Friday, April 24, 2009

ஒரு அம்மாவின் குறிப்புகள்- முத்தம் - 3

முத்தம் நம் அன்பை வெளிப்படுத்த இதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்ன? அதிலும் குழந்தைகளை கையில் எடுத்தாலோ தூக்கினாலோ, நம்மை அறியாமல் நாம் அவர்களுக்கு முத்தங்களை கொடுக்க ஆரம்பிப்போம். இதனால் வரும் பிரச்சனைகளை கொஞ்சமும் நாம் யோசிப்பது இல்லை. குழந்தைகளை தூக்குவதற்கு முன் நம் கைகளை கழுவிவிட்டு பின்பு தான் தூக்கவேண்டும். இதில் முத்தம் எல்லாம்... ?!! கொடுக்கவே கூடாது.

இது எப்போது யாருடைய குழந்தையை அன்போடும், பாசத்தோடும் பார்க்க சென்றிருந்தாலும், தூக்குவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். முத்தம் கொடுத்து அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படத்தக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் தொற்றிவிடும். குறிப்பாக அம்மாவிற்கு சளிபிடித்தால் கூட, அந்த அம்மா குழந்தைக்கு முத்தமிடக்கூடாது. எளிதில் அது குழந்தைக்கு தொற்றிக்கொள்ளும். நம் உமிழ்நீரிலில் ஏதேனும் கிருமிகள் இருப்பின், நம் வாயை சரிவர சுத்தம் செய்யாமல் இருந்து அதில் கிருமிகள் இருந்து, நாம் குழந்தையை முத்தமிட்டால், மிக மிக எளிதாக அது குழந்தைகளை தொற்றிக்கொள்ளும்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு. கண் வலி வருகிறது. இது ஒரு வைரஸ் கிருமியால், தொற்றி பரவுவதே. இந்த கிருமி தொற்றுவதால் மட்டுமே நமக்கு இருக்கும் கண் வலி மற்றவருக்கு தொற்ற வாய்பிருக்கிறது. ஆனால் நம்மவர்கள் கண்களை பார்த்தாலே வந்துவிடும் என்று எண்ணி கருப்பு கண்ணாடி போடுவார்கள். கருப்பு கண்ணாடி போடுவதின் நோக்கம், கண் வலியில் கண்கள் சிவந்து, வீங்கி, அழுக்கு சேர்ந்து பார்க்கவே மிகவும் மோசமாக இருக்கும், அதை மற்றவர்கள் பார்த்து பயப்படவோ, அருவருக்கவோ வேண்டாம் என்பதாலேயே கருப்பு கண்ணாடி போடும் பழக்கம் உள்ளது. எனக்கு கண் வலி வந்தால், மிகவும் மோசமாகிவிடும், வெளியில் செல்வதை தவர்த்துவிடுவேன், வீட்டில் இருப்பதால், கண்களுக்கு கண்ணாடி போடமாட்டேன். ஆனால் கண் வலி சரியாகும் வரை, நான் கை வைக்கும் எந்த பொருளையும் அடுத்தவர் தொடாதவாறு பார்த்துக்கொள்வேன், குறிப்பாக, தனி டம்ளர், தட்டு, தலையணை, பெட்ஷீட், கர்சீப் , இப்படி சொல்லலாம். அவற்றை கண் வலி சரியாகும் வரை தனியாக உபயோகிப்பேன். எல்லோரும் உபயோகிக்கும் பொருளை தொடமாட்டேன், கம்பியூட்டர் கீ போர்டு, டிவி ரிமோட், ஏசி ரிமோட், பிரிட்ஜ் போன்றவற்றை தொடமாட்டேன். இப்படி இருந்ததால் வீட்டில் இருக்கும் மற்ற யாருக்கும் கண் நோய் பரவவேயில்லை, இத்துடன் எனக்கு கண்களுக்கு மருத்து போட்டுவிட்டவுடன் என் கணவர் கையை கழுவிவிட்டாரா என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இது அதிகப்படியான கவனமே என்றாலும்,

நவீனுக்கு வரக்கூடாது என்பதில் என் கவனம் அதிகமாக இருக்கும். அதனால் எனக்கு என்ன உடல் உபாதை வந்தாலும் அவனுக்கு அது தொற்றிக் கொள்ளாமல் இருக்க ஆவன செய்வேன். மேலே விழுந்து பிரள அனுமதிக்காமல் ஏதாவது சொல்லி பயமுறுத்தி வைப்பேன். அதுவும் சின்ன வயதில் ரம்யா கிருஷ்ணன் நடித்த "அம்மன் " படத்தை நினைவு கூர்ந்து, அவனிடம் அம்மன் சாமி வரும், கண்ணை குத்தும் என்று சொல்லி கொஞ்சம் பயம்முறுத்துவேன். இது ஒரு தவறான அணுகுமுறை என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும், அடங்காத சில நேரங்களில் என்ன தான் செய்வது.. ஆனால் அது எல்லாம் ஒரு காலக்கட்டம் வரை தான்.... ஒரு வயதிற்கு மேல்.. "ஓ அம்மன் சாமியா வர சொல்லு..வர சொல்லு, .ஐயம் மோர் இன்டரஸ்டட் டு மீட் ஹர், நான் இங்கேயே வெயிட்டிங். .கண்ணை எடுக்க என்ன டூல் அவங்க யூஸ் செய்வாங்க, அவங்க காஸ்டியூம் நல்லா இருக்கு ஆனா கண்ணை மட்டும் ஓவரா உருட்ட சொல்லாத. அதை செய்ய நீ தான் இங்க இருக்கியே " ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

வியாதிகள் உண்டாவதற்கு மூலக்காரணம், தொற்று கிருமிகளால் தான் என்பதால், குழந்தைகளுக்கு ஒரு சிலர் இடும் முத்தங்களினால் கண்ணங்களில் புண்கள் கூட வர வாய்ப்புகள் உண்டு. நமக்கே தெரியாது அது ஏன் வந்தது என்று? ஆனால் வந்து இருக்கும். விருந்தினர், சொந்தங்களை குழந்தைகக்கு ஆசையாக முத்தமிட வரும்போது " முத்தம் கொடுக்காதே " என்று எளிதாக சொல்லிவிட முடியாதே.. ஆனால் சொல்லித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு அம்மாவும் இருக்கிறார்கள், காரணம் குழந்தையின் ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம் அல்லவா?. நம் வீட்டில் இருப்பவர்களிடம் நேரிடியாக சொல்லிவிட முடியும் ஆனால் மற்றவர்களை.? விருந்தினரோ, சொந்தங்களோ குழந்தைகளை பார்க்க வரும்போது, அவர்கள் வந்து குழந்தையை தூக்குவதற்கு முன்னரே. ... டாக்டரிடம் சென்று வந்தோம், குழந்தையை ரொம்பவும் கவனமாக பார்த்துக்கொள்ள சொன்னார்கள், என்னையே முத்தமிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றார் பாருங்களேன்... என்று சொல்லி பேச்சை ஆரம்பித்து அவர்களுக்கு புரியவைக்கலாம், அப்படியே.. நீங்களும் குழுந்தையை தூக்கி கொஞ்சுங்கள் ஆனால் முத்தம் மட்டும் வேண்டாம்... அப்படியே கொடுத்தாலும் கையில் (உள்ளங்கைக்கு மேற்புறம்) கொடுங்கள் என்று சொல்லிவிடுங்கள். விருந்தினர் சென்றவுடன் முத்தமிட்ட இடங்களை கிருமி நாசினி கலந்த சுடத்தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு துடைத்து எடுத்துவிடுங்கள். இதை மறக்காமல் செய்ய வேண்டும், அல்லது அவர்களின் எதிரில் கூட செய்யலாம், அப்படி செய்வதால், இன்னொரு முறை முத்தமிட மாட்டார்கள் அல்லது வேறு குழந்தைகளிடம் இப்படி செய்ய மாட்டார்கள்.

அன்பாக இருந்தாலும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்று வரும்போது விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? ஆரோக்கியம் தானே முதல், அதனால் அம்மாக்களே... உங்களின் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வருபவரை நீங்கள் முன்னே நின்று தடுத்து நிறுத்துங்கள்.. அது குழந்தையின் அப்பாவாக இருந்தாலும் சரி... :) , தடுக்க தயக்கம் காட்டாதீர்கள்... :)

அணில் குட்டி அனிதா : கவி..... முடிச்சாச்சா..?!! கிளம்பலாமா.. எனக்கு இந்த வீடு ரொம்ப போர் அடிக்குது.. அவ்வ்வ்வ்வ்!! ஒரே அம்மாஸ்.. நோ ஃபன்.... எல்லாம் ரொம்ப சீரியஸா இருக்க்காங்க.. அப்புறம் குட்டீஸ் ஒன்னையும் காணோம்... கண்ணை கட்டி காட்டுக்குள்ள விட்டாப்பல இருக்கு... ஆமா உங்க பிரண்டு. . இந்த ரோஜால இருக்குமே அந்த .."முல்ஸ்" தானே... அவங்க எப்படி இங்க இருக்காங்க... ஆங்.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... ஒகே... சரி.. இன்னைக்கும் நான் தூங்கறேன்..... யூ டேக் ரெஸ்ட் அணிலு.. அம்மாக்கள்ஸ் எப்படியும் வந்து.. முத்தம் முத்தம் முத்தம்ம் ன்னு கமெண்ட போறாங்க. ஹி ஹி.. வர அம்மாக்கள் எல்லாம் எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு போகனும் ஒகேஸ். .டீல் !! ...

பீட்டர் தாத்ஸ் :A kiss is just a pleasant reminder that two heads are better than one

5 comments:

Vidhya Chandrasekaran said...

அதே போல் குழந்தையை வீட்டுக்கு வெளியிலிருந்து வந்து தூக்குபவர்களை கை கால்களை சுத்தம் செய்தபின் தூக்க சொல்ல வேண்டும். நான் இதை சொன்னதுக்கு ஒரே வசை தான். உலகத்தில் இல்லாத பிள்ளையைப் பெத்துட்டன்னு. எனக்கு என் குழந்தைதான் முக்கியம். மற்றவர்கள் எல்லாம் அடுத்தது தான்.

கவிதா | Kavitha said...

உலகத்தில் இல்லாத பிள்ளையைப் பெத்துட்டன்னு//

வித்யா :(((( அவ்வ்வ்வ்வ்வ்வ்!! என்னை இன்னமும் அப்படி சொல்லுகிறார்கள்..

நவீனும் எல்லாம் மாதிரியும் சாதாரண குழந்தை.. நீ ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் செய்யற, ஏன் இப்படி உன்னை வருத்தி அவனை கவனிக்கற, சாதாரணாக இரு.. அவனும் எல்லா குழந்தைகள் போலவே ன்னு சொல்லுவாங்க..

என்னோட ஆயா க்கூட.. இந்த பொண்ணு என்ன அந்த புள்ளைய அப்படி கவனிக்குது நேரம் காலம் இல்லாமல்... ஒரு கொசு கடிக்கக்கூடாதுன்னு ராத்திரி பூரா தூங்காம இருக்குன்னு சொல்லுவாங்க..

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. !! எனக்கு கொஞ்சம் கில்டியா த்தான் இருக்கும் ஆனா. .என்ன செய்ய.. அவன் என் வாழ்க்கை. .அவன் என் உலகம், அவன் தான் எனக்கு எல்லாமே.. :)

ஆகாய நதி said...

என்னத்த சொல்றது இதெல்லாம் நான் பண்ணிப் பார்த்துட்டேன்... :(

ஒரு முறை அவனுக்கு எச்சில் புண் கூட வந்துருக்கு...

லதானந்த் said...

மிக நல்ல பதிவு

Sasirekha Ramachandran said...

இந்த முத்த விஷயத்தினால் நான் கொஞ்ச நாள் சிலரின் கண்களுக்கு வில்லியாகக்கூட தெரிந்திருக்கிறேன்...:(((

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger