முன்னொரு காலத்தில் மச்சேஸ்வரம் என்றொரு நாடு இருந்ததாம்,அந்த நாட்டை மச்சேந்திரன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆண்டு வந்தான்,மன்னனுக்கும் மகாராணிக்கும் நிறையக் குழந்தைகள் இருந்தாலும் எல்லாமே ஆண் குழந்தைகளாகவே இருந்ததால் அவர்களுக்கு பெண் குழந்தை வேண்டும் எனும் ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது.அந்தக் கால வழக்கப்படி மன்னன் பெண்குழந்தை வேண்டி பல யாகங்களை செய்து பார்கிறான்,பல கோயில் தலங்களுக்கும் மனைவியோடும் மந்திரி பிரதாநிகளோடும் சென்று வருகிறான்,இப்படி இருக்கையில் ஏழு ஆண்குழந்தைகளுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து அதிசயமாக அவர்களது விருப்பப்படி எட்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை மகாராணிக்குப் பிறக்கிறது.அந்தப் பெண் குழந்தைக்கு மீனலோஷினி என்று பெயரிட்டு அருமை பெருமையாக ராஜ தம்பதிகள் வளர்த்து வருகிறார்கள் .
மீனலோஷினி அவளது அண்ணன்கள் ஏழு பேரிடத்தும் மிகுந்த அன்புடையவளாக வளர்கிறாள்.தங்கை மீது ஏழு அண்ணன்களுக்கும் இருக்கும் பாசத்தை எதைக் கொண்டும் அளக்க இயலாது அத்தனை பிரியமான சகோதரர்கள் அவர்கள். மீனலோஷினி மச்சேஸ்வரத்து அரண்மனையின் செல்ல இளவரசியாக வலம் வருகிறாள். ராஜாவுக்கும் ராணிக்கும் அவளே உயிர் என்றாகி நாட்கள் நகர்கின்றன. இளவரசி வளர வளர அவளுக்கு சகல விதமான கலைகளும் ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்து அவளை தன்னிகரில்லாத பெண்ணாக உருவாக்க வேண்டும் என மன்னன் விரும்புகிறான்,அவளது அண்ணன்களும் அப்படியே விரும்புகிறார்கள்.இப்படி எல்லோரும் இன்புற்று இருக்கும் ஒருநாளில் ராஜ குடும்பத்தினர் தங்கள் நாட்டின் கடற்கரை பிரதேசம் ஒன்றிற்கு சுற்றுலா செல்கின்றனர்.
மச்சேஸ்வரம் ஒரு அழகான கடற்கரை நாடு.அந்த நாட்டைச் சுற்றிலும் மூன்று புறமும் நீலக் கடல் சூழ்ந்து கரைகள் மல்லிகைப் பூக்களாய் நுரை பொங்க அலையடித்துக் கொண்டு பார்க்க பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்,கடற்கரையை ஒட்டி மன்னன் ஏராளமான நந்தவனங்களை அமைத்து பராமரித்து வந்தான்.நந்தவனத்துப் பூக்கள் எல்லாம் கடலின் நுரையில் சிக்கி வண்ண வண்ண நுரைப்பூக்க்ளாகி கடற்கரையே வண்ணத்துப் பூச்சி போல பல வண்ணங்களுடன் கண்ணைப் பறித்ததால் இளவரசி மீனலோஷினிக்கு இந்த கடற்கரை சுற்றுலா ரொம்ப பிடித்துப் போனது.
அப்படி சுற்றுலா சென்ற பொழுதுகளில் ஒரு நாள் மிதமான வெயிலுடன் ஈராக் காற்று வீசிக் கொண்டிருந்த முற்பகல் தினத்தில் பார்க்கப் பார்க்க சலிக்காத வண்ணக் கடலை ஒரு அழகான நாவாயின்(கப்பல்) மீதிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் இளவரசி ;அவளுக்கு அப்போது பத்து வயது இருக்கும் ,சிறுமி தான் ,அந்த வயதுக்கே உரிய விளையாட்டுத் தனமும் ,துடுக்குத் தனமும் பிடிவாதமும் கூட அவளுக்கு நிறையவே இருந்தன.செல்ல இளவரசியல்லவா! கப்பலின் முனையில் நின்று கடலை கண்களால் பருகிக் கொண்டிருந்த இளவரசி திடீரென்று கடல் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தங்கக் கண்ணாடி மீனைப் பார்த்து விடுகிறாள்.
அந்த தங்கக் கண்ணாடி மீன் பார்த்தமாத்திரத்தில் இளவரசியின் கண்களைப் பறித்தது ;தங்க நிறக்கண்ணாடி போன்ற வளவளப்பான உடலெங்கும் பொடிப் பொடியான வைர செதில்களுடன் வெள்ளி நிறத்தில் பளபளக்கும் குவிந்த வாயை அடிக்கடி திறந்து திறந்து மூடிக் கொண்டு நீலக் கடல் நடுவே கண்ணிமைக்கும் நேரத்தில் இடமும் வலமுமாக குசியாக துள்ளித் துள்ளி குத்தித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த மீனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் மீனாலோஷினிக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவள் தொடர்ந்து பல மணி நேரங்களாக அந்த மீன் விளையாட்டையே பார்த்துக் கொண்டு தன்னை மறந்து அங்கேயே நிற்கிறாள்,மதிய உணவுக்குப் போகக் கூட விருப்பமிள்ளதவலாய் அவள் அங்கே மீன் விளையாட்டை வெடிக்க பார்த்துக் கொண்டிருப்பதை பனிப் பெண்கள் மூலம் அறிந்த ராஜ தம்பதிகளும் அவளது அண்ணன்களான ஏழு இளவரசர்களும் தாங்களே நேரில் அவளை உணவருந்த அழைக்க வருகிறார்கள் .
தாங்கள் வந்திருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இளவரசி அந்த மீனில் லயித்திருப்பதைக் கண்ட அவளது ஏழு அண்ணன்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். தங்கைக்கு பிடித்த அந்த மீனை விட்டு அவள் கப்பலின் உள்ளே உணவருந்த வரமாட்டாள் என்று புரிந்தவர்களாய் அவர்களும் அந்த மீன் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கவே மன்னன் தன் மகளிடம் ;
"மகளே இது உணவருந்தும் நேரம் அம்மா,பசியாறி விட்டு மீண்டும் நீ மீன் விளையாட்டைப் பார்க்கலாமே " என்று அழைக்கிறார்.இளவரசி தன் தந்தை அங்கே இருப்பதை அப்போது தான் பார்க்கிறாள்.உடனே அவள்;
அப்பா எனக்கந்த மீன் வேண்டும் பிடித்து தந்தால் தான் நான் சாப்பிட வருவேன் " என்று குறும்பாய் சிரித்துக் கொண்டே கூறி விட்டு கப்பலின் விளிம்பை கையால் இறுக்கப் பற்றிக் கொண்டு குனிந்து மீண்டும் கடலையும் தங்கக் கண்ணாடி மீனையும் பார்க்க ஆரம்பித்து விடுகிறாள்.
மகளின் பிடிவாதம் அறிந்தாலும் கூட ஏனோ மகளிடம் உடனே சரி மீனை பிடித்துத் தருகிறேன் என்று சொல்லாமல் ;
"கடல் மீன்கள் சுந்தந்திர உயிர்கள் மகளே ,அவற்றை பித்து தொட்டியில் அடைத்தால் பாவமில்லையா" நீ சாப்பிட வா நான் உனக்கு தொட்டி மீன்கள் வாங்கித் தருகிறேன்,அவை தொட்டிக்குப் பழக்கமான மீன்களாயிருக்கும்,புதிதாக கடலில் சுதந்திரமாகத் திரியும் மீனை தொட்டியில் அடைத்து அதன் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் " என்று மன்னன் கூறுகிறான்.
இளவரசி கேட்பாளோ இதை!
அவள் ஏமாற்றத்தில் முகம் வாடி நிற்க ;
இல்லை எனக்கந்த தங்கக்கண்ணாடி மீன் உடனே வேண்டும்,எத்தனை அழகாக துள்ளித் துள்ளி கடலுக்குள் பாய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது பாருங்கள் ,தந்தையே எனக்கந்த மீன் தான் வேண்டும் பிடித்துத் தரப் போகிறீர்களா இல்லையா! மீன் இல்லையென்றால் நான் உணவருந்த வர மாட்டேன் ,மீன் கிடைத்தால் தான் இனி சாப்பிட வருவேன் இளவரசி பிடிவாதமாய் கேட்க ;
ஏழு அண்ணன்களுக்கும் வருத்தமாகி விடுகிறது ;
அட ஒரு சாதாரண மீன் அதற்குப் போய் தங்கள் அருமைத் தங்கை பட்டினி கிடப்பதா ? என்னதான் தங்க நிறத்தில் வைரச் செதில்களுடன் அதிசய மீனாய் இருந்தாலும் தங்கள் தங்கையை விட அந்த மீனொன்றும் பெரிதில்லை..அதிசயமில்லை,அவளது விருப்பமே இங்கு முக்கியம் என்று தந்தையை சமாதானப் படுத்தி விட்டு தங்களில் ஒருவர் அந்த மீனை பிடித்து வருவதாக தங்கைக்கு வாக்களிக்கின்றனர்.
மன்னன் மீனை பிடித்துத் தர மறுத்ததால் வாடி கூம்பிப் போயிருந்த இளவரசி மீனலோஷினியின் முகம் தனது அண்ணன்களின் வார்த்தைகளைக் கேட்டு சூர்யகாந்திப் பூவாய் மலர்கிறது,அவள் சந்தோசத்தில் மீனைப் போலவே துள்ளிக் குதிக்கிறாள். உடனே ..உடனே அந்த மீனைப் பிடித்து என்னிடம் தாருங்கள் நான் அதை தங்கத் தொட்டியில் வைத்து பாதுகாப்பாய் வளர்ப்பேன் என்று குதூகலமாய் பரபரக்கிறாள்.
மூத்த அண்ணன் ராஜ குடும்பத்தின் பிரத்யேகமான நுண்ணிய வெள்ளிக் கம்பிகளால் பின்னப் பட்ட மிகப் பெரிய வலையை வீசச் சொல்லி தனது கப்பலின் மீனவப் பணியாட்களை ஏவுகிறான். வெள்ளி வலை சுழற்றிக் கொண்டு கடலில் வீசப் படுகிறது.
வண்ணமயமான கப்பல் அந்தக் கப்பல் விளிம்பில் அழகான ஆடை ஆபரணங்களுடன் வெகு அலங்காரமான ராஜ குடும்பத்தார், சூர்ய ஒழியில் தக தகக்கும் வெள்ளி வலை ,அதை சுழற்றி கடலுக்குள் வீசிய மீனவர்கள் தலையில் அணிந்திருந்த பச்சை நிற,மஞ்சள் நிற கூம்பு வடிவ தொப்பிகள் ,கப்பலுக்கு மேலே வெண் பஞ்சு மேகங்களின் மறைப்பில் மென் நீலத்தில் மங்கலாய் ஒளிரும் சூரியன் ,அந்த மேகங்களை தம் இறக்கைகளால் அடித்து விலக்கி விடப்போகும் ஆர்வத்தில் அதை நோக்கி அணி அணியாய் சிறகு விரியப் பறக்கும் பறவைகள் என அந்த காட்சி தூர இருந்து பார்க்கும் கடற்கரை மனிதர்களுக்கு வெகு உல்லாசமானதொரு மனநிலையைத் தந்து கொண்டிருந்தது.
முதல் வலை வீசி வெகு நேரம் ஆகியும் மீன் சிக்க வில்லை ,அடுத்த வலை வீசலிலும் மீன் சிக்க காணோம் ,
நேரம் கடக்க கடக்க இளவரசி முகம் சுணங்கத் தொடங்குகிறது,
அவள் முகம் வதங்கினால் பார்க்க சகிக்குமோ மன்னன் மற்றும் அண்ணன்களின் மனம் ; வலை ஒரு பக்கம் வீசுங்கள் நாங்கள் ஏழு பேரும் கடலில் இறங்கித் தேடுகிறோம் இன்னும் அந்த மீன் நமக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா எனப் பார்க்கலாம் என ஏழு இளவரசர்களும் நீலக்கடல் நடுவே கப்பல் விளிம்பில் இருந்து ஒருவர் பின் ஒருவராக அம்பில் இருந்து புறப்பட்ட நாண் போல குதித்து மூழ்கி தங்கக் கண்ணாடி மீனுக்காக அந்தப் பகுதி கடலையே ஒரு அலசு அலசுகிறார்கள் .
தொடர்ந்து பலமணி நேர தேடலுக்குப் பின் சூரியன் மேற்கே மலை வாயிலில் விழும் முன் சிவந்த ஒளியால் கடல் கூட செந்நீலமாய் தக தகக்கும் அந்தப் பொன்னொளியில் தன் கைகளில் தங்கக் கண்ணாடி மீனேந்தி மீனலோஷினியின் கடைசி அண்ணன் குட்டி இளவரசன் மச்சேந்திர மனோகரன் கடல் நீர் சொட்ட சொட்ட கப்பல் விளிம்பை நோக்கி நீந்தி வருகிறான்.
அவன் நீந்தி கப்பலை அடையும் முன்பு அந்த அதிசய தங்கக் கண்ணாடி மீன் திடீரென்று அவனுடன் பேசத் தொடங்குகிறது.
பேசும் மீனா!!!
மச்சேந்திர மனோகரன் ஆச்சர்யத்தில் உறைகிறான்.
தொடரும் ...
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
6 comments:
ரொம்ப அருமையாக இருக்கிறது. படங்கள் கிடைத்தாலும் இணையுங்கள். :)
தொடருங்கள்.
//பேசும் மீனா!!!
மச்சேந்திர மனோகரன் ஆச்சர்யத்தில் உறைகிறான்.//
கூடவே இந்த ”மீன் இளவரசி மீனலோஷினி” கதையை படித்த நானும்...
//தொடரும்//
தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்...
விறுவிறுப்பான நடையில் தொடங்கிய இந்த கதை தொடரும் என்ற வரி வந்த போது ஏமாற்றமடைந்தேன்...
Nice story karthika. Waiting for the next part.
கதை கலக்கலா இருக்கு Karthiga. அடுத்த பார்ட் எப்போ?
நன்றி விதூஷ் படங்கள் நெட்டில் தேடிப்பார்க்கிறேன்,பொருத்தமாய் படங்கள் இருந்தால் கதை சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். பரிந்துரைக்கு நன்றி .
நன்றி ஆர்.கோபி நாளைக்கு மீன் இளவரசி செகண்ட் பார்ட் படிக்க தயாராகுங்க.
நன்றி குந்தவை (நாளைக்கு நெக்ஸ்ட் பார்ட் படிக்கலாங்க)
நன்றி திஷூ....மீன் இளவரசி ஹரிணிக்கு நான் இப்போ புதுசா சொல்ல ஆரம்பிச்சிருக்கற பெட் டைம் ஸ்டோரி ,எவ்ளோ நாளைக்கு கதை இழுத்துட்டு போகப் போகுதோ தெரியலை,நாளைக்கும் படிங்க திஷூ.
நன்றி விதூஷ் படங்கள் நெட்டில் தேடிப்பார்க்கிறேன்,பொருத்தமாய் படங்கள் இருந்தால் கதை சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். பரிந்துரைக்கு நன்றி .
நன்றி ஆர்.கோபி நாளைக்கு மீன் இளவரசி செகண்ட் பார்ட் படிக்க தயாராகுங்க.
நன்றி குந்தவை (நாளைக்கு நெக்ஸ்ட் பார்ட் படிக்கலாங்க)
நன்றி திஷூ....மீன் இளவரசி ஹரிணிக்கு நான் இப்போ புதுசா சொல்ல ஆரம்பிச்சிருக்கற பெட் டைம் ஸ்டோரி ,எவ்ளோ நாளைக்கு கதை இழுத்துட்டு போகப் போகுதோ தெரியலை,நாளைக்கும் படிங்க திஷூ.
Post a Comment