Monday, December 8, 2008

ஓடி விளையாடு பாப்பா

"ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா."


என்பது மகாகவியின் பொன்னான வரிகள்.


நாம் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகின்றனரா, தூங்குகின்றனரா, படிக்கின்றனரா என்று பார்க்கும் அளவுக்கு போதிய உடல் உழைப்பு இருக்கின்றதா என கவனிக்கிறோமா என்று ஒரு கேள்வி தோன்றியது. இதை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். முன்பு "வெயிலோடு விளையாடி..." என்று குழந்தைகள் ஆனந்தமாக விளையாட நேரம் ஒதுக்கி ஆட்டம் போட்டுவிட்டு வந்ததால் , நம் பெற்றோர் இதைப் பற்றித் தனியாக யோசிக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. ஆனால் இன்று வீடியோ கேம்ஸும், டி.வி.யும் அவர்களை ஆட்டுவிக்கும் காலத்தில், இதைக் குறித்து நாம் சற்றே யோசிக்க வேண்டும்.

முதலில் விளையாட்டினால் என்ன பலன்கள் எனக் காண்போம்.

- உடல் வளமும் மன வளமும் மேம்படுகிறது
- அவர்களது கற்பனைத் திறன் மேம்படுகிறது
- குழு விளையாட்டுக்களல், மற்றவரோடு பழகும் திறன் மேம்படுகிறது
- வெற்றி தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் தருகிறது. இதனால் அவர்கள் மன உறுதி மேம்படுகிறது, அவர்களது சுயமதிப்பு உயர்கிறது.


காலங்கள் மாறினாலும் குழந்தைகள் என்றும் குழந்தைகள் தான். யோசித்து எதுவும் செய்யாத வரை குழந்தைகள் தங்கள் தேவையை அழகாகச் செய்கின்றனர். பிறந்த குழந்தையைப் பாருங்கள் , கையை காலை ஆட்டிக் கொண்டே இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அது அந்த வேலையை அலுக்காது செய்யும், குப்புற விழுவது, தவழ்வது, நிற்பது, நடப்பது என அவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். பிறகு தான் டி.வியும் மற்றவையும் அவர்கள் கவனத்தை ஈர்க்கின்றன, தம்மை மறக்கச் செய்கின்றன.

இன்று பெரும்பாலோரின் பல நோய்களுக்கு மருத்துவர் கூறும் அறிவுரை, "எடையைக் குறையுங்கள்" என்பது தான். நாம் நம் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்தினால் பிற்காலத்தில் அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருப்பார்கள். உடற்பயிற்சி என்பதை விட, விளையாட விட்டால் அவர்கள் அதை அனுபவித்து செய்வார்கள். விளையாட்டு என்பது கற்பதற்கும் உதவும் என்றாலும், விளையாட்டை விளையாடுவதற்காக மட்டுமே விளையாட வேண்டும். கொஞ்ச தூரம் நட என்றால் நடக்காத குழந்தைகள் கூட, கண்ணாமூச்சி என்றால் ஆவலாக ஓடி வந்து அலுக்காது விளையாடுவார்கள். சில குழந்தைகள் அதற்கும் மசிய மாட்டார்கள், ஆனால் நடனம் என்றால் ஆவலாக ஓடி வருவார்கள். இப்படி ஏதேனும் உடலுக்கு நலன் பயக்கும் பழக்கம் ஒன்றை ஏற்படுத்தி விட்டால், குழந்தைகள் என்றும் குதூகலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.

3 comments:

pudugaithendral said...

அருமையான பதிவு.

முன்பு "வெயிலோடு விளையாடி..." என்று குழந்தைகள் ஆனந்தமாக விளையாட நேரம் ஒதுக்கி ஆட்டம் போட்டுவிட்டு வந்ததால் , நம் பெற்றோர் இதைப் பற்றித் தனியாக யோசிக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. ஆனால் இன்று வீடியோ கேம்ஸும், டி.வி.யும் அவர்களை ஆட்டுவிக்கும் காலத்தில், இதைக் குறித்து நாம் சற்றே யோசிக்க வேண்டும்.//

மிக அருமையான வரிகள்,

வாழ்த்துக்கள்

ரிதன்யா said...

உண்மை

குழந்தகளுக்கு நல்ல பசி எடுக்கும், அயர்ந்து தூங்க நல்ல வழியும் கூட.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வீடியோ கேம்ஸ்களீல் வன்முறை.

டி.வி. களில் வன்முறை. மற்றும் கொடூர எண்ணங்கள்,

நொருக்கு தீணிகள் இவற்றீலிருந்து விடுதலைக்கு ஒரே வழி


கள விளையாட்டுகள்தான்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger