Tuesday, April 7, 2009

ஆத்திச்சூடிக் கதைகள் (1.அறம் செய விரும்பு )

தினம் ஒரு கதை சொல்வதாகச் சொல்லி நாட்கள் பல கடந்த நிலையில் இன்று என் சோம்பேறித் தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு முதல் கதையை ஆரம்பித்திருக்கிறேன்.இன்று மெட்ரிக் ...சி.பி.எஸ்.சி எனத் தேடி தேடி நம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நேரத்தில் தமிழ் இரண்டாம் மொழியாகி விடுவது சகஜம் .

ஆத்திச்சூடி மறக்கக் கூடாதல்லவா? ஒளவைப் பாட்டியும் தான் .

சரி இனி கதைக்குப் போகலாம்.

இது நான் பாப்புவுக்கு சொன்ன கதை ...கொஞ்சம் முன்னே..பின்னே இருந்தாலும் படித்து கருத்தை சொல்லுங்கள்

சினேகா எல்.கே.ஜி படிக்கிறாள். சிநேகாவுக்கு அன்று பள்ளி விடுமுறை . வெள்ளிக் கிழமை தான்...ஏதோ அரசு விடுமுறை தினம் அது ;அப்பாவுக்கும் விடுமுறை தான்.இரவு உணவுக்கு சரவணபவன் செல்வதென முடிவு செய்தாயிற்று. அம்மா காலையில் செய்த இட்லி மற்றும் சாம்பார் மீதம் இருந்ததை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடினாள்.

அப்படியும் கொஞ்சம் புடலங்காய் கூட்டு மீதம் ஆனாதை உள்ளே எடுத்து வைக்காமல் அப்படியே பொட்டலம் கட்டி குப்பையில் போட்டாள்...புடலங்காய் கூட்டு மட்டும் எப்போது செய்தாலும் சரி செய்யும் அந்த ஒரு நேரம் மட்டுமே உண்பார்கள் ...கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதி எல்லாம் குப்பைக்கே .
சிநேகா பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா புடலங்காய் கூட்டை குப்பையில் கொட்டுவதை ;

மாலையில் அப்பாவோடு பழம் வாங்க கடைக்குப் போனாள் .

ஒரு டஜன் மலை வாழைப் பழங்கள் 35 ரூபாய்கள் என வாங்கினார்கள் ,ஆப்பிள் கிலோ 80 ரூபாய்கள் .வீட்டிற்கு வந்தார்கள்...அம்மா வெளியே பக்கத்து வீட்டு பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.பாட்டி பழப் பையை பார்த்து விட்டு வாழைப் பழம் டஜன் எவ்ளோ சிநேகா குட்டி என்றார் .35 ரூபாய்கள் என்றதும் "கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் உங்களை...நேத்து நைட் எம்பொண்ணு அதே கடைல தான் 28 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தாளே!?ஒரே நாள்ல 7 ரூபா கூட்டி விக்கிறானே?! என்று அங்கலாய்த்தார்.

சிநேகா இதையும் பார்த்துக் கொண்டிருந்தாள் .

மணி 6.30 தைத் தாண்டியதும் அம்மா மளிகைச் சாமான் வாங்க ரிலையன்ஸ் போகவேண்டும் ...அதற்கு பின் ஒரு எட்டு மணிக்கு சரவணபவன் போகலாம் என்றதும் அப்பா சரி என்று ரிலையன்ஸ் அழைத்துக் கொண்டு போனார். விலை சகாயமோ இல்லையோ ...அம்மா தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்தபின் தேவையற்றதும் சில பொருட்களின் அழகில் மயங்கி அதையும் எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டாள்...சிநேகா டி.வி விளம்பரத்தில் பார்த்த மயக்கத்திலும் குஷியிலுமாக "கிண்டர்ஜாய் " ஒன்று அல்ல இரண்டு வேண்டும் என அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள் .

எட்டு மணிக்கு சரவணபவன் உள்ளே நுழைந்தார்கள் .
ஆளுக்கு ஒரு சாம்பார் இட்லி ...சினேகாவுக்கு ஒரு செட் சூடான இட்லி ...ஒரு பிளேட் ரவா கேசரி ...கடைசியில் சினேகாவுக்கு ஒரு ஸ்ட்ரா பெர்ரி ஐஸ் கிரீம் ...அப்பாவுக்கும் ...அம்மாவுக்கும் மாதுளம் பழ ரசம் ,முடித்துக் கொண்டு பில்லுக்கு காத்திருந்தார்கள்.பில்லுக்கு முன்பு ஒரு தட்டில் கல்கண்டு...வாசனைப் பாக்குத் தூள் ,சோம்பு என்று நீட்டப் பட்டது. சினேகா கல்கண்டையும்...சோம்புவையும் கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு என டிஸ்யூ பேப்பரில் வேறு எடுத்து வைத்துக் கொண்டாள் .பரிமாறிய சிப்பந்தி சிநேகவைப் பார்த்து சிரித்தார்.

பதிலுக்கு சிரித்து விட்டு இது நான் வீட்ல போய் சாப்பிடுவேன் என்றாள்.

பில் செலுத்தி வெளியில் வந்தார்கள் .

ரோட்டோரம் நிறுத்தி இருந்த வாகனத்தை எடுக்க செல்லும் போது அங்கே ஒரு வயதான பெரியவர் ...ஆதரவற்ற எளியவர் போலும் காசுக்கு கை நீட்டினார். முதலில் அப்பாவோ...அம்மாவோ கண்டு கொண்டதாகக் காணோம் .

அந்தப் பெரியவர் நெருங்கி வந்து கேட்கவே அப்பா சட்டைப் பாக்கெட்டை துழாவி விட்டு சில்லறை காசு இல்லையே என்று வண்டியை எடுப்பதில் முனைந்து விட்டார்.அம்மாவோ "வெள்ளிக் கிழமை " இன்னைக்கு போட வேண்டாம் என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.சினேகா அப்பாவையும் ..அம்மாவையும் மாறி..மாறி ஒருமுறை பார்த்தாள்,பிறகு அப்பாவின் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அந்த முதியவரின் கையில் போட்டு விட்டு அப்பாவையும்...அம்மாவையும் பார்த்து சிரித்தாள் .

ஒரே செல்லப் பெண் தான்...ஆனாலும் அப்பாவுக்கும் ...அம்மாவுக்கும் திடுக்கென்று தான் இருந்தது இவளது செயல் அங்கே ஒன்றும் பேசாமல் வீடு வந்த பின் "ஏண்டா அப்படி செஞ்ச என்றனர் ஒருவர் மாற்றி ஒருவர்.

சினேகாவோ ...அம்மா ...வாழைப் பழக் கடையில எட்டு ரூபாய் கொஞ்சம் புடலங்காய் கூட்டு ...என்னோட கிண்டர்ஜாய்...அப்புறம் கொஞ்சம் ஸ்நாக்ஸ் ...கூல் ட்ரிங்க்ஸ் ...ஐஸ்-கிரீம் ...எல்லாம் வாங்கினோம் இல்லம்மா ...பாவம் அந்த தாத்தா கை நீட்டிக் கேட்கறார் இல்ல?! அவர் கிட்ட இருந்தா கேட்க மாட்டார் இல்ல? பசிக்குது போல ...பாவமா இருந்துச்சா அதான் டாடி பாக்கெட்ல இருந்து பத்து ரூபாய் எடுத்துப் போட்டுட்டேன்.

எங்க தமிழ் மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கம்மா போன வாரம் "அறம் செய விரும்பு" ன்னு அது இதான மம்மி !!!

நீ படிக்கலையா ஸ்கூல்ல !!!

"ஆத்திச்சூடி அறம் செய விரும்பு "
ஒரு கணம் திக்கித்து நின்ற அம்மாவும்...அப்பாவும் மறு நொடியில் கல கலவெனச் சிரித்தவாறு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .சினேகா கார்ட்டூன் பார்க்க தொடங்கினாள்.

என்ன செலவு பண்ணாலும் இந்தக் காலத்து குழந்தைங்க படு உஷார் தான் !!!

அப்போ புரியுதுங்களா "அறம் செய விரும்பு"

10 comments:

சந்துரு said...

அருமையாக உள்ளது உங்கள் நடை. வாழ்த்துக்கள்.

Vidhya Chandrasekaran said...

நன்றாக இருக்கு. முழுவதும் தொடருங்களேன்:)

pudugaithendral said...

ஆமாங்க முழுவதும் தொடருங்க ப்ளீஸ்

நட்புடன் ஜமால் said...

நல்ல நடையில்

அருமையான விடயம்.

Dhiyana said...

நல்லா எழுதியிருகீங்க..

அபி அப்பா said...

சூப்பர் பாப்பு! உன் தாத்தாவைப் போல!!!!!!

அமுதா said...

/*என்ன செலவு பண்ணாலும் இந்தக் காலத்து குழந்தைங்க படு உஷார் தான் !!!*/
ஆமாம்...

VS Balajee said...

Good Work Pl write all ..

I feel end should be ,the kutty ask appa for Rs10 and gave same to beggar.

All the best

Father of
Nisha&Ananya

Anonymous said...

Great Start ! Write all..

I wish the end should be like.. kutty asking is dad for money and gave same..

All the best

Father of
Nisha & Ananya
VS Balajee

ஆகாய நதி said...

Good story! Waiting for next one...
:)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger