சிறு குழந்தைகளுக்கும் புரியும் வகையில் கதை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது! ஆனால் பொழிலன் விஷயத்தில் இந்த முயற்சி பலனளிப்பதாக நான் உணர்ந்ததால் மற்ற குழந்தைகளுக்காகவும் இங்கே கதை சொல்ல வந்துவிட்டேன் :)
ஒரு ஊரில் ஒரு பெரிய மலை இருந்ததாம். அந்த மலை முழுவதும் ஒரே பனியா அழகா இருக்குமாம். அங்கே ஒரு அழகான அம்மாவும், அப்பாவும் இருந்தாங்க! அவங்களுக்கு இரண்டு தம்பி பாப்பா இருந்தாங்களா... பெரிய தம்பி பாப்பா பேரு பிள்ளையார் சாமி, குட்டி தம்பி பேரு முருகா சாமி! அவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா, அம்மா மாதிரியே அறிவாளிகளாவும், அழகானவங்களாவும் இருந்தாங்க!
அப்போ ஒரு நாள் அவங்க எல்லாரையும் பார்க்க நாரதர் மாமா வந்தாரு! அவர் எப்படி வருவாரு?..."நாராயணா...நாராயணா" அப்படினு சொல்லிட்டே வருவாரு. அன்னைக்கும் அப்படிதான் வந்தாரு. அவர் வந்ததும் அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் வணக்கம் சொல்லிட்டு அவர் கையில வைத்திருந்த ஒரு அழகான மாம்பழத்தை அப்பா கையில குடுத்தாரு... உடனே பிள்ளையார் சாமியும், முருகா சாமியும் ஓடி வந்து நாரதர் மாமாக்கு வணக்கம் சொல்லிட்டு அப்பாக்கிட்ட அந்த பழத்தை அவங்க ரெண்டு பேருக்கும் தரனும்னு வேண்டிக்கிட்டாங்க...
அப்போ நாரதர் மாமா என்ன சொன்னாரு தெரியுமா? " இது ஒரு புதுமையான பழம்.. இதை யாரும் பங்கிட்டு சாப்பிட முடியாது, யாராவது ஒருவர் தான் சாப்பிட முடியும்" அப்படினு சொன்னாரு! உடனே அந்த அப்பா என்ன பண்றதுனு யோசிச்சப்போ அம்மா சொன்னாங்க " ரெண்டு பசங்களுக்கும் ஒரு போட்டி வைத்து அதுல யாரு வெற்றியடையுறாங்களோ அவங்களுக்கு இந்த அதிசய பழத்தை குடுக்கலாம்". அப்பாவும் உடனே இது ரொம்ப நல்ல ஏற்பாடுனு இதுக்கு ஒத்துக்கிட்டார்.
அப்பாவே ஒரு போட்டியும் வைத்தார். அது என்ன தெரியுமா? ரெண்டு பேரும் இந்த உலகத்தை சுத்தி வரனும்... யாரு முதலில் சுத்தி வந்து அப்பா, அம்மாகிட்ட வராங்களோ அவங்களுக்கு அந்த பழம் கிடைக்கும். உடனே முருகா சாமி தன்னோட நண்பன் மயில கூட்டிகிட்டு இந்த உலகத்தை சுத்தி வர கிளம்பிட்டாரு!
ஆனால் இந்த பிள்ளையார் சாமி என்ன பண்ணாரு தெரியுமா? அவரோட நண்பன் எலிய கூட்டிகிட்டு அவங்க அப்பா, அம்மாவையே சுத்தி வந்தாரு! உடனே அப்பா கேட்டாரு " ஏன்பா உலகத்தை சுத்தாம எங்களை சுத்தி வர" அப்படினு... அதுக்கு பிள்ளையார் சாமி என்ன சொன்னாரு தெரியுமா! " அவங்க அவங்க அம்மாவும், அப்பாவும் தான் எல்லா பிள்ளைகளுக்குமே உலகம்... அதுனால தான் நான் என் அம்மா, அப்பாவை சுத்தி வந்தேன்! இப்போ நான் இந்த உலகத்தை சுத்தியாச்சு... நான் தானே முதலில் வந்து ஜெயிச்சேன்... அதுனல இந்த பழத்தை எனக்கே தரனும் " அப்படினு சொன்னார்.
அவர் சொல்றது சரிதானு எல்லாருமே சொன்னாங்களா... அதுனால அவர் தான் போட்டில வெற்றியடைந்து மாம்பழத்தை பரிசா வாங்கினாரு! :)
அடுத்த பகுதி அடுத்த கதையில்...:)
பின் குறிப்பு:
கதையைக் கூறிய பின் குட்டீஸ் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உங்களை அடிக்கவோ... கடிக்கவோ வந்தால் "மொக்கைக் கதை கூறும் சங்கம்" பொறுப்பாகாது.... :)அந்த சங்க உறுப்பினரான நானும் பொறுப்பாளி அல்ல!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
2 comments:
நல்ல சங்கம்.
குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டிய கதை இது!!
எனக்கு இதுபோன்ற கதைகள் மிகவும் பிடிக்கும்....உங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்!!!
Post a Comment