Sunday, May 10, 2009

'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்னையர் தினத்துக்கான நமது அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாக்கள் வலைப்பூ வாசகரின் பங்களிப்பாக ”முத்துச்சரம்” ராமலஷ்மி தனது பதிவை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நன்றி ராமலஷ்மி! ”'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்! என்று தலைப்பிடப்பட்ட அவரது படைப்பு:-

முந்தைய தலைமுறையின் வழி காட்டுதலுடனும் ஆசிகளுடனும் அடுத்த தலைமுறையை உருவாக்கி வரும் அன்னையரா நீங்கள்? நன்று. நல்ல அம்மாக்களாய் நாம் இன்று மிளிரக் காரணமாயிருக்கும் நம் அம்மாக்களைப் போற்றி வாழ்த்துவதோடு இந்த அன்னையர் தினம் முடிந்து விடாதிருக்க, சிந்தனைக்கு வித்திடும் சில விஷயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

'போகிற இடத்தில் பெண் குழந்தைகள் பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டுமே'யெனப் பார்த்துப் பார்த்து எல்லா வேலைகளும் பழக்கி வளர்க்கும் அம்மாக்களும் உண்டு. 'படிக்கிற குழந்தை நம் வீட்டிலிருக்கும் வரை இஷ்டம் போலிருக்கட்டுமே' என நினைத்து, தானே எல்லாம் இழுத்துப் போட்டு செய்யும் அம்மாக்களும் உண்டு. கனிவை அணையாக் கனலாய் மனதினுள் மறைத்து வைத்துக் கொண்டு கண்டிப்பாகவே இருக்கும் அம்மாக்களின் மத்தியில் கல்லூரிப் பருவத்திலும் செல்லம் கொஞ்சிக் கொஞ்சி வாயில் சாப்பாட்டைத் திணித்து அனுப்பி வைக்கும் அம்மாக்களும் உண்டு.

நாம் எப்படி வளர்க்கப் பட்டிருந்தாலும் அப்போதெல்லாம் தெரியாத அம்மாவின் அருமை, புகுந்த வீட்டிற்கு போனதும் கூட அவ்வளவாக உறைக்காத பெருமை நாமும் ஒரு தாயாகும் வேளையில் எப்படிப் புரிந்து போகிறது? குழந்தை வளரும் ஒவ்வொரு தருணத்திலும் சரி, குழந்தைக்காக இன்பச் சிரமங்களை எதிர் கொள்ளும் பொழுதுகளிலும் சரி, தத்தமது அம்மாக்களை நினைக்காதவரே இருக்க முடியாது. ‘ஓரிரு குழந்தைகளை வளர்ப்பதற்கே இப்படி. நீ எப்படி அம்மா எங்கள் அத்தனை பேரினை அப்படிப் பார்த்துக் கொண்டாய்?’ கேட்காதவர் இருக்க முடியாது.

அப்படியெல்லாம் நம்மை வளர்த்த அம்மா அப்பாவுக்கும், இன்னொரு பெற்றோராய் மதிக்கப்பட வேண்டிய மாமியார் மாமனாருக்கும் நாம்(மகள் மகன் இருவரும்தான்) செய்ய வேண்டியது என்ன? அவர்கள் 'க்ரேட்' எனப் புரிந்து கொள்ளுதல் மட்டுமேயா? அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை, செலுத்த வேண்டிய நன்றி என்றெல்லாம் சொன்னால் அவை உறவுகளுக்குள் அர்த்தமற்றவையாக, ஏன் அதிகபட்ச வார்த்தைகளாகவும் கூடத் தோன்றிடக் கூடும். ஆகையால் பாசத்துடன் உள்ளன்புடன், அவர்களே கூட பிரச்சனையாய் கருதாத சில விஷயங்களை நாம் இன்னொரு கோணத்திலிருந்து யோசித்துப் பார்க்கலாமே.

நமக்கு பிரசவம் பார்க்க எந்த வயதிலும் எந்த உடல் நிலையிலும் ஓடி வந்து உடனிருந்து உதவுகின்ற அம்மாக்கள், வேறெந்த இக்கட்டாயினும் கேட்காமலே கைகொடுக்கும் அம்மாக்கள் எல்லா சமயங்களிலும் அப்படி இருந்தேயாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளை விட வேண்டும். அவர்கள் பெற்றோராய் நமக்கு ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்த பின்னரும், இருக்கும் கடைசி காலம் வரை நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப் பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்றிருக்கக் கூடிய சில ஆசைகள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

'இரண்டு வாரம் நான் கான்ஃப்ரன்ஸுக்கு வெளிநாடு போகிறேனம்மா வந்து குழந்தைகள்கூட இரேன்' என்கிற நாம் திரும்பி வந்த பின் அவர்களை உட்கார வைத்துக் கவனிப்போம். அம்மா கையால் செய்து சாப்பிட ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அவர்க்ளுக்கு பிடித்ததை நம் கையால் செய்து கொடுத்துப் பார்த்துக் கொண்டால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி பன்மடங்காகுமில்லையா? சிறுவயதில் எத்தனை சுற்றுலாவுக்கு நம்மை அழைத்துச் சென்றிருப்பார்கள்? அவர்கள் பார்க்காத இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி வருவோம். நேரமின்மையாலோ ‘இனி எதற்கு’ என்ற எண்ணத்தாலோ விட்டு விடும் சின்னச் சின்னத் தேவைகளையும் கூட நாம் கவனமாய்க் கண்டு பிடித்துப் பூர்த்தி செய்வோம்.

இந்த தலைமுறையில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அதிகம்தான். வீட்டில் நமது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் ஒரு போதும் நம் பெற்றோர்களிடம் தருவது சரியாகாது. தவிர்க்க முடியாத அப்படிப்பட்ட சூழல்களில் எல்லா வேலைகளுக்கும் உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொடுப்பது மிகவும் அவசியம் (ஓரிரு குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மாதிரியும் ஆயிற்று). பெரியவர்கள் மேற்பார்வை மட்டுமே செய்கிற மாதிரியாக இருக்க வேண்டும். அதே போல ஓய்வு பெற்ற அப்பாக்களில் சிலர் வெளி வேலைகளை விரும்பி ஏற்றுச் செய்வார்கள். அவர்களாக விருப்பட்டாலன்றி நாமாக 'வீட்டில்தானே இருக்கிறார்கள்' என எந்த வேலையையும் அவர்கள் மேல் திணிப்பது சரியல்ல. அவர்கள் வயதினை எப்போதும் கருத்தினில் கொள்ள வேண்டும்.

சரி அதே வயதினைக் காரணம் காட்டி பெற்றோரை வீட்டோடு வைத்துக் கொள்ள நினைப்பதும் சரியல்ல. கோவிலுக்கோ உறவினர் நண்பர் வீடுகளுக்கோ பொது இடங்களுக்கோ அடிக்கடி சென்று வர பிரியப் படலாம். குறிப்பாக விசேஷ வீடுகள் சென்றால் பலநாள் பார்க்காதவரை எல்லாம் பார்க்கலாம் எனும் அதீத ஆர்வம் இருக்கும். ‘இந்த தள்ளாத வயதில் பேசாமல் வீட்டோடு இருங்களேன்’ என்றிடாமல் முடிந்தால் நாமே அழைத்துச் செல்லலாம் அல்லது தக்க வசதி செய்து கொடுத்து அனுப்பி வைக்கலாம். அந்த மாதிரியான சந்திப்புகள் அவர்கள் உள்ளத்தை எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக வைக்கிறது என்பது யோசித்துப் பார்த்தால்தான் புரியும்.

அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய். நமது தன்னலமற்ற பாசம் நம் குழந்தைகளை நோக்கி மட்டுமேயன்றி நம்மை ஆளாக்கியவர்கள் மேலும் இருக்கட்டும். நாங்கள் எவரும் அப்படியல்ல என்றால் அதைவிட சந்தோஷம் வேறில்லை. ஆனால் இதிலிருக்கும் ஏதேனும் ஒரு குறிப்பாவது எவருக்கேனும் தேவைப்படுவதாய் இருக்கலாமென்ற எண்ணத்திலேதான் இங்கு பதிந்திருக்கிறேன்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

2 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவு மொத்தமும் பயனுள்ள வார்த்தைகள்

உங்களின் இந்த நிறைய கருத்துகளோடு ஒத்துப்போகிறேன்

ஆகாய நதி said...

பயனுள்ள பதிவு :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger