இந்த தொடர் இடுகை எழுதி பதிநைந்து நாள் ஆகி விட்டது, தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வர்ஷா பிறக்க பத்து நாட்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவை வந்தோம், அது வரை திருப்பூரில் இருந்தோம். குழந்தை பிறந்து வளர்ந்து இரண்டரை வயது ஆகும் போது ரொம்ப நல்ல பேசுவாள், தெளிவாக திருக்குறள், சின்ன பாடல்கள் எல்லாம் சொல்லி குடுத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் இரண்டு மணி நேரம் தினமும் அனுப்பி வைப்பேன். ஸ்கூல் சேரும் வயது என்ற போது கோவையில் இருக்கும் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினைந்து பள்ளிகள் பார்த்தேன், நாங்கள் இருப்பது நகரின் மைய பகுதி, எல்லா பள்ளிகளும் குறைந்த பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
பள்ளிகளுக்கு முக்கிய தகுதி யாக நான் எதிர்பார்த்தது:
# குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க வேண்டும்,
# ஹோம் வொர்க், படிப்புன்னு ரொம்ப தொல்லை பண்ண கூடாது,
# மொழி ஒரு முக்கிய விஷயம், என்னதான் நாம் தமிழ் என்று கதறினாலும் ஆங்கிலம் நன்றாக பேச வர வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன், வரும் காலத்தில் குழந்தைகள் மிக கடுமையான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும், நாம என்ன நாற்காலியில இருக்கோம் தமிழ் மட்டும் படிச்சு மந்திரி ஆக.. ( சிரிங்கப்பா)
# போட்டிகளில் தொடர்ந்து ஊக்கம் தரும் பள்ளியாக இருக்க வேண்டும்.
# ஒரு குறிப்பிட்ட மதமோ, ஜாதியோ அதிகமாக இருக்கும் பள்ளிகள் வேண்டாம் என்பதும் என் எண்ணம்.
# பள்ளி நல்ல சுற்று புறத்துடனும், கலாச்சாரத்தை கற்று கொடுக்க வேண்டும்.
# மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் நன்றாக இருக்க வேண்டும்.
( இத்தனையும் இருக்கணும் நா நான் படித்த ஸ்ரீ வாசவி வித்யாலயம் ஸ்கூல் தான் போகணும், அது ரொம்ப தூரம் ஆச்சே)
முதலில் பள்ளிகளில் ஒரு வரிசை பட்டியல் தயார் செய்தேன், நானும் என் கணவரின் தங்கையும் ஒரு நல்ல நாளில் காலையில் கிளம்பினோம், , முதலில் நகரின் மிக புகழ் பெற்ற நூற்றி ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அங்கே பெற்றோர் குறைந்த பட்சம் ஒரு கார் வைத்திருப்பது விரும்பத்தக்க தகுதியாக இருந்தது...இது ஆவறது இல்ல..
அடுத்து: என் மனதில் இந்த பள்ளியில் சேர்த்தலாம் என்று நினைத்தேன், ஆனால் இது shift முறையில் செயல் பட்டதால் ஊரெங்கும் கிளைகள் கொண்ட பவன் பள்ளியும் லிஸ்டில் கழிந்தது.
நகரின் பெண்கள் பள்ளி ஒன்று காலை விண்ணப்பம் வாங்க முதல் நாள் இரவே துண்டு போட்டு வைக்கணுமாம், ஆனால் படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள், கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றது, என் வீட்டில் இருந்து ரொம்ப தொலைவு அதனால் அதுவும் அடிபட்டது.
ரயில் நிலையம் அருகில், கலை கல்லூரி பின்புறம் இருக்கும் மூன்று பள்ளிகளில் ஒன்று நன்றாக இருக்கும் ஆனால் நம்ம அம்மிணி வயசு பத்து, பத்தாவது எழுதும் போது பிரச்சனை என்றார்கள். சரி விடு ஜூட்டு...
இது போல் கழிப்பறை நன்றாக இல்லை, கட்டிடம் விழுந்துவிடுவது போல இருக்கு என்று சில பள்ளிகள் கழிக்கப்பட்டன,
இன்னும் ஒரு முக்கியாயமான விஷயம் நான் தனியாக பெண்கள் பள்ளியில் என் குழந்தைகளை சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை, இரு பாலரும் இருக்கும் பள்ளியில் தான் சேர்த்த வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தேன்.
ஆகவே இப்போது படிக்கும் பள்ளி ( S.B.O.A.) ஓரளவிற்கு எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது, கட்டணம் கொஞ்சம் ஏற்கனவே அதிகம் இப்போது மேலும் 50% அதிகரித்து உள்ளார்கள், அது பற்றி என் கருத்துகள் இங்கே.
சின்ன வகுப்பில் தேர்வுகளே இல்லை, ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள், மாணவர்கள் அதிகம் இருப்பினும் தனி கவனம் செலுத்துகிறார்கள், படிப்பைத்தவிர மற்ற விசயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்போது பாட்டு வழி படிப்பு என்னும் புதிய அறிமுகத்தில் இன்னும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக மொழி பயிற்சி மிக திருப்தியாக உள்ளது. சில பல தேவையில்லாத போராட்டங்களுக்கு பின் இந்த வருடம் பள்ளி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நான் பெற்றோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளதால் நம் கருத்துகள் மற்றும் மற்றவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறது.
எனக்கு மட்டும் பிடித்து என்ன செய்ய என் குழந்தைகளும் இந்த பள்ளியில் நன்றாகவே உணருகிறார்கள். வருடாவருடம் கொலுவிற்கு வர்ஷாவின் தோழர்கள் பெற்றோருடன் வந்து விழாவை சிறப்பிப்பார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வு அதுதான்.
ப்ளே ஸ்கூலை பொறுத்தவரை எங்கள் பகுதியில் நல்ல பள்ளி இல்லை என்று கருதுகிறேன். நான் அனுப்பிய பள்ளிகள் எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அனுப்பினேன். பாதியில் நிறுத்தி விட்டேன்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
3 comments:
நல்ல அனுபவப் பகிர்வு! நன்றிகள்!
இவைகளோட சிலபஸ் எந்த வகை அப்டிங்கறதும் நீங்க முடிவுப் பண்ணிருப்பீங்களே. அதுக்கான காரணங்களையும் பகிர்ந்துக்கலாமே:):):)
இதை ஆங்கிலம் மட்டுமே அறிந்த அம்மாக்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள்!. படம் நல்லா இருக்கு... எப்படி இந்த மாதிரி பொருத்தமா தேடிப்பிடிக்கிறீங்க?
Post a Comment