தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. கடவுள் ஒவ்வொருவருடனும் இருக்க இயலாது என்று தாயைப் படைத்தான் என்பார்கள். அத்தகைய தாயைக் குடும்பத்தினர் போற்ற , மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக சில நாடுகளில் கொண்டாடப் படுகிறது.
தாய்மை பெண்ணின் குணங்களை மேம்படுத்துகிறது. அவளது உலகையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது. ஒரு சின்ன எ.கா இந்த சிறுகதை
[அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்.
"அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.இரண்டு வருடங்களுக்குப் பின்... யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான். இரண்டு வருடங்களுக்குப் பின்... சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.]
தாய்மை என்பது அன்பு, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களின் வெளிப்பாடு. ஈரைந்து மாதம் சுமந்து, அமுதூட்டி அன்புடனும் பொறுமையுடனும் போற்றி வளர்க்கும் தாய்மார்கள் அனைவருமே போற்றப்படவேண்டியவரே. இந்த தாய்மையுள்ளும் சிறப்பு கவனம் செலுத்தி தாய்மையின் பல பரிமாணங்களில் மிளிரும் தாய்மாருக்கு தனிச்சிறப்பாக வாழ்த்து கூற விரும்புகிறேன்.
- உடற்கூறால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பும் ஊக்கமும் அளித்து உயர்த்தும் அன்புள்ளம் கொண்ட தாய்மார்கள்
- மனதால் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு அன்பால் அவர்களது திறமையை வெளிக்கொணரும் பொறுமையான தாய்மார்கள்
- பெற்றால் தான் பிள்ளையா என்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தாயன்பு ஊட்டும் கருணை மிக்க தாய்மார்கள்
- சமூகத்தில் பல எதிர்ப்புகளுக்கும் நடுவில் எந்த துணையுன்றி குழந்தைகளின் நலனுக்காகப் போராடி உயர்த்தும் சகிப்புத்தன்மை மிக்க தாய்மார்கள்
இப்படி தாய்மையின் பரிமாணங்கள் பல பல...அன்னையரை அன்னையர் தினத்தில் போற்றுவோம், என்றென்றும் கொண்டாடுவோம்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
9 comments:
அருமை அமுதா. தாய்மையின் பரிமாணங்களை அழகாகக் கூறியிருக்கிறீர்கள். கொண்டாடுவோம் தாய்மையை.
=தாய்மையின் பல பரிணாமங்களை உணர்த்தியமை... அருமை.
நன்றி அமுதா! நல்ல பதிவு!
//தாய்மையின் பல பரிமாணங்களில் மிளிரும் தாய்மாருக்கு தனிச்சிறப்பாக வாழ்த்து கூற விரும்புகிறேன்//
உங்களோடு சேர்ந்துக்கொள்கிறேன் நானும்!
தாய்மை ஒன்றுதான் உணர்விலியே விழித்துக் கொண்டு இருக்கும் என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
இந்த உணர்வு எப்பொழுதும் நம்மை விடுவதில்லை. இன்னோரு இதயம்.
அருமை அமுதா! :)
தாய்மையின் பரிமாணங்களை அருமையாக எழுதிவிட்டீர்கள்!
( மன்னிக்கவும் அந்த பரிணாமம் என்பதை பரிமாணம் என்று மாற்றிவிடுங்களேன்... பொருளே மாறுகிறது... )
கருத்துக்கு நன்றி
ராமலஷ்மி மேடம்
அமித்து அம்மா
முல்லை
வல்லிசிம்ஹன் மேடம்
ஆகாயநதி (மாற்றி விட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி)
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
நல்ல பதிவு அமுதா :)
வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது
Post a Comment