Saturday, May 9, 2009

அம்மா... உன்னை வணங்குகிறேன்!அம்மா உனக்காக உன் மகளாக நான் என்ன செய்யப் போகிறேன்?

நீ என்னை எந்த நிலையில் பெற்று வளர்த்தாய் என தெரியும்... அது உடல் ரீதியாக உனக்கு எத்துணை சிரமமானதானாலும் அது பாராமல் என்னை ஆளாக்கினாய்!

முதன் முதலில் நீ எப்போது என்னை பள்ளிக்கு அழைத்து சென்றாய் என் நினைவில்லை... ஆனால் நீ பள்ளிக்கு உணவு எடுத்து வருவாய் நான் சூடாக உண்ண வேண்டுமென!

ஒவ்வொரு வருடமும் நான் வகுப்பில் முதன்மை பெற்றதால் வருடந்தோறும் பரிசு பெற்றிருக்கிறேன்! ஆனால் மகிழ்ச்சி உன்னில் கண்டேன்! நீ பெற்ற பரிசைப் போல எல்லோரிடமும் சொல்லிப் பெருமைப் படுவாயே!

முதன் முதலில் இனி எனக்கும் புடவை வாங்க வேண்டும் என அப்பாவிடம் நீ கூறி அதுவும் ஒரு பட்டுப் புடவையாக வாங்கினாய்... உன் மகள் அணியும் முதல் புடவை பட்டாக இருக்க வேண்டுமென!

நான் முதன் முதலில் புடவை அணிந்து வெளியே சென்ற போது பயம் கலந்த பெருமிதத்தை உன்னில் கண்டேன்!

அப்பா தான் எனக்கு முதலில் பிடிக்கும் என எத்துணை முறை கூறியிருப்பேன்? ஆனால் முதன் முதலில் உன்னை நம் வீட்டைப் பிரிந்து விடுதிக்கு செல்கையில் விட்டேனே கண்ணீர்... அதில் நீ இருக்கக் கண்டேனம்மா!

தொட்டதற்கெல்லாம் உன்னை கடவுளிடம் வேண்ட சொல்லி கூறுவேனே... நீயும் எப்போதும் எனக்கான வேண்டுதல்களுடன் இருப்பாய்!

மணமுடிக்க நிச்சயித்த போதிருந்தே பம்பரம் போல் சுழன்றாயே! உன் உடல் நிலை மேலும் மோசமானாலும் மனம் தளராது எப்படியெல்லாம் உழைத்தாய் திருமண வேலைகளுக்காக!
திருமணத்தன்று பாதபூஜை செய்கையில் உன் காலின் பருத்த வீக்கம் கண்டு அதிர்ந்தே போனேன்!

மாங்கல்யம் ஏற்கும் அந்த நொடியில் கூட சந்தோஷம் ஒரு புறம், இப்படியெல்லாம் எனக்காக உழைத்த உன்னைவிட்டு பிரிந்துசெல்கிறேனே என்ற துயரம் ஒரு புறம் என கண்ணீர் சிந்தினேனே!

இரு சிசேரியன் கண்ட நீ... உடல் வலுவே இல்லாத போதும் எங்களைப் பெற்றாய்! ஆனால் இன்று எனக்கு சிசேரியன் என்றதும் தேம்பி தேம்பி அழுதாயே! ஏனம்மா?

உன்னை விட தெம்பான நான் நீ கண்ட வலியைக் காண மாட்டேனா? ஆனால் உன் தாயன்பு.. என் வலி பொறுக்காமல் புலம்பியதே!

உன் விடாத முதுகு வலியிலும் என்னைத் தூக்கிப் பணிவிடை செய்தாயே நான் கால் பிரச்சனையில் சுருண்ட போது!

இன்றும் கூட உன் முதுகு வலியையும் பாராது என் மகனையும் சுமக்கிறாயே! சுமந்து நடந்து சோறூட்டுகிறாயே! நீ வாழ்க!

உன் பேரனுடன் கொஞ்சுகையில் என் குழந்தையாய் நீ!

உன்னுடன் சண்டையிடுகையில் உன் தோழியாய் நான்!

அம்மா நான் உன்னை எவ்வளவு திட்டியிருப்பேன்? அது உன் மீதுள்ள அதீத உரிமையினால்... ஆழ்ந்த அன்பினால்!ஆனால் சத்தியமாய் சொல்கிறேன்... உன்னை யாரும் ஒரு வார்த்தை பேசினாலும் எனக்கு பொறுக்காது!

எனக்கு எத்துணை கதைகள் சொல்லியிருக்கிறாய்! அந்த அளவுக்கதைகளை எந்தத் தாயும் இதுவரை கூறியிருக்கமாட்டாள்!

நீ பாடும் குழந்தை பாடல்கள் யாவும் இன்னும் என் காதில் ஒலிக்கிறது!

"கை வீசம்மா கை வீசு" எனக்கு பலூன் சட்டை போட்டுவிட்டு பாடினாய்!

உனக்கான கனவுகளை எங்களோடு இணைத்துவிட்டு... எங்கள் வாழ்வில் உன் கனவினைக் காண்கிறாய்!

நீ தாயாகிய தெய்வம்... உடல் நிலை தளர்ந்த நீ விரைவில் ஊட்டம் பெற இறைவனை வேண்டுகிறேன்!

இந்த அன்னையர் தினத்திற்கு உன்னை வாழ்த்த வயதில்லை ஆதலின் வணங்குகிறேன்!

உனக்காக வேண்டுதல்களுடன் எப்போதும் நான்!

உனக்காக மட்டுமன்றி உலகில் அன்னையாய் பிறந்த அனைவருக்காகவுமே வேண்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! தாய்மைக்குத் தலை வணங்குகிறேன்!

3 comments:

ILA (a) இளா said...

ஒரு நிமிசம் கலங்க வைத்த கவிதை. சங்கமம்- அழியாத கோலங்கள் பகுதியில் சேர்த்திருக்கேன்

Anonymous said...

Pathetic

ஆகாய நதி said...

மிக்க நன்றி இளா! :) எனக்கு அந்த சங்கமம் - அழியாத கோலங்கள் தொடுப்பு கொடுங்களேன்!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger