Friday, November 27, 2009

பாப்பு செய்த மணிமாலை


பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
மணிமாலை செய்யத் தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு ( கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில்
கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும் .
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ ! ...எந்நேரமும் டிவி பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .

Sunday, November 22, 2009

கிட்ஸ் புன்னகை உலகத்தில் பாப்பு

ஜெயாவின் முந்தைய பதிவைப் படித்து பாப்புவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன் ...முடிந்ததும் பாப்புவுக்கு என்ன தோன்றியதோ ...ஹே...ஹே நானும் ப்ளாக் எழுதணும் மம்மி ...ப்ளீஸ்...ப்ளீஸ் என்று ஒரே அடம்.

சரி என்ன எழுதணும் சொல்லு நான் நீ சொல்லச் சொல்ல டைப் பண்றேன் என்று அனுமதிக்கவே அவள் சொன்னது கீழே பார்வைக்கு ...

"பேரன்ட்ஸ் வந்து சின்னக் குழந்தைங்க கொஞ்சம் சேட்டை பண்ணா மெதுவா சொல்லுவாங்க...சொன்னதைக் கேட்காம மறுபடி மறுபடி சேட்டை பண்ணா கண்டிக்க தான் செய்வாங்க...ஆனா நீங்க அம்மா அப்பா கண்டிக்கும் போது அவங்க பேச்சை கேட்டுட்டிங்கன்னா அவங்க இந்த மாதிரி கண்டிக்கவே தேவை இல்லை. எப்பவும் நல்ல குழந்தையா இருக்கற நீங்க அப்படியே இருந்திங்கன்னா மம்மி டாடி உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.இதெல்லாத்தையும் சொல்றது நான் தான் பாப்பு...இதை சொல்றதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

"ஹேவ் எ குட் டே "

பை..பை "

பாப்புவின் பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாதமும் புன்னகை உலகம் என்றொரு புத்தகம் அனுப்புவார்கள் ,இந்த இஸ்யூவில் "குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை " தூண்டவும் வளர்க்கவும் சொல்லப் பட்டிருந்த செய்திகளில் ஒன்று...

குழந்தைகளிடம் நிறைய புது புதுப் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது.

அதில் சில உதாரணங்கள் ...

கேள்வி:

உனக்கு மூன்றாவதாக ஒரு கண் தோன்றி விட்டால் என்ன செய்வாய்?

பாப்புவின் பதில் :

மூனாவதா ஒரு கண்ணு வந்தா ...கண்ணாமூச்சு விளையாடும் போது இந்த ரெண்டு கண்ணையும் மூடிட்டா நான் மூணாவது கண்ணை ஓபன் பண்ணிட்டு லார்ட் சிவா மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கறவங்களை கண்டு பிடிப்பேன் ,கண்டிப்பா அந்த மூணாவது கண்ணை அப்படியே வச்சுப்பேன் ... எடுக்க சொல்ல மாட்டேன். (ஏனோ...ஏனோ...அது ஏனோ?!) நல்லா இருக்கும் இல்ல மம்மி ?!

இதற்க்கு என்ன சொல்வேன் நான்?

அவளது பதில் கேட்டு ஒரு பக்கம் சந்தோசமாக உணர்ந்தேன் ;எந்த பதிலைச் சொல்வது என்ற தயக்கம் இல்லை அவளிடம் ...அது போதுமாய் இருந்தது போலும் எனக்கு.

Saturday, November 21, 2009

எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை?

நம்மில் பலருக்கு நம் குழந்தைகளை பற்றிய கவலை கனவிலும் நினைவிலும் வாட்டி வதைக்கும். சரியாக சாப்பிட மாட்டேங்கறானே, சரியா படிக்க மாட்டேங்கறானே, எந்த நேரமும் டி.வி முன்னாடியே இருக்கானே, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்கறானே, வீட்டுக்கு வர்றவங்க கிட்ட நல்லபடியா பேச மாட்டேங்கறானே, அக்கா தங்கச்சி கிட்டே சண்டை போடறானே, யார் கிட்டேயும் தன்னோட பொருட்களை ஷேர் பண்ண மாட்டேங்கறானே, கீரை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட மாட்டேங்கறானே, சில காய்கறிதான் உள்ளே இறங்குது, மத்தது எல்லாம் சாப்பிடலை என்றால் எப்படி நல்லா வளருவான்? எந்த நேரமும் ஸ்நாக்ஸ் என கடையில் விற்கும் பண்டங்களை தின்னால் வயிறு என்ன ஆவது?, அப்புறம் எந்த கிளாஸுக்கும் போக மாட்டேங்கிறானே, பாட்டு கத்துக்க வேண்டாமா, டான்ஸ் கிளாஸ் போக வேண்டாமா, விளையாட்டு பொருட்களை பத்திரமாக எடுத்து வை என்று நூறு தரம் சொன்னாலும் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறானே, ஒரு நிமிஷம் கூட கண்ணை எடுக்க முடியலையே, எதையாவது உடைத்து விடுகிறான், கொட்டி விடுகிறான், சில்மிஷம் செய்து விடுகிறானே என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலைகள் இதில். இதில் பாதி எங்க அம்மாவின் புலம்பல் கூட. நல்ல பழக்கத்தை சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அதனுடன் போராடி நாமும் டென்ஷன் ஆகி குழந்தையையும் டென்ஷன் ஆக்கி விடுவோம்.

நல்ல விஷயங்களை சொல்லித்தருவது நல்லதுதான் ஆனால் அதை எப்படி சொல்லுகிறோம் என்பது கூட ரொம்ப முக்கியம் என நான் நினைக்கிறேன். அகில் டி.வி. பார்க்கும், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் - சாப்பிட்டு முடிக்கும் வரை, பின்னர் தூக்கம், எழுந்தால் திரும்ப கொஞ்ச நேரம் - இந்த கொஞ்ச நேரம் என்பது ஒரு இரண்டு மணி நேரம் வரை நீளும். நான் ஆபிஸில் இருந்து வரும் வரை அதற்க்கு செய்வதற்க்கு வேறு வேலை இல்லை, வீட்டின் அருகே நண்பர்கள் யாரும் இல்லை விளையாடுவதற்க்கு. பல நாட்களில் என் அம்மாவுடன் பீச் அல்லது பார்க் செல்லும், அது முடியாத போது மேலே சொன்னது போல டி.வி பார்க்கும். எனக்கு ஒரு பக்கம் பதட்டமாக இருக்கும், என்னடா இவன் இவ்வளவு டி.வி. பார்க்கிறானே, டி.வியின் அடிமை ஆகிவிடுவானோ என, டி.வி பார்க்காதே என்று தடை சொல்லவில்லை என்றாலும், அவ்வப்போது சொல்லுவேன் - அகில் டி.வி நிறைய பார்த்தால் மூளை மழுங்கி விடும், கண்கள் கெட்டு போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று. அதற்க்கென்று எப்போதும் டி.வியின் முன்னாடி இருக்க விடமாட்டேன், அவன் பார்த்தாலும் முடிந்த வரை கூட இருக்க பார்ப்பேன். சோட்டா பீம், ஹனுமான், டாம் அன்ட் ஜெர்ரி, ஒசோ, ஹாண்டி மேனி என என்ன பார்ப்பான் என்பதும் நான் சொல்லுவதுதான். இப்போது இன்னொரு பாப்பா வந்த பிறகு டி.வி பார்ப்பது இன்னும் கொஞ்சம் கூடிதான் இருக்கின்றது. அதிலும் நான் ரொம்ப கண்ட்ரோல் செய்வதில்லை. ஏனென்றால், என்னுடைய அம்மா என்னை விட புதிதாக வந்திருக்கும் பாப்பாவுடன் நிறைய நேரம் செலவிடுகிறான், என்னுடைய அம்மாவை என்னிடம் இருந்து பிரித்து விட்டாள் என்ற எண்ணங்களை விட ஒரு மணி நேரம் டி.வி. அதிகமாக பார்ப்பது எவ்வளவோ தேவலை தானே? சாப்பிடும் போது டி.வி இருந்தால் சீக்கிரம் வேலை ஆகும் எனக்கும் சரி அவனுக்கும் சரி. அதுவும் கூட ஒரு சவுகர்யம் தானே, பார்க்கின்ற மும்மரத்தில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவான், அவனுக்கு புதிதாக கொடுக்கும் காய்கறிகளை எல்லாம் இந்த சமயத்தில் ஊட்டி விட்டால் இரட்டிப்பு நன்மை. எனக்கு இவ்வளவு நாள் ஆன பிறகு கூட ஒரு புத்தகம் கையில் இல்லை என்றால் சாப்பாடு இறங்காது. சாப்பிடுவதற்க்கு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுகிறேனோ இல்லையோ, புத்தகத்தை தேடி வைத்துக் கொள்ளுவேன், அப்படி இருக்கும் போது இவனை சாப்பிடும் போது டி.வி பார்க்காதே என்று எப்படி அதட்ட முடியும்? எனக்கு புக் என்றால் இவனுக்கு டி.வி...

சில கட்டுப்பாடுகள் அவனுக்கே தெரியும், அம்மா வீட்டுக்கு வந்த பிறகு டி.வி பார்க்க முடியாது, தூங்கும் நேரம் வந்தால் என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் டி.வி நிறுத்தப்படும், ஜெட்டெக்ஸ் மற்றும் வன்முறை நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாது, தமிழ் சேனல் மெகாசீரியல் அல்லது பாட்டு என எதுவுமே நாங்கள் வைப்பதில்லை அவன் முன்னால். கொஞ்ச நாட்களாகவே நானாக சென்று டிவி யை அணைக்க சொல்லும் முன்னர் அவனே அணைத்து விடுகின்றான், இதுவே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்கு தோன்றியது. இன்றைக்கு மான்ஸ்டர் இன்க் படம் போட்டுக் கொண்டு இருந்தான், பாதியில் அகில் வந்து சொன்னது, "அம்மா கொஞ்சம் அதிக நேரமாதான் டி.வி பார்த்துக் கிட்டு இருக்கேன், ஆனாலும் இந்த படம் பார்த்து முடிச்சுடறேனே..." ரொம்பவே சந்தோஷமாக இருந்தது கேட்க, இதுதானே நமக்கு தேவை, குழ்ந்தைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது அதுவே நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுகிறது, நாமே ஒரு வட்டத்தை இட்டு அதனுள்ளே இருக்க் வைக்கும் போதுதான் அதனை மீறும் எண்ணம் வலுப்படுகிறது. அப்படி சொல்லி விட்டு தூங்கும் வரை பார்த்தது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனாலும் அந்த எண்ணம் வந்ததையே ஒரு பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். இன்றைக்கு எண்ணம் வந்து இருக்கின்றது, நாளைக்கு அடுத்த படியாக அதனை செயல்படுத்தும் என நம்புகிறேன்.

பல சமயம் நாம் நம் குழந்தைகள் எந்த குறையும் இல்லாத குழந்தையாக வளர வேண்டும் என நினைக்கின்றோம். சாப்பிடும் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எல்லா காய்கறிகளையும் சாப்பிடவேண்டும், கீரை இஷ்டமாக சாப்பிட வேண்டும் என்று விரும்பிகிறோம், எனக்கு நினைவு தெரிந்து, சிறுமியாக சாப்பிட காய்கறிகளை விரல் விட்டு எண்ணி விடலாம், விவரம் தெரிந்து நான் சாப்பிட்ட காய்கறிகளே அதிகம் - ஃப்ரண்ட் வீட்டில் சாப்பிட்டது, புத்தகத்தில் நல்லது என படித்து சாப்பிட பழகியது, திடீரென தோன்றியது என பல காய்கறிகளை அப்புறம் தான் சாப்பிட ஆரம்பித்தேன். இன்னும் கூட சில காய்கறிகள் பிடிப்பதில்லை, அதை சாப்பிடுவதில்லை, அப்படி இருக்கும் போது என் குழந்தை மட்டும் எல்லா காய்கறிகளையும் இப்போதே சாப்பிடனும் என்று எதிர்பார்த்தால் என்ன நியாயம்? அதிலும் எல்லா சத்துள்ள காய்கறிகளும் மண்ணு மாதிரி இருக்கும் சாப்பிட... அதற்க்காக அந்த முயற்ச்சியை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை - அன்றொருநாள் வீட்டில் கோவைக்காய் சமைத்திருந்தோம், அகிலுக்கு அதை கொஞ்சம் வைத்தேன், சாப்பிட்டு விட்டு ரொம்ப நல்லா இருக்கு அம்மா இந்த காய், அடிக்கடி செய்யறியா என்று கேட்டு சாப்பிட்டது, அதே போல வெண்டைக்காய் ஒரு நாள் சாப்பிட்டது. ஒரு சிலது சாப்பிடுகிறது, பல பிடிப்பதில்லை, நானும் போட்டு திணிப்பதில்லை. நம் எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே குழந்தைக்கும் சரி நமக்கும் சரி மனநிம்மதி அதிகமாக இருக்கும் என்பது என் வாதம்.

அப்படியே நம பல புலம்பல்களுக்கு பதில் கொஞ்சம் நம்முடைய இளமைகாலத்தையும், ப்ராக்ட்டிகலாகவும் யோசித்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

பழக்கவழக்களை பொறுத்த வரை என்னுடைய நிலைப்பாடு இதுதான்: ஒரு பழக்கத்தை எப்படி பழக்கிக் கொள்ளுவது, ஒரு பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் போதும், அப்புறம் அது என்ன பழக்கத்தை கற்றுக் கொண்டால் என்ன? டி.வி அதிகமாக பார்க்கட்டுமே, எப்போது நிறுத்த வேண்டும் என தெரிந்தால் போதும், விதவிதமான சிற்றுண்டிகளை டேஸ்ட் செய்து பார்க்கும் பழக்கத்தை பழகிக் கொள்ள குழந்தைக்கு தெரிந்தால் போதுமே, அது எல்லா உணவையும் சாப்பிட ஆரம்பித்து விடுமே அதுதானே நம் தேவை...

சிறு வயதில் இருக்கும் விதமாகதான் ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் இருக்குமா என்ன? நான் சின்ன வயதில் அவ்வளவு நன்றாக யாரிடமும் பேசமாட்டேன், இப்போது அப்படியா இருக்கின்றேன்? வாயை திறந்தால் தயவு செய்து மூடேன் என்று கெஞ்சுகிறார்கள். இன்றைக்கு ஒரு டிரீட்டில் வெளுத்து வாங்கும் பையன் சின்ன வயசில் ஒரு சின்ன தட்டு சாதத்தை ஒரு மணி நேரம் வைத்து சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டு இருந்திருப்பான். நிஜமான அறிவு இருக்கின்றவன் பெரியவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுப்பான், ஒரே ரூம்மில் ஹாஸ்டலில் படிக்கும் பையன் தன்னுடைய அன்டர்வேர் வரை அடுத்தவனுடன் ஷேர் செய்து கொள்வான் அப்படி எல்லாம் மாறும் போது எதற்க்கு நாம் நம் குழந்தைகளைப் போட்டு கொடுமை படுத்த வேண்டும்?

நல்ல பழக்ககளை சொல்லி கொடுப்பது ரொம்ப முக்கியம் - இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதை எப்படி சொல்லிக் கொடுக்கின்றோம், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், அதற்க்காக குழந்தையை எந்த அளவிற்க்கு தொந்தரவு படுத்திகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என நீங்கள் நினைக்கிறீர்களா? சுதந்தரம் கொடுப்பதால் குழந்தைகள் நம் கையை விட்டு போய் விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஜெயா.

Tuesday, November 17, 2009

குழந்தையின் வயிற்று வலிஅழுகையை நிறுத்த வழி?

எங்கள் அனன்யா ஒன்றரை மாத குழந்தை. அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு அழுகிறாள். வயிற்றில் கேஸ் தொந்தரவினாலும் கூட, டாய்லெட் போகும் போதும் கூட கஷ்டப்படுகிறாள் என தோன்றுகிறது. பால் கொடுத்துவிட்டு முடிந்த வரை ஏப்பம் விட முயற்சி செய்வேன், சில சமயம் வரும் பல சமயம் ஏப்பம் வருவதில்லை. மூச்சா போகும் போது கூட சில சமயம் கஷ்டமாக இருக்கின்றது என நினைக்கின்றேன், தூங்கும் போது அழுகையுடன் எழுந்து, கொஞ்ச நேரம் அழுது விட்டு மூச்சா போகிறாள்.

எனக்கு தெரிந்த வைத்தியமாக வயிற்றில் விளக்கெண்ணய் வைத்து தேய்த்து விடுகிறேன், ஓமத்தை இடித்த சாறை தாய்பாலில் கலந்து கொடுக்கின்றேன், தினமும் அல்ல, வாரத்தில் இரண்டு நாட்கள், அல்லது அழும் நாட்களில்... கிரைப் வாட்டர் ஏதும் கொடுக்கவில்லை இது வரைக்கும். காலிக் பெயின் மருந்து ஏதேனும் கொடுத்தால் பலன் இருக்குமா?

சுலபமாக ஜீரணம் ஆவதற்க்கும், வயிற்றில் இருக்கும் கேஸ்ஸை வெளியேற்றவும் வேறு ஏதேனும் வைத்தியம் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இட்டு உதவுங்களேன்.

ஜெயா.


Sunday, November 15, 2009

மிகவும் ரசித்த குழந்தைகள் திரைப்படங்கள்

நானும் அகிலும் பொழுது போக்குவதற்க்கு நிறைய படங்கள் பார்த்திருக்கின்றோம். அவனுக்கு டையலாக் புரியாது, நான் எடுத்து சொல்லிக் கொண்டே பார்ப்பேன். என்னுடைய ஆர்வகோளாறுதான் காரணம், அகிலுக்கு மூன்று வயது ஆகுமுன்னரே ஒரு ஐந்து ஆறு படங்கள் பார்த்தோம். ஒரு பாப்கார்ன் பேக்கட்டுடன் உட்கார்ந்தால் பொழுது போவதே தெரியாது, படங்களை சி.டி தேய்ந்து போகும் வரை பார்ப்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது.

இதோ நாங்கள் ரசித்த படங்கள் - பாகம் 1:

1. ஐஸ்ஏஜ்: மூன்று பாகங்களை கொண்டது. முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கும், குழந்தைகளோடு நாமும் சேர்ந்து ரசித்து சிரிக்கும் அளவிற்க்கு நல்ல வசனங்கள். தொலைந்து போன ஒரு குழந்தையை அதனுடய அப்பாவிடம் சேர்க்கும் வேலையை செய்யும் ஒரு யானை, அதனுடன் ஒரு அப்பாவி ஸ்லாத், கெட்டவனாக இருந்து நல்லவனாக மாறும் ஒரு சிங்கம்புலி. இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பு, சண்டை, சிரிப்பு காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு அணில் ஒரு கொட்டையை வைத்துக் கொண்டும் போடும் ஆட்டம் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். கடைசில் குழந்தையை அப்பாவிடம் சேர்க்கும் போது குழந்தை கண்களோடு சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கும்.






























இரண்டாவது பாகம் - இன்னொரு பெண்யானை சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டி, மூன்றாவதில் ஒரு டைனசார் குடும்பம். மூன்றாவது பாகத்தை சத்யம் தியேட்டரி 3 டியில் பார்த்தது கூட அகிலுக்கும் மிகவும் பிடித்த அனுபவம். முதலாவது போல வராது என்றாலும், இதையும் கூட ரசிக்கலாம்.

படம் பார்த்த பிறகு குழந்தைக்கு நட்பு, அன்பு செலுத்துவது போன்ற நல்ல குணங்களைப் பற்றி பேசி எடுத்து சொல்லலாம்.

2. ரேட்டடூயி:

சமையல் தெரியாத லிங்கிகுவினியின் தலையில் ஏறிக் கொண்டு எலி சமைக்கும் படம். கடைசியில அவன் தான் ஹோட்டல் முதலாள்யின் மகன் என தெரிந்து கொள்ளும் எலி, அவனிடம் கூற அவனே முதலாளி ஆகி விடுவான். ஆனால் அவனுக்கு சமைக்கும் திறமை இல்லை, எலிதான் சமைக்கிறது என்று தெரியாத ஒரு உணவு விமர்சகர் அவனை வறுத்து எடுக்க, எலி அவருக்கு பிடித்த உணவினை அவருடைய அம்மாவைப் போல சமைக்க, உண்மை தெரிந்து தன் கருத்தை மாற்றிக் கொள்ளும்படி இருக்கும். விடாமுயற்சி, உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம், கஷ்டம் வரும் போது தோழனுக்காக உதவுவது என பல நல்ல காட்சிகளையும் கருத்துக்களையும் கொண்ட படம்.

3. எ பக்ஸ் லைஃப்: நம்ம எறும்பு, வெட்டுக்கிளி கதைதான் - எறும்புகளை ஒரு வெட்டுகிளி கூட்டம் மிரட்டி அது சேகரித்து வைத்திருக்கும் உணவினை எடுத்து செல்லும் வாடிக்கையை நிறுத்த ஒரு எறும்பின் முயற்சியின் கதை. தன்னம்பிக்கையின் பவரை எடுத்து சொல்லும் படம். அகிலுக்கு ரொம்ப பிடித்த படம், எத்தனை தரம் பார்த்தோம் என்று எங்களுக்கே தெரியாது.



4. வால்-ஈ: இதுவும் நாங்கள் தியேட்டரி போய் பார்த்த படம். அகிலுக்கு என்னால் தியேட்டரில் வீட்டில் சொல்லுவது போல என்னால் கதை சொல்ல முடியவில்லை, ஆனாலும் வாயில் ஈ போவது கூட தெரியாமல் படம் பார்த்தது. தனிமையின் கொடுமையை முதலில் காண்பிப்பது ரொம்ப நன்றாக இருக்கும், அகிலிடம் அவ்வப்போது சொல்லுவேன், அகில் நமக்கு ஃப்ரண்ட்ஸ் யாரும் இல்லை என்றால் நாம வால் ஈ மாதிரிதான் யாரும் இல்லாம கஷ்டபடுவோம் என்று. ஒரு தோழி கிடைத்தவுடன் அது அடிக்கும் லூட்டி, அதை காப்பாற்றுவதற்க்காக பறக்கும் தட்டிற்க்கு போய் செய்யும் அழிச்சாட்டியங்கள் என ரசிக்கும் வகையாக இருக்கும்.


































அதில் வரும் குள்ள கை குள்ள கால் மனிதர்களை காட்டி, நாமும் சாப்பிடலை, ஒழுங்கா சாப்பிடலை என்றால் இப்படிதான் ஆகிவிடுவோம் என்று சொன்னதற்க்கு எஃபக்ட் அகிலிடம் ரொம்ப நாளுக்கு இருந்தது.

5. ஆலாடின்: இது அகிலுக்கு ரொம்ப பிடித்தது என்று சொல்லமுடியாது, ஆனாலும் அவ்வப்போது பார்க்கும். வால்ட் டிஸ்னியின் கிளாசிக் படம், குழந்தைகள் பட வரிசையில் இதை விடுவது கொஞ்சம் டூ மச். அதில் வரும் ஹோல் நியு வேர்ல்ட் பாட்டு அகிலுக்கு ரொம்பபப பிடிக்கும். படம் பார்த்த வுடன் அகிலின் கேள்வி, "அம்மா அந்த மாதிரி கார்பெட் எங்கே விக்கும்?" அது எல்லாம் விக்காதுடா, என்றால் "இல்லை அம்மா, சிட்டி சென்டரில் விக்கும், நல்லா கேட்டு பார்க்கலாம் அம்மா" என்று சொல்லிவிட்டது.




எதையும் நாம் வாயால் சொல்லி புரியவைப்பதைவிட, இது மாதிரி படங்களில் விஷ்வலாக பார்க்கும் போது பலன் அதிகமாக இருக்கும் என்பது என் அனுபவத்தில் கண்டது, நீங்கள் இந்த படங்களை பார்த்ததில்லை என்றால்
கண்டிப்பாக உங்கள் குட்டியுடன் உட்கார்ந்து பாருங்கள். டி.வியில் போடுவதைவிட நாமே டிவிடி எடுத்து பார்ப்பது நலம், ஏனென்றால் அடிக்கடி போது விளம்பரங்கள் படத்தின் எசென்ஸை கெடுத்துவிடும் அபாயம் அதிகம், மேலும் புரியாத இடங்களை நாமே சப்டைட்டிலுடன் பார்ப்பதற்க்கும் வசதியாக இருக்கும் :)

அடுத்த பதிவில அடுத்த ஐந்து படங்களை சொல்லறோம். அதுவரைக்கும் இந்த படங்களை பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க :)

ஜெயா.


Saturday, November 14, 2009

சிரிங்க செல்லங்களா!!!!


குட்டிப் பாப்பா
தூங்கும் போது சிரித்தது
கடவுள் தாமரைப்பூ காட்டுகிறார்....
அம்மா சொன்னாள்..........

கோடிப் பூக்கள் கொண்டு வந்து
காட்டுகிறேன்!
சிரிங்க செல்லங்களா!!!!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

Thursday, November 12, 2009

அகில், அனன்யா, ஜெயா - மூன்று அறுந்த வால்கள்

அகில் - நான்கரை வயது அறுந்த வால். அனன்யா - பிறந்து 40 நாட்கள் ஆன குட்டி வால். நான் ஜெயா பிறந்து ரொம்ப நாளாகிய அறுந்த வால் :) நாங்கள் மூவரும் அடிக்கும் கொட்டம் தாங்காமல் அலறுபவர் பலர்.... உன்னைப் போல உன் குழந்தைகளை வளர்க்காதே என்ற அறிவுரையை அள்ளி வீசியவர் ஏராளம்.

எங்களுடைய சுவாரஸ்யமான அனுபவங்கள், அடிக்கும் லூட்டிகள், அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை. ஏற்க்கனவே அகிலின் குறும்புகளை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

இந்த அம்மாக்களின் பதிவில் என்னுடைய குழந்தை வளர்ர்ப்பு பற்றிய சந்தேகங்கள் மற்றும் கருத்துகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி எழுத ஆரம்பிக்கின்றேன்...

ஜெயா.

Wednesday, November 11, 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை - செல்வனூரான் அவர்களின் பதிவிலிருந்து!

தங்கராசு நாகேந்திரன் அவர்களின் பதிவிலிருந்து "

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.
"

மீதியை இங்கே அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை வாசியுங்களேன்! நல்ல இடுகைக்கு நன்றி தங்கராசு செல்வேந்திரன்!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger