Sunday, May 3, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 3



நான் என் தாய்மையை உச்சக்கட்ட உணர்வாக உணர்ந்த அந்த நிமிடங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்! இது தாயாகப் போகிற தாய்மார்களுக்கு பயனளிக்கும் தைரியம் அளிக்கும் என்று நம்புகிறேன். மொக்கையாக இருந்தாலும்... மன்னித்து என் தாய்மைக்கு, என் குழந்தைக்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் அளியுங்கள்! :) அன்னையர் தின ஸ்பெஷல் என்பதால் பொழிலன் பிறந்த தருணத்தை மட்டும் இங்கே எழுதியுள்ளேன். மற்றவை என் வலைப்பூவில் :) இங்கே தொடுப்பு கொடுத்துள்ளேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) - 1

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்( ஆபரேஷன் தியேட்டரில்) - 2


என் குழந்தை இந்த உலகத்தைக் காணும் பொன்னேரத்திற்காக நான் கடவுளை வேண்டத் துவங்கினேன். "கடவுளே அது பிறக்கும் இந்த நேரம் நல்ல நேரமாக, என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்... எந்த குறையும் இன்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறந்து இறுதி வரை அப்படியே ஆரோக்கியத்துடன் இருக்க அருள் பண்ணிடேன்!" இப்படியெல்லாம் என்னன்னவோ தத்துபித்துனு சாமிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

ஆஹா! வயிற்று மேலே சில கைகள்! இங்க தான் சிஸ்டர்... நல்லா பிடிச்சிக்கோங்க... அப்படி இப்படினு ஏதோ பேசிக்கிட்டாங்க... நான் தலையை அப்படி இப்படி அசைத்து கண் துணி ஓரளவு விலகி எனக்கு தெரியும் படி செய்தேன். :) என் வயிறு தான் தெரிந்தது. அப்புறம் ஒரு கோடுதாங்க போட்டாங்க வயித்துல.... குபுக் குபுக்னு தண்ணீர் கொட்டுச்சு! அடக் கடவுளே இவ்வளவு தண்ணீர் இருக்கேனு நினைச்சேன்... பின்ன ஏன் தண்ணீ இல்லனு சொன்னாங்கனு யோசிக்கும் போதே... டாக்டர் ஃபுல் கட்டிங் முடிச்சாச்சு போல... :) நல்லா இழுங்க.. பார்த்து ஜாக்கிரதைனு சொல்ல இரு கைகள் என் மேல் வயிற்றை மார்பு நோக்கி இழுத்தது பார்க்க முடிந்தது.. சரியா உணர முடியல...

ஆஹா! ஆஹா1 ஆஹா! என்ன சொல்ல எப்படி சொல்ல... அந்த ச்ங்கீதம்... வாழ்க்கையில மறக்க முடியாத இனிமையான சங்கீதம்.... "ங்கா ங்கா ங்கா"னு என் தங்கம், செல்லம், குட்டிமா சத்ததோட வந்துச்சு! :) :) :)

இதை எழுதும் போதே கண்ணுல கண்ணீர் கன்னத்துல ஓடுதுங்க! அவ்வளவு சந்தோஷம்... :) ஆனந்த கண்ணீர் இப்போ. அப்பனா அப்போ எப்படி இருந்திருக்கும் எனக்கு... என் உலகமே என் கைக்கு வரப் போகுது!

ஆனால் அந்த இரு கைகள் என் வயிற்றை இழுத்துபிடித்த படியே இருந்ததால அப்போ குட்டிமாவ பார்க்க முடியல.:(

நான் இந்த உலகத்துக்கு வந்த காரணம் புரிஞ்சாச்சு! என் பிறப்பின் அர்த்தம்... எங்கள் காதலின் கல்யாண பரிசு... குட்டியான அழகான பூ... இப்படி என்னனமோ நினைச்சு எப்படா பார்ப்போம்னு இருக்கையில, குழந்தையை சுத்தம் பண்ணி திரும்ப கொண்டு வந்தாங்க... அப்போ குழந்தை அழுகை இல்ல... எனக்கு என் வயிற்றில் தையல் போடுவது தெரிந்தது! பிறகு சில நிமிடங்கள் கண் அயர்ந்தது போல இருந்தேன்... அதற்குள் ஐயோ குழந்தையை நான் தான் முதலில் பார்க்கனும்னு கண் திறந்தா என் வயிற்றை துடைச்சிக்கிட்டு இருந்தாங்க... எல்லாம் முடிந்தாச்சு போல :)

கண் கட்டை கழட்டினாங்க... இப்போ எல்லா பக்கமும் பார்க்க முடிந்தது... நான் என் குழந்தையை தேடினேன்... :( காணோம்... பிறகு அந்த மயக்க மருந்து டாக்டர் வந்து இவங்க கிட்ட குழந்தைய காட்டலாம இல்லனா இவங்கள தூங்க வைக்கலாமானு என் டாக்டர் கிட்ட கேட்டாரு :( அடப்பாவி என்ன குழந்தைனும் சொல்லாம, கண்ணுலயும் காட்டாம... என்னயா கேள்வி இதுனு நினைச்சுக்கிட்டு " குழந்தை எங்கே?" கேட்டேவிட்டேன். :) அங்க தான் ஒரு குட்டி அறைல இருந்தது பாப்பா...

தூக்கிட்டு வந்தாங்க.... உங்களுக்கு பையன் அப்படினு சொன்னாரு.. ஆஹா! ஆஹா! எனக்கு குழந்தையா? இதுவா என் வயிற்றுல இவ்வளவு நாள இருந்தது? thank god... எப்படி அழகு... மொத்த அழகும் இங்க இல்ல இருக்கு... கடவுளே நேரில் வந்துட்டாரோ? ஆனால் இது ரோஜாப் பூ மாதிரியே இருக்கே... அதே இளஞ்சிவப்பு ரோஜா நிறம்... கண்ணை இருக்க மூடி கைகள மூடி... அழகா! எவ்வளவு அழகு? எப்படி தூங்குது... எனக்கு பேச்சே வரல... அவ்வளவு சந்தோஷம்... கண்களில் கண்ணீர் பொங்கி வழியுது அப்ப... கண்ணாலயேவும் கை ஆட்டியும் கிட்ட வர சொல்லி சைகை காண்பிச்சேன் :)

என் பக்கத்துல வந்து குழந்தையைக் காண்பிச்சாங்க...:) தொட்டேன் மெதுவா... ஆஹா! எவ்வளவு மிருதுவா... என்னால முடியல... "thank god" னு மட்டும் வாயிலிருந்து தானா வந்தது. அப்புறம் ரோஜாப்பூ மாதிரியே இருக்குலனு சொன்னேன். அந்த டாக்டர் சிரித்தார். :) அப்புறம் டாக்டர் என்னிடம் உங்க வீட்டுல எல்லார்கிட்டயும் காட்டனும் அதுனால குழந்தையை தூக்கிட்டுபோறோம்னு சொல்லிட்டு கொண்டு போயிட்டாரு!

அப்பாடா ஒரு வழியா குட்டிமா வந்தாச்சு! ஆனால் அவனைப் பார்க்கும் போது என் அப்பா, அம்மா, கணவர், மாமா, அத்தை இவங்க முகம் விரிந்து சிரிக்கும் அந்த காட்சியை பார்க்கமுடியல!

எனக்கு என் கணவரை உடனே பார்க்கனும் போல இருந்தது. ஆனால் அதற்குள் அந்த தியேட்டர் குரூப் எந்த அறிவிப்பும் இல்லாம என்ன தனி அறைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அதற்குள் ஆண்கள் அனுமதி இல்லயாம். :( அம்மா, சித்தி, அத்தை எல்லாம் வந்து பார்த்தாங்க.

குட்டிமா உள்ள மஞ்சள் லைட் கீழே விளையாடிட்டு இருந்ததது! இளம் வயது சிஸ்டர்கள் பார்த்து " எவ்வளவு அழகு! சேட்டை! உன்னை நானே கட்டிக்கிறேன்... " அப்படி இப்படினு அப்பவே ஒரே போட்டி! பெண்கள் பட்டாளம் புடை சூழ என் தங்கம் தங்க நிற வெளிச்சத்துக்குக் கீழே ஜொலிச்சது! :)

கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தேன்... இன்னமும் சொல்லிக்கிட்டே இருக்கேன்! :)
இப்படி ஒரு சந்தோஷம் என் வாழ்க்கையில வேறு எந்த சந்தோஷத்துலயும் அனுபவித்ததே இல்லை... :)

தாய்மையை உணர்ந்தேன்! அனுபவித்தேன்! மெதுவா என் கை தூக்கி குழந்தையை லேசா தொட்டேன். குழந்தைக்கு பால் கொடுக்க என் அத்தை உதவினார். அம்மா! அப்போ பொங்கின தாய்மை உணர்ச்சிய எப்படி சொல்ல... வார்த்தையே கிடையாதுங்க! எனக்கு ஒரே ஆச்சரியம்... " இப்போதானே கண்ணு வந்த... அதுக்குள்ள உனக்கு சாமி பால் குடிக்க கத்துக்கொடுத்தாட்டாரானு " கேட்டேன்... :) குழந்தையோட ஸ்பரிசம், கூடான அதோட கை... அப்பப்பா என்ன ஒரு சந்தோஷம்... இப்ப நினைச்சாலும் என் குழந்தை பிறந்த அந்த தருணம் புல்லரிக்குது! கண்ணீர் பொங்குது! தாய்மை எப்படிப்பட்ட உணர்வு! புனிதமானது!

வாய்ப்பளித்த முல்லைக்கு நன்றி! :)

இடது கை பழக்கம் - செய்ய வேண்டியது


எப்பவும் நான் என் பப்புவை வெளியில் கூட்டிட்டு போனால் நெறைய விமர்சனங்களை சந்திப்பேன், கல்யாணமோ, ஹோட்டலோ , உறவினர் வீடோ எதுவானலும் எல்லோரும் பப்புவை பார்த்தும் கேட்கும் முதல் கேள்வி, கை மாற்றி சாப்பிட பழக்கலாம்... என்பது தான். காரணம் பப்பு இடது கை பழக்கம் உள்ளவள். பப்பு பிறவியிலேயே இடது கைதான், எழுவது, சாப்பிடுவது, பொருட்களை கையாளுவது எல்லாமே. வலது கையில் நாம் செய்யும் எல்லா வேலைகளையும் போல் அவள் மிக சுலபமாக செய்வாள்.

ஏன் இடது கை பழக்கம்:

நம் மூளையின் இடது, வலது செயல்பாடுகளில் பெரும்பாலும் இடது புறம் இயங்கி உத்தரவுகளாக வரும், அவை கழுத்தருகில் தடம் மாறி உடலின் வலது பக்கத்துக்கு போகிறது. இடது கைககாரர்கள் மூளையின் வலது பாகம் வேலை செய்கிறது. (நன்றி:சுஜாதா சார்)

என்ன செய்வது:
ஒன்றும் செய்ய வேண்டாம், அப்படியே விட்டுவிடுங்கள். அதுதான் அவர்களுக்கு சவுகர்யம். நம்ம கலாச்சாரத்தில் இடது கை பழக்கம் ஆரோக்கியமானது அல்ல என்பதாலும் நாம் அதை மாற்ற முயற்சி பண்ணுகிறோம். அது அவர்களின் தனித்தன்மை. தேவையில்லாமல் விமர்சனம் செய்து அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்.

அன்னையர் தினத்துக்காக - ”சிறுமுயற்சி” முத்துலெட்சுமியிடமிருந்து!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”சிறுமுயற்சி” முத்துலெட்சுமி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி முத்துலெட்சுமி! ”வழி வழியாய்” என்று தலைப்பிடப்பட்ட அவரது பதிவு இதோ :-


ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்களை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தாயே முதல் ஆசிரியை ஆக இருக்கின்ற காரணத்தால் இது எளிதாகிறது.
ஆன்மீக நெறிகளும் பூஜைகளும் கடவுளின் அவதாரங்களைப்பற்றிய புராணங்களும் மற்றும் பண்டிகை விசேஷங்களும் பெண்களால் குழந்தைகளுக்கு போதிக்கப் படுகிறது.



வீர சிவாஜிக்கு அவர் தாய் மகாபாரதம் போன்ற கதைகளையும் விஷய ஞானத்தையும் போதித்ததே அவருடைய வெ ற்றிக்கு ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள். முன்னோர்களின் விஷய ஞானம் படித்து அறிந்து கொள்வது விட செவி வழி அதுவும் தாயின் மடியில் அமர்ந்து கனிவான மொழியில் கிடைக்கப் பெறும்போது மனதில் ஆழமாகப் பதியும்.



பெற்றவள் அறிவு பூர்வமாக சொல்லித்தருகையில் பாட்டி
கதைகள் சொல்லி பேரக்குழந்தைகளை ஒரு கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்... குழந்தைகள் புதிதாக கற்பனை வளத்தைப் பெறுகிறார்கள். மரம் வந்து பேசுமாம் ,கிளி வந்து பேசுமாம், ஏழு மலைகளும் ஏழு கடல்களுக்கும் அப்பால் இருக்கும் அபாயம் மிகுந்த பகுதிக்குக் கூடப் போய் வரும் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போய் குழந்தைகளுக்கு தைரியம் வருகிறது.



இப்புனைவு கதைகளில் குணநலம் கூட கற்றுத் தரப்படுகிறது. கடும் பயணத்தில் கதாப்பாத்திரத்தால் முன்பு உதவி பெற்ற எறும்பும் , மீனும் வந்து உதவும்.
முன்பு கடுமையாய் நடந்து கொண்ட கதாப்பாத்திரத்துக்கோ ஆபத்துகளில் மீள இப்படி உதவி எதுவும் கிடைக்காது. நட்பும் உதவியும் ஆபத்தில் உதவும் என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.



இயற்கையை நேசிப்பதற்கு இயற்கையோடு ஒன்றிப் போவதற்கு கற்றுத்தந்தார்கள். வீட்டுத்தோட்டமும் பிறஉயிர் பேணுதலும் இயற்கையாய் பழகித் தந்தார்கள்.


உடல் நலத்திற்கு வழிவழியாய் வந்த அனுபவத்தில் இந்த உணவு இதற்கு நல்லது , இந்த கால நிலைக்கு உகந்தது இது என்று அறிந்து கடுக்காயிலிருந்து கஷாயம் வரை உபயோகிப்பது அறிந்திருப்பார்கள் பெண்கள்.



நான் நன்கறிந்த முதல் பெண் என் தாய்.
நான் என் தாய் வழி கற்றவை ஏராளம். சாந்தமும் நேர்மையும் அவர்களின் குணநலன். யாருக்கும் தீங்கு நினைத்தலும் நமக்கு கெடுதல் என்று சொல்வார்கள்.
ஆன்மீகமும் அறிவியலும் பொதுஅறிவும் விளையாட்டாய்
போதித்தார்கள்.



வாரம் ஒரு நாள் மௌனம் இருந்து ஆற்றலை சேமிப்பது அவர்கள் வழக்கம். யாரிடமும் தேவையற்ற வார்த்தைகளை உபயோகித்துப் பார்த்ததில்லை.


மனிதன் மனிதத்தின் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத்
துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும், எல்லோரும் இன்புற்று வாழ வேஎண்டுமென்று மன்மார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனும் மகரிஷியின் தத்துவங்களில் அவர்களுடைய ஈடுபாடும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்னை வியக்கவைக்கும். நேற்று பேச ஆரம்பித்திருக்கும் மழலையிடமிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் சமமாய் கொள்ளும் நட்பின் சாயல் தாய் வழியாய் எனக்கும் என்வழி மகளுக்கும்.


அன்பும் ,கருணையும், பெண்கள் கற்ற கல்வியும் அவளுக்கு மட்டுமல்லாது குடும்பத்திற்கும்.. அக்குடும்பத்து நபர்களால் சமூகத்திற்கும் வழிவழியாய் சென்றடையட்டும்.

Friday, May 1, 2009

அன்னையர் தினம் - அன்பென்றால் அம்மா

நல்லா பேசிட்டு இருப்போம்,திடீர்னு மூட்ஆகும், மனதை காயப்படுத்திய சம்பவங்கள் நினைவுக்கு வந்து மேலும் கிளரும். என்னை மூட் அவுட் பண்ணும் விஷயம் இரண்டு. முதல் விஷயம் என் அம்மா. என்னடாது அம்மாவ நினைத்தால் எப்படி கஷ்டமா இருக்கும்னு யோசிக்காதீங்க.

எல்லோருக்குமே அம்மா என்பது ஒரு அற்புதமான உறவு, அவர் கடைசி வரை நம்மோடு நல்லபடியா இருந்து நம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாரா இருக்கணும். இருப்பார், ஒரு அம்மாக்கு அதவிட பெரிய சந்தோசம் எதுவும் இருக்காது. ஆனால் அப்படி அம்மா எல்லோருக்கும் அமையாது, அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் .

என் அம்மா ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர், அவரோட அம்மா என் மாமா பிறந்த உடனே இறந்துட்டங்கலாம். சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டவர்கள். திருமணம் ஆகி திருப்பூர் வந்தபின் அவர் அப்பா, ( என் அப்பிச்சி) நெலம் எல்லாம் வித்து என் அம்மாவின் அருகிலே வந்து குடும்பத்துடன் செட்டில் ஆயிட்டார்.

என் கல்லூரி காலம் வரை ஒரு குடம் தண்ணீர் எடுக்க என் அம்மா என்னை விட்டதில்லை. இத்தனைக்கும் நாங்கள் நாலு பேர்( 2 தம்பி, ஒரு தங்கை), யாரையும் ஒரு வேலை செய்ய விடமாட்டார். நான் வேலைக்கு போகும் சமயம் கூட நான் வெளியில் இருந்து வண்டி ஸ்டார்ட் பண்ணி சத்தம் போட்டுடே இருப்பேன், லஞ்ச் பாக்சை தலைகீழ கவுத்து லேசா வெளியில் வந்த அப்படியே வெச்சுட்டு போய்டுவேன். ரொம்ப படுத்தி இருக்கேன். திடீர்னு ஒரு நாள் நான் ஊரில் இல்லாத சமயம் என் அம்மா தண்ணீர் தொட்டியில் கீழ விழுந்துட்டாங்க, மயக்கமும் வந்துடுச்சு, அந்த நேரம் யாரும் இல்லை, என் பாட்டி வந்து எடுத்து விட்டு ஹாஸ்பிடல் போனால் பக்கவாதம் என்று சொன்னார்கள்.

அன்று முதல் இன்னைக்கு வரை அவர்க்கு சரியாகவே இல்லை, கொஞ்சமா வீட்டுக்குள் நடப்பார், அவ்வளவு தான், இதுவரை பார்க்காத வைத்தியம் இல்லை, மருத்துவர்கள் சொல்வது, அவங்க fight பண்ணவே மாட்டேங்கறாங்க, மருந்தை விட மனசு சரியாகணும் , என் அம்மாக்கு முதல் முறை உடல் நிலை சரி இல்லாத போது என் வீட்டில் சில பிரச்னை இருந்தது. இப்ப அதெல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவர் இன்னும் குணமாக வில்லை. எதுவுமே நினைவு இல்லை, எப்பவும் என்னை பார்த்தால் அழுவாங்க.

எனக்கு குழந்தை பிறந்த சமயம் தினமும் நான் என் அம்மாவை நினைத்து அழுவேன். இன்னமும் என்னைக்கு அவரை நினைக்கிறேனோ அந்த நாள் முழுதும் அவர் நினைவாகவே இருக்கும்,

அவரிடம் நான் பலமுறை கேட்டு பதில் பெறாத கேள்வி, ஏம்மா இப்படி இருக்கே, உனக்கு என்ன வேணும் என்கிட்ட சொல், நான் கண்டிப்பா பண்றேன். மறுபடியும் என் ஸ்கூல் காலேஜ் கால அம்மா எனக்கு வேணும், இதுவரை உன் மடியில் தூங்கினதா எனக்கு நினைவே இல்லை, ஒரு தடவை யாவது தூங்கனும், எவ்வளவு வருஷம் ஆச்சு, உன் கையால் சாப்பிட்டு, எல்லோரும் சொல்லராங்க நான் உன்னை மாதிரியே இருக்கேன், உன்னை மாதிரியே சமையல் பண்றேன், அம்மா உனக்கு ஒரு கடமையும் மீதி இல்லை, உன் உடம்பு சரியில்லாமல் போன சமயம் இருந்த மாதிரி இல்லை நம் குடும்பம், எனக்கு, நம்ம குட்டி மகேஷுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நீதான் வரவே இல்லையே, நம்ம பழைய வீடு வித்துட்டாலும் புது வீடு கட்டி அதில்தான் நீ இருக்கே. உன் நிலையில் நான் இருந்து எல்லாமே முடிச்சுட்டேன். ப்ளீஸ் மா, ஒரு தடவை பழைய மாதிரி இரும்மா, உன்ன கட்டி பிடிச்சு அழக்கூட பயமா இருக்கு, உனக்கு எதாவது ஆயிடுமோன்னு, உன்னோட புடவையை என் கண் முன்னாடி வச்சுருக்கேன், எப்பவும் நீ என் கூட இரு. ஏன் என்னை பார்த்தல் அழுகறே? என்ன இருக்கு உன் மனசில், நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம், அம்மா நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன செஞ்சா நீ திரும்ப பழையபடி வருவே.

அம்மா உன்னை நான் என்னனு வாழ்த்தறது, நான் எதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடு. ப்ளீஸ்.

எவ்வளவு நாள் உன் போட்டோ , புடவையும் வைத்து உன் வாசம் பிடிப்பது, அம்மா ஒரு தரம் என்னை பார்த்து சிரி. ப்ளீஸ்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்


.

அம்மாக்கள் தினம் - அறிவிப்பு!


(image courtesy : Google)
அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கு,

மதர்ஸ் டே-வை முன்னிட்டு ”தாய்மை” எனும் தீம்/கருத்தைக் கொண்டு ஒரு இடுகை நமது குழுப்பதிவிலேயே இடலாம். இந்த மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும்! இடுகை எதுவாகவேனும், கவிதையாகவோ, கதையாகவோ, உங்கள் அம்மாவினைக் குறித்த மறக்க முடியாத நிகழ்வாகவோ அல்லது உங்களுக்கும் உங்கள் குட்டிக்கும் இடையே இருக்கும் உன்னத பிணைப்பினைக் குறிக்கும் பதிவாகவோ அல்லது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடுகையாகவோ..இப்படி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கற்பனைகளே எல்லை!

ஏற்கெனவே உங்கள் பதிவில் கேற்கண்ட கருத்தில் இடுகை இருக்குமாயின், விரும்பினால் இங்கேயும் பகிர்ந்துக் கொள்ளலாம். லேபிள்-கள்: மதர்ஸ் டே 09, தங்கள் பெயர்.
வேறு ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்!

அம்மாக்கள் வலைப்பூவின் வாசகராக இருந்தால், மேற்கண்ட தீம்-இல் பங்களிக்க ஆர்வமிருப்பின் பதிவை/பதிவின் சுட்டியை mombloggers@gmail.com -க்கு மடலிடலாம்.

நமது கலாசாரத்தில் அம்மாக்கள் தினமொன்று இல்லாவிட்டாலும், எல்லா தினமுமே அம்மாக்கள் தினமென்று சொல்லிக்கொண்டாலும் பதிவிலாவது நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம்!

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், மதர்ஸ் டே இடுகைகள் மூலம்! :-)

Happy Mother's day!

யூத் புல் விகடனில் நம் பதிவு

நம்ம அம்மாக்களின் வலைப்பூவின் பதிவு யூத் புல் விகடனில் வந்திருக்கு ....
உற்சாகமா இருக்கு. இது இன்னும் எழுத உற்சாகப்படுத்தும்.

Thursday, April 30, 2009

பார்ட்டிக்கு போலாமா?

நாம் எங்காவது பார்ட்டி களுக்கு நம் குழந்தைகளையும் அழைத்து செல்கிறோமானால்,அதிலும் நம் குழந்தை மற்றவரிடம் பேச தயங்குவதானால்,செல்லும் முன்னரே குழந்தைகளுடன் சிறிது நேரம் அமர்ந்து அவர்களுக்கு போகும் இடத்தில் அனைவரிடமும் எப்படி பேச வேண்டுமென்றும் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டாமென்றும் முன்னரே சொல்லிக் கொடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.நான் இப்படி செய்வதினால் அவர்களும் அதற்க்கேற்றவாறே நடந்து கொள்வர்.அதை விடுத்து போன இடத்தில் குழந்தையிடம் யாரவது பேசும் பொழுது அவர்கள் பேசத் தயங்கினால் உடனே அவர்களை அந்த இடத்திலேயே வர்ப்புறுத்துவது அவர்களுக்கு அங்கே மிகவும் அவமானமாக இருக்கும்.அந்த உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வெளியே எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை சொன்னால் அவர்களும் கூச்சமின்றி பழக ஆரம்பிப்பார்கள்.இதே போல் ஓரிரு முறை வெளியே செல்லும் முன் நாம் செய்தல் அடுத்த முறை அவர்களாகவே போகுமிடங்களில் மற்றவர்களிடம் அழகாகப் பேசி நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிடுவர்!!
இது அவர்களின் வருங்கலத்திற்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும்!!!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger