குழந்தை பேற்றால் நம் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முதலில் இருப்பது நம் உடலின் எடை. மிக சிலர் மட்டுமே எப்போதும் போல் இருப்பார்கள், அதற்கு குடும்பவழி காரணமாக இருக்கலாம். ஆனால் 99% பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் :-
1. இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள்
2. குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்துக்கொள்வதில்லை
3. குழந்தைக்காக நன்றாக சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது.
4. அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது.
அடிவயிற்று சதையை மட்டும் குறைக்க (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்) வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயற்சிகளை குறிப்பிடுகின்றேன். இதை செய்யவதற்கு முன்
1. உடற்பயற்சி செய்யும் போது, மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் நிறுத்திவிடவேண்டும்.
2. வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாது. திட உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டால் குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்
3. உடற்பயிற்சி முடிந்தவுடன் சாப்பாடு சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.
4. தண்ணீர் நிறைய குடிக்கலாம், அதுவும் சுடத்தண்ணீராக இருந்தால் நலம்.
5. பயிற்சியின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும், நமக்கு வேகமாக குறைக்க வேண்டும் என்று, கடுமையாக செய்யக்கூடாது.
கீழ்கண்ட படத்தில் இருப்பது போன்று படிப்படியாக செய்து பாருங்கள்.
1. தரையில் விரிப்பு ஏதாவது போட்டு நேராக படுத்துக்கொள்ளுங்கள்
2. இடது காலை மட்டும் மெதுவாக மேலே தூக்குங்கள். முடிந்தவரை தூக்கிவிட்டு இறக்கிவிடுங்கள்.
3. அடுத்து வலது காலை மெதுவாக மேலே தூக்குங்கள். மெதுவாக இறக்கிவிடுங்கள்.
இதை வேகமாக செய்யக்கூடாது, மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அப்போது தான் தசைகளுக்கு நல்லது.
இதில் படம் 2, 3 ல் காட்டியுள்ள உடற்பயிற்சிகளை மட்டும், முதலில் ஒரு 5 முறை மேலே தூக்கி இறக்குமாறு எண்ணிக்கை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்து மொத்தம் 10 முறை. இதனை குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். 5 என்ற எண்ணிக்கை 10 ஆக்கி கொள்ளலாம். உங்களால் நன்றாக சுலபமாக வலியில்லாமல் கால்களை தூக்கி இறக்க முடிந்தவுடன், படம் 4 ஐ முயற்சி செய்யுங்கள்.
4. இரண்டு கால்களையும் ஒரு சேர மெதுவாக தூக்கி, ஒரு சேர மெதுவாக இறக்குங்கள். இப்படி தினமும் உங்களால் முடிந்த அளவு விடாமல் செய்து வந்தால் அடிவயிற்று சதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டிப்பாக குறையும்
5. எப்போது உடற்பயற்சி செய்தாலும் கடைசியில் ஒரு நிமிட அளவு உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்களை மூடி அப்படியே படுத்து இருந்துவிட்டு எழுந்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக படம் 6 இல் காட்டி இருப்பது போல் எப்போது எல்லாம் தரையில் உட்காருகிறீர்களோ அப்போது எல்லாம் கால்களை குத்திட்டு, கைகளால் இறுக்கி உடம்போடு அழுத்தி உட்காருங்கள். இதை டிவி பார்க்கும் போது செய்யலாம். உட்காரும் போது எல்லாம் இப்படி உட்கார்ந்து பழக்கப் படித்துக்கொண்டால், அடிவயிற்று சதை குறையும். இதை தனியாக உடற்பயிற்சியாகவும் செய்யலாம். ஆனால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் முடியும் போது எல்லாம் செய்யுங்கள்.
நாம் உட்காரும் போது சோபா, சேர் என்று உட்காராமல், தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம், அதுவுமே ஒரு உடற்பயற்சி தான்.
இப்படி உடற்பயிற்சிகள் எல்லாம் என் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் நான் ஆரம்பித்தேன். அதுவரையில் எனக்கு அதன் தேவை இல்லாமல் இருந்தது, அதற்கு பிறகு நடைபயிற்சி. இது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 -3 கிமி நடந்து செல்லுவேன். பள்ளிக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல நடந்தே சென்று வருவேன். இரண்டு சக்கர வாகனம் இருந்தாலுமே உபயோகப்படுத்தாமல் இருந்தேன். நடப்பதினால் என் உடல் பருமன் ஏறாமல் இருந்தது.
வீட்டில் டிரட் மில் இருந்தால், குறைந்த பட்சம் 10 நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை உடலுக்கு தேவையான பயிற்சியையும், உங்களை எப்போதும் Active ஆக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.
பின் குறிப்பு : :) படங்கள் பெயின்ட் பிரஷ்'ஷில் வரைந்தேன். ஏதாவது குறை இருந்தால்.. கண்டுக்காமல் நைசா விட்டுடுங்கோ !! :) முடிந்தால் அடுத்தமுறை ஏதாவது வரையும் போது கையால் வரைந்து, ஸ்கேன் செய்து போடுகிறேன்.. :)
அணில் குட்டி அனிதா :- ம்ம்.... அம்மணி வூட்டுல இது எல்லாம் செய்ய தெரிஞ்சாலும் செய்யாம ஜிம் க்கு போறாங்க... ஆனா உங்களை வூட்டுல செய்ய சொல்றாங்க.. .என்னத்த சொல்ல.. ?! :(
பீட்டர் தாத்ஸ் : “It typically takes about three months to reach a moderate fitness level, and then you just want to maintain that.”
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
10 comments:
அவசியமான பதிவு கவிதா. என் மகனுக்கு இரண்டு வயதாகப் போகிறட்து. கடந்த ஆறு மாதங்களாய் மேற்கொண்ட முயற்சியினால் 4 கிலோ குறைந்துள்ளேன். முக்கியமான விஷயம் weight regain ஆகல:)
நீங்க சொல்லிருக்கும் உடற்பயிற்சி எண் 4 கண்டிப்பாக பலன் தெரியும். ஆனால் முழுவதும் தூக்காமல் தரையிலிருந்து 45 டிகிர் கோணத்தில் பத்து விநாடிகளுக்கு குறையாமல் பேலன்ஸ் செய்ய முடிந்தால் தொடை பகுதியும் சேர்ந்து வலுப்பெறும்.
நல்ல பதிவு... இந்த பயிற்சியைதான் நான் தினமும் செய்கிறேன்... 2மாதமாக தொடர்ந்து செய்கிறேன் இப்போது தான் 2கிலோ குறைந்துள்ளது...
வயிறு சற்று குறைந்துள்ளது... இப்பயிற்சியின் மூலம் பழைய வயிறு கிடைக்குமா?
பொழிலுக்கு பால் கொடுப்பாதால் அதிக பசியின் காரணமாக அதிகம் உண்ண வேண்டியிருக்கிறது...
இந்த தோள்பட்டை, இடுப்பு எலும்புகள் கூட அகன்றுவிட்டது கர்ப்பகாலத்தில்... இதற்கு என்ன செய்வது? :( இது எனக்கு ரொம்ப வருத்தமாவே இருக்கு... என் கணவர் இதுபற்றியெல்லாம் கவலைப் படாதேனு சொன்னாலும் எனக்கு கவலையாவே இருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு கவிதா, கண்டிப்பா நாம உடம்பை நாம் நன்றாக வைத்து கொள்வதுதான் நாம் எப்போதும் சந்தோசமாக இருக்க உதவும். இதே போல் தொடர்ந்து எழுதுங்கள்.
@ வித்யா - :) நன்றிப்பா
@ ஆகாயநதி..- ம்ம்.. என்ன சொல்றது உங்கள் கவலையை பற்றி.. கண்டிப்பா போஸ்ட் டெலிவரி சேன்ஜஸ் இருக்கத்தான் செய்யும்.. கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வர முடியும்.. அது உங்களின் கையில் தான் இருக்கிறது.. :))
//இப்பயிற்சியின் மூலம் பழைய வயிறு கிடைக்குமா?
//
ம்ம் கண்டிப்பாக குறையும்.. ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும் உணவு கட்டுப்பாடும் வேண்டும், குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரத்தில் உணவுக்கட்டுபாடு தயவுசெய்து செய்யாதீர்கள்
@ விஜி, நன்றிங்க.. :)
படம் போட்டு சொன்ன அந்த உடற்பயிற்சி தான் எனக்கும் டாக்டர் சொன்னாங்க.. கவிதா..
அண்ட் எப்பவும் எந்த வேலையில் இருந்தாலும் வயிற்றை உள்ளிழுப்பது செய்யச் சொன்னார்கள்.. மூச்சோடு சேர்த்து உள்ளிழுக்காமல் யாரும் அறியாமல் வயிற்றை உள்ளிழுப்பது..
நல்லபதிவு..
படங்களோடு அந்த பயிற்சி நல்லா சொல்லி இருக்கீங்க கவிதா உங்க முயற்சி பாராட்டுக்குரியது.. எனக்கும் டாக்டர் இதே பயிற்சி தான் அறிவுறுத்தினார்.
நன்றி முத்து, மூச்சு இழுத்துவிடுவது வெறும் வயிற்றில் காலையில் செய்தால் நல்ல பலன் தரும். அதை சேர்க்க மறந்துவிட்டேன்..
நன்றி.. :)
டியர் கவிதா ரொம்ப அழகா வரைந்து சொல்லி இருக்கீங்க.வாழ்த்துக்கள்
இது போல் செய்வது முதுகு வலி இடுப்பு வலி கூட சரியாகும்.
ஆனால் விட்ட உடனே எடை ஏறிவிடும் இல்லையா?
ரொம்ப நல்ல பதிவு. குழந்தைப் பெற்ற அனைத்துப் பெண்களுக்கும் பயனுள்ள குறிப்பு.
Regards,
Priya @ http://tipstoslim.blogspot.com/
ரொம்ப நல்ல பதிவு. குழந்தைப் பெற்ற அனைத்துப் பெண்களுக்கும் பயனுள்ள குறிப்பு.
Regards,
Priya @ http://tipstoslim.blogspot.com/
Post a Comment