Wednesday, February 18, 2009

வேண்டுகோள்!!!!

எனது மகன் தனது சிறு வயது தோழியைப்
பற்றி புது பள்ளியில் சொல்லியிருக்கிறான்.

இந்தப் பிள்ளைகள் அதற்கு கண், காது
மூக்கு எல்லாம் வைத்து அழகாக
பறக்கவிட்டுவிட்டார்கள்!!! மனது
நொறுங்கிப்போனான் ஆஷிஷ். இப்படி
ஒரு பெண்ணுடன் தன்னை இணைத்துப்
பேசுகிறார்களே! இது அந்த தோழிக்கு
தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்!!
என்று வேதனையுடன் அழத் துவங்கிவிட்டான்.

தினம் தினம் பள்ளியில் அவர்களின்
பேச்சு எல்லை கடந்து, முறையற்றுப்
போன நிலையில்
ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.

ஆஷிஷின் வகுப்பு மாணவி அம்ருதாவின்
வகுப்பில் இருக்கும் தன் அத்தை மகனை
பொது இடங்களில் ஆஷிஷைக் காணும்
பொழுதெல்லாம் கிண்டல் செய்யச் சொல்லி
கொடுத்திருந்தாள். (இனி ஒரு முறை
இது நிகழ்ந்தால் பள்ளியிலிருந்து
இருவரும் நீக்கப்படுவார்கள் என்று
எழுதி பெற்றோர்களுக்கு அனுப்பி
விட்டார்கள்)

ஆவன செய்வதாக சொல்லி, (செய்தும் விட்டார்கள்)
அந்த ஆசிரியை (வைஸ் பிரின்சிபால்) என்னிடம்
பகிர்ந்ததை நான் இங்கே கட்டாயம் பகிர்ந்தே
ஆக வேண்டும்.

மேடம்! இந்த நிகழ்வில் யாரும் குற்றவாளி இல்லை.
குற்றம் சாற்ற வேண்டியது மீடியாவைத் தான்என்றார்.

இந்த 24மணி நேர சேனல்கள் வந்த பிறகுதான்
மெகா சீரியல்கள் அதிகமாகின. நாட்டுல
நடப்பதைத் தான் காட்டுகிறார்கள் என்று
சொல்லி மக்கள் அதிலும் பெண்கள்
பார்க்கத் துவங்கிவிட்டனர்.

வீட்டில் மெகா சீரியல் ஓடிக்கொண்டிருந்தால்
அதை அங்கே இருக்கும் குழந்தையும்
பார்க்கிறது. வேண்டாத எண்ணங்கள் அதன்
மனதிலும் பதிகிறது என்பதை பலர் யோசிப்பதே
இல்லை!! மாமியார் மருமகள் சண்டை,
கணவன் மனைவி பிரச்சனை, குத்து, வெட்டு,
கொலை, தவறான திட்டங்கள் இவை கண்முன்
காட்டப்படும் பொழுது அந்த பிஞ்சு மனதில்
பசுமரத்தாணி போல்பதிந்துவிடுகிறது.

அதன் விளைவுதான் பிள்ளைகள் கூட
ஸ்ட்ரெஸ் மிகுந்த வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சின்னச் சின்ன சண்டைகளுக்கு கூட மிகப் பெரிய
வார்த்தைகள் உபயோகிக்கிறார்கள்.

என்றார். சத்தியமான வார்த்தைகள்

என் வேண்டுகோள் என்ன?

தயவு செய்து உங்கள் வீட்டில் மெகா சீரியல்
ஓடிக்கொண்டிருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

இனி உபயோகமான நிகழ்ச்சி தவிர ஏதும்
பார்ப்பதில்லை என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

சீரியல் பார்த்து சீரழிந்து போக மாட்டோம்.
எங்கள் குடும்பத்திற்கு நிம்மதி தேவை
என அடிக்கடி சொல்வது நல்லது.

ஆண் நண்பர்களே! வீட்டில் மெகா சீரியல்கள்
பார்க்கக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லுங்கள்.
சண்டை வரும். ஆனாலும் உறுதியாக இருங்கள்.

சீரியல் பார்க்கும் நேரங்களில் பிள்ளைகளுடன்
அளவளாவலாம்.

சீரியல் பார்ப்பதைத் தவிர்ப்பதால் பிள்ளைக்கு
எவ்வளவு நன்மை என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
புரிய வையுங்கள். அவசியமேற்பட்டால்
கவுன்சிலிங்கிற்கும் அழைத்துச் செல்லலாம்.

சீரியல்கள் பார்ப்பதை எப்படித் தடுக்க முடியும்?
உங்கள் ஐடியாக்களை பின்னூட்டங்களில்
சொல்லுங்கள். பலருக்கும் உதவியாக இருக்கும்.

*********************************************
இத்தனைக்கப்புறம் ஆஷிஷ் சொன்னது தான்
ஹைலைட்.

பாவம்மா! என் வகுப்புத் தோழர்கள்!
அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்
வேலைக்குப் போயிடறாங்க. அவங்க
வர்ற வரைக்கும் தனியாக இருக்காங்க.

நீங்க சொல்வது மாதிரி அவங்களுக்கு
எடுத்துச் சொல்ல ஆளில்லை. அப்பா
மாதிரி அன்பா, பாசமா பாக்க அவங்களுக்கு
நேரமில்லை. இதெல்லாம் விடக் கொடுமை
நீங்க வகையா செஞ்சு கொடுக்கற மாதிரி
அவங்களுக்கு ஃபுட் கிடைக்க மாட்டேங்குதுங்கற
காண்டுஎல்லாமா சேர்ந்து என்னிய இப்படி
பேசறாங்க. :(( :)))




25 comments:

நட்புடன் ஜமால் said...

\\இப்படி
ஒரு பெண்ணுடன் தன்னை இணைத்துப்
பேசுகிறார்களே! இது அந்த தோழிக்கு
தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்!!\\

இப்பவேவா

நட்புடன் ஜமால் said...

\\“மேடம்! இந்த நிகழ்வில் யாரும் குற்றவாளி இல்லை.
குற்றம் சாற்ற வேண்டியது மீடியாவைத் தான்” என்றார்.\\

மிக மிக மிக மிக

சரியே

Vidhya Chandrasekaran said...

கலிகாலம் சாமி. எங்க அம்மா எந்த சீரியலையும் பார்த்ததில்ல. அதே பழக்கம் எனக்கும் இருக்கிறது. என் வீட்டில் பாட்டு தான் சதா சர்வ காலமும் ஓடிக்கொண்டிருக்கும்.

selventhiran said...

குழந்தைகளை மிகவும் விரும்புபவனாகவும், குழந்தைகளால் பெரிதும் விரும்பபடுபவனாகவும் பல காலமாய் இருந்து வருகிறேன். குழந்தைகளை ஒருவன் விரும்புவதில் சிறப்போ, வியப்போ இல்லைதான். ஆனால் எந்தக் குழந்தையும் முதல் சந்திப்பிலேயே அட்டையென ஓட்டிக்கொள்வதும், விடைபெற்று பிரிகையில் வீறீட்டு அழுவதும் அந்த பிரியத்தின் காரணிகள் என்னவாக இருக்கும் என்கிற யோசனையை கிளற செய்கிறது.

நான் கதைகளின் கிட்டங்கி. பால்யத்திலிருந்தே நினைவின் மடிப்புகளில் ஆயிரமாயிரம் கதைகளை சேமித்து வந்திருக்கிறேன். எந்தக் குழந்தையையும் எளிதில் வீழ்த்திவிட முடிகிற ஆயுதமாக காலம்காலமாக இருப்பது கதைகள்தான். சிறுவயதில் அம்புலிமா, பாலமித்ரா, கோகுலம், பூந்தளிர் இதழ்களில் வாசித்த கதைகளும் கதாபாத்திரங்களும் இன்றளவும் நினைவில் இருக்கிறது. என் மடியேறும் எந்தக் குழந்தையும் கதைகளைச் சுவைக்காமல் இறங்கியது இல்லை. எல்லாக் காலத்திலும் குழந்தைகள் கேட்பதற்கு தீவிரமாகத்தான் இருக்கிறது. நம்மிடம்தான் சொல்வதற்கு கதைகளும், நேரமும் இருப்பதில்லை. புத்தகங்களில் இருக்கிற கதைகளை விட்டு விடுங்கள். நாம் அறிந்திருக்கிற பக்தி கதைகளையோ, நமது குடும்ப வரலாற்றினையோகூட சுவைபட சொல்ல வழியற்றவர்களாக இருக்கிறோம்.

நம் காலத்தின் சிறந்த கதைசொல்லிகளான தாத்தாவும், பாட்டிகளும்கூட தங்களது பொழுதையும் கவனத்தையும் சின்னத்திரைக்கு தாரை வார்த்துவிட்ட பின் குழந்தைகள் பவர் ரேஞ்சரையும், டோராவையும் தேட வேண்டியவர்களாகி இருக்கின்றனர். ஒரிரு விதிவிலக்கு பாட்டிமார்களிடமும் கையிருப்பு கதைகளாக தந்திர நரியும், திருட்டு காகமும்தான் இருக்கின்றன.

‘என் பையன் எப்பவும் டி.விதான் பார்க்கிறான்’ என்ற குற்றசாட்டை உதிர்க்கும் பெற்றோரிடம் நான் தவறாமல் சொல்வது ‘நீங்கள் கொஞ்ச நேரம் அவனை பாருங்கள்; அவன் எதையுமே பார்க்க மாட்டான்’ என்பதுதான். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க கதைகளோ, பாடல்களோ, விடுகதைகளோ நம்மிடம் இல்லை. ஆனால், அந்த கையாளாகாத நிலையை மறைக்க அப்பாவி குழந்தைகள் மீது கை நிறைய புகார்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.

ஒரு நாற்காலி உயரம் கூட வளர்ந்திராத எட்டு வயதில், என்னை ஒரு கிளைநூலகத்தின் உறுப்பினராக்கினார் என் தந்தை. யாராவது ஒரு பெரியவர் உதவியின்றி நூலக அலமாரியை அணுககூட முடியாத வயதில் வாசிப்பு ஆரம்பமாகியது. வாண்டுமாமா கதையுலகின் வாசலைத் திறந்துவிட்டார். இன்றளவும் வெளியேறும் வழியறியாத ஆட்டினைப்போல கதைகளைத் தின்று கொண்டே இருக்கிறேன். இத்தனை குரூரமான வாழ்க்கையை, அயற்சியூட்டும் அன்றாடங்களை கடக்க கதைகளைவிட வேறென்ன துணை இருக்க முடியும்?!

கதைகளைத் தவிர்த்து எதிர்படும் குழந்தைகளுக்கு வரைந்து காண்பிக்க ஏராளமான கேலிச்சித்திரங்களை கற்று வைத்திருக்கிறேன். கற்றுக்கொள்வதற்கும், செய்து காண்பிப்பதற்குமான எளிய மேஜிக்குகள், சிறிய பேப்பர் விளையாட்டுகள், புதிர்கள், என எனது கையிருப்பு அதிகம். இவைகளைத் தவிர்த்து பலகுரலில் பேசுவது, வேடிக்கை கதைப்பாடல்கள், சிறிய நாடகங்கள் என மழலைகளை மகிழ்வூட்டும் பலவற்றை போகிற போக்கில் தெரிந்து வைத்திருக்கிறேன். வேலுசரவணன் போன்றோ, கூத்தபிரான் போன்றோ குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு இவைகளைக் கற்கவில்லை. குழந்தைகளின் விருப்பத்திற்குறியவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தெரிந்து கொண்டவை. ஏனெனில், குழந்தைகளுக்கு மட்டுமே மனிதர்களை புரிந்து கொள்ளும் குணம் இருக்கிறது.

என்னிடம் கதை கேட்டலையும் குழந்தைகள் எல்லாம் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளை அடைந்துவிட்டபின்னும், இன்றும் நான் ஊர் திரும்புகையில் ‘கனாக்காணும் காலங்களை’ மறந்துவிட்டு அதே மாறாத குதுகலத்துடன் ‘செல்வாண்ணே..’ என வாஞ்சையோடு அழைப்பதும், செக்கடி தெரு மதினிமார்கள் ‘செல்வா எத்தன வருசமானாலும்... புள்ளைக ஒன்ன மறக்குதா பாரு...’ என வியப்பதும் எத்தனை மகிழ்ச்சிகரமானது. நாடகம், நடனம், கிரிக்கெட், சைக்கிள், ஓவியம், செஸ், கணிதம், பக்திபாடல்கள் என ஒவ்வொன்றிலும் இன்று அக்குழந்தைகள் பெறும் பரிசுகளை என் ஒவ்வொரு வருகையிலும் காட்டி மகிழ்கிறது. ‘ஓரே பொஸ்தகங்களை கட்டி அழுறீயே... பைசா பிரயோசனம் உண்டாவென...’ நேற்று கேட்ட அறை நண்பனுக்கு இந்த பரிசுகளையும், அதைக் காட்டிச் சிரிக்கும் பிள்ளைகளையும் காண்பிக்கலாமா?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

மிக நீண்ட பின்னூட்டமாய் போய்விட்டது. பரவாய் இல்லையா.

Kumky said...

அடப்பாவி செல்வா...
இப்படி கொல்றயே..
எப்படிப்பட்ட மனசு வாய்த்திருக்கு உனக்கு.

ராமலக்ஷ்மி said...

ஒரு காலத்தில் நானும் மெகா பார்த்தேன். இல்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனால் அதை விட்டு எட்டு வருடங்களுக்கு மேலாயிற்று. அதில் காண்பிக்க படும் கதைகளும் காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பு வாழ்வில் இல்லாதவை. மிகைப் படுத்தப் படுபவை. வேறு வழியின்றி பெற்றோருடனோ பெரியவர்களுடனோ அதைக் காண நேரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அவை குடும்ப அமைப்பு, நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி நெகடிவ் எண்ணங்களைத்தான் விதைக்க முடியும்.

2003-ல் இது குறித்து நான் எழுதி திண்ணை இணைய இதழில் வெளிவந்து, பின்னர் கடந்த ஜூனில் பதிவும் இட்ட கவிதை இங்கே.

ராமலக்ஷ்மி said...

//எல்லாக் காலத்திலும் குழந்தைகள் கேட்பதற்கு தீவிரமாகத்தான் இருக்கிறது. நம்மிடம்தான் சொல்வதற்கு கதைகளும், நேரமும் இருப்பதில்லை. //

செல்வேந்திரனின் இக்கருத்தும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

அவரது நீண்ட பின்னூட்டம் கண்டு, நான் குறிப்பிட்ட அக்கவிதையை சொடுக்கிட்டு பார்க்கும் அவகாசம் இல்லாதவருக்காக இங்கே தருகிறேன், நீண்டதாக இருந்தாலும்:)!

ராமலக்ஷ்மி said...

மெகா முதலைகள்

தொலைக்காட்சித் தொடர்களிலே
தொலைந்து போகும் மணித் துளிகள்!
தொடருகின்ற அவலம் உணர்ந்து
திறப்பதெப்போ கண்கள்தனை?

அரை மணிதான் அரை மணிதான்-என
அடுத்தடுத்துப் பார்க்கையிலே
நித்தம் நித்தம் செலவாவது
எத்தனை அரை மணிகள்?

கூட்டிதான் பாருங்களேன்
வெட்டியாக வீணாகும்-தங்கக்
கட்டியான மணித் துளிகள்
ஆண்டொன்றுக்கு எத்தனை என?

பொன் போன்ற காலம்
பொசுங்கிப் போவது புரிந்திடுவீர்!
திரும்பி அது வாராது
தெளிவாகத் தெரிந்திடுவீர்!

'ரிலாக்ஸ் ' செய்யவெனக் காண்பது போய்
தொடர் பார்ப்பதே தொழிலாகி-
அன்றாட வேலைகள்தான் 'ரிலாக்ஸ் '
என ஆகலாமா?

கவலை மறக்கக் காட்சித் தொடர்
என்பது போய்-
கதா பாத்திரங்களுக்காகக்
கவலைப்படுவது முறைதானா?

சாபமிடும் சத்தங்களும்
ஓலமிடும் ஒலிகளும்-நாம்
வாழுகின்ற இல்லங்களில்
ஒலிப்பதும் நல்லதல்ல!

மெல்ல மெல்ல விழுங்குகின்ற
மெகாத் தொடர் முதலைகளிடம்
முழுதாகப் பலியாகாமல்
முன்னேற வழியேது?

தேர்ந்தெடுத்துப் பார்க்கையிலே
தேங்கி நிற்கும் பல வேலைகளைத்
தேனீ போல முடித்திடத்தான்
தேவையான நேரம் கிடைத்திடுமே!

மேலும் சேருகின்ற நேரத்தில்
நல்ல இசை கேட்டிடலாம்-
புத்தகங்களைத் துணையாக்கிப்
புத்துணர்ச்சி பெற்றிடலாம்!

முத்தான மணித் துளிகளைக்
கொத்தாக இழப்பதை நிறுத்தி-
சத்தான எதிர் காலத்துக்கு
வித்திடுவீர் விரைவாக!
***

ramachandranusha(உஷா) said...

வாசிப்பதில் குழந்தைக்கு விருப்பம் இருப்பதில்லை என்றால், நீங்கள் முதலில் வாசிக்கத் தொடங்குகள். மெகா சிரியல்களை நீங்கள் பார்க்காதீர்கள், முடிந்தால் கேபிள் தொடர்ப்பை துண்டியுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

எதுக்கெல்லாமோ அணி கட்டி ஊர்வலம் போகிறாங்களே.
இதைக் கவனிக்க யாருமில்லையே.
சின்னக் குழந்தைகள்
கெட்டுச் சீரழிய சீரியலைக் கண்டு பிடித்தவங்க ,நடத்தறவங்க எல்லாரையும் என்ன செய்யலாம்.

நிஜமா நல்லவன் said...

செல்வேந்திரன் அவருடைய பின்னூட்டத்தை தனி பதிவாகவே போட்டால் நன்றாக இருக்கும்...!

pudugaithendral said...

வாங்க ஜமால்,

இப்ப பசங்க ரொம்ப விவரமா இருக்காங்க.

pudugaithendral said...

வாங்க வித்யா,

எங்கம்மாவுக்கு சீரியல்கள், டீவியும் தான் உலகம்.

அவங்களை மத்தவங்க விமர்சித்ததைப் பாத்து எங்க நம்மளையும் கமெண்டுவாங்களோனு பயந்தே சின்னத்திலிருது டீவி பார்ப்பதில்லை.

pudugaithendral said...

வேலைக்கு சென்று வரும் எனக்கு டீவிதான் ரிலாக்ஸ் என்று சொல்லி டீவி பார்ப்பார் அம்மா.

சினிமா, டீவி பார்க்கவேண்டும் என்ப்தற்காக இரவு நேர உணவாக இட்லி மட்டும் தான்.(அதை மட்டும் தான் அடுக்கு தீபாரதனையில் ஏற்றி வைத்தால் வேலை முடியுமே!!)

:))))

pudugaithendral said...

உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மன்மார்ந்த நன்றிகள் செல்வேந்திரன்.

pudugaithendral said...

பெற்றோருடனோ பெரியவர்களுடனோ அதைக் காண நேரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அவை குடும்ப அமைப்பு, நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி நெகடிவ் எண்ணங்களைத்தான் விதைக்க முடியும்.//

சரியா சொன்னீங்க. அம்மா பாக்காட்டியும் தாத்தா பாட்டி பாக்கத்தானே செய்வாங்க. நிப்பாட்டச் சொன்ன,” ஒரு டீவ பார்க்கற உரிமை கூட எங்களுக்கில்லை இந்த வீட்டில்!” என்று பிரச்சனை துவங்கும்.

pudugaithendral said...

இந்தப் பதிவில் நான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலாக அருமையான கவிதை ராமலக்‌ஷ்மி. பகிர்தலுக்கு நன்றி

pudugaithendral said...

வாசிப்பதில் குழந்தைக்கு விருப்பம் இருப்பதில்லை என்றால், நீங்கள் முதலில் வாசிக்கத் தொடங்குகள். மெகா சிரியல்களை நீங்கள் பார்க்காதீர்கள், முடிந்தால் கேபிள் தொடர்ப்பை துண்டியுங்கள்.//

நல்ல ஐடியா உஷா.

மிக்க நன்றி

pudugaithendral said...

எதுக்கெல்லாமோ அணி கட்டி ஊர்வலம் போகிறாங்களே.
இதைக் கவனிக்க யாருமில்லையே.//
அதான் வருத்தம் வல்லிசிம்ஹன் அம்மா.

சின்னக் குழந்தைகள்
கெட்டுச் சீரழிய சீரியலைக் கண்டு பிடித்தவங்க ,நடத்தறவங்க எல்லாரையும் என்ன செய்யலாம்.//

டீவி பார்ப்பதை நிப்பாட்டினா டீ ஆர்பீ ரேட்டிங் ஏது? அப்புறம் ஏன் புது சீரியல்கள் வருது.

24 மணி நேரம் ஒளிபரப்பை குறைத்தாலே பாதி பிரச்சனை தீரும்.

pudugaithendral said...

செல்வேந்திரன் அவருடைய பின்னூட்டத்தை தனி பதிவாகவே போட்டால் நன்றாக இருக்கும்...!//

போட்டிருக்கிறார். அவரது வலைப்பூவில் இருக்கு.

அமுதா said...

நல்ல பதிவு. நீங்கள் கூறுவது ரொம்ப சரி. பல குழந்தைகள் சீரியல் பார்த்து ரொம்ப ஓவராக பேசுவதைக் கேட்டுள்ளேன். இதனாலேயே நான் பல சமயங்களில் வீட்டில் சுட்டி டி.வி. ஓடினால் கூட பரவாயில்லை என்று விட்டு விடுவேன்.

/*எந்தக் குழந்தையையும் எளிதில் வீழ்த்திவிட முடிகிற ஆயுதமாக காலம்காலமாக இருப்பது கதைகள்தான்.*/
செல்வேந்திரனின் கருத்துகளோடு ஒத்துப் போகிறேன். இதோ என் பெண்ணுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்திய பின் இப்பொழுது, பல் தேய்க்கும் பொழுது கூட புத்தகமும் கையுமாக இருக்கிறாள். பெரியவளுக்கு படிக்க புத்தகம் தேடுவதும் சின்னவளுக்கு கூற கதைகள் தேடுவதும் தான் பெரிய வேலையாக உள்ளது.

/*சாபமிடும் சத்தங்களும்
ஓலமிடும் ஒலிகளும்-நாம்
வாழுகின்ற இல்லங்களில்
ஒலிப்பதும் நல்லதல்ல*/
இராமலஷ்மி மேடம் கூறுவது போல் டி.வியில் வரும் ஓலங்களும், சாபங்களும் திகிலுறச் செய்கின்றன.

நம் குழ்ந்தைகளை இவ்வரக்கனிட்மிருந்து மீட்கும் வழி நம் கையில் தான் உள்ளது.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

கொடுமையா இருக்கே..

pudugaithendral said...

நம் குழ்ந்தைகளை இவ்வரக்கனிட்மிருந்து மீட்கும் வழி நம் கையில் தான் உள்ளது.//

ஆம். அதை அனைவரும் உணரவேண்டும்.

சீரியல்களுக்கு குட்பை சொல்லத்தான் வேண்டும்.

Sanyaasi said...

மிக மிக அவசியமான வலைப்பூ. செல்வேந்திரனின் கருத்தும் ராமலக்ஷ்மியின் கவிதையும் மிக அருமையாக இதன் முக்கியத்துவத்தை சொல்லியிருக்கின்றன. சிறுவயதில் என் தாயும் பாட்டியும் வீட்டின் நாலு மூலையிலும் ததாஸ்து தேவர்கள் இருந்து நாம் என்ன சொன்னாலும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்று சொல்வார்கள், அதனால் எப்போதும் நல்லதையே பேசு என்று சொல்லிக் கொடுத்து விட்டு இப்போது வெகு சிரத்தையுடன் சீரியல்களில் வரும் கண்றாவி வசனங்களைப் பார்க்கும் போது ததாஸ்து தேவர்கள் என்ன செய்வார்கள் இப்போதென்று கேட்கத் தோன்றுகிறது. என்னுடைய சித்தி மகனிடம் நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஓடியாடி விளையாடுவாயடா எனக் கேட்டதில் அவன் 'எப்பவாச்சும்' என்றதும் பின்னூடே அவன் தங்கை 'அவன் எல்லா டீவி சீரியலும் பார்க்கறான்' என்றதும் பின் பேச்சுவாக்கில் அவன் எத்தனை மணிக்கு எந்தெந்த சீரியல் வரும் என்று மனப்பாடமாக பட்டியல் போட்டதைக் கண்டு திகைத்திருக்கிறேன்.

பெண்களை வாய்க்கு வந்தபடி பேசுவது, பெண்களே வாய்க்கு வந்ததை எல்லாம் வசை பாடுவது, ஆ ஊ என்று அலறுவது, மிகைப்படுத்தப்பட்ட காட்சியமைப்புகள், இவையெல்லாம் நவீன உலகின் பாதிப்புகளாக தோன்றவில்லை. ஏனெனில் வெளிநாடுகளில் எந்தக் குழந்தையும் டெலி சீரியல் பார்த்து பொழுதைக் கழிப்பதாகத் தெரியவில்லை.

ஆரோக்கியமான இந்தியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது பலருக்கும் தெரிவதில்லை. கவுச் பொடேடோ என்று அழைக்கப்படும் சோம்பேறிகளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மாறி வருகிறார்கள். கவலை தரக்கூடிய போக்கு இது.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger