அம்மாக்களின் வலைப்பூக்களில் என்னையும் முல்லை ஒரு பதிவராகச் சேர்த்துப் பல நாட்களாகின்றன. இன்னும் ஒரு பதிவு கூட இட முடியவில்லையே என்று வருந்திக்
கொண்டிருந்தேன்.
ஆனால் தவறாமல் எல்லாப் பதிவுகளையும் வாசித்து வருகிறேன். இளம் தாய்மார்களுக்குப் பயனுள்ள எத்தனை குறிப்புகள்? குழந்தைகளுக்கு உணவுக்குறிப்புகள், கதைகள் என்று உண்மையில் தோட்டம் மிக அழகாகப் பூத்துக்
குலுங்குகிறது. என்னையும் இங்கு கொண்டு வந்து சேர்த்த முல்லைக்கு நன்றிகள் பல!
என் மகள் நேஹாவுக்கு ஒரு வயது தான் ஆகிறது. 40 நாட்கள் முதல் நானே தான் அவளை முழு நேரமும் கவனித்து வருகிறேன். அவ்வப்போது அம்மாவும் எனது மாமியும் வந்து உதவுவது போக. ஆனாலும் எனக்கென்னவோ குழந்தை வளர்ப்பு
பற்றி எதையும் எழுத ஒரு தன்னம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் நான் விளையாட்டுப் போக்கில், அவள் போக்கில் போய் அவளை வளர்த்துக் கொண்டு வருகிறேன். சில நாட்கள் பழகி கை கூடி வரும் உணவுப் பழக்கம் (routine) தீடீரென்று அவள் முரண்டு பிடிப்பதாலோ வேறு காரணங்களாலோ மாறி விடுகிறது. நான்கு நாட்கள் ஒழுங்காகச் சாப்பிடும் உணவை ஐந்தாம் நாள் கண்டாலே ஓடுகிறாள். இப்படி trial and error ஆக நாட்கள் ஓடுகின்றன!
அதே போல் தான் தூக்கமும். அவள் பிறந்தது முதல் பகலெல்லாம் நன்றாகத் தூங்குவாள். இரவு ஒன்பது மணிக்கு மேல் அப்படி ஒரு உற்சாகமாய் விளையாடத் தொடங்குவாள். நமக்குத் தூக்கம் சொக்கும் 12 மணியளவில் பசி எடுக்கத் தொடங்கி அழுவாள். முப்பது நாள் முதல் இவளுக்கு combination feed தான். (ஒரு வேளை தாய்ப்பால், ஒரு வேளை ஃபார்முலா) இரவு வேளை அதிகம் விழித்திருப்பதால் கண்டிப்பாக எழுந்து பால் கலக்க வேண்டி வரும். பல நாட்கள் இரவு முழுதும் விழித்திருந்தது கூட உண்டு. மாறி மாறி விழித்துப் பார்த்துக் கொள்வோம்.
அப்புறம் அவர் காலையில் வேலைக்குப் போக வேண்டுமே என்று அவளைத் தூக்கிகொண்டு ஹாலுக்கு வந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரே குஷியாகச் சிரித்தும் விளையாடிக் கொண்டுமிருப்பாள். அசதியில் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாது. குழந்தையைக் கண்டபடி திட்டுவேன். மறு நாள் காலை பட்டு போலத் தூங்கும் அவளைப் பார்த்து கஷ்டமாக
இருக்கும்!
மூன்று மாதங்களுக்குப் பிறகு சரியாகி விடும் என்றார்கள். எங்கே! ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இரவு முழுதும் தூங்க ஆரம்பித்தாள்.
அதன் பிறகு நான் கடைப்பிடித்த சில டிப்ஸ்:
1. தினமும் இரவில் கண்டிப்பாகக் குழந்தைக்கு டிஸ்போஸபில் டையபர் கட்டித் தூங்க வையுங்கள். நான் ஐந்தாம் மாதம் முதல் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன். Nappy rash வராமல் இருக்க, காலையில் அதை அவிழ்த்ததும் நன்றாகத் துடைத்து விட்டு Caladryl தடவி விட்டுத் துணி நேப்பியோ ஜட்டியோ போட்டு விடுங்கள். நேஹாவுக்கு இது வரை nappy rash வந்ததே இல்லை.
2. மாலை 5 மணிக்கு மேல் குழந்தையைத் தூங்க விட வேண்டாம். தூக்கம் வந்தாலும் ஏதாவது விளையாட்டுக் காட்டித் தூங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை 9 மணிக்குள் உணவூட்டித் தூங்க வைத்து விடுங்கள். இரவ் உணவுக்குச் சாதமோ பிற திட உணவுகளோ இல்லாமல் சத்து மாவுக் கஞ்சியோ ஸெரிலாக்கோ கொடுக்கலாம். பொதுவாக அவர்கள் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவாக இருப்பது நல்லது.
3. இரவு விழித்து எழுந்தால் சூடான தண்ணீர் கொடுங்கள். தாகத்தில் தான் பெரும்பாலும் குழந்தைகள் விழிப்பது.
4. நேஹா பெரும்பாலும் பாட்டுக்கு மயங்கித் தூங்கி விடுவாள். அவளுக்கென்று பாடுவதற்குச் சில பாட்டுக்கள் வைத்திருக்கிறேன். மெலிதாக ரேடியோவும் வைக்கலாம். பாட்டு கேட்டபடி தூங்குவது மிகவும் நல்லது.
5. பகலில் தூளியில் தூங்கினாலும் இரவில் உங்கள் அருகில் தூங்குவது தான் நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையானால் கண்டிப்பாக இரவில் பாலருந்திக் கொண்டே தூங்குவதைத் தான் விரும்பும். நீங்களும் நிம்மதியாகத் தூங்கலாம். ஆனால் இப்பழக்கத்தை நிறுத்துவது கடினம். (டிப்ஸ் ப்ளீஸ்!)
6. தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் முகம் கை கால்களைத் துடைத்துப் பௌடர் போட்டு உடை மாற்றி விடுவது அவசியம். ஆனால் சாப்பிட்டவுடன் குழந்தை கண்ணயர்ந்து விட்டால் எழுப்பி இதைச் செய்ய வேண்டாம்!
7. முக்கியமாக நீங்களும் இரவில் சீக்கிரமே தூங்கிப் பழகினால் குழந்தையும் அதே போல பழகி விடும். (இந்த விஷயத்தில் சாத்தான் வேதம் ஓதுகிறேன்! என்ன செய்வது அவள் அப்பா வீட்டுக்கு வரத் தாமதம் ஆவதால் இந்த நிலை.)
8. இன்னொரு விஷயம். கொஞ்சம் பெரிய குழந்தையானதும் வீட்டில் மற்றவர்களிடமும் கொடுத்துத் தூங்கப் பழக்குங்கள். உங்களிடம் இருந்தால் தான் குழந்தை தூங்கும் என்றால் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ அல்லது வேறு சந்தர்ப்பத்திலோ ரொம்பக் கஷ்டம். IPL ஆரம்பித்ததிலிருந்து இரவில் அவள் அப்பா மேட்ச் பார்த்தபடி நேஹாவை மடியில் வைத்துக் கொண்டுத் தூங்க வைத்து விடுகிறார். எனக்கு நிம்மதி. ஆனால் அவளும் கிரிக்கெட் ரசிகையாகி விடக் கூடாதே என்று பயமாக இருக்கிறது.
இதெல்லாம் செய்தும் சில நாட்கள் எங்கள் வீட்டுத் தேவதை ”இரவினில் ஆட்டம்” என்று ஆடுவாள். வேறு வழியின்றி அவளுடன் சேர்ந்து ஆடுவதைத் தவிர எனக்கு
இப்போது வேறு வழியில்லை.
18 comments:
நல்வரவு தீபா! :)
நல்ல குறிப்புகள்!
பொழிலன் இன்னும் இரவு 12மணி வரை விளையாடுகிறான் அது போக பால் குடிக்க இரு முறை இப்போது தண்ணீர் குடிக்க இரு முறை என்று எழுவான்... 8மணிக்கு அவனுக்கு விடியல் :)
இரவு 12மணி வரை நானும் அவனுடன் விளையாடிக் கொண்டிருப்பேன் :)
மாலை வேளையில் தூங்க வைக்காமல் மதியம் நன்கு தூங்க வைத்தாலும் இரவு 8மணிக்கு ஒரு தூக்கம் போட்டு விடுகிறான்.. சரியாக 10மணிக்கு எழுந்து ஆட்டம், பாட்டம் எல்லாம் தொடங்கிவிடும் :)
8வது பாயிண்ட் இப்போது தான் துவங்கியுள்ளேன் :)பழக்க வேண்டும்
ரொம்ப அனுபவப்பட்டு உள்ளீர்கள்..கஷ்டம் தான், எல்லாம் கொஞ்ச நாளைக்கு தானே.. அப்பறம் குழந்தை பெரியவள் ஆனதுன் இதெல்லாம் சுகமான பழைய நினைவுகள் ஆகிவிடும்...
அம்மாக்களின் வலைப்பூவில் ஒரு அப்பாவின் பின்னூட்டம் !
என் மகனுக்கு 9 மாதங்கள் ஆகிறது.. மேலே தீபா கூறி உள்ள பல விஷயங்கள் (தூங்குவது பற்றி) எனது மகனுக்கும் பொருந்துகிறது... இரவில் மூன்று அல்லது நான்கு முறை எழுந்து formula குடித்து விட்டு தூங்கிவிடுகிறான்.. தொடர்ந்து தூங்க வைப்பதற்கான சில முயற்சிகள் செய்து பார்த்தோம்.. அனால் முடியவில்லை... குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது எழுந்து விடுகிறான்..
அதே போல.. rocking chair -ல வெச்சு பாட்டு பாடித்தான் தூங்க வைக்கவேண்டி இருக்கிறது.. ( இதை மாற்ற ஏதேனும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க !!)..
என் மனைவியையும் நிச்சயம் தொடர்ந்து இந்த வலைப்பூவை படிக்க சொல்ல்கிறேன் !
- செந்தில்.
பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வாத்சல்யம் கேளுங்கள்.. ரொம்ப நல்ல இருக்கும்
வாங்க தீபா, வந்து கலக்குங்க, பதிவ இன்னும் படிக்கல,, படிச்சுட்டு அப்புற்மா ஒரு கமெண்ட் போடறேன்
நன்றி மயில்!
நிச்சயம் கேட்கிறேன். எங்கே கிடைக்கும்?
ஆனா காமெடி பண்ணாதீங்க. எட்டாவது பாயிண்ட் போட்டதிலேர்ந்தே என் குழந்தை வளர்ப்புத் திறமை நீங்க புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன் :-))
நன்றி செந்தில்!
9 மாதங்கள் என்றால் இரவு பசியாறுமளவுக்கு உணவு கொடுத்து விட்டு இரவில் தாய்ப்பால் மட்டுமே அருந்தி உறங்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று முறை ஃபார்முலா கலக்குவதால் தாயின் தூக்கம் கெடுமே.
நன்றி அமித்து அம்மா!
உங்க அம்மா பதிவெல்லாம் பார்த்து அசந்திருக்கேன்.
என்னோடது ரொம்ப ஜுஜுபி.
//இதெல்லாம் செய்தும் சில நாட்கள் எங்கள் வீட்டுத் தேவதை ”இரவினில் ஆட்டம்” என்று ஆடுவாள். வேறு வழியின்றி அவளுடன் சேர்ந்து ஆடுவதைத் தவிர எனக்கு
இப்போது வேறு வழியில்லை.//
நீங்களும் நம்ம கட்சியா?ஜூப்பரு!!!
தீபா,
//9 மாதங்கள் என்றால் இரவு பசியாறுமளவுக்கு உணவு கொடுத்து விட்டு இரவில் தாய்ப்பால் மட்டுமே அருந்தி உறங்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று முறை ஃபார்முலா கலக்குவதால் தாயின் தூக்கம் கெடுமே.//
சமீபத்துல என்னோட மனைவிக்கு 'Gallbladder removal surgery' பண்ணினாங்க.. அதுக்கு அப்புறமா தாய்ப்பால் நிறுத்தியாச்சு... ஃபார்முலா மட்டும் தான்.. உண்மை தான்.. தூக்கம் கெடத்தான் செய்யுதுங்க.. என்ன பண்றது.. வேற வழி தெரியல..
நல்வரவு தீபா, பயனுள்ளக் குறிப்புகளுடன் வந்திருக்கிறீர்கள்! நன்றி! உங்கள் பதிவு பப்புவுடனான நாட்களை நினைவூட்டுகிறது! பப்புவும், இரவினில் ஆட்டம், பகலில் தூக்கம் ரகம்தான்! ஆனால், முகில் தான் பெரும்பாலான் இரவுகளில் பார்த்துக் கொண்டது! மேலும், இளம்பிராயத்தில், தூக்கம் வந்தால் தூங்க விட்டு விடுவோம். அவர்கள் தூக்கத்தை நாமாகக் கெடுக்கக் கூடாது என்பது எனது ஆயாவின் சட்டம்! இன்றுவ்ரை நாங்கள் அதைக் கடைப்பிடிக்கிறோம். :-)
மயில்,
//பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வாத்சல்யம் கேளுங்கள்.. ரொம்ப நல்ல இருக்கும்//
தேடி பாத்தேங்க.. Download பண்ண முடியலே.. அடுத்த முறை சென்னை வரும்போதும் வாங்கிடறேன்.. :)
செந்தில், இங்க கோவையில் கிடைக்கும், அது ஒரு தாலாட்டு பாடல் தொகுப்பு, நான் என் குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு அந்த பாடல் போட்டுட்டு வந்துடுவேன், இரவில் அமைதியில் ரொம்ப நல்ல இருக்கும். ojas என்ற இன்னொரு தொகுப்பும் உள்ளது. நாளை விபரமாக தருகிறேன். கிரி trading, மற்றும் மியூசிக் gallary போன்ற இடங்களில் கிடைக்கும்.
Deepa, senthil
http://www.emusic.com/album/Bombay-S-Jayashri-Vatsalyam-MP3
check this link, u can listen the songs.
http://www.bwtorrents.com
u can download all the songs from here.
Thanks a lot Mayil. Will surely check it out.
//Senthil: சமீபத்துல என்னோட மனைவிக்கு 'Gallbladder removal surgery' பண்ணினாங்க.. அதுக்கு அப்புறமா தாய்ப்பால் நிறுத்தியாச்சு... //
அப்படியா. பரவாயில்லை. எப்படியும் ஒரு வயதுக்குள் தூங்க ஆரம்பித்து விடுவான், கவலையை விடுங்கள்! ஒரு வயதுக்குள் எப்படியும் தாய்ப்பால் நிறுத்தி விடுவதே நல்லது என்கிறார்கள்.
வணக்கம் தீபா, மிகவும் உபயோகமான குறிப்புகள். எங்க நிலாவும் 6 மாசம் வரைக்கும் இப்படி தான் நைட்ல்லாம் தூங்காம ஆட்டம் போடுவா. எதுக்கு அழறான்னே தெரியாம வேற அழுவா. அப்போல்லாம் அவகிட்டே கோபப்பட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் 2 மாசம் பிரச்சனை இல்லாம இருந்துச்சு. அப்புறம் கொஞ்ச நாள்ல டாக்டரைப் பார்த்தப்போ அவ வெயிட் ரொம்ப கம்மியா இருக்குன்னு சொன்னதால ஃபார்முலா மில்க் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் ஆரம்பிச்சுது வில்லங்கமே. அதோட என் பாலை குடிக்கிறதை மேடம் நிறுத்திட்டாங்க. இப்போ 1 மாசமா ஃபார்முலா மில்க் தான் ஓடுது. நான் பால் கொடுத்த வரைக்கும் பிரச்சனை இல்லாம இருந்துச்சு. குடிச்சிட்டு அழகா தூங்கிடுவா, நானும் தூங்கிடுவேன். இப்போ என்னடான்னா நடுராத்திரில எழுந்து பால் கொடுக்கும்போது தெளிவா முழிச்சிக்கிட்டு 2 மணிநேரம் விளையாடுறா. நீங்க சொல்ற மாதிரி சாயந்திரம் 5 மணிக்கு மேல தூங்க வைக்காதேன்னு என் கணவரும் சொல்லுவார். ஆனால் அவ சொக்கி விழுறத பார்க்கும்போது ரொம்ப பாவமா இருக்கும். அதனால முல்லை சொல்ற மாதிரி அவ தூக்கத்த நான் கெடுக்கறது இல்லை.
//இரவினில் ஆட்டம், பகலில் தூக்கம் ரகம்தான்! ஆனால், முகில் தான் பெரும்பாலான் இரவுகளில் பார்த்துக் கொண்டது!//
வெறுப்பேத்தாதீங்க முல்லை.
கோமதி,
உங்க பிரச்னைகள் புரியுது ஆனா நிறைய பாசிட்டிவ் பாய்ண்ட்ஸ் இருக்கு உங்க வழியில.
முதல்லேர்ந்து தாய்ப்பால் குடுத்துட்டு திடீர்னு ஃபார்முலா கொடுத்ததால் ஏதாவது ஒண்ணை மறுத்திடுவாங்க. உங்க பாப்பா தாய்ப்பால் போதும்னுட்டா. பரவால்ல கவலைப்படாதீங்க. முதல் ஆறுமாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்த சிறந்த தாய்மார்களைச் சேர்ந்தவங்க நீங்க! நான் முன்னயே சொன்ன மாதிரி 30 நாட்களிலிருந்தே இரண்டும் கொடுத்து வருவதால் இரண்டும் குடிக்கிறாள். மேலும் என் குட்டிக்கு ஒரு வயதாகுது. தாய்ப்பாலை நிறுத்தல இன்னும். அது தனிப்பிரச்னை.
முல்லை சொன்னது சரி தான். அதற்குப் மதிய உணவுக்குப் பின் எப்படியாவது இரண்டு மூன்று மணி நேரம் தூங்க வைத்து விட்டால் மாலை நேரம் தூங்காம்ல் இருக்கும்.
Post a Comment