Monday, January 26, 2009

குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் கிடைத்தன. மரப்பொம்மைகள் வாயில் வைத்தால் தீங்கு விளைவிக்காது. கூர்நுனிகள் இல்லாததால் குழந்தைகளை காயப்படுத்தாது. ஆனால் அந்த பட்டியல் மிகவும் சிறியது தான். நடைவண்டி, மரப்பாச்சி பொம்மைகள், சொப்பு போன்றவை தான் குழந்தைகளுக்கு விளையாட கிடைத்திருக்கும்.

மரத்திற்கும் காகிதத்திற்கும் மாற்றாக வந்த ப்ளாஸ்டிக் குழந்தைகளுக்கான பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் யாவும் ப்ளாஸ்டிக்கில் வர ஆரம்பித்தன. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு?

இப்போது பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 3 வயதுக்கு மேல் என்று அட்டைப்பெட்டியில் குறிப்பு இருந்தாலும், எல்லா வயது குழந்தைகளும் தான் அதை வைத்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய குழந்தைகள் எதையும் வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் இவ்வகை பொம்மைகள் அவர்களுக்கு கட்டாயம் தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் கெடு விளைவிக்கலாம் என்பது ஒரு புறம், அதில் இருக்கும் சின்ன சின்ன பாகங்களும் குழந்தைகளுக்கு கட்டாயம் கேடு விளைவிக்கலாம்.

குழந்தைகள் கடித்து விளையாட ஏதேனும் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைக்கு சென்றால் கிடைக்கும் சில பொம்மைகளின் பட்டியல் கீழே:

*** முதலில் கிடைத்தது 'தேன் நிப்பிள்'. வாயில் வைக்கும் ரப்பர். இது மிகச்சிறிதாக இருப்பதால் குழந்தைகளை எவ்வளவு கவரும் என்பது தெரியவில்லை

*** அடுத்து Johnson & Johnson Baby Kit உடன் வரும் Teether Set. இவை கடிப்பதற்கு ஏதுவாகவும், நச்சுத்தன்மை இல்லாதவையாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

*** அப்புறம் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட Water Teethers. ஏதோ ஒரு திரவம் அடைக்கப்பட்ட காய்கறி/பழம் வகைகளை போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். அவை மிருதுவாகவும் கடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் போல. ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது

*** வேறு Brand தயாரிப்புகள் இருக்கிறதா என்றால் FunSkool தயாரிப்புகளை காட்டினார்கள். FunSkool நிறுவணம் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப வெவ்வேறு பொம்மைகள். விளையாட்டு வழி கல்விக்கு பயன்படும் அழகழகான பொம்மைகள். இந்திய பொம்மைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், குழந்தைகளுக்குக்கான பொம்மைகள் என்றால் கட்டாயம் எனது வாக்கு FunSkool நிறுவணத்திற்கு தான்.

*** FunSkool பொம்மைகள் அருமையானவை என்றாலும் அவை எல்லோராலும் வாங்கப்படுவதில்லை. ஏனென்றால் விலை அதிகம். கடைக்காரரிடம் கேட்டபோதும் அவர் இதே காரணத்தை தான் சொன்னார். நான் சீனப்பொம்மைகளில் இருக்கும் நச்சுத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதெல்லாம் சொன்னாலும் இந்த பொம்மைகள் விற்பனையாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அந்த செய்திகள் எல்லாம் சீன வியாபாரத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவது என்றும் சொன்னார்.

***விலை மலிவு என்பதால் சீன பொம்மைகளை வாங்கிறோம். ஆனால் அந்த நச்சுத்தன்மை குறித்த கருத்துகள் உண்மையா இல்லையா என்று ஏன் ஆராய்வதில்லை. குறைந்தபட்சம் FunSkool பொம்மைகளில் இது Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீன பொம்மைகளில் அது கூட இல்லையே.


ஒரு வருத்தம், எத்தனை கடைகளில் தேடினாலும் குழந்தைகளுக்கான பொருட்களிலோ, பொம்மைகளிலோ இந்திய தயாரிப்புகள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை). Wipro BabySoft பால் குடிக்கும் சீசாக்கள், டயாப்பர்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் அவை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்றவைகளை விட சற்று விலையும் அதிகம்.

மற்றபடி குழந்தைகளுக்கான தயாரிப்புகளை தரும் இந்திய நிறுவணம் ஏதேனும் உள்ளதா??? தெரிந்தால் சொல்லுங்களேன்

Sunday, January 25, 2009

Rabbit's Happy டே- Kids Book review





Rabbit's Happy day
பிரிவு : ஆங்கிலப் புத்தகம்
பரிந்துரைக்கப் பட்ட வயது : நான்கு-ஏழு வயதுவரை
மூன்று - ஐந்து வயதினரும் உபயோகிக்கலாம்.




”எங்க அம்மா பிசியா இருக்காங்க, நான் என்ன பண்றது, என்கூட விளையாட யார் இருக்காங்க” என்று முயல்குட்டி சொல்லவதாக ஆரம்பிக்கும் இக்கதை, பப்புவின் சூழலை பிரதிபலிப்பதாலேயோ என்னவோ, இந்தப் புத்தகம் பப்புவிற்கு பிடித்தமானது!

கையில் பந்துடன் கேரட் செடிகளுக்கு மத்தியில் குளக்கரையில் அமர்ந்திருக்கும் முயல்குட்டி, விளையாட யாருமின்றி இருப்பதாக் நினைக்கும் வேளையில், எதிர்பாராத வண்ணம் சந்திக்கிறது பல முயல்குட்டிகளை! அதன் மீதி பொழுது எப்படி போகிறது
என்பது தான் கதை!

ஆனால், அந்த முயல்குட்டிகள் தங்களை எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்கின்றன தெரியுமா, “we are your little brothers and sisters". நாங்கள் உன் குட்டிச்சகோதரர்கள் என்றுக் குதித்தோடி வருகின்றன இரு குட்டிகள். முயல் இப்போது சொல்லிக் கொள்ளும், மூன்று பேர்கள் இருக்கிறோம் இப்போது! திடீரென முளைக்கின்றன, இரு குட்டிச்சகோதரிகள். இப்போது முயல் சொல்லிக்கொள்ளும், மொத்தம் ஐந்து பேரென! இப்படியாக, கால்பந்து விளையாட ஒவ்வொரு அணிக்கும் ஐந்து பேராக மொத்தம் பத்து முயல் குட்டிகள் எப்படி சேர்கின்றன என்பதுதான் மொத்தக் கதையும்!

ஒருவகையில், எண்களை அறிமுகப் படுத்த உதவி செய்வதோடு, எண்ணவும் அதாவது கூட்டலை அறிமுகப்படுத்தலாம், மிக எளிய முறையில்!

சுவாரசியமான் சம்பவங்களோ, அல்லது சவாலானக் காரியங்களோ அல்லது செய்தி(moral) - இப்படியான ஒன்றை எதிர்பார்ப்பீர்களானால் அது கிடையாது. தூங்கப் போவதற்கு முன் உங்கள் 4 வயது குட்டிக்கு சொல்ல ஏற்றக் கதை..சிறிய கதை..மகிழ்ச்சியும், இதமான நினைவுகளுடனுமாக முடியும் கதை! கூடுதலாக, இது ஜொலிக்கும் தாளாலானது, குட்டிகள் விரும்பும் வண்ணம்!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger