Tuesday, December 16, 2008

ஒரு கொடியில் இரு மலர்கள்

அமித்து அம்மாவோட பதிவைப் பார்த்த உடனே இது பத்தி எழுதணும்னு நினைச்சேன்.. எழுதிட்டேன்... அதாங்க இரண்டு குழந்தைகள் என்றால் பெற்றோர் உணர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்...

1. தயார்ப்படுத்துதல்
இரண்டாவது குழந்தைக்கு நீங்களும் தயாராகி உங்கள் குழந்தையையும் தயார்படுத்த வேண்டும். இன்னொரு குழந்தை வந்தால் உங்கள் அன்பு மேலும் பகிரப்பட்டு சில நாட்களுக்கு கொஞ்சம்
அழுத்தம் இருக்கும் என்று உணர்ந்து நீங்கள் அதைக் கையாளத் தயாராக வேண்டும். அது போல் முதல் குழந்தையிடம், புதிதாக வரும் குழந்தையால் அவள்(ன்) எவ்வளவு சந்தோஷமாக
இருக்கப்போகிறாள்(ன்), விளையாட ஒரு துணை கிடைக்கும் என்றெல்லாம் கூற வேண்டும். பேறு காலம் நெருங்கும் கடைசி மாதங்களில், குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ள அவர்கள் உதவி தேவை என்பதைக் கூறி அவர்களை பொறுப்பான ஒருவராக உருவாக்க வேண்டும். மேலும் கொஞ்ச நாட்களுக்குப் பிறந்த குழந்தை அம்மாவைக் கேட்கும் , எனவே, அப்பொழுது பாப்பாவிடம் கோபப் படக் கூடாது என்றும் கூறிவிடவேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்களது முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.

2. குழந்தை பிறந்த பின்
இது கொஞ்சம் டென்ஷனான டைம். ஆனால், பாப்பாவுக்கு இப்பொழுது அம்மாவின் கவனிப்பு தேவை. எனவே இப்பொழுது அப்பா முதல் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அம்மாவும், அவ்வப்பொழுது அவன் உதவியால் எப்படி பாப்பாவைப் பார்த்துக் கொள்ள முடிகிறது எனக் கூற வேண்டும். இருவரும் முதலையும் பாராட்டி, பிறந்த குழந்தையையும் பாராட்ட வேண்டும். "பாரு, பாப்பா உன்னை தான் தேடுது. உன்னைத்தான் அதுக்கு பிடிக்குது போல..." போன்று பேசி, குழந்தையை இரசிக்க பெரியவளு(னு)க்குக் கற்றுத் தர வேண்டும்.

3. வளர வளர...நமக்கு ஒரு பெரிய பிரச்னை என்ன என்றால், இரண்டாவது குழந்தை வந்தவுடன், முதல் குழந்தை என்றுமே பெரிதாகவும், இரண்டாவது என்றுமே சின்னதாகவும் மாறி விடுவது தான். எனவே நாம் முதல் குழந்தையை இது பாதிக்காதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். சின்ன குழந்தைக்கு விவரம் தெரியும் வரை, இந்த விளையாட்டு நன்றாகப் போகும். ஆனால், சின்னதுக்கும் விவரம் தெரிய ஆரம்பித்தால், இருவரும் பெற்றோர் அன்பிற்குப் போட்டியிடுவார்கள். அள்ளி அள்ளிக் கொட்டினாலும் பற்றாத அன்பு...

சற்று விவரம் தெரியும்வரை சின்னக் குழந்தையைக் கண்டிக்க முடியாது. ஆனால் பெரியவள்(ன்) கண்டிக்கப்பட வேண்டி இருக்கும். அப்பொழுதெல்லாம், "இன்னும் சின்ன பாப்பா, விவரம் புரியாது, வளர்ந்த உடனே, தப்பு செஞ்சா, கண்டிப்போம்", என்று புரிய வைக்க வேண்டும். வளர்ந்த பின், இருவருக்குமே புரிய வேண்டும், தவறு செய்தால் கண்டிக்கப்படுவது இருவருமே, அது போல் பாராட்டுதல்களும் இருவருக்குமே என்று.

இன்னொரு முக்கிய விஷயம், அவர்கள் இருவரிடையே பாசம் மலர நீங்கள் நிச்சயம் பாலமாக இருக்க வேண்டும். என் உறவினர் ஒருவர், தம் இரு குழந்தைகளும் சண்டை போட்டால், "பேசாமல் இருங்க" என்று கூறி பிரித்து வைத்து விடுவார். விளைவு: இன்று அவர்களுக்கிடையே உடன்பிறந்தோருக்கான பாசம் அணுவளவும் இல்லை, பேசக் கூட மாட்டார்கள்.

எனவே அடித்தால், அன்பாக இருக்கக் கற்றுக் கொடுங்கள், அன்பாக இருந்தால் அதைப் பாராட்டுங்கள். பிறகு வீடே டாம் அண்ட் ஜெர்ரியாக கலகலப்பாக இருக்கும்.

2 comments:

pudugaithendral said...

எனவே அடித்தால், அன்பாக இருக்கக் கற்றுக் கொடுங்கள், அன்பாக இருந்தால் அதைப் பாராட்டுங்கள். பிறகு வீடே டாம் அண்ட் ஜெர்ரியாக கலகலப்பாக இருக்கும். //

ரொம்ப சரியாச் சொன்னீங்க.

எங்க வீட்டுலையும் டாம் அண்ட் ஜெர்ரிதான். :)))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா சொல்லியிருக்கீங்க அமுதா.

என்னளவில் அக்கா தங்கை உறவு அம்மா - பெண் போல ஆனது.
ம், என் அக்காதான் எனக்கு அம்மா.
அம்மா, அம்மாவே.

ம், பிரிச்சு பாக்கவே முடியலை.
எங்க அக்கா, ம், சொல்லும்போதே நெகிழ்ச்சியா இருக்கு.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger