Wednesday, May 6, 2009

அன்னையர் தின வாழ்த்துகளுடன்...

சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்த நாட்கள் அவை. வாரயிறுதியில் ஆம்பூருக்கு பயணம். ஏலகிரி எக்ஸ்பிரஸ் - பெயர்தான் எக்ஸ்பிரஸே தவிர பாஸ்ஞ்சர் போலத்தான். ஆனால் அது ஒரு மினி ரங்கநாதன் தெரு மாதிரிதான். வளையல் வியாபாரத்திலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை எல்லாமே தங்கள் இடம் தேடி வரும். காட்பாடி தாண்டினால் கூட்டம் மிகக் குறைவாக இருக்கும். குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ஊர்க்காரர்கள் மட்டுமே!இரண்டு வரிசைகள் தாண்டி ஓரிரு தலைகள் தென்பட்டன. வீட்டுக்கு செல்ல இன்னும் அரைமணிநேரம்தான் என்றெண்ணியபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலின் சீரான வேகம். தாண்டிச் செல்லும் காற்று. வீட்டில் பெரிம்மா எனக்காக சப்பாத்தியும், உருளைக்கிழங்கு மசாலும், சிக்கன் ஃபிரையும் செய்துவைத்து விட்டு காத்திருப்பதாக மெஸேஜ். ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஏதாவதொன்று புதிதாக வீட்டில் இருக்கும்..எனக்கு அறிமுகப்படுத்த புது புத்தகம், பகிர்ந்துக் கொள்ள சுவையான நிகழ்வுகள் என்று என்னை அசத்துவதில் பெரிம்மாவுக்கு நிகர் பெரிம்மாதான்!! இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள்.

“அக்கா, நல்லாருக்கீங்களா?” - அவள்தான்!

பரிச்சயப்பட்ட முகமாக, ஆனால் யாரென்றுத் தெரியவில்லை.

“நல்லாருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க” - பேச்சுவாக்கில் தெரிந்துவிடும் என்றெண்ணியபடியே!

“நல்லாருக்கேன் அக்கா, மேடம், தம்பில்லாம் எப்படி இருக்காங்க?”

”நல்லாருக்காங்க, மெட்ராஸ்லேர்ந்தா வர்றீங்க” - யாருன்னு கேட்டுடலாமா இல்லை இன்னும் பேசினால் தெரிந்துவிடுமா என்ற தயக்கத்தில்!

”ஆமாக்கா, நான் நர்ஸிங் முடிச்சுட்டு மெட்ராஸ்லதான் வேலை செய்றேன்” - அந்த பெண்.

ஓ..கண்டுபிடித்துவிட்டேன்..பெயர் தெரியாவிட்டாலும்!

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு இரு வரிசைகளில் ஒழுங்கு கலையாமல் உயரகிரமமாக சீருடை அணிந்துச் செல்லும் சிறுமிகள்! முன்னும் பின்னும் அவர்களைக் கவனிக்க இரு பெரியவர்கள்! எங்கள் ஊரில் இருந்த ஹோம் அது. பெற்றோர் இல்லாமல் உறவினர் உதவியுடனோ அல்லது பெற்றோரில் ஒருவர் உதவியுடனோ ஹோமில் சேர்க்கப் பட்டவர்கள்! சுருக்கமாகச் சொன்னால் வீட்டிலேயே வைத்து பராமரிக்க இயலாமல் ஹோமிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். எங்கள் ஊரில் மூன்று பெரிய பள்ளிகள். மேனேஜ்மெண்ட் பள்ளிகள். அதில் கிறிஸ்துவ பள்ளியைச் சார்ந்த ஹோம் அது!

நான் பள்ளிக்கு செல்லும் நேரமும் அவர்கள் செல்லும் நேரமும் இண்டர்செக்ட் ஆகும். பார்த்துக் கொண்டே கடந்துச் செல்வேன். ஒரு நாள் பெரிம்மாவிடம் கேட்டேன்,

“ஏன் அவங்கள்லாம் லைனா போறாங்க, வீட்டிலேர்ந்தே அப்படி வருவாங்களா?”

பெரிம்மா சொன்னார்கள், "ஆமா ஆச்சி, அவங்கள்லாம் ஒண்ணா ஒரே வீட்டிலே இருப்பாங்க, ஒண்ணா கிளம்புவாங்க"!

அதன்பின் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. (இப்போது பெரிம்மாவுக்கு இந்நிகழ்வு நினைவில் இல்லாமலிருக்கலாம்.) ஆனால் எனக்குள் சந்தேகம் மட்டும்..எப்படி அத்தனை பேரும் ஒரே வீட்டில் இருப்பார்கள்...எப்படி குளிப்பார்கள்..சரியான நேரத்திற்கு பள்ளி செல்கிறார்கள்!



எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை தினத்தில் நாங்கள் அங்கே சென்று இறங்கினோம், ஆயா, நான், குட்டி,பெரிம்மா மற்றும் சாந்தா அத்தை. ஐந்து பெரிய தனித்தனி வீடுகள். ஒரு சமையலறை. பல பெரிய அக்காக்கள் காய் வெட்டிக் கொண்டிருந்தனர். இரு சமையற்கார அத்தைகள். ஒரு வார்டன். எல்லா சிறுமிகளும் அவரவர் நண்பர் குழுக்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சேப்பல். மரங்களுடனும் ஒரு குட்டி மைதானத்துடனும் அமைந்த ஒரு சின்னஞ்சிறு உலகம். நான் இதுவரை பார்த்திராத உலகம். பதின்மூன்று வருடங்களாக அதே ஊரிலிருந்தும் நான் அறிந்திராத உலகம். ஆதரவற்றவர்கள் என்று கதைகளில் படித்திருந்தாலும் கற்பனை செய்திருந்தாலும்!! ஒரே அறையில் பத்துச் சிறுமிகள்,ஆளுக்கொரு ட்ரங்குப் பெட்டி, ஒருவருக்கொருவர் ஆதரவாய்!

பெரியவர்கள் எல்லோரும் அலுவலக அறைக்களுக்குள் சென்றுவிட நானும் தம்பியும் மட்டும் மைதானத்தில். கூச்சலும் கொண்டாட்டமுமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மெதுவாக எங்களை சூழ்ந்துக் கொள்ளத்துவங்கினர். எங்களுக்கிடையே இருந்த பனிச்சுவர் உடைக்கப் பட்டது. ஒன்றாக விளையாட்டில் ஐக்கியமானோம்! பின் நான் பனிரெண்டாம் வகுப்பு செல்லும் வரையில் அவ்வவ்போது விடுமுறைகளில் ஒரு நாள் ஹோமுக்குச் செல்வது, அவர்களுடன் பொழுதைக் செலவிடுவது என்பது பழக்கமானது. என் பள்ளித் தோழிகளையும் அந்த ஹோம் விடுமுறைதினத்தில் சந்தித்திருக்கிறது. அந்த ஹோம் எனக்கு பல தோழிகளை கொடுத்தது. இனிமையான தருணங்களை தந்தது. அந்தத் தோழிகளில் ஒருவரைத்தான் நான் ரயிலில் சந்தித்தது. அவர்பெயர் தபித்தா, பத்தாம்வகுப்பிற்குப் பின் நர்சிங் டிப்ளமா முடித்து சென்னையில் வேலை செய்கிறார். ஆம்பூரை அடுத்த ஒரு கிராமம் அவரின் அத்தை வீடு. நெடுநாள் கழித்து தோழியைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்கு!

பிறந்தநாளுக்கு பப்புவை அருகிலிருந்த ஹோமுக்கு அழைத்துச் சென்று, அரைநாள் அங்கு செலவழித்ததிலிருந்து, பப்பு அவ்வப்போது “ஹோமுக்கு போகலாம்,ஆச்சி, ஹோமுக்கு போகலாமா” என்கிறாள். யோசித்துப் பார்க்கிறேன், ஒருவேளை பெரிம்மா எங்களை அழைத்துப் போகாமலிருந்தாலோ அல்லது நாங்கள் பார்க்காமல் அவர்களாகவோ உதவியைச் செய்திருந்தாலோ, எனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. பரிதாபப்படுவதோடோ அல்லது இயன்றபோது ஒரு தொகையைக் கொடுத்துவிட்டோ குற்றவுணர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பேன்.

ஆனால், நாமும் அவர்களோடு நேரம் செலவழிக்கவேண்டுமென்ற எண்ணத்தைத் தானாக என்னுள் எழ வைத்தது பெரிம்மாதான். எததனையோ விஷயங்களில், நான் பெரிம்மாவைப் போல் இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் பப்புவும், என் பெரிம்மாவைப் போல இருக்க வேண்டுமென நினைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று! ( This is one of those values which I would like to pass it on to pappu! )


வாழ்க்கையின் values, ஒரே நாளில் நன்னெறிக்கதைகள் மூலமாக கற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி!

Happy Mother's day, Perimma & Amma and this post is for you!!

9 comments:

ஆகாய நதி said...

என் பெற்றோரும் இப்படிப்பட்ட ஹோமில் வளர்ந்தவர்களே! சுய உழைப்பு, தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை,விடாமுயற்சசி இவை தான் இன்று எங்களை நல்ல நிலையில் உயர்த்தக் காரணம்...

பல கஷ்டங்களை குழந்தைப் பருவத்திலேயே பெற்று தான் இன்று எங்களை எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்த்து படிக்க வைத்து பெரிய ஆளாக்கினார் என் அப்பா! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்களுடன் .. பாராட்டுக்களும் முல்லை.

அமுதா said...

/*வாழ்க்கையின் values, ஒரே நாளில் நன்னெறிக்கதைகள் மூலமாக கற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி! */
உண்மை முல்லை.

ராமலக்ஷ்மி said...

//வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம்//

உண்மை உண்மை.

//உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி!//

உங்கள் பெரியம்மாவுக்கு எங்கள் வணக்கங்கள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

Dhiyana said...

//வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம்//

உண்மை முல்லை

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாறாக, வாழ்க்கையைப் பார்த்துத்தான் நிறையக் கற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை உணர வைத்த பெரிம்மாவிற்கு நன்றி!

அதனை எங்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.

Thamiz Priyan said...

வாழ்க்கையில் நிறைய கடந்து வந்து இருக்கீங்க ஆச்சி! உங்களுடைய இந்த மெச்சூரான எழுத்துக்கள் தான் என்னை ரொம்ப கவர்கின்றது..
வாழ்த்துக்களுடன்

butterfly Surya said...

வாழ்த்துக்களுடன் .. பாராட்டுக்களும் முல்லை.

pudugaithendral said...

பாராட்டுக்கள் முல்லை

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger